எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 20 – 1

அத்தியாயம்-20

 

 

அடுத்தநாள் காலை, ‘அட அம்மாவின் மடியிலேயே தூங்கிவிட்டேன் போலவே..’ என்று நினைத்துக்கொண்டே கண் விழித்தாள் கவி. மரகதம், அப்படியே ஒரு பக்கமாகச் சாய்ந்து, சரிந்து வாய் திறந்தபடி கண் மூடி இருந்தார். அவரின் அந்த நிலை இனம் புரியா திகிலைக் கிளப்ப, “அம்மா…” என்று அவரைப் பிடித்து மெல்ல அசைத்தாள் கவி.

 

அவரிடம் அசைவே இல்லை.

 

“அம்மா…. அம்மா! எழுந்திருங்கம்மா…..” ஏனோ அவளுக்குப் பயத்தில் குரல் நடுங்கியது.

 

மரகதம் எழுந்திருக்கவே இல்லை!

 

உடலாலும் உள்ளத்தாலும் மிகவும் களைத்துப்போன அந்த உயிர் அவரை விட்டு பிரிந்திருந்தது!

 

வாழ்ந்தது போதும் என்று எண்ணினாரா அல்லது பட்டது போதும் என்று எண்ணினாரா… ஓய்வைப் பெற்றிருந்தார் மரகதம். வாழ்வின் நிரந்தர ஓய்வை!

 

தாயைக் கட்டியணைத்துக் கவி கதறிய கதறலில் ஊரே கூடியது அவர்கள் வீட்டில் . எதிர்பாராமல் நடந்துவிட்ட இறப்பில் அனைவருமே திகைத்து நின்றனர்.

 

கவியைத் தேற்ற யாராலுமே முடியவில்லை. அம்மா இறந்துவிட்டார் என்பது ஒருபுற வேதனை என்றால் அதற்குக் காரணம் தான்தான் என்று நினைத்தவளுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது.

 

ஒரு மகனாக அந்த இறப்பு வீட்டில் செய்யவேண்டிய அனைத்துக் காரியங்களையும் இறுகிய முகத்தோடு தானே முன்னின்று செய்தான் ராஜ்.

 

சொந்தபந்தம் என்று யாரும் இல்லாததில் அடுத்த நாளே மரகத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கதறிக்கதறியே நினைவை இழந்தாள் கவி.

 

இருந்த ஒரே சொந்தம், அதுவும் பெற்ற தாயின் இழப்பை எதைவைத்து ஈடு செய்வது? அல்லது எதைச் சொல்லி ஆறுதல் படுத்துவது? உயிர்ப்பே இல்லாது எந்த நேரமும் அழுது கரைந்தவளிடம் ராஜின் அதட்டல் கூட வேலை செய்யவில்லை.

 

நாட்கள் இப்படியே நகர, கவியின் வயிறும் மெல்ல மெல்ல வெளியே தெரிய ஆரம்பித்தது.

 

மேடாகிவிட்ட வயிற்றைப் பார்த்து, ‘உன்னால் தான் என் அம்மா என்னை விட்டுப் போனாரா…? அல்லது என்னால்தானா?’ என்று, வயிற்றில் இருந்த குழந்தையுடன் பேசியவளின் கண்களில் கண்ணீர் பெருகியது.

 

அந்தச் சின்ன வீட்டில் எங்கு பார்த்தாலும் கவிக்குத் தாயின் உருவமே தெரிந்தது. என்னைவிட்டுப் போய்விட்டீர்களே அம்மா. எனக்குப் பயமாக இருகிறதே அம்மா என்று மனதோடு தினமும் தாயோடு பேசிக்கொண்டு இருந்தாள்….

 

தனக்குள்ளேயே ஒடுங்கித் தனிமையில் வாடுபவளைப் பார்க்கமுடியாமல், ரவியுடன் கதைத்து எப்படியாவது கவியை அவனுடன் சேர்த்துவைக்க வேண்டும் என்று நினைத்தான் ராஜ். மரகதத்தின் கடைசி ஆசையல்லவா!

