எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 22 – 3

 

“நான் நிம்மதியாக இருப்பது பொறுக்கவில்லையா உங்களுக்கு? அப்படி என்னதான் பாவம் செய்தேன்? அந்தப் பதினைந்து வயதில் எவ்வளவு சந்தோசமாக என்னுடைய அம்மாவோடு இருந்தேன். அப்போது தாலி என்கிற ஒன்றை என் கழுத்தில் கட்டி, என் வாழ்க்கையை நாசமாக்கியதும் அல்லாமல் என் அம்மாவையும் என்னிடம் இருந்து பிரித்தீர்களே..” என்று குற்றம் சாட்டியவள் கோபத்தோடு தொடர்ந்தாள்.

 

“இன்று இந்த உலகத்தில் எனக்கென்று இருக்கும் ஒரேயொரு சொந்தம் என் மகள்தான். அவளையும் பறிக்க வந்துவிட்டீர்களா? உங்களுக்கு மனச்சாட்சி என்பதே கிடையாதா? ஏன் இப்படி என்னைச் சித்திரவதை செய்கிறீர்கள்?

 

“நீங்கள் எனக்குச் செய்த துரோகத்தைக் கூட ஒதுக்கி, நானுண்டு என் குழந்தை உண்டு என்று ஒதுங்கித்தானே வாழ்கிறேன். உங்களிடம் எதற்காவது வந்தேனா…? பிறகு ஏன் மீண்டும் மீண்டும் என் வாழ்க்கையோடு விளையாட நினைக்கிறீர்கள்?” என்று ஆங்காரமாகத் தொடங்கியவள் அழுகையில் முடித்தாள்.

 

கண்களில் வழிந்த கண்ணீரை ‘இந்த கண்ணீர் வேறு…’ என்று அதை வெறுப்போடு சுண்டி எறிந்தாள்.

 

அவளின் கோபத்தை எதிர்க்க முடிந்தவனால், அந்தக் கண்ணீரை எதிர்க்க முடியவில்லை.

 

“ப்ளீஸ்.. அழாதே!” என்றபடி அவளை நோக்கி அடியெடுத்து வைத்தவனை, ‘அங்கேயே நில்’ என்கிற அவளின் முறைப்பு அடக்கியது.

 

இயலாமையோடு அவளைப் பார்த்தவன், “நான் சொல்வதைக் கொஞ்சம் புரிந்துகொள் கவி. உன்னைப் போலவே எனக்கும் என் மகள் வேண்டும் என்று இராதா? மகள் என்று தெரிந்தபிறகும் எப்படி என்னால் விடமுடியும் சொல்லு? அவளை உன்னிடம் இருந்து பிரிக்க நினைக்கவில்லை நான். நான், நீ, நம் மகள் என்று, நாம் மூவரும் ஒன்றாக இருக்கலாம் என்றுதானே கேட்கிறேன். என்னைப் புரிந்துகொள் கவி!” என்றவனின் குரல் மன்றாடியது.

 

இதுவரை தனக்கு மட்டுமே சொந்தம் என்று வளர்த்த மகளை, மகளின் பாசத்தை அவனோடு பங்குபோட மறுத்தது கவியின் மனது.

 

அதைவிட இவனை எப்படி நம்புவது? அன்று அவள் சிறுபெண் என்பதால் அதட்டித் தன் வேலைகளை முடித்தான். இன்று அனுபவம் உள்ளவள் என்பதால் தன்மையாகப் பேசித் தன் காரியத்தை சாதிக்க நினைக்கிறான். ஆகமொத்தத்தில் அவனுக்கு அவன் காரியம் நடக்கவேண்டும். மற்றவர்களைப் பற்றி ஒன்றும் இல்லை என்று தொடர்ந்த அவளின் சிந்தனை ஓட்டத்தை அவனின் தொடர்ந்த பேச்சு நிறுத்தியது.

 

“அம்மா அப்பா என்று குடும்பமாக அவள் வளரவேண்டும் கவி! நீ என் மனைவி. அவள் என் மகள். இதுதானே நிஜம். அதனால் உன்னுடைய வீண் பிடிவாதங்களை விட்டுவிட்டு நான் சொல்வதைக் கேள்…..” என்றான் தொடர்ந்து.

 

கவிக்குப் பத்திக்கொண்டு வந்தது. அவன் சொல்வதை அவள் கேட்பதா? அன்று கேட்டுப் பட்டவைகள் போதாதா? குழந்தைப்பிள்ளைக்கு விளக்குவது போல் விளக்கம் வேறு! இதில் ‘என் மகள்’ ‘என் மனைவி’ என்று பேச்சு வேறு!

 

“மனைவி, மகள் என்று புதிதாகச் சொந்தம் கொண்டாடுகிறீர்களே, இந்தத் திடீர்ப் பாசம் எங்கிருந்து வந்தது?” ஏளனமாகக் கேட்டாள்.

 

பார்வையை அவளிடம் இருந்து திருப்பி, “பாவை என் மகள் என்று அறிந்ததனால்…..” என்று மெல்லிய குரலில்.

 

அவனுக்கே அவன் சொல்வதன் அபத்தம் புரிந்தது.

 

“ஆக, மகள் என்று ஒருத்தி இருக்கிறாள் என்று தெரியாது இருந்திருக்க என்னைத் தேடி நீங்கள் வந்திருக்கப் போவதில்லை. அப்படித்தானே?!” என்று ஏளனமாகக் கேட்டவள் தொடர்ந்தாள்.

