சிறுபிள்ளை போன்ற அந்தச் செயல் சிறு சிரிப்பை அவனுக்குக் கொடுத்தபோதும், தான் சிரிப்பதை அவள் கண்டால் கோபம் இன்னும் கூடும் என்று எண்ணியவன், தன் சிரிப்பை உதடுகளுக்குள்ளேயே புதைத்துவிட்டு, “சாரி…” என்றான் உண்மையாக.
மகளுக்கு இரவு உணவை ஊட்டிவிட்டு, அவளைத் தூங்க வைத்துவிட்டு வந்தபோதே ராஜுக்கு ரவி அழைத்திருந்தான். புது எண்ணாக இருக்கிறதே.. யார் என்று யோசித்தபடி அழைப்பை எற்றவனுக்கு, ரவி என்று தெரிந்ததும் கோபம் வந்துவிட்டது.
கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிடுவோம் என்று நினைத்தவன் கைபேசியை அணைத்துவிட்டான். அவன் குரலைக் கேட்கக்கூட கேட்க விரும்பவில்லை அவன்.
“அத்தான், சாப்பிட வாருங்கள்…” என்ற நிரஞ்சினியின் அழைப்பு அவன் காதில் விழவே இல்லை. பழைய நினைவுகளில் முகம் இறுக நின்றிருந்தான்.
“என்னத்தான், ஒரு தடவை கூப்பிட்டால் வரமாட்டீர்களா? சாப்பிடுவதற்கு உங்களை நான் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவேண்டுமோ?” என்று கேட்டபடி வந்தவள் ராஜ் கைபேசியை முறைத்தபடி நிற்பதை பார்த்ததும்,
“அதில் நான் தெரிகிறேனா அத்தான்?” என்று குறும்பாகக் கேட்டுக்கொண்டே, அவன் கைபேசியை எட்டிப் பார்த்தாள்.
அவளின் தொடர் பேச்சினால் யோசனை கலைந்தவன், புருவங்களை உயர்த்தி அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.
“இல்லை, எப்போதும் என்னைத்தானே முறைத்துப்பார்ப்பீர்கள். இன்றானால் உங்கள் கைபேசியை முறைத்து பார்த்தீர்களா…. அதுதான் அதில் நான் தெரிகிறேனோ என்று சந்தேகம் வந்துவிட்டது எனக்கு…” என்றாள் குறும்போடு.
அவளின் தலையில் செல்லமாகத் தட்டி, “இந்த வாய் இல்லாவிட்டால் உன்னை நாய் கவ்விக்கொண்டு போய்விடும்…” என்றான் சிரிப்போடு ராஜ்.
அவனின் மொத்த உயிர்ப்பும் அவளே! கவி மற்றும் பாவை மீதான கவலை அவனை அரிப்பதை நிரஞ்சி அறிவாள். அதனால் இயல்பிலேயே கலகலப்பான அவள், கணவனையும் அந்தக் கலகலப்புக்குள் இழுத்துவிடுவாள்.
“என்னை நாய் கவ்விக்கொண்டு போகாமல் இருக்கத்தானே எனக்கொரு காவலனை நியமித்து இருக்கிறேன்…” என்றவள் கலகலத்து சிரிக்கவும், “உன்னை….” என்றவனுக்கும் சிரிப்பு வந்தது.
அவனின் சிரிப்பை ஆசையோடு ரசித்தவள், “யாரத்தான்?” என்று கேட்டாள் மென்மையாக.
முகத்தின் சிரிப்பு மறைய “ரவி…” என்றான் ராஜ் சுருக்கமாக.
“என்ன சொன்னார்?” ஆவலுடன் அவள் கேட்கவும்,
“அவன் என்று தெரிந்ததும் நான் வைத்துவிட்டேன்…” என்றான் ராஜ்.
