எதற்காக அவளைப் பின்தொடர்கிறோம் என்றே தெரியாது பின்தொடர்ந்தவனின் எண்ணம் முழுவதும் அவளே இருந்தாள்.
சிறிது நேரத்தில் வெளியே வந்தவள், தன் ஸ்கூட்டியைக் கிளப்பிக்கொண்டு வீடு நோக்கிச் செல்லவும் தானும் பின்தொடர்ந்தான் ரவி.
அவளின் வீட்டை இனம் கண்டுகொண்டவன், பின்னரே திரும்பித் தன் வேலைகளைப் பார்க்கச்சென்றான்.
வவுனியாவின் நகர்ப்பகுதியில் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில், இரண்டாவது தளத்தைத் தன்னுடைய தொழிலுக்காக வாடகைக்கு எடுத்து, தேயிலை இறக்குமதி ஏற்றுமதி வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் ரவி.
அங்கே வேலையில் ஆழ்ந்திருந்தவனைக் காண்பதற்காக நந்தன், சாந்தி, தாரிகா மூவரும் வந்திருந்தனர். அவர்களைக் கண்டு சிறு வியப்புடன், “வாருங்கள்…” என்று பெண்களை அழைத்தவன், “வாடா நந்தா…” என்று புன்னகையுடன் நண்பனையும் அழைத்தான்.
“நான் ஒன்றும் உன்னைப் பார்க்க வரவில்லை. தாரிகா கேட்டாள், அதுதான் கூட்டிக்கொடு வந்தேன்…” முறுக்கிக்கொண்டு சொன்னான் நந்தன். அவன் கோபம் இன்னும் தீரவில்லை.
“சாந்தி, உன் கணவன் கோபத்தில் கூட மிக மிக அழகாக இருக்கிறான். பாரேன் இஞ்சி தின்ற எதுவோ என்பார்களே. அச்சு அசல் அப்படியே இருக்கிறான் இல்லையா…..” நகைப்போடு சொன்னவனை முறைத்த நந்தனுக்கும் சிரிப்பு வந்துவிட, ரவியின் தலையை எட்டிப் பிடித்து மேசையிலேயே அவனைச் சரித்து, அவன் முதுகில் ஓங்கி ஒன்று போட்டான் நந்தன்.
“வலிக்கிறது விடுடா…..” என்று கத்தியவனை கணக்கில் எடுக்காது,
“என் கோபம் உனக்கு சிரிப்பா இருக்காடா. என்னைப் பார்த்தால் குரங்கு மாதிரியா இருக்கு உனக்கு…?” என்றவனுக்கும் சிரிப்பு வந்துவிட, பெரிதாக வாய்விட்டு சிரித்தான்.
“அதுதானே ரவி. என்ன இருந்தாலும் நீங்கள் அண்ணாவைப் பார்த்துக் குரங்கு என்று சொன்னது தப்பு! அதுவும் சாந்தி அக்காவையும் வைத்துக்கொண்டு குரங்கு என்று சொன்னது மிகவும் தப்பு ரவி. எனக்கே அழுகை வந்துவிடும்போல் இருக்கிறது. நந்தன் அண்ணாவுக்கு குரங்கு என்று சொன்னால் எப்படி இருக்கும்…” என்று வரிக்கு ஒரு குரங்கைச் சேர்த்தவள், வராத கண்ணீரைப் பொய்யாகத் துடைத்தாள்.
போதாக்குறைக்கு அவளை முறைத்த நந்தனின் புறம் திரும்பி, “நான் அவரைத் திட்டிவிட்டேன் அண்ணா. இனி உங்களை சாந்தி அக்காவின் முன்னிலையில் குரங்கு என்று சொல்லமாட்டார் அவர்… நீங்கள் அழாதீர்கள்…” என்றாள் தாரிகா நகைக்கும் குரலில்.
“யார்? நீ? எனக்காகப் பேசினாய்? இதை நான் நம்பவேண்டும்…?” என்றவனின் ஒவ்வொரு கேள்விக்கும் ஆம் என்பதாகத் தலையை அசைத்தவளின் கண்களில் குறும்பு கொப்பளிக்க அடக்க முடியாமல் கலகலத்து சிரித்தாள் தாரிகா.
