எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு. 23 – 1

அத்தியாயம் -23

 

 

கவியின் வீட்டிலிருந்து வெளியேறிய ரவி காரில் ஏறி நேரத்தைப் பார்த்தான். அது இப்போது நேரம் இரண்டு இருபத்தியைந்து என்று காட்டியது. இன்னும் ஐந்து நிமிடங்களில் பள்ளி முடிந்துவிடும்.

 

மகளைப் பார்த்துவிடவேண்டும் என்கிற ஆர்வத்தில், வந்தது போலவே மிக வேகமாகக் காரை விரட்டினான்.

 

பள்ளிக்கூட வாசலுக்கு வந்தவனின் காதுகளில், பள்ளி விடுவதற்கான மணியோசையும் அதைத் தொடர்ந்து மாணவர்களின் சந்தோஷக் கூச்சலும் இனிய நாதமாய்க் கேட்டது.

 

மனம் பரபரக்க, முகத்தில் பிரகாசம் குடிகொள்ள, கண்களில் ஆவல் பொங்கி வழிய அவன் காத்திருக்க மாணவர்கள் வெளியே வரத்தொடங்கினர்.

 

வேகமாய்க் காரைவிட்டு இறங்கியவனுக்கு, இப்போதே மகளிடம் சென்று ‘நான் தான் உன் அப்பா’ என்று சொல்ல மனம் பரபரத்தது.

 

ஆனால், அப்பா இறந்துவிட்டதாக நினைத்திருப்பவள் இதுவரை தன்னுடன் சண்டை மட்டுமே போட்ட ஒருவர் வந்து நான்தான் உன் அப்பா என்று சொன்னால் நம்புவாளா?

 

அவள் நம்பாமல் சந்தேகமாகப் பார்த்துவிட்டால்? அதைத் தாங்கும் சக்தி அவனுக்கு இல்லை!

 

நடந்த குளறுபடிகளும் குழப்பங்களும் போதும். இனியாவது நடப்பவைகள் நல்லமுறையில் நடக்கட்டும் என்று நினைத்தவன், மகளுடன் பேசவேண்டும் என்று தோன்றிய பேராவலை அடக்கிக்கொண்டு காருக்குள்ளேயே மீண்டும் அமர்ந்தான்.

 

முதன்முதலில் பஸ்தரிப்பிடத்தில் கோபம் கொப்பளிக்கும் விழிகளுடன் அவன் பார்த்த பாவை, சைக்கிளில் அடிபட்டு விழுந்த ஒரு சிறுவனுக்காக அவனையே வாயடைக்க வைத்த பாவை, நான் பன்னிரண்டு வயதுப் பெரியபெண்ணாக்கும் என்று முகம் நிறையப் பெருமையுடன் அவனை விழிகளாலேயே வெட்டிய பாவை என்று அவன் மனம் முழுதும் பாவையே நிறைந்திருந்தாள்.

 

இதுவரை யாரோ ஒரு சிறு பெண்ணாகப் பார்த்தவளை இன்று ‘என் மகள்’ என்கிற சொந்தத்துடன் பார்க்கக் காத்திருந்தான்.

 

கூட்டம் கூட்டமாய், கும்பல் கும்பலாய் மாணவிகள் சிட்டுக் குருவிகள் போல் சிரித்து பேசியபடி செல்ல, அவர்கள் யாருமே அவன் கண்களுக்குத் தென்படவே இல்லை.

 

கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல, மகளை மட்டுமே தேடியது அவன் விழிகள்.

 

பார்த்திருந்தவனின் விழிகள் மகளைக் கண்டதும் பிரகாசமானது.

 

கண்மணியிடம் எதையோ சிரித்துப் பேசிக்கொண்டு வந்தவள் அவன் கண்களுக்கு உலகின் அத்தனை அழிகிய மலர்களின் மொத்த உருவமாய்த் தெரிந்தாள்.

 

ஆசையோடும் ஆவலோடும் ஏக்கத்தோடும் மகளைத் தழுவியது அவன் விழிகள்!

 

என் மகள்! பெருமிதமாய் எண்ணியது நெஞ்சம்!

 

இந்த ரவிவர்மன் தன் உயிர்கொண்டு வரைந்த ஓவியமா நீ கண்ணம்மா? நான் கொடுத்த உயிர்… என்னை அப்பா என்றழைக்கப்போகும் என் உறவு… என் மகள் ஓவியா…. இந்த ரவியின் மகள் ஓவியா….!

