எண்ணமெல்லாம் நீ – 9

அத்தியாயம் 9

 

 

தன் அறையின் படுக்கையில் விழுந்த உதயனால் விழிகளை மூடக்கூட முடியவில்லை. தெரியாமல் நடந்த ஒன்றைத் தேவையில்லாமல் தூக்கிப் பிடிக்கிறாள் என்பதிலேயே அவ்வளவு நேரமாக நின்றுவிட்டவனுக்கு இப்போதுதான் அது எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்தது.

 

ஆரம்ப காலம் தொட்டு அவள்பற்றி அவனுக்குள் இருந்த பிம்பமும், என்னதான் அவள் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை என்றாலும் ஒரு இறப்பு வீட்டில் வைத்து மனத்தைச் சொல்லி, கண்களாலேயே களவாடிய அவள் செய்கையில் இருந்த ஏதோ ஒரு அதிருப்தியும், இவளால் ஷர்மி ஆரம்ப காலத்தில் அனுபவித்த துன்பங்களும் என்று எல்லாம் மனத்திலேயே இருந்ததில் வெடித்துவிட்டான்.

 

ஆனால், சீராளன் ஷர்மியிடம் கேட்ட கேள்விகளுக்குப் பிறகுதான் அவன் கண்களும் திறந்துகொண்டன. இருவரும் எதேற்சையாக மோதிக்கொண்டார்கள் என்று மட்டும்தானே இவர்களுக்குச் சொல்லப்பட்டது. எப்படி மோதினர், அதனால் எந்தளவில் அவள் பாதிக்கப்பட்டாள், அதன்போது மாதவன் எப்படி நடந்தான் என்று யாருக்குத் தெரியும்?

 

தேவகி அம்மாவின் காதில் விழ முதல் பிரச்னையை முடிக்க எண்ணியவன் அப்போது இதையெல்லாம் யோசிக்க மறந்திருந்தான்.

 

இப்போது கண்ட கண்ட காட்சிகளும் கண்முன்னால் வந்து போக, வேகமாக எழுந்து அமர்ந்தவனுக்கு வியர்க்கும் போல் இருந்தது. நெஞ்செல்லாம் அடித்துக்கொண்டது.

 

அந்த நிமிடமே அவளைப் பார்த்து, நடந்ததை அறியத் துடித்தான். முடியாதே. வேகமாகக் கைப்பேசியை எடுத்தான். ஆனால், அங்கே என்ன நிலவரம் என்று தெரியாமல் குறுந்தகவல் அனுப்பவும் முடியவில்லை.

 

அன்றைய இரவு அவனுக்குச் சிவராத்திரியாகவே மாறிப்போயிற்று.

 

*****

 

தேவகி அம்மா படுக்கைக்குச் சென்றதும் முதல் வேலையாக அபியைத் தேடிக்கொண்டு வந்தான் சீராளன்.

 

என்ன நடந்தது, மாதவன் ஏதும் மோசமாக நடந்தானா என்று துருவி துருவிக் கேட்டான். அவனுக்குள் அப்படி ஒரு பதற்றம். கூடப் பிறந்தவளிடம் உடைத்துப் பேசவும் வரமாட்டேன் என்றது. அதற்கும் சேர்த்து மனைவி மீதுதான் கோபம் உண்டாயிற்று. அவள் அல்லவா இவளை அரவணைத்து, தைரியம் கொடுத்து, இதைக் கேட்டிருக்க வேண்டும்.

 

அபிராமி தமையனின் பரிதவிப்பைப் புரிந்துகொண்டாள். அவன் பாசத்திலும் அக்கறையிலும் உள்ளம் நெகிழ, “உண்மையா பெருசா ஒண்டும் நடக்கேல்ல அண்ணா. கொஞ்சமும் எதிர்பாக்கேல்ல, இரவு வேற. நல்லாப் பயந்திட்டன். அதான் சமாளிக்க ஏலாமப் போயிற்று. அவ்வளவுதான் நடந்தது. நீங்க நிறைய யோசிக்காதீங்க.” என்று அவள் சிறு புன்னகையுடன் சொன்னபோதுதான் கொஞ்சமேனும் ஆறுதல் கொண்டான்.