 

ரவியின் எண்ணுக்கு அழைக்க அது தற்போது பாவனையில் இல்லை என்றது. வேறு வழியில்லாமல் அவன் வீட்டுக்கு அழைத்தான். எடுத்தது சகுந்தலா.

 

“ரவியுடன் கதைக்கவேண்டும்..” என்று ராஜ் சொன்னதுதான் தாமதம்,

 

“உனக்கு வெட்கமாக இல்லை? என் மகன் உன்னை வீட்டை விட்டு வெளியால் போடா என்று துரத்தியும் அவனைத் தேடி எடுக்கிறாயே… ரோசம் என்பதே வராதாடா உனக்கு? அவன் இங்கே இல்லை. உங்கள் முகங்களில் விழிக்க விருப்பம் இல்லாமல் தான் வேறு ஊருக்குப் போய்விட்டான். பிறகும் எதற்காக அவனை விடாது துரத்துகிறாய்? இனியும் தயவு செய்து இங்கே எடுக்காதே… உனக்குக் காசுபணம் வேண்டும் என்றால் சொல்லு, நான் போடுகிறேன் பிச்சையாக. அதை பொறுக்கிக்கொண்டு ஓடு….” என்றார் வெறுப்போடு அவர்.

 

ஆங்காரமாக இருந்தது அவர் பேச்சு!

 

வந்த கோபத்தை பல்லை கடித்து அடக்கியவன், “உங்கள் காசு யாருக்கு வேண்டும்? அதைக் கொண்டுபோய்க் குப்பையில் கொட்டுங்கள்! உங்கள் மகனின் குழந்தை கவியின் வயிற்றில் வளர்கிறது. அதைச் சொல்லத்தான் எடுத்தேன்..” என்றான் இறுகிய குரலில்.

 

எதிர்முனையில் சில நொடிகள் சத்தமே இல்லை.

 

“என்னது? அவள் வயிற்றில் பிள்ளையா? அதற்கு எதற்கு இங்கே எடுத்தாய்? என் மகனையும் என்ன, உன்னை மாதிரிக் கேடு கெட்டவன் என்று நினைத்தாயா? அவள் எவனிடம் பிள்ளையை வாங்கினாளோ யாருக்குத் தெரியும்? கண்டவனின் பிள்ளைக்கு என் பிள்ளையை அப்பாவாக்கப் பார்க்கிறாயா? நல்ல புத்தியடா உனக்கு? அல்லது உன் குழந்தைக்கு என் பிள்ளையை அப்பாவாக்கும் திட்டமா?” என்றார் குரூரமாக….

 

அருவெறுத்துப் போனது ராஜ்க்கு. “சீச்சி..! நீயெல்லாம் ஒரு பெண்…” என்றவன், தொலைபேசியில் இருந்து கையை உதறினான் ராஜ்.

 

அந்த தொலைபேசியவே வெறுப்புடன் வெறித்தவனின் உடல் நடுங்கியது.

 

வயதில் பெரியவர் என்றும் பாராமல் அவரின் கன்னம் கன்னமாக அறைந்தால் என்ன என்று கோபம் வந்தது. இவரெல்லாம் ஒரு பெண்… மாயப்பிசாசு! பெண் எனும் பெயரில் இருக்கும் பெருச்சாளி….

 

அவமானத்தில் முகம் கருத்து கண்கள் கோபத்தில் சிவந்தபோதும் கவியின் வாழ்க்கையை யோசித்து ரவியின் ஊருக்கே சென்றான். அங்கே கண்ணன் தேவன் அல்லாது அவர்களது பள்ளியில் படிக்கும் வேறு மாணவர்களைச் சந்தித்து, வெளிப்படையாக இல்லாமல் மேலோட்டமாக ரவியைப் பற்றி விசாரித்தான்.

 

எங்கே போயிருக்கிறான் என்பது யாருக்குமே தெரியவில்லை. ஆனால் அவன் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக அங்கு இல்லை என்பது தெளிவானது.

