எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 15 – 2

அவளோ நடப்பவைகளைப் புரிந்துகொள்ளும் சக்தியை இழந்து கன்றிச்சிவந்துவிட்ட கன்னத்தைத் தாங்கியபடி ராஜையே பாத்திருந்தாள். விடிவிளக்காக அவள் நம்பிய அவன் அறைந்தது அவளின் குழந்தை மனதை ஆழமாகக் காயப்படுத்தியது.

 

“ஏய்! முதலில் நீ வார்த்தைகளை அளந்து பேசு. என் அம்மாவை அதட்டும் வேலை எல்லாம் வைத்துக்கொள்ளாதே சொல்லிவிட்டேன்…” ஒற்றை விரலை நீட்டி ராஜை எச்சரித்தான் ரவி.

 

“தரம் தாழ்ந்த இடத்தில் பழக்கம் வைத்தால் இப்படித்தான் நடக்கும். உன்னிடம் எத்தனை தடவை சொல்லி இருப்பேன் இவனுடன் பழகாதே என்று. கேட்டாயா? இல்லையே! இப்போது அவன் என்னையே அதட்டுகிறான். உன்னைப் பெற்றதுக்கு எனக்கு இதெல்லாம் தேவைதான்…” என்று ரவியிடமும் பாய்ந்தார் சகுந்தலா.

 

“கவியை மட்டும் உன் அம்மா தப்பாகக் கதைக்கலாமா? உனக்கு அவளைப் பற்றித் தெரியாது? அவளைப் பார்த்து இவ்வளவு அபாண்டமாகப் கதைக்கிறாரே இவரெல்லாம் ஒரு பெண்? முதலில் உன் அம்மாவை ஒழுங்காகக் கதைக்கச் சொல்லு! பிறகு என்னைத் திருத்தலாம்…” என்றான் ராஜும் எந்தவிதப் பயமும் இல்லாது.

 

“என் வீட்டிலேயே நின்றுகொண்டு என் அம்மாவையே குறை சொல்லுகிறாயா? முதலில் போடா வெளியே…! இனிமேல் என் வீட்டு வாசல்படி மிதிக்கக்கூடாது நீ!” தன்னுடைய அம்மாவை ராஜ் குறை சொன்னதில் கோபம் கொண்ட ரவியும் ஆத்திரத்தோடு சொன்னான்.

 

அதைக் கேட்டதும் முகம் கன்றிக்கருத்தது ராஜிற்கு! கண்கள் கலங்க உடனேயே அவன் கால்கள் பின்னோக்கி நகர்ந்துகொண்டது. நண்பன் என்று நம்பிப் பழகியவன் கூறிய சொற்கள் கூரிய வாளாக மாறிவிட்டதில் வலித்தது! இதுவரை சகுந்தலா அவனை அவ்வளவாக மதித்தது இல்லைதான். ஆனாலும் பெரியவர்கள் அப்படித்தான் என்று ஒதுக்க முடிந்தவனால் ரவியின் பேச்சை ஒதுக்க முடியவில்லை.

 

அதைவிட அதே நண்பன் உடன் பிறவா தங்கையின் வாழ்விலும் விளையாடிவிட்டதில் மனம் கொதித்தது அவனுக்கு!

 

கவியைக் கையோடு இழுத்துச் செல்லும் வேகம் வந்தது. ஆனால் இப்போது அவள் கழுத்தில் தொங்கும் தாலி, அவனுக்கு அடுத்த பிரச்சினையாக மாறி இருந்தது.

 

அந்தத் தாலியோடு மகளைப் பார்த்தால் ஊசலாடும் மரகதத்தின் உயிர் உடனேயே பிரிந்துவிடும் என்பதில் ஐயமே இல்லை. அவரால் இதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது. என்ன செய்வது என்றே தெரியவில்லை அவனுக்கு.

 

கோபம் கொண்டு அவளை இழுத்துக்கொண்டு போகவும் முடியவில்லை. கட்டிய தாலியின் நிலை என்ன? இனிக் கவியின் நிலை என்ன? அடுத்ததாக தான் என்ன செய்யவேண்டும்? எதுவும் புரியவில்லை.

 

கோபத்திலோ அவசரத்திலோ தான் எதையாவது செய்துவிட, அதுவே அவளின் வாழ்வை இன்னும் பாதித்துவிட்டால்!?

 

குழம்பித் தவித்த மனதால் ஒரு முடிவை எடுக்க முடியாமல் தடுமாறியவனின் பார்வையில், திக்கற்ற குழந்தையாய்க் கண்களில் கண்ணீர் வழிய விழுந்த இடத்திலேயே கிடந்த கவி பட்டாள்.