 

சிறு பொழுதுக்கு அவளையே பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் அவள் தலையை வருடிக்கொடுக்க, உடைந்து, அவன் தோள் சாய்ந்துவிடுவோமோ என்று அபிக்குப் பயமாயிற்று.

 

தமையனிடம் உள்ளதை எல்லாம் சொல்லி, மாதவனை ஒன்றுமில்லாமல் ஆக்க அவளுக்கு ஒரு நிமிடம் போதும்.

 

ஆனால், அது அதோடு நிற்காது. அப்படி நடந்த அந்தக் கயவனை மதித்து, உணவு கொடுத்து அனுப்பிய ஷர்மியை அவள் தமையன் மன்னிப்பானா என்பதே கேள்விக்குறிதான்.

 

இன்று சிறிதாய்த் தெரியும் ஷர்மியின் தவறு அதன் பிறகு பூதாகாரம் எடுத்துவிடும். சீராளன் எந்தளவுக்குப் பாசக்காரனோ அதேயளவுக்குக் கோபக்காரனும் கூட.

 

அடுத்தது அவள் அன்னை. அவர் ஷர்மினியிடம் என்ன கதைப்பார், எப்படி நடப்பார் என்றெல்லாம் கற்பனை கூடச் செய்ய முடியாது. ஆக, எல்லோருக்கும் நல்லது அவள் இறுக்கி வாயை மூடிக்கொள்வது மட்டுமே!

 

அதில் அன்னையிடம் இதைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாள். அவனும் எதையும் சொல்லப்போகவில்லை. என்னதான் மனைவி மீது மிகுந்த கோபம் இருந்தபோதிலும் அன்னைக்கும் அவளுக்குமிடையில் பிரச்னையை உருவாக்க விருப்பமில்லை.

 

அடுத்த நாள் காலை, விடிந்தும் விடியாத பொழுதிலேயே அங்கு வந்து நின்றாள் ஷர்மினி.

 

“என்னம்மா, இவ்வளவு நேரத்துக்கே வந்து நிக்கிறீங்க?” தேவகி அம்மா இயல்பாக விசாரித்தார்.

 

எதுவும் சொல்ல வராமல் கணவனையும் அபிராமியையும் மாறி மாறிப் பார்த்தாள் ஷர்மினி.

 

அவள் மனநிலையை நொடியில் கணித்த அபிராமி, “அண்ணாவைக் கேட்டு ஆரூரன் அழுதவனா ஷர்மி?” என்றபடி வந்து அவனை வாங்கிக்கொள்ளவும் தேவகி அம்மாவும் அதுதான் போலும் என்று நினைத்துக்கொண்டார்.

 

அதற்கு ஏற்றாற்போல் ஆரூரனும் அபியிடமிருந்து நழுவி தகப்பனிடம் ஓடினான்.

 

அங்கு இருந்த இயல்பு நிலையே யாரும் எதையும் தேவகி அம்மாவிடம் சொல்லவில்லை என்று புரிந்தது. ஆனால், சீராளன் மட்டும் அவளிடம் முகம் கொடுக்க மறுத்தான்.

 

அபிராமியைத் தனியாகப் பிடித்து அவள் தன்னை விளக்கப் போக, “விடு ஷர்மி, அது எல்லாம் முடிஞ்சிது. அண்ணாவையும் சமாளிச்சிட்டன். அம்மாக்குத் தெரியாது. அதால இதைப் பற்றி இனிக் கதைக்காத.” என்று முடித்துவிட்டாள் அவள்.

 

ஷர்மினியாலும் அதற்குமேல் பேச முடியவில்லை. தேவகி அம்மாவின் காதில் விழுந்துவிடுமோ என்கிற நினைப்பே அவள் வாயைக் கட்டிப்போட்டது. அதில், “கடவுள் சத்தியமா நடந்த விசயத்தச் சமாளிக்கத்தான் நினைச்சனான் அபி. எதையும் வேணுமென்டோ, உன்னைக் காயப்படுத்த நினைச்சோ செய்யேல்ல. ஆனாலும் சொறியடி!” என்று விழிகள் கலங்கச் சொல்ல மட்டுமே அவளால் முடிந்தது.