 

என்னையும் அப்பா ஆக்கியவள்…!

 

என் மகள்! எத்தனை தடவை சொல்லிப்பார்த்தாலும் அதன் இனிமை கொஞ்சம் கூடக் குறையவில்லை அவனுக்கு!

 

கண்மணியுடன் பேசிக்கொண்டே கார் அருகில் பாவை வரவும், என்னைக் கடந்து போய்விடப் போகிறாளே என்று தவித்தவன், நெஞ்சத்தில் மகளின் ஓவியத்தை நிரப்பியது போதாது என்று தன் கைபேசியிலும் அவள் உருவத்தை நிறைத்துக் கொண்டான்.

 

பாவை அவனைக் கடந்து சென்றுவிடவும், ஒரு நிமிடம் கண்மூடி மகளைக் கண்ட நொடிகளை ரசித்தான். இனி ஒரு நொடி தன்னும் அவள் இல்லாது வாழமுடியும் போல் தோன்றவில்லை அவனுக்கு!

 

இனி என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்தவன், நந்தனுக்கு அழைத்து ராஜின் வீட்டு விலாசத்தை(அட்ரெஸ்) அறிந்துகொண்டான்.

 

நந்தனும் எந்தக் கேள்வியும் கேட்காது, ராஜின் விலாசத்தை மட்டும் கொடுத்துவிட்டு வைத்துவிட்டான். கேட்டாலும் ரவி சொல்லப்போவது இல்லை என்பதால் கேட்கவில்லை அவன்!

 

காரை ராஜின் வீடு நோக்கி விட்டான் ரவி.

 

அவன் வீட்டை இனம் கண்டு கரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைகையிலேயே ரதீசாவின் சிரிக்கும் மழலைக் குரல் கேட்டது.

 

என் மகளின் மழலைச் சிரிப்பை ரசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லையே என்று நினைத்தவனுக்கு மனம் வலித்தது.

 

பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி உள்ளே சென்றவனை முதலில் கண்டது நிரஞ்சி.

 

ஆச்சரியமாக அவனைப் பார்த்துவிட்டு, “வாருங்கள் அண்ணா. உள்ளே வாருங்கள்…” என்று முகம் மலர உற்சாகத்தோடு வரவேற்றாள்.

 

அவளைப் பார்த்துப் புன்னகைத்தவனின் விழிகள் ராஜைத் தேடியது. அவனைக் காணாது வாசலிலேயே தயங்கி நின்றான் ரவி.

 

“நீங்கள் வாருங்கள் அண்ணா. அவர் உள்ளே இருக்கிறார். இதோ கூப்பிடுகிறேன்..” என்று ரவியிடம் சொல்லிவிட்டு,

 

“அத்தான்! இங்கே வாருங்கள். யார் வந்திருக்கிறார் என்று பாருங்கள்…” என்று ராஜைக் கூப்பிட்டபடி அவள் உள்ளே செல்லத் திரும்பவும், மகளைத் தோளில் தாங்கியபடி வெளியே வந்தான் ராஜ்.

 

மகளுடன் உள்ளறையில் விளையாடிக்கொண்டு இருந்தவன், மனைவியின் உற்சாகமான குரல் கேட்டு, ‘வந்திருப்பது யார்..’ என்று யோசித்துக்கொண்டு வெளியே வந்தவன், அங்கே ரவியைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

 

‘இவனா? இவன் எதற்கு இங்கே வந்திருக்கிறான்…’ சுறுசுறுவென்று கோபம் ஏறியது அவனுக்கு.

 

ஆனாலும், மனைவி பொறுமையாக ரவியிடம் கதைக்கச் சொன்னது நினைவில் வர, பல்லைக் கடித்துத் தன் கோபத்தை அடக்கினான்.

 

இருவர் விழிகளும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது. ரவியின் விழிகள் தவிப்புடன் ராஜைப் பார்த்தது என்றால் ராஜின் விழிகள் வந்த கோபத்தை அடக்கியபடி ரவியை எரித்தது.

 

இன்னுமே தயக்கத்துடன் ரவி வாசலிலேயே நின்றான். அதைக் கவனித்த ராஜுக்கு, அன்றொருநாள் ரவி வீட்டு வாசலில் தான் நின்றதும் அவன் தன்னை வெளியே போகச்சொன்னதும் நினைவில் ஆடியது…

 

“வீட்டுக்கு வந்தவர்களை வெளியே துரத்தும் பழக்கம் இங்கே யாருக்கும் இல்லை! அதனால் வந்தவர்கள் உள்ளே வந்து அமரலாம்..” என்றான் ரவியின் முகம் பாராது.

