எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 23 – 2

“ஓ… உண்மையாகவா? எப்போதில் இருந்து?” என்று இளக்காரமாக ரவியைப் பார்த்து கேட்டவன் மனைவியிடம் திரும்பி,

 

“கேட்டாயா நிரு, பன்னிரண்டு வருடமாக அப்பா இல்லாமல் வளர்ந்த பிள்ளைக்குத் திடீர் என்று அப்பா ஒருவன் வந்திருக்கிறான்…” என்றான் மேலும் இகழ்ச்சியாக.

 

“இதுவரை காலமும் நீங்கள் எங்கே இருந்தீர்கள் சார்? துபாய்க்கு வேலைக்குப் போயிருந்தீர்களோ?” எள்ளலோடு எள்ளி நகையாடினான் ராஜ்.

 

அந்தளவுக்கு அவனுக்குக் கோபம் வந்தது. கவியை நினைத்து கோபத்தைக் காட்டவும் வழி இல்லை. அதனால் இளக்காரமாகப் பேசினான்.

 

நிரஞ்சியின் கண்களோ அமைதியாக இருங்களேன் என்று கெஞ்சியது ராஜிடம்…

 

ரவியோ வேதனையுடன் கண்களை இறுக மூடி திறந்தான்.

 

“நீயாவது சொல்லி இருக்கலாமே ராஜ்..?” ஆற்றாமையுடன் கேட்டான் ரவி.

 

ராஜ் ரவியைப் பார்த்த பார்வையில் நெருப்பு பறந்தது.

 

“சொல்லி? பாவைக்கு எவன் அப்பன் என்று என்னிடமே நீ கேட்கவா…?” வெறுத்த குரலில் கேட்டான் ராஜ்.

 

“இப்படியெல்லாம் பேசாதே ராஜ்!” வலி மிகுந்திருந்தது ரவியின் குரலில். தன் மகளின் பிறப்பைப் பற்றி ராஜ் அப்படிச் சொன்னது ரவிக்குப் பிடிக்கவில்லை.

 

“அட! கோபம் வருகிறதோ உனக்கு? உன் அம்மா சொன்னதைத்தான் நான் சொன்னேன். நானாவது நாகரீகமாகச் சொன்னேன்…” என்றவனுக்கு அன்றைய அவமானங்கள் அத்தனையும் இன்று நினைவில் வர, கோபத்தில் இறுகியது அவன் முகம்.

 

“என்ன சொல்கிறாய்? என் அம்மாவுக்கு ஒவியாவைப் பற்றித் தெரியுமா..?” என்று கேட்டான் ரவி.

 

“தெரியாமல் என்ன? மிக நன்றாகத் தெரியும். உனக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அந்தப் பெரிய மனுஷி பெற்ற மகன்தானே நீ. அதுதான் நடிக்கிறாய்..” என்றான் ராஜ் வெறுப்போடு.

 

“இல்லைடா. எனக்குத் தெரியாது..” என்றான் ரவி வேதனையோடு ஓய்ந்த குரலில்.

 

தாய்க்குத் தன் மகளைப் பற்றித் தெரியும் என்பது ரவிக்கு வேதனையைக் கொடுத்தது. மறைத்துவிட்டாரே அம்மா…. தன்னைச் சுற்றி என்னன்னெவோ நடந்திருக்க, எதையும் அறிந்துகொள்ளாமல் அறிந்துகொள்ளவும் முற்படாமல் இதுநாள் வரை வாழ்ந்திருக்கிறோம் என்று நினைத்தவனுக்குத் தன்மீதே வெறுப்பாக இருந்தது.

 

ராஜைப் பார்த்து, “எனக்கு உண்மையாகவே தெரியாது ராஜ். தெரிந்தபிறகு என்னால் அவர்களை விட முடியாது. எனக்கு என் மகளும் மனைவியும் வேண்டும். அதற்கு நீதான் உதவி செய்யவேண்டும்…” என்றான் நேரடியாக.

 

“மனைவி பிள்ளையா? நேற்று முன்தினம் தானே உனக்கு நிச்சயம் நடந்தது. அதற்கிடையில் பிள்ளையும் பிறந்துவிட்டதா?” இமைகளை உச்சி மேட்டுக்கே கொண்டு சென்று ஆச்சரியப்பட்டான் ராஜ்.

 

முகம் கறுக்கத் தலை குனிந்தவன், “எனக்கொரு மகள் இருக்கிறாள் என்பது தெரியாததால் நடந்த நிச்சயம் அது. இனி அந்தத் திருமணம் நடக்காது.” என்று தன்மையாகவே சொன்னான்.