 

அடுத்த இரண்டு நாள்களும் ஷர்மி, சீராளன் பயணத்துக்குத் தயாராவதிலேயே கழிந்தன. கணவனின் தொடர் பாரா முகம் அவள் செய்த தவறை இன்னுமின்னும் பெரிதாக்கிக் காட்டியதில் ஷர்மி உள்ளுக்குள் தவித்துப்போனாள்.

 

“நான் செய்தது பிழை எண்டு எனக்கு விளங்குது. இனி என்ன செய்தா உங்கட கோபம் போகும்?” என்று இரவு அறையில் வைத்துக் கேட்டபோது, “இதைப் பற்றி இஞ்ச வச்சு ஒண்டும் கதைக்காம வந்து சேர். அது போதும்!” என்று முடித்துவிட்டான் அவன்.

 

அந்த இரண்டு நாள்களும் சயந்தன் வீட்டுக்கு அபிராமி போகவில்லை. ஷர்மியும் இங்கேயே இருந்துகொண்டதில் அதற்கு அவசியமும் வராமல் போயிற்று. அதனால் அன்றைக்குப் பிறகு உதயனால் அபிராமியைப் பார்க்க முடியவில்லை. கைப்பேசியில் அவனைத் தடை செய்து வைத்திருந்தாள்.

 

கோபமும் குமுறலுமாகத்தான் அவனுக்கு அந்த இரண்டு நாள்களும் கழிந்தன.

 

சீராளனின் குடும்பம் புறப்படும் நாளும் விடிந்தது. அன்று வாகனம் பிடித்துக்கொண்டு சயந்தனும் உதயனும் அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள். அன்றுதான் அவளைப் பார்த்தான். அவள் இவன் புறம் திரும்பவே இல்லை.

 

முகம் வாடி வதங்கி இருந்தது. தமையன் புறப்படுவதால் என்று எல்லோரும் நினைக்க, தன் வார்த்தைகளால்தான் புண்பட்டு நிற்கிறாள் என்று உதயனால் உணர முடிந்தது.

 

அதுவும் ஆரூரனைத் தன் கையிலேயே வைத்துக்கொண்டு கலங்கும் விழிகளைத் துடைத்தபடி இருந்தவளைப் பார்க்க முடியவில்லை.

 

தேவகி அம்மாவும் அவர்களோடு புறப்பட, இங்கே மாணிக்கவாசகத்தைக் கவனிக்க வேண்டும் என்று அபிராமி நின்றுகொண்டாள்.

 

புறப்பட முதல், “இனியும் நாளைத் தள்ளிப்போடேலாது அபி. கலியாணத்துக்கு பாக்கப் போறன்.” என்று அறிவித்தான் சீராளன்.

 

“சரி அண்ணா!” என்றாள் கலங்கிய விழிகளோடு.

 

“அங்கயா இஞ்சயா(இங்கயா) உனக்கு விருப்பம்?”

 

“உங்களுக்குப் பக்கத்திலேயே பாருங்க அண்ணா.”

 

கேட்டுக்கொண்டிருந்த உதயனின் உள்ளம் கொதித்தது. நடந்தது தவறுதான். அவன் வார்த்தைகளை விட்டுவிட்டானும்தான். அதற்கென்று இப்படிச் சொல்லுவாளா என்ன?

 

அவளைப் பாராதது போல் பார்த்தான். அப்போதும் அவள் அவனைப் பார்க்கவே இல்லை. அவள் தன்னை முழுவதுமாகத் தவிர்க்கிறாள் என்று விளங்கிற்று. எல்லோர் முன்னும் எதையும் காட்டிக்கொள்ள முடியாமல் இறுகி நின்றான்.

 

தேவகி அம்மாவுக்குப் பெரும் புழுகமாயிற்று. அதுவும் உதயனுக்கு முன்னால் வைத்துச் சீராளன் கேட்டதும், அபிராமி வெளிநாட்டிலேயே பார்க்கச் சொல்லிச் சொன்னதும் அவர் மனத்தின் பாரத்தையே இறக்கிற்று.

 

கொழும்பு சென்று, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர்களைப் பயணம் அனுப்பியதோடு உதயனும் கொழும்பிலேயே நின்றுகொண்டான். இங்கே சயந்தனும் தேவகி அம்மாவும் திரும்பி வந்தனர்.