 

“ஒரு சிறு பெண்ணுக்குப் பாவம் செய்துவிட்டோமே என்கிற குற்ற உணர்வு இல்லை. வீட்டை விட்டுப் போனவள் என்ன ஆனால் என்கிற யோசனை இல்லை. ஏன் அவள் உயிருடன் இருக்கிறாளா என்று கூடத் தெரியாது. ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல,பன்னிரண்டு வருடங்கள்! அவ்வளவு நாட்களும் நிம்மதியாக இருந்துவிட்டு, இன்று மகள் இருக்கிறாள் என்று தெரிந்தவுடன் மட்டும் மனைவியின் நினைவு வந்து இங்கே ஓடிவந்து இருக்கிறீர்களே….. கவி இல்லாவிட்டால் இங்கே வந்திருப்பீர்களா அல்லது என் மனைவி நீ என்று சொல்லித்தான் இருப்பீர்களா?”

 

“என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டு என்னை வீட்டை விட்டே துரத்தினீர்கள். இப்போது பாவையிடம் நான்தான் உன் அப்பா என்று சொல்லி ஆசையை வளர்த்துவிட்டு, அவளுக்கு என்ன மோசம் செய்யப் போகிறீர்கள்? அவளையும் இடையில் துரத்திவிடும் திட்டமா…” என்றவளை இப்போது கடுமையாக முறைத்தான் ரவி.

 

எவ்வளவு சொன்னாலும் திரும்பத் திரும்ப துரத்தினேன், துரோகம் செய்தேன் என்பவளை என்ன செய்யலாம் என்று அவன் யோசிக்கையில் அவள் பேச்சுத் தொடர்ந்தது.

 

“அது சரி, இங்கே வந்து பலமாகத் திட்டம் எல்லாம் போடுகிறீர்களே…. எப்போது உங்கள் அம்மாவின் முந்தானை மறைவில் இருந்து வெளியே வந்தீர்கள்? நீங்கள் தான் தாய் சொல் தட்டா தங்கமான பிள்ளையாச்சே! உங்கள் திட்டத்துக்கு எல்லாம் அவர் சம்மதிப்பாரா? அல்லது என் மகளின் மனதில் அப்பா என்கிற பாசத்தை உண்டாக்கிவிட்டு உங்கள் அம்மாவின் பேச்சைக் கேட்டு அன்றுபோல் மறுபடியும் மறைந்துவிட்டீர்கள் என்றால் என் பிள்ளையின் கதி என்ன?” என்றவளின் அழுத்தமான பேச்சில் சீற்றமும் கலந்திருந்தது.

 

பதில் சொல்லமுடியாத திணறலில், “உன் வாயை! உன் வாயென்ன கொடுக்காடி?” என்று பாய்ந்தவன், தன் உயரத்துக்கும் நிமிர்ந்து நின்றான்.

 

அவள் கண்களை நேராகப் பார்த்து, “அன்று நான் ஊரைவிட்டுப் போனது உன் பாசையில் சொல்லப்போனால் ஓடி ஒழிந்தது தவறுதான். அதேபோல உனக்கு நான் செய்தவைகளும் பிழைதான். அதற்காக எனக்கொரு மகள் இருக்கிறாள் என்று தெரிந்தபிறகும் ஒதுங்கிப்போவேன் என்று கனவிலும் நினைக்காதே…” என்றான் உறுதியான குரலில்.

 

கவி ஏதோ சொல்லத் தொடங்கவும் கையை காட்டி நிறுத்தியவன், “அன்று பதினெட்டு வயதில் பிரச்சனைகளை எதிர்கொள்ளப் பயந்து, நான் மறைந்து ஓடியது உண்மைதான். ஆனால் அன்றைய ரவிவர்மன் அல்ல இன்று இருப்பவன்!

 

“இன்று என்ன பிரச்சினை வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன். எனக்கு என் மகளும் நீயும் வேண்டும்! அதற்கு எதிராக யார் வந்தாலும், அது நீயே நின்றாலும் விடமாட்டேன்!” என்றான் அழுத்தம் திருத்தமாக.

 

உதடுகளை ஏளனமாகப் பிதுக்கி, “உங்கள் அம்மா வந்தாலுமா…?” என்று வியந்தவளின் குரல் எள்ளி நகையாடியது.

 

அவளை உறுத்தவனின் விழிகளில் உறுதி தெரிந்தது. அதற்குமேல் எதுவும் பேசாது விருட்டென்று வெளியேறினான்.

 

செல்லும் அவனையே பார்த்தவளின் உதடுகளில் ஒரு திருப்தியான புன்னகை. பின்னே, பன்னிரண்டு வருடக் கோபத்தை அல்லவா இன்று கொட்டி இருக்கிறாள்.

 

வந்துவிட்டான் பெரிதாகப் பேச! தாயின் பேச்சை எடுத்ததும் ஓடிவிட்டான்! மனைவியாம் மனைவி! இவ்வளவு நாளும் இல்லாத மனைவியின் நினைப்பு இன்று பொத்துக்கொண்டு வந்துவிட்டதாமா என்று எண்ணியவளுக்கு மனமும் உடலும் கோபத்தில் நடுங்கியது.

 

எவ்வளவு அழுத்தமாகப் பேசுகிறான். இந்தத் தைரியத்தை யார் கொடுத்தது அவனுக்கு. செய்வதை எல்லாம் செய்துவிட்டு மனைவி மகள் என்று பாசமாகப் பேசுவது போல் நடித்தால் நான் நம்பிவிடுவேன் என்று நினைத்தானா? என்னையென்ன இன்னும் பதினைந்து வயதுப்பெண் என்று நினைத்தானா?

 

அவன் போனபின்னும் கோபம் அடங்காமல் நன்றாகத் திட்டித் தீர்த்தாள் கவி.

error: Alert: Content selection is disabled!!