 

அடித்துவிட்டோமே என்று கண்களில் வலியோடு அவன் பார்க்கவும், அந்தப் பார்வையில் என்ன உணர்ந்தாளோ, “ராஜண்ணா….” என்ற கேவலுடன் மறுபடியும் அவனிடமே ஓடினாள்.

 

அவளின் கண்ணீரை மென்மையாகத் துடைத்துவிட்டவன், “சாரிமா. அண்ணா கோபத்தில் அடித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு…” எனவும், சிறு விசும்பலுடன் அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் கவி.

 

“அண்ணா, என்னை அம்மாவிடம் கூட்டிக்கொண்டு போகிறீர்களா? எனக்கு அம்மாவைப் பார்க்கவேண்டும் அண்ணா… என்னை விட்டுவிட்டுப் போய்விடாதீர்கள். எனக்குப் பயமாக இருக்கிறது…” என்று அழுதாள் கவி.

 

முற்றத்தில் நின்ற அவர்கள் இருவரும் என்ன கதைக்கிறார்கள் என்று புரியாவிட்டாலும், கவி ராஜின் தோளில் சாய்ந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த சகுந்தலா, “பார்! எவனைக் கண்டாலும் அவன் மேல் விழுந்து பழகுகிறாள். அதைச் சொன்னால் கோபம் வருகிறது அவனுக்கு. சை! மானம் கெட்ட ஜென்மங்கள். இவளை எல்லாம் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாய் நீ…” என்று ரவியிடம் எரிந்துவிழுந்தார் அவர்.

 

“அம்மா, அவன் அவள் அண்ணன் அம்மா. இப்படி எல்லாம் சொல்லாதீர்கள்.” என்றான் ரவி மனத்தாங்கலுடன்.

 

“அவன் என்ன அவளுடன் கூடப் பிறந்தவனா? அப்படிக் கூடப் பிறந்திருந்தால் கூட வயதுக்கு வந்த பெண் ஆண்களைத் தொட்டுப் பழகலாமாடா? பெரிதாகச் சொல்லவந்துவிட்டாய்…” என்று அவன் வாயை அடைத்தவர், “அவளை அவனுடனேயே அனுப்பி வை! போய்த் தொலையட்டும். நீ படிக்கும் வேலையை மட்டும் பார்…..” என்று அதட்டிவிட்டு உள்ளே நுழைந்துகொண்டார் அவர்.

 

ரவிக்கோ அவளை அவனுடன் அனுப்புவதா என்று இருந்தது. அவளை அவள் தாயிடம் அனுப்பவேண்டும் என்றுதான் நினைத்திருந்தான். ஆனாலும் அவளை விட்டுவிட முடியும் போல் தோன்றவில்லை அவனுக்கு. ராஜும் கவியும் ஏதோ கதைத்துக்கொண்டு நிற்பதைப் பார்க்கப் பத்திக்கொண்டு வந்தது அவனுக்கு. அவர்களையே முறைத்தபடி நின்றான்.

 

அவனின் முறைப்பைக் கவனிக்காத ராஜ் கவிஇடம் நடந்ததை விசாரித்தான். அழுகையுடன் மெல்ல மெல்ல அவள் சொன்னவைகளைக் கேட்டவன் திகைத்துப் போனான்.

 

ரவியா? நல்லவன் என்று நம்பிப் பழகிய அவன் நண்பனா? ரவியைத் திரும்பிப் பார்த்தவனின் பார்வையில் அனல் பறந்தது.

 

ரவியும் ராஜைப் பார்த்து முறைத்துக்கொண்டு நின்றான்.

 

இருவரின் பார்வைகளும் கூர் ஈட்டியாக மோதிக்கொண்டது. நட்போடு கலந்திருந்த இரு உள்ளங்கள் இன்று இரண்டாகிப்போனது. காரணம்?

 

நாம் செய்யும் ஒரு செயல் நமக்கு நியாயமாகப் பட்டாலுமே அதற்கு மறுபக்கம் என்று ஒன்று உண்டு! அந்தப் பக்கத்தை ஆராய்வோமாக இருந்தால் நமக்கே நம் செயல் நியாயமற்றதாகப் படலாம்…..

 

அதை அறிந்துகொள்ளாத ரவி, தனக்குச் சரி என்று பட்ட ஒன்றை யோசனை இன்றிச் செய்துவிட்டான். ஆனால் அதற்கான தண்டனையை சுமக்கபோவது…..?

 

நடந்துகொண்டவைகளை அறிந்துகொண்ட ராஜ் அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான்.

 

இவளை இப்படியே அழைத்துக்கொண்டு வைத்தியசாலைக்கும் போகமுடியாது. தங்கள் கிராமத்துக்கு அனுப்பவும் முடியாது.