 

மெல்ல மெல்ல தயாபரி அம்மாவின் மறைவு ஏற்றுக்கொள்ளப்பட்டு, எல்லோர் வாழ்க்கையும் இயல்புக்குத் திரும்பத் தொடங்கியது.

 

முதல் வேலையாக அலுவலகத்தில் பேப்பர் போட்டாள் அபிராமி. அதற்கு மேல் அங்கே பணிபுரிய அவளுக்கு விருப்பமில்லை. மூன்று மாதம் வேலை செய்தாக வேண்டிய கட்டாயம் என்பதில் பல்லைக் கடித்துப் பொறுத்துக்கொண்டாள்.

 

ஆனால், மாதவனை நேராகப் பார்த்து, “உனக்குப் பயந்தோ, மானத்துக்கு அஞ்சியோ உன்னை விட்டு வைக்கேல்ல நான். என்னால ஷர்மிக்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது எண்டுதான் பேசாம இருக்கிறன். ஆனா, இனியும் வாலாட்டினாய் எண்டு வை, சயந்தன் அண்ணாவோட சேர்ந்து உன்ர வீட்டுக்கே வந்து நிப்பன். வலு கவனமா இரு!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டுத்தான் போனாள்.

 

முகம் கறுத்துச் சிறுத்தாலும் அவனும் அடங்கித்தான் போனான். இங்கே அலுவலகத்தில் வைத்து அவன் இலேசாக மோதிய பிறகும் அவள் அதைப் பெரிதாக்காமல் விட்டதுதான் அவனுக்குத் தைரியத்தைத் தந்திருந்தது. ஆனால், அன்று அவள் அப்படிச் சத்தமாகத் தன்னைத் திட்டி, அடிக்க வருவாள் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. அதோடு, அவனுக்கும் சமூகத்தில் கிடைக்கும் நல்லவன் என்கிற பெயர் மிக மிக முக்கியம்.

 

நாட்கள் ஓடியே போயின.

 

அன்று வெள்ளிக்கிழமை. உதயன் வவுனியாவுக்கு வந்திருந்தான். வந்த பிறகுதான் மகிழினிக்குக் கொஞ்சம் உடம்பு முடியவில்லையாம் என்று, குடும்பத்தோடு மகிழினி வீட்டுக்குச் சயந்தன் போயிருக்கிறானாம் என்று தெரிய வந்திருந்தது.

 

குளித்து, உடை மாற்றி, உணவை முடித்துக்கொண்டு வந்தவன் பக்கத்து வீட்டில் விளக்கு எரியவும் போனவர்கள் திரும்பி வந்துவிட்டார்களோ என்று பார்த்தான்.

 

சயந்தனின் பைக்கை காணவில்லை. மாறாக அபிராமியின் ஸ்கூட்டி நின்றிருந்தது. அவனுக்குள் பரபரப்புத் தொற்றிக்கொண்டது.

 

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அவனால் அவளைப் பார்க்கவோ, அவளோடு கதைக்கவோ முடியவில்லை. ஒரு பக்கம் எடுத்துக்கொண்ட விடுமுறைகளால் வேலைப்பளு அதிகம் என்றால் இன்னொரு பக்கம் முகப்புத்தகம், இன்ஸ்டா என்று எங்குத் தேடியும் அவளைப் பிடிக்க முடியவில்லை.

 

இப்போது பக்கத்து வீட்டில் நிற்கிறாள் என்றதும் வேகமாக அங்கு வந்தான். வாசல் கதவு திறந்துதான் இருந்தது. உள்ளே சுவாமி அறையில் தயாபரி அம்மாவின் படத்துக்கு விளக்கு வைத்துக்கொண்டு இருந்தவள், வாசலில் நிழலாடவும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

 

அவனை அங்கு எதிர்பாராததில் அவளுக்கும் திகைப்புத்தான். பார்த்தது பார்த்தபடி நிற்க, “என்ன செய்றாய்?” என்றான் அவன்.

 

சட்டென்று அவள் முகத்தில் ஒரு இறுக்கம் படர்ந்தது. அவன் ஒருவன் அங்கு இல்லவே இல்லை என்பதுபோல் சுவாமிப் படங்களுக்கும் சேர்த்து விளக்கை ஏற்றிக் கும்பிட்டாள்.

