அத்தியாயம்-24
காரில் சென்றுகொண்டிருந்த ரவிக்கு மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
கவியைப் பற்றிய தவறான எண்ணம் இருந்தபோதும், தவறு செய்துவிட்டேனே என்கிற தவிப்பே இந்தப் பன்னிரண்டு வருடமும் அவனை மனதளவில் இறுக வைத்திருந்தது. இன்று, கவிமேல் எந்தத் தவறும் இல்லை என்று அறிந்ததில் குற்ற உணர்ச்சி அவனைப் பலமாகத் தாக்கியது என்றால், தாய் செய்த பாவங்களை அறிந்த நொடியில் இருந்து அவன் மனது வேதனையில் வெந்தது.
தாயை வெறுத்து விடுவோமோ என்று கூடப் பயமாக இருந்தது அவனுக்கு. அந்தளவுக்கு சகுந்தலா மேல் கோபம் வந்தது.
அவரைக் கோபித்து என்ன பலன்? எல்லாவற்றிற்கும் ஆரம்பம் நான் செய்த தவறல்லவா!
என் கையாலாகாத தனமும், பிரச்சனைகளைச் சந்திக்க முடியாமல் ஓடி ஒழிந்த கோழைத்தனமும் தானே காரணம் என்று எண்ணியவனுக்குத் தன் மேலேயே வெறுப்பாக இருந்தது.
இதில் அவன் தாய் செய்தவைகள் வேறு அவனைக் குன்றிக் குறுக வைத்தது. அம்மா என்னை ஏமாற்றி விட்டாரே… அவரை நம்பி இவ்வளவு காலமும் பொறுப்பற்று இருந்துவிட்டேனே… அவரின் பேச்சை ஒரு துளி கூடச் சந்தேகப்படத் தோன்றவில்லையே.. அந்த என் நம்பிக்கைக்கு அவர் செய்தது நம்பிக்கைத் துரோகம் அல்லவா என்று அவன் மனது எரிமலையாகக் கொதித்துக் கொண்டிருந்தது.
மனதின் கொதிப்பை, கோபத்தை வெளியே கொட்டவும் முடியாமல் உள்ளே அடக்கவும் முடியாமல் மூச்சு முட்டியது அவனுக்கு.
காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான். விறாந்தையில் அமர்ந்திருந்த தாய் கண்ணில் பட, ராஜ் சொன்னவைகள் தான் அவன் மனதில் ஓடியது.
நின்று கதைத்தால் கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடுவோம் என்று எண்ணியவன், அவரைக் கவனிக்காதவன் போல் விறாந்தையைக் கடந்து உள்ளே செல்ல முயன்றான்.
உள்ளே வரும் அவனையே பாத்திர்ந்த சகுந்தலா, “எங்கேடா போய்விட்டு வருகிறாய்..? உன் இஷ்டப்படி ஊர் சுத்திவிட்டு வருகிறாயா?” என்று அதட்டினார்.
நடந்து கொண்டிருந்தவன் அப்படியே நின்று தலையை மட்டும் திருப்பித் தாயை உறுத்து விழித்தான்.
மகனின் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்து, “என்னடா…?” என்றார் சகுந்தலா கேள்வியாக.
“என்னது என்ன..?” கேட்ட ரவியின் குரலில் என்ன இருந்தது… ஆத்திரம்? கோபம்? வெறுப்பு? அல்லது எல்லாமேயா?
“என்னடா? ஒரு மாதிரிப் பேசுகிறாய்? நீ தாரிகாவை விட்டுவிட்டு போய்விட்டாயாம். இங்கே அவளின் அம்மா எனக்கு எடுத்துக் கத்துகிறார். இதெல்லாம் தேவையாடா…. சம்மந்தியம்மாவுக்கு என்னால் பதில் சொல்லமுடியவில்லை…” என்றார் சகுந்தலா கோபமாக.
செய்வதை எல்லாம் செய்துவிட்டு இப்போது சம்மந்தி அம்மாவா? நெஞ்சு கொதித்தது ரவிக்கு.
நின்ற நிலையிலேயே நிமிர்ந்து நின்று, “இந்தக் கல்யாணம் நடக்காது! உங்கள் சம்மந்தி அம்மாவுக்கு நீங்களே அழைத்து சொல்லிவிடுங்கள்…” என்றான் உறுதியான குரலில் தாயை நேராகப் பார்த்து.
திகைத்துப்போன சகுந்தலா, “என்னடா உளறுகிறாய்? அபத்தமாகப் பேசாதே…!” என்று அதட்டினார்.
“உளறுகிறேனா? உண்மைதான் அம்மா. இதுவரை உங்களின் தலையாட்டி பொம்மையாக இருந்தவன் தானே. இன்று சுயமாக ஒன்றைச் சொன்னால் அது உளறலாகத்தான் தெரியும். ஆனால் அதுதான் உண்மை! இந்தக் கல்யாணம் நடக்காது!” என்றான் மீண்டும் உறுதியான குரலில்.