“என்னத்தான் நீங்கள்! சமயத்தில் நீங்களும் சிறுபிள்ளை போல் நடந்துகொள்கிறீர்களே…” என்று அவள் சலிக்க,
“பிறகு? அவனுடன் கொஞ்சிக் குலாவச் சொல்கிறாயா?” என்று சட்டென்று மூண்ட கோபத்தோடு கேட்டான் ராஜ்.
“இந்தக் கோபத்தைக் கொஞ்சம் குறையுங்கள் என்று உங்களுக்கு எத்தனை தடவைதான் சொல்வது?” என்றவள் தொடர்ந்து, “என்ன இருந்தாலும் எதற்காக அழைத்தார் என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும் அத்தான்…” என்றாள்.
“கவியின் வாழ்க்கையைக் கெடுத்து, ஒரு பிள்ளையையும் கொடுத்துவிட்டு இன்னொரு திருமணம் செய்யப்போகிறவனுடன் எனக்கென்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது?” கோபத்தில் பொருமினான் ராஜ்.
“அப்படி இன்னொரு திருமணம் செய்யப் போகிறவர் எதற்கு உங்களை அழைக்கவேண்டும்? எதுவும் முக்கியமானதாக இருக்கலாமே. நீங்கள் கதைக்காவிட்டாலும் அவர் என்ன சொல்கிறார் என்றாவது நீங்கள் கேட்டிருக்கலாமே அத்தான்?”
“ச்சு, என்னைக் குழப்பாதே நிரு…” என்றவனின் முகமும் குழப்பத்தைக் காட்டியது.
“அத்தான், ஒன்றை யோசித்தீர்களா நீங்கள்? பாவை யார் என்று ரவி அண்ணாவுக்குத் தெரியுமா? அல்லது கவி இன்னும் திருமணம் ஆகாமலே இருக்கிறாள் என்றாவது அவருக்குத் தெரியுமா? சில நேரம் அவருக்கு இந்த சந்தேகங்கள் வந்திருக்கலாம். அதைக் கேட்பதற்ககாகக் கூட உங்களுக்கு அழைத்திருக்கலாம் இல்லையா. என்னத்தான் நீங்கள்! அவருடன் பேசாமலேயே வைத்துவிட்டீர்களே….” ஆற்றாமையோடு சொன்னாள் நிரஞ்சி.
அவள் சொன்னபிறகே அப்படியும் இருக்குமோ என்று யோசித்தவனின் முகம் சோர்ந்தது.
“என்னைக் குழப்பாதே நிரு. அங்கே டவுனில் வைத்து நந்தன் சொன்னதைக் கேட்டாய் தானே. அவனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. அதுவும் இன்றுதான் நடந்தது! இதில் வேதனை என்ன தெரியுமா? அவனின் நிச்சயத்திற்கு அவன் மனைவியும் மகளும் சமைத்துச் சாப்பாடு கொடுக்கிறார்கள். அதை அண்ணன் நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்…” என்றவனைக் கழிவிரக்கம் சூழ்ந்தது.
நிருவுக்கும் வேதனையாக இருந்தது. கவிக்குத் தெரிந்தால் அவள் மனம் என்ன பாடுபடும் என்று கவலை பட்டவள், “என்னதான் நடந்தாலும் ரவி அண்ணா அழைத்தால் கதையுங்கள் அத்தான். அவர் திருமணம் செய்யப்போகிறார் என்று சொல்கிறீர்களே, இதுவரை அவரும் திருமணம் செய்யாமல் தானே இருந்திருக்கிறார். அதோடு கவி யாரையாவது திருமணம் முடித்திருப்பாள் என்றும் அவர் நினைத்திருக்கலாம் இல்லையா…” என்றாள் இதமாக.
அவள் சொல்வதைக் கேட்டவனுக்கும் யோசனை ஓடியது.