 

சில கணங்களுக்குத் தயாபரி அம்மாவின் படத்தையே பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு அவனைத் தாண்டிக்கொண்டு நடக்க முயல, விடாமல் அவளை அறைக்குள்ளேயே தடுத்து நின்றான் உதயன்.

 

“கதைக்க மாட்டியா?”

 

“…”

 

“எப்பிடி இருக்கிறாய்?”

 

“…”

 

“அபி!”

 

முதல் முறையாக அவன் வாயில் அவள் பெயர். காயப்பட்டு நிற்கும் அவள் உள்ளம், இனி அவன் உனக்கு வேண்டாம் என்று எவ்வளவுதான் அழுத்திச் சொன்னாலும், அவனின் ஒற்றை அழைப்பில் அவள் விழிகளில் கோடாகக் கண்ணீர் அரும்பி நின்றது. அதை அவனுக்குக் காட்டப் பிடிக்காமல் விழிகளைச் சிமிட்டி அடக்கி, முகம் திருப்பி நின்றாள்.

 

அவனால் அவளை அப்படிப் பார்க்க முடியவில்லை. நெஞ்சம் பிசைந்தது. உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது என்று அவ்வளவு தைரியமாகச் சொன்ன ஒருத்தியை இப்படி உடைய வைத்துவிட்டானே.

 

“அண்டைக்கு நான் அப்பிடி எல்லாம் கதைச்சிருக்கக் கூடாதுதான். சொறி.”

 

அவள் உதட்டோரம் இலேசாக வளைந்தது. ஆனாலும் அவனை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

 

“அபி! என்னைப் பார்! எத்தின முறை உன்னப் பாக்க எண்டு இஞ்ச வந்தனான் தெரியுமா?” என்றான் அவன் இயலாமையுடன்.

 

இதற்குள் தன்னைச் சமாளித்திருந்தவள் திரும்பி, “என்னத்துக்கு?” என்றாள் அவனை நேராகப் பார்த்து.

 

பார்வையாலேயே அவனைத் தள்ளி நிறுத்துகிறவளைப் பார்க்க அவனுக்கும் வலித்தது. ஆனாலும் சமாளித்து, “என்னத்துக்கு எண்டு தெரியாதா?” என்றான் அவன்.

 

“தெரியாது!” என்றவள் அவனைத் தாண்டிக்கொண்டு வெளியே போக முயல, “கதைச்சுக்கொண்டு இருக்கேக்க என்ன அபி இது?” என்று அவளைப் பிடித்து இழுத்தான் அவன்.

 

இன்று விட்டால் இனி எப்போது இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையுமோ என்கிற அவசரத்தில் அவன் இழுக்க, அதை எதிர்பாராதவள் வேகமாக வந்து அவனோடு மோதினாள்.

 

உடனேயே முகம் இறுகத் தள்ளி நின்று, “ஆரும் இல்லாத வீட்டில வச்சு அநாகரீகமா நடக்காதீங்க!” என்றாள் முகத்தில் அடித்தாற்போல்.

 

அப்படியே நின்றுவிட்டான் உதயன். அன்று ‘நின்றது நீ என்பதால்தான் உடையைக் கவனிக்க மறந்தேன்’ என்றவள் இன்று என்ன சொல்லிவிட்டாள்? முகம் கன்ற தானாகவே விலகி நின்றான்.

 

விறு விறு என்று விளக்கை அணைத்துவிட்டு, வீட்டின் கதவையும் பூட்டி, திறப்பைச் சயந்தன் சொன்ன இடத்தில் வைத்துவிட்டு, அதே வேகத்திலேயே புறப்பட்டு இருந்தாள் அபிராமி.

 

அவள் போன பிறகும் நிறைய நேரமாக அங்கேயே நின்றிருந்தான் உதயன்.

 

‘என்னத்துக்கு’ என்று நிமிர்ந்து நேராகக் கேட்டபோது அவள் விழிகளில் தெறித்த அனல் அவனை மிகவும் தொந்தரவு செய்தது.

 

 

 

error: Alert: Content selection is disabled!!