இவர்களைப் பாத்திருந்த ரவியும் சாந்தியும் விழுந்து விழுந்து சிரித்ததில், சாந்திக்கு கண்களில் நீர் வழிந்தது.
“அவர்கள் இருவரும் என்னைக் குரங்கு என்று சொல்கிறார்கள். நீயானால் சிரிக்கிறாய்….” என்று சாந்தியிடம் பாய்ந்த நந்தனின் குரலிலும் பெரும் நகைப்பு…
“உண்மையைச் சொன்னால் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கு நந்து…” என்றாள் சிரிப்பை அடக்கமுயன்றபடி சாந்தி.
எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க, “இப்போது சந்தோசமா? அப்படியே மனதுக்குள் ஐஸ் மழை பெய்யுமே உனக்கு….” என்று தாரிகாவிடமும் பாய்ந்தான் நந்தன்.
ரவிக்கோ சிரித்துச்சிரித்தே வயிறு வலித்தது.
“நீயெல்லாம் நண்பனாடா …? துரோகி! போடா…” என்ற நந்தனும், தொடர்ந்து கோபம் கொண்டவன் போல் நடிக்கமுடியாமல் நகைத்தான்.
அவர்களின் சிரிப்பலை ஒருவழியாக ஓயாவும், “எங்கேயாவது வெளியே போவோமா……” என்று ரவியைப் பார்த்துக் கேட்டாள் தாரிகா.
இரண்டு மூன்று நாட்களாக ஒழுங்காக வேலைபார்க்காததில் தேங்கிய வேலைகளை நினைத்து அவன் தயங்க, “ப்ளீஸ் ரவி… வாருங்களேன்.. நான் இங்கே இருக்கும் வரைதானே. இன்னும் சில நாட்களில் நாங்கள் கொழும்புக்குச் சென்றபிறகு ஆறுதலாக இருந்து வேலையைப் பாருங்கள்..” என்று தாரிகா கெஞ்சவும்,
“ஹேய் தாரிகா.. எதற்குப் ப்ளீஸ் போடுகிறாய். இப்போது என்ன, வெளியே போகவேண்டும். அவ்வளவுதானே! வா என்றால் வந்துவிட்டுப் போகிறேன்…” என்றான் ரவி இலகுவாக.
“பார்ரா…. உன் ஆள் கேட்டதும் சம்மதித்து விட்டாய். அதுவே நான் கேட்டிருக்க என்னவோ அழியும் உலகத்தை அழியவிடாமல் பிடித்திருப்பவன் போல் பெரும் சீன் ஒட்டியிருப்பாய்…..” என்று நேரம் பார்த்துத் தாக்கினான் நந்தன்.
சின்னப் புன்னகையுடன் ரவி அமைதியாக இருக்க, தாரிகாவுக்குப் பெருமையாக இருந்ததில் முகம் மலர்ந்தது.
மலர்ந்து விகசித்த முகத்துடன், “என் ஆளைக் கிண்டல் செய்யும் வேலையெல்லாம் வைத்துக்கொண்டீர்கள். சாந்தி அக்காவை அழவைத்தீர்கள் என்று அவரின் அப்பாவிடம் போட்டுக்கொடுத்து விடுவேன். பிறகு உங்கள் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிவிடும்…” என்று, ஒற்றை விரலை நீட்டி நந்தனைப் பொய்யாக மிரட்டினாள் தாரிகா.
“என்னது? சாந்தியை நான் அழவைத்தேனா? இது எப்போது?” என்று நடிப்புக்கு அதிர்ச்சி காட்டியவனிடம்,
“அதுதான் இப்போது சிரித்துச்சிரித்து அழுதார்களே….” என்றாள் தாரிகா சளைக்காது.
“அடியாத்தி! என்ன ஆளம்மா நீ! ரவி உனக்கொரு கும்பிடு. உன் வருங்கலாத்துக்கு ஒரு கும்பிடு. என்னை விடுங்கடா சாமி…” என்று கையெடுத்துக் கும்பிட்டவனைப் பார்த்துப் பெண்கள் இருவரும் திரும்பவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
நேரமாவதைக் கவனித்த நந்தன், “ரவி, நீ வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு இவர்களையும் கூட்டிக்கொண்டு கீழே வா. நான் வசந்தனிடம் வேலை விசயமாக ஒன்று சொல்லவேண்டும். சொல்லிவிட்டு வருகிறேன்…” என்றுவிட்டுக் கீழே சென்றான்.