 

“ஆக, மகள் என்று ஒருத்தி இருப்பது தெரிந்ததால் தான், கவி உன் மனைவி என்பது நினைவுக்கு வந்திருக்கிறது. இல்லையானால் இரண்டாவது திருமணம் ஜாம் ஜாம் என்று நடந்திருக்கும். இல்லையா…?” உதடுகள் இகழ்ச்சியாக மடியக் கேட்டான் ராஜ்.

 

“கவியும் யாரையாவது இதற்கிடையில் திருமணம் செய்திருப்பாள் என்று நினைத்தேன். இப்போது ஓவியைப் பற்றித் தெரிந்தபிறகு… எனக்கு அவர்கள் இருவரும் வேண்டும் ராஜ்..”என்றான் இப்போதும் தணிவாகவே.

 

“எதற்கு? மறுபடியும் கவியின் வாழ்க்கையைச் சீரழிக்கவா…?” என்று சீறினான் ராஜ்.

“அப்படி இல்லை ராஜ்…”

 

“என்ன அப்படி இல்லை? தாலியையும் கட்டிவிட்டு உன் தேவையையும் முடித்துவிட்டு நீ ஓடிவிட்டாய். அதன்பிறகு கவி என்ன பாடு பட்டாள் என்று உனக்குத் தெரியுமா? உன் பிள்ளையை வயிற்றில் சுமந்தவளை ஊர் எவ்வளவு அசிங்கமாகப் பேசியது தெரியுமா? நீயெல்லாம் மனிதனாடா? ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்ததும் அல்லாமல், அவளின் அம்மா இறப்பதற்கும் முழுக்காரணமும் நீதானேடா…. கொலைகாரப்பாவி…..” என்றான் ராஜ் ஆத்திர மிகுதியில் ஆவேசம் கொண்டு.

 

“அத்தான்?!” ராஜின் பேச்சு நிரஞ்சிக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

 

கண்களை இறுக மூடித்திறந்தான் ரவி. வலி நிறைந்த விழிகளால் ராஜைப் பார்த்தான்.

 

“வார்த்தைகளை விடாதே ராஜ். வலிக்கிறது. நான் செய்தது பிழைதான். என்னால் ஒரு உயிர் போயிருக்கிறது என்பது எனக்கு தெரியாதுடா… இன்று நான் செய்த தவறுகளை உணர்ந்து, என் மனைவி பிள்ளை எனக்கு வேண்டும் என்று வந்திருக்கிறேன்.” வலியோடு சொன்னவன் தன் கையில் இருந்த ரதீசாவைக் காட்டி, “உன்னால் உன் மகளைப் பிரிந்து இருக்க முடியுமா ராஜ்?” என்று கேட்டான்.

 

தன்னைப் பார்த்து முல்லைப் பற்கள் தெரியச் சிரித்த மகளைப் பார்த்தான் ராஜ்.

 

அவன் மகளை அவனால் பிரிந்திருக்க முடியுமா? முட்டாள் மாதிரி உளறுகிறானே என்று கோபத்தில் ரவியை முறைத்தான்.

 

“எதற்கு முறைக்கிறாய் ராஜ்? நான் கேட்டதற்கே உனக்கு வலிக்கிறது. ஆனால் நான்? என் மகளைப் பன்னிரண்டு வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்திருக்கிறேன் ராஜ். இனியாவது அவளோடு இருக்க ஆசைப் படுகிறேன். அது தப்பாடா?” என்று கேட்டான் ரவி.

 

“என் மீது உனக்குக் கோபம் என்றால் எத்தனை அடிவேண்டுமானாலும் அடி. வாங்கிக்கொள்கிறேன்! ஆனால், தயவுசெய்து என் மகளை என்னிடமிருந்து பிரித்துவிடாதே ராஜ். இனி வரும் ஒவ்வொரு நாட்களையும் அவளோடு சந்தோசமாகக் கழிக்க விரும்புகிறேன்.

 

“நீயும் ஒரு அப்பாதானே. உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையா என் தவிப்பை…” கிட்டத்தட்ட மன்றாடியது அவன் குரல்.

 

ரவியின் நிலை புரிந்தபோதும் ஏனோ பரிதாபம் ஏற்பட மறுத்தது ராஜ்க்கு.