“என்னவோ நிரு. கவிக்கு ஏதாவது நல்லது நடந்தால், அதைப் பார்த்து மகிழும் முதல் மனிதன் நான்தான். என்னால் ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்கமுடியவில்லையே நிரு. மனதை வேதனை அரித்துக்கொண்டே இருக்கிறது…” கரகரத்த குரலில் சொன்னவனின் வேதனையை அறிந்தவள் தானே அவள்.
அவளின் உயிர் மூச்சான கணவன் படும் பாட்டைப் பார்க்க அழுகை வந்துவிடும்போல் இருந்தது அவளுக்கு. தான் அழுதால் கணவன் இன்னும் உடைந்துவிடுவான் என்று நினைத்து, தன்னைத் திடப்படுத்தியவள், “நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும் அத்தான். இனி அவர் எடுத்தால் கட்டாயம் நீங்கள் கதைக்க வேண்டும். உங்கள் கோபத்தைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு கவிக்காக என்று நினைத்துக் கதையுங்கள்.” என்றாள் இதமாக.
“கவிக்காக எதுவும் செய்வேன் நிரு. ஆனால் எனக்கு அவன் குரலைக் கேட்கவே பிடிக்கவில்லை…” என்றான் கசப்போடு.
அவள் முறைக்கவும், “அதுதான் இனிக் கதைக்கிறேன் என்று சொல்லிவிட்டேனேம்மா. பிறகும் எதற்கு முறைக்கிறாய்? மனிதனுக்குப் பசியில் உயிர் போகிறது. சாப்பாட்டைப் போடு..” என்று பொய்யாக மிரட்டியவனை, இடுப்பில் கைவைத்து அவளும் பொய்யாக முறைத்தாள்.
சிரிப்போடு, “சரிம்மா… சாப்பாடு தருகிறாயா இல்லையா?” என்று கேட்டான் அவள் கணவன்.
மலர்ந்த முகத்தில் பூத்த புன்னகையோடு, “வாருங்கள்..” என்றுவிட்டு, சாப்பாட்டு அறைக்குள் கணவனையும் அழைத்துக்கொண்டு சென்றாள்.
இரவு உணவை முடித்துக்கொண்டு, உறங்கும் மகளுக்கு ஆசையுடன் முத்தமிட்டு விட்டு அவன் கட்டிலில் சாயவும், அவனின் கைவளைவுக்குள் புகுந்துகொண்டாள் நிரஞ்சி.
இயல்பாகவே அவளை அவன் கைகள் அணைத்துக்கொண்ட போதும் மனதோ பழங்கணக்கு பார்த்தது.
ராஜின் தந்தை வைத்தியசாலையிலேயே தொடர்ந்து இருந்தபோதும், மரகதம் அடுத்த நாளே வீட்டுக்கு வந்துவிட்டார். மகளைக் கண்டதே அவருக்குத் திடத்தை கொடுத்தது.
கவியைக் கண்ட ஊர் மக்கள் எங்கே போனாய் என்று விசாரித்ததுக்கு, “என் நண்பனின் அம்மா அவளைக் கோவிலில் கண்டுவிட்டுத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். இன்னும் பொறுப்பு வராத சின்னபிள்ளை தானே இவள். நமக்குச் சொல்லவேண்டும் என்று மறந்துவிட்டாள். என்னிடம் சொல்வதற்காக என்னைத் தேடியிருக்கிறான் என் நண்பன். நான் அப்பாவுக்காக அங்கும் இங்கும் அலைந்ததில் என்னைத் தொடர்புகொள்ள முடியவில்லை அவனால். அதனால் இவள் எங்கே இருக்கிறாள் என்பது நமக்குத் தெரியாமல் போய்விட்டது. அடுத்தநாள் என் நண்பன் என்னைத் தேடிவந்து சொன்னான். பிறகு இவ்வளவு நாளும் ஆன்ட்டி யுடன் கவியும்வைத்தியசாலையிலேயே இருந்தாள்…” என்று ராஜ் கோர்வையாகச் சொல்லிவிடவும்