 

முகம் கன்றியபோதும் உள்ளே சென்று சோபாவில் அமர்ந்துகொண்டான் ரவி.

 

ராஜின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனைக் குறுகுறு என்று பார்த்த ரதீசாவின் மேல் ஏக்கத்தோடு அவன் விழிகள் படிந்தது.

 

மனதின் வலியை வெளியே கட்டாது, கைகளை நீட்டி, “என்னிடம் வருகிறாயா?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.

 

அந்தச் சிட்டு முகத்தைத் தகப்பனின் தோளுக்குள் புதைத்துக் கொள்ளவும், “இங்கே பார் குட்டி. இப்போது வருகிறாயா?” என்று தன் கைபேசியை ஆட்டிக் காட்டினான்.

 

தகப்பனின் தோள் மறைவில் இருந்து மெல்ல எட்டிப் பார்த்தவளின் விழிகள் அதைக் கண்டதும் ஆர்வத்தில் மின்னியது.

 

“வருகிறாயா?” என்றான் மீண்டும்…

 

தகப்பனின் கைகளில் இருந்து நழுவிக் கீழே இறங்கி, தன் மலர் பாதங்களை வேகமாக வைத்து அவனிடம் ஓடிவந்தாள். அந்தப் பிஞ்சுப் பாதங்கள் தாங்கியிருந்த காற்சலங்கை(கொலுசு) ஜல் ஜல் என்று ஒலிக்க, ரவியின் உள்ளம் வேதனையில் வெந்தது.

 

என் மகளின் தளிர் நடையைக் கூட நான் ரசித்ததில்லையே….

 

ஓடிவந்தவளை, பூக்குவியலை மடி தாங்குவது போல் இதமாகத் தாங்கிக்கொண்டான். அந்தப் பிஞ்சு மேனியின் ஸ்பரிசம் இன்னும் இன்னும் அவன் இழப்பின் அளவைச் சொன்னது.

 

அவன் கையில் இருந்த கைபேசியைப் பிடுங்கித் தன் சின்ன விரல்களை வைத்து நோண்டத் தொடங்கினாள் ரதீசா.

 

மகளின் செயல்களை புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்த நிரு, “இருங்கள் அண்ணா, குடிப்பதற்கு ஏதாவது எடுத்துவருகிறேன்…” என்று சொல்ல,

 

மடியிலிருந்த ரதீசாவின் மேல் வைத்திருந்த பார்வையை விலக்காமல், “இல்லைமா. ஒன்றும் வேண்டாம்…” என்றான் ரவி.

 

“அதெப்படி? எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டு ஒன்றுமே குடிக்காமல் இருப்பதா? கதைத்துக்கொண்டு இருங்கள். நான் ஏதாவது எடுத்துவருகிறேன்…”என்றுவிட்டு உள்ளே செல்லத் திரும்பி நிரு,

 

“பாவக்கா.. அப்பா பார்.. பாவக்கா… அம்மா பாவக்கா…” என்ற மகளின் குதூகலக்குரலில் ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்தாள்.

 

ராஜினதும் நிருவினதும் பார்வைகள் அவசரமாக சந்தித்து மீண்டன.

 

ரதீசா சொன்ன ‘பாவக்கா’ என்பதின் பொருள் பாவையக்கா என்பதாகும். இங்கே எங்கே பாவை என்று அலசியவர்களின் விழிகள், மகள் தூக்கிக் காட்டிக்கொண்டிருந்த ரவியின் கைபேசியில் வந்து நிலைத்தது.

 

வேகமாக மகளின் அருகே வந்த நிரு, அவளின் கையில் இருந்த கைபேசியைச் சற்றே குனிந்து பார்த்தாள். அதில் பள்ளிச் சீருடையில் பாவை இருந்தாள்.

 

மறுபடியும் கணவனிடம் பார்வை சென்று மீள, “அண்ணா… இது பாவை…” என்று அவள் இழுக்க,

 

“என் மகள் ஓவியப்பாவை..!” என்று முடித்துவைத்தான் ரவி.

 

நிருவின் முகம் வியப்பைக் காட்டியது. ராஜின் முகம் கோபத்தில் இறுகியது.

 

error: Alert: Content selection is disabled!!