 

“பாவை உன் மகள். அதனால் அவள் வேண்டும் என்கிறாய். ஆனால் கவி??” என்று கேட்ட ராஜ், நிருவைக் கையால் காட்டி, “இவள் என் மனைவி. என் காதல் மனைவி! என் உயிர்! உனக்குக் கவியும் அப்படித்தானா?” என்று ஏளனமாகக் கேட்டான்.

 

இல்லையே! அவள் அவன் காதலி இல்லையே. அன்றும் அவன் அவளைக் காதலித்தது இல்லையே! வயதுக்கோளாறு பண்ணிய வேலைதானே அன்று நடந்தவைகள்!

 

வெட்கமாக இருந்தது ரவிக்கு. எவ்வளவு கீழ்த்தரமாக நடந்திருக்கிறேன். காதல் இல்லாமல், கல்யாண வயசும் இல்லாமல் ஒருத்தியுடன் வாழ்ந்து ஒரு குழந்தை உண்டாகக் காரணமாக இருப்பது என்பது.. ச்சே!

 

தன்னையே மனதால் வெறுத்தபோதும் ராஜின் கேள்விக்குப் பதில் சொன்னான் ரவி.

 

“இன்று மனைவியாக மட்டுமே அவள் இருந்தாலும், திருமணத்தின் பின் என்னுயிர்க் காதல் மனைவியாக அவள் மாறுவதற்குச் சந்தர்ப்பங்கள் உண்டுதானே ராஜ்.” என்றவன், அவனும் நிருவைக் காட்டி, “திருமணத்திற்கு முதலும் இவள் உன் உயிரா? இல்லையே……” என்றான் ரவி.

 

ராஜை ரவி மடக்கிவிட்டதில், நிருவின் இதழ்களில் அழகிய புன்னகை மலர்ந்தது. அவளை முறைத்தான் ராஜ். கண்கள் சிரிப்பில் மின்னியபோதும் உதடுகளை அழுந்த மூடிக்கொண்டாள் நிரு.

 

அவளுக்கு ஏனோ ரவியை மிகவும் பிடித்துப்போனது. பிழை விடுபவன்தான் மனிதன்! ஆனால், செய்த பிழையை ஏற்றுக்கொள்பவன் பெரியமனிதன் அல்லவா….

 

அதோடு தப்பைச் செய்துவிட்டு தப்பிக்க நினைப்பவர்கள் மத்தியில், செய்த தப்பை உணர்ந்து, அதைத் திருத்திக்கொள்ள நினைப்பது என்பது பெரிய விடயம் அல்லவா….

 

கவியாக நியாயம் கேட்காதபோதும், வளமான வாழ்க்கை ஒன்று அவன் கண் முன்னால் இருந்தபோதும், மகளையும் மனைவியையும் காக்க நினைப்பவன் எப்படிக் கெட்டவனாக இருக்கமுடியும்?

 

நிருவின் சிந்தனைகள் இப்படியாக இருக்க, ரவி ராஜுக்குத் தன்னைப் புரியவைக்க முயன்று கொண்டிருந்தான்.

 

“உன்னைப்போல நானும் மனைவி, பிள்ளை என்று வாழ ஆசைப்படுகிறேன் ராஜ். என் மகளுக்கு நல்ல அப்பாவாக இருக்க நினைக்கிறேன்….” என்றவனை ராஜ் முறைக்க, “நிச்சயமாக கவிக்கும் நான் நல்ல கணவனாக இருப்பேன் ராஜ். என்னை நம்பு.. இதுவரை நான் செய்தவைகள் தப்புத்தான்டா. மடச் சாம்பிராணியாகவே இருந்துவிட்டேன். இனி அப்படி எதுவும் செய்ய மாட்டேன்டா. என்னை நம்பி எங்களைச் சேர்த்து வைடா…” வெளிப்படையாகவே மன்றாடினான் அவன்.

 

“எப்படி? இந்தப் பன்னிரண்டு வருடமாக நல்..ல்ல கணவனாக இருந்தாயே, அப்படியா?” இகழ்ச்சியாகக் கேட்டான் ராஜ்.

 

“இனி நிச்சயம் நல்ல கணவனாக இருப்பேன்டா…” என்றான் உறுதியாக.

 

எப்படி அலட்சியப்படுத்தினாலும், எடுத்தெறிந்து பேசினாலும் தணிந்தே போகிறவனை ஒரு அளவுக்கு மேல் ஒன்றும் சொல்லமுடியவில்லை ராஜால். செத்த பாம்பை எத்தனை தடவைதான் அடிப்பது?

 

error: Alert: Content selection is disabled!!