 

ரவியுடன் பேசிப்பார்க்கலாம் என்கிற வாய்ப்பும் அடைக்கப்பட்டது.

 

அப்படியே அவனோடு கதைத்து கவியை அனுப்பி வைத்தாலும், அவளை நிம்மதியாக வாழ சகுந்தலா விடமாட்டார். பெண் உருவில் இருக்கும் அந்த மிருகத்தை நம்ப மறுத்தது ராஜின் மனம்.

 

அவளுக்கு அண்ணா நான் இருக்கிறேன். கடைசிவரை அவளையும் அந்தக் குழந்தையையும் நான் பார்த்துக்கொள்வேன் என்று நினைத்தவனுக்கு குற்ற உணர்ச்சியும் தாக்கியது. தன் நண்பன் என்று சொல்லிக்கொண்டு வந்தல்லவா அவளின் வாழ்க்கையை நாசமாக்கி இருக்கிறான் அந்த ரவி.

 

அவன் என் நண்பனாக இருந்திருக்காவிட்டால் கவியின் வாழ்க்கை இன்று இப்படி ஆகி இருக்காதே! ஆன்ட்டியும் இன்னும் வாழ்ந்திருப்பாரே என்று நினைத்தவனுக்கு நெஞ்சு பாரமாகக் கனத்தது.

 

கவியின் வீட்டுக்கு அவன் சென்றபோது, தாயின் சேலையை நிலத்தில் விரித்து, அதன்மேல் படுத்திருந்த கவி அழுதுகொண்டு இருந்தாள். அருகில் அமர்ந்திருந்து தங்கம் சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் எதுவும் அவள் காதை எட்டவே இல்லை.

 

“என்னக்கா நடந்தது?”

 

“ச்சு, இந்த ஊர் மக்களை என்ன செய்யச் சொல்கிறாய் ராஜ்? கவியின் வயிற்றைப் பார்த்துவிட்டுக் கண்டதும் பேசுகிறார்கள். இன்று ஒருவர் பேசியது அவள் காதில் விழுந்துவிட்டது. அதைக் கேட்டதில் இருந்து இப்படியே அழுதுகொண்டு இருக்கிறாள்…” என்றாள் தங்கம் வேதனையுடன்.

 

தகப்பன் இல்லாமல், தகப்பன் யார் என்றே தெரியாமல், கழுத்தில் தாலி இல்லாமல் பதினைந்து வயதுப்பெண் வயிற்றில் பிள்ளையோடு நின்றாள் ஊர் என்னவெல்லாம் பேசும்…..

சும்மா விடுமா?

 

ராஜிற்கு அவள் நிலை புரிந்தது. அது வேறு பரிதாபமாக இருந்தது.

 

“கவி, எழுந்திரும்மா. அழக்கூடாது! உன் வயிற்றில் இருக்கும் குட்டிப்பாப்பா பாவம் இல்லையா. அது பயந்துவிடும்….” என்றான் கனிவாக.

 

படுத்திருந்தவளுக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு ஆவேசம் வந்ததோ தெரியாது. விருட்டென்று எழுந்தவள், “இது என் வயிற்றில் வந்ததால்தான் என் அம்மா என்னை விட்டுப் போனார்கள். இந்தப் பெரிய வயிற்றைப் பார்த்துவிட்டுத்தான் எல்லோரும் என்னை மிகவும் கேவலமாகக் கதைக்கிறார்கள். எனக்கு இது வேண்டாம். இதை எனக்குப் பிடிக்கவில்லை!” என்று தன் வயிற்றைக் காட்டிச் சொன்னவள், கோபமிகுதியில் தன் வயிற்றிலேயே கையால் அடித்தாள்.

 

ராஜுக்கு கை எரிந்தபோதுதான், கவிக்கு கன்னத்தில் அடித்துவிட்டோம் என்பதே புரிந்தது . கவியோ கன்னத்தைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் வழிய அதிர்ந்துபோய் ராஜையே பாத்திருந்தாள்.