 

இதுவரை அவளைக் காணவில்லை என்று அனுதாபம் கொண்டிருந்த மக்களே தாலியுடன் இருக்கும் கவியை வார்த்தைகளாலேயே கூறு போட்டுவிடுவார்கள்.

 

நரம்பில்லா நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசுமே…

 

அவள் அடுத்தவரின் வாயில் அவலாவதில் விருப்பமில்லை அவனுக்கு.

 

அப்போ இவளை என்ன செய்வது.. இப்போதைக்கு இங்கேயே விட்டுவைப்பதா.. சகுந்தலா வார்த்தைகளாலேயே நோகடிப்பார்களே.. தலை வலித்தது. மனம் கனத்தது அவனுக்கு!

 

அண்ணன் என்று அவன் இருந்தும், அந்த நொடியில் அவளைக் காக்கமுடியாத நிலையில் வைத்துவிட்ட கடவுளின் மேல் கோபம் கூட வந்தது. வேறு வழி இன்றி மனதைக் கல்லாக்கியவன், ” கவி… அண்ணா சொல்வதைக் கேட்கிறாயா?” என்று கேட்டான்.

 

அவள் வேகமாகத் தலையை ஆட்டவும், “இன்னும் சில நாட்களுக்கு நீ இங்கேயே இருக்கிறாயா?” என்று கேட்டான்.

 

“அண்…ணா…” என்றவளுக்கு அழுகை வந்தது.

 

“அது… கவி, உன் அம்மா இப்போது வைத்தியசாலையில் இருக்கிறார்கள்…..” என்றான் மெல்ல.

 

“ஐயோ அம்மா! அம்மாக்கு என்ன அண்ணா….” அழுகையுடன் கேட்டவளை பார்க்கப் பரிதாபமாக இருந்தது அவனுக்கு!

 

“ஆன்ட்டிக்கு ஒன்றமில்லை கவி. உன்னைக் காணவில்லை என்றவுடன் கொஞ்சம் பயந்துவிட்டார்கள். அதனால் நான் தான் வைத்தியரிடம் அழைத்துவந்தேன். மற்றும்படி ஒன்றும் இல்லை. நீ அழாதே…” என்றான் ஆறுதலாக.

 

மரகதத்தின் உண்மை நிலையை அவளிடம் சொல்ல விரும்பவில்லை அவன். ஏற்கனவே அழுதுகொண்டு இருப்பவளை அதையும் சொல்லி இன்னமும் அழ வைப்பதில் காணப்போவது எதுவும் இல்லையே…

 

“நானும் உங்களுடன் வருகிறேன் ராஜண்ணா.. என்னை அம்மாவிடம் கூட்டிபோங்கள். எனக்கு அம்மாவைப் பார்க்கவேண்டும். பார்த்தே ஆகவேண்டும்.” என்றாள் பிடிவாத அழுகையுடன்.

 

“நான் சொல்வதைக் கேட்கப் போகிறாயா இல்லையா?” அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும், வேறு வழி இல்லாததில் அதட்டினான் ராஜ்.

 

அவனின் அதட்டல் அவளுக்குப் பயத்தை கொடுக்க வேகமாகச் சரி என்பதாகத் தலையசைத்தாள். இந்த மூன்று நாட்களும் அவள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டதில் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தாள் கவி.

 

ரவியின் புதுவிதமான அதட்டல்களும், அணுகல்களும் உடலையும் மனதையும் பாதித்தது என்றால், சகுந்தலாவின் பேச்சுக்கள் மனதின் ஆழத்தில் பதிந்து பயத்தைக் கொடுத்தது. இதில் ராஜும் அதட்ட முற்றிலும் உடைந்துபோனாள் கவி. எனவே அவன் சொன்னதற்கு எதுவும் சொல்லாமல் தலையை அசைத்தாள்.

 

ராஜுக்கோ அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ஆனால் அவனும்தான் என்ன செய்வான்.

 

“கவி, உன் அம்மாவுக்கு சரியாகும்வரைதான். அண்ணா தினமும் உன்னைப் பார்க்க வருகிறேன். அம்மாவுக்கு சுகமானதும் நாம் உன் வீட்டுக்குப் போகலாம். சரியா…” என்றான் இதமாக.

 

ரவியின் வீட்டை ஒருதடவை திரும்பிப் பார்த்தவள், அங்கே இன்னும் முறைத்துக்கொண்டு நின்ற ரவியைக் கண்டதும் பதட்டமாகத் திரும்பி, “பய…மாக இருக்கு ராஜண்ணா…” என்றாள் தழுதழுத்தகுரலில்.

 

“உன்னை யாராவது அடித்தார்களா கவி?” கூர்மையான பார்வையுடன் கேட்டான்.

 

error: Alert: Content selection is disabled!!