அவன் சென்றதும் சிறு தயக்கத்துக்குப் பிறகு, “உன் தோழி எங்கள் திருமணத்திற்கும் சமைப்பதற்கு ஒத்துக்கொண்டாளா…ரா….” என்று சாந்தியிடம் கேட்டான் ரவி.
“உங்களிடம் அப்பா சொல்லவில்லையா அண்ணா…? சொல்லாமல் இருக்கமாட்டாரே… அவள் அன்றே சம்மதித்துவிட்டாளே.” என்றாள் சாந்தி.
“இல்லை.. இல்லையில்லை. அங்கிள் அம்மாவிடம் எப்படியும் சொல்லி இருப்பார். எனக்கு இப்போதுதான் ஞாபகம் வந்தது, அதுதான் கேட்டேன்…” என்று வேகமாகப் பதில் சொன்னவனுக்கு, அடுத்த கேள்வியை எப்படிக் கேட்பது என்று யோசனையாக இருந்தது.
“அவள்… அந்த பெண்.. அவரின் கணவரை உனக்கு தெரியுமா சாந்தி….?” மேசையில் இருந்த பைல்களை ஒதுக்குவதுபோல் தன் பதட்டத்தை மறைத்துக்கொண்டு, சாதாரணம் போல் விசாரித்தான்.
“இல்லை ரவியண்ணா…. நான் அவரைப் பார்த்தது இல்லை. ஆனால் பாவை வயிற்றில் இருக்கும்போதே அவர் இறந்துவிட்டதாகத்தான் சொன்னாள் கவி. அவளுக்கும் மலையகம் தான் சொந்த ஊர் அண்ணா….” என்றவளின் பதில், சிறு அதிர்ச்சியைக் கொடுத்தபோதும் அதிலேயே தனக்குத் தேவையானதைப் பிடித்தவன்,
“அவளும் மலையகம் என்பதால்தான் அவளைப் பற்றி கேட்டேன். சிலநேரம் எங்களுக்குத் தெரிந்த வீட்டுப் பெண்ணாகக்கூட இருக்கலாம் இல்லையா… ” என்றான் அவசரமாக.
“பாவை வயிற்றில் இருக்கும்போதே கணவன் இறந்துவிட்டாராமா…..?” என்று இழுத்துவிட்டு, “அவரின் பெயர்… தெரியுமா உனக்கு..?” என்று கேட்டவனின் இதயம் ஏனோ பலமாக அடித்துக்கொண்டது..
கவியைப் பற்றித் தாரிகாவுக்கு எதுவும் தெரியாது என்பதால், சாந்திக்கு தெரிந்த யாரைப் பற்றியோ ரவி விசாரிக்கிறான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, அவர்கள் கதைப்பதைக் கேட்டபடி அவனின் வேலை நடக்கும் இடத்தைப் பார்வையால் அளந்து கொண்டிருந்தாள் தாரிகா.
சாந்தி பதில் சொல்ல எடுத்துக்கொண்ட அந்தச் சில நொடித்துளிகள் ரவிக்கு மணிக்கணக்காக இருந்தது. சாதரணமாகக் காட்ட முயன்றாலும், அவனை மீறி அவன் முகத்தில் ஒருவித பதட்டம், பதட்டம் தொற்றிக்கொண்டது.
“எனக்கு சரியாகத் தெரியாது அண்ணா. இறந்த கணவரைப் பற்றி விசாரித்து அவளைச் சங்கடப்படுத்த வேண்டாம் என்று நான் எதையும் தூண்டித்துருவிக் கேட்டதில்லை. ஆனால் ஒருதடவை பாவையின் பள்ளிக்கூட ரிப்போர்ட் பார்த்தபோது, வர்மா என்று இருந்ததாக நினைவு…” என்றவளைத் தன்னை மறந்து வெறித்தான் ரவி.
எதிரே இருந்த பெண்களின் முன்னால் தன்னுடைய அதிர்ந்த நிலையை மறைக்கவேண்டும் என்பதைக் கூட மறந்து, சிலையாகிப் போனான் ரவி.