 

பதறிய தங்கம், “என்ன தம்பி நீ. ஏற்கனவே முடியாமல் இருப்பவளை அடித்துவிட்டாயே….?” என்று கேட்கவும்,

 

“இவள் செய்வது சரியாக்கா? இவளுக்கே அடித்தால் வலிக்குதே. வயிற்றில் இருக்கும் சின்னச் சிசுவுக்கு வலிக்காதா?” என்று கோபத்தோடு பதில் கேள்வி கேட்டான் அவன்.

 

“அறிவில்லை உனக்கு? வயிற்றில் இருப்பது உன் குழந்தை! பிறந்துவந்து உன்னை அம்மா என்று அழைக்கபோகும் உன் ஒரே சொந்தம்! உன் அம்மாவுக்கு நீ எப்படியோ அப்படித்தான் உனக்கு அந்தக் குழந்தை! அதைபோய் அடிக்கிறாயே.. நீயெல்லாம்?” என்று இரைந்தான் ராஜ்.

 

அவன் சொன்னதைக் கேட்டவள் அதிர்ச்சியோடு தன் வயிற்றைக் குனிந்து பார்த்தாள். என் சொந்தம்! என் அம்மா என்னை எப்படிப் பார்த்துக்கொண்டாரோ அப்படி நான் அதைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அந்தப் பதினைந்து வயதிலேயே தாய்மை அன்பு பெருக்கெடுத்தது அவளுக்கு!

 

பெண்ணுக்கு மட்டுமே உண்டான வரப்பிரசாதம் அல்லவா தாய்மை!

 

தன் வயிற்றையே மிக மிக மென்மையாகத் தடவிக்கொடுத்தவளின் நெஞ்சம் வலித்தது. ‘அம்மா உன்னை அடித்துவிட்டேனா குட்டி. அம்மாவை மன்னித்துவிடு செல்லம். நானும் உங்களை மாதிரி சின்னப் பெண்தானே…’ என்று குழந்தையோடு பேசியவளுக்கு, இப்போது வாயிற்றுச் சுமை சுகமாக இனித்தது.

 

இங்கே இருந்தால் தாயையே நினைத்து வருந்துவாள் என்பதாலும், தனியே இருப்பவளை ஊர் மக்களே குத்திப்பேசி ஒரு வழி செய்துவிடுவார்கள் என்பதாலும் அன்றைய தினத்திற்குப் பிறகு கவியைத் தன்வீட்டுக்கே கூட்டிக்கொண்டு சென்றுவிட்டான் ராஜ்.

 

அவளைக் கவனிக்கவேண்டிய கட்டாயம் உண்டானதில் அன்னமும் மெல்ல மெல்ல வழமைக்கு திரும்பினார்.

 

கவிக்கு உடலின் வேதனைகள் கூட இப்போதெல்லாம் வலிப்பதில்லை. ஒரு சிலரின் பேச்சுக்கள் கூட அவளைப் பெரிதாகத் தாக்குவதில்லை. அவளின் நினைவுகள் முதல் கனவுகள் வரை வயிற்றிலிருக்கும் குழந்தை என்றே ஆனது. இப்படியே நாட்கள் நகர, பெரும் வலிகளைத் தாங்கி மலையக அரசவைத்தியசாலையில் ஓவியப்பாவையைப் பெற்றெடுத்தாள் கவி.

 

பாவையைப் பார்த்த அன்னம், ராஜ், வேலன் மற்றும் தங்கம் எல்லோருக்கும் கண்கள் கலங்கிவிட்டது. காரணம், கவியின் மகள் அப்படியே மரகதத்தை உரித்துப் பிறந்திருந்தாள். அதுவேறு கவியின் சந்தோசத்தை இரட்டிப்பாக்கி இருந்தது.

 

பின்னே அவளின் அம்மாவே அவளுக்கு மகளாக பிறந்துவிட்டாள் அல்லவா..!

error: Alert: Content selection is disabled!!