“ஏன்? ஏன்டா…?” அதிர்ச்சியில் வார்த்தைகள் வர மறுத்தது சகுந்தலாவுக்கு.
“ஏற்கனவே கல்யாணமாகி எனக்கொரு மனைவி இருக்கிறாள். போதாக்குறைக்கு பன்னிரண்டு வயதில் ஒரு மகளும் இருக்கிறாள்…” என்று விஷயத்தைப் பட்டென்று போட்டு உடைத்துவிட்டு, தாயைப் பார்த்துக் கசப்பான புன்னகை ஒன்றைச் சிந்தி,
“பாருங்கள், நான் விசரன் மாதிரி உங்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.. உங்களுக்குத்தான் அது ஏற்கனவே தெரியுமே. ஆனால் எனக்கு இன்று தான்மா தெரியும்.” என்று குத்தலாகத் தொடங்கியவன் வேதனையோடு முடித்தான்.
“யா…யாரைச் சொல்கிறாய்? அவள்.. அந்தக் கவியையா….?” மனச்சாட்சி அவரை உறுத்தியது போலும், வாயைத் திறந்து கதைக்கவே பெரும் சிரமப் பட்டார் சகுந்தலா.
“அட! உங்களுக்கு அவளை நினைவு வேறு இருக்கிறதாம்மா? ஆக, அவளைப் பற்றிய நினைவு இருந்தும், பேத்தி இருப்பது தெரிந்தும் எனக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்கத் துணிந்து இருக்கிறீர்கள்..?” என்றவனின் பார்வை தாயை வெறுப்போடு உமிழ்ந்தது.
அந்த நொடி மனதளவில் பலமாக அடி வாங்கினார் சகுந்தலா. மகனின் பார்வை அவரைக் குத்திக் குதறியது.
பேச்சு மூச்சற்று அதிர்ந்து நின்றவரிடம், “அன்று அவளை வீட்டை விட்டுத் துரத்திவிட்டு, மரத்தை வேரோடு பிடுங்கி எறிவதுபோல் அவளைத் தூக்கிப் போட்டுவிட்டேன் என்று மார்தட்டி மகிழ்ந்திருப்பீர்கள் இல்லையா? ஆனால், இன்று அந்த மரம் பூத்து, விதை போட்டு, அந்த விதை ஒரு செடியாக நிற்கிறதே அதை என்னம்மா செய்யபோகிறீர்கள்?” என்று ஆத்திரத்தோடு கேட்டான் ரவி.
“எப்படிமா உங்களால் முடிந்தது. நான்தான் அந்தப் பதினெட்டு வயதில் புத்தி கெட்டுத் தவறு செய்தேன் என்றால், அதைச் சொல்லி என்னைத் திருத்துவதை விட்டுவிட்டு நீங்கள் செய்தது மகாபாவமே அம்மா….
“அம்மா அம்மா என்று உங்களையே சுற்றிச் சுற்றி வந்தவனுக்கு நீங்கள் செய்த நல்லகாரியம் இதுதானா? மூச்சு முட்டுகிறது எனக்கு. நாம் செய்த பாவத்தை எதை வைத்து கழுவது என்றே தெரியவில்லை. ஏன்மா? ஏன் இப்படியெல்லாம் செய்தீர்கள்? வீட்டில் இருந்தவளுக்குச் சாப்பாடு கூடக் கொடுக்காமல் பட்டினி போட்டு இருக்கிறீர்கள்…” என்றவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் சிலையாகச் சமைந்து நின்றார் சகுந்தலா.
“வார்த்தைகளால் அவளை நோகடித்து, தாலியையும் நீங்களே கழட்ட வைத்துவிட்டு என்னிடம் என்ன சொன்னீர்கள்? போதாக்குறைக்கு ராஜுடன் அவள் போய்விட்டதாக வேறு பொய் சொன்னீர்களேம்மா. உங்களை நம்பியதால் தானே அவளைத் தேடி நான் போகவில்லை. இல்லையானால் எப்படியும் அவளைத் தேடி இருப்பேனே. என்னை விட்டுவிட்டு இன்னொருவனைப் பிடித்தவள் என்று இவ்வளவு நாளும் மனதால் அவளைத் திட்டி தீர்த்தேனே.. பாவத்துக்கு மேல் பாவம் செய்ய வைத்து விட்டீர்களே அம்மா.
“அவள் வயிற்றில் என் குழந்தை உண்டானது தெரிந்தும், அதை என்னிடம் இருந்து மறைத்து விட்டீர்களே…. உங்களை நம்பிய என்னை ஏமாற்றி விட்டீர்களே.. அவளைப் பெற்றவன் நான் உயிருடன் இருந்தும், என் குழந்தையை அப்பன் இல்லாமல் வளர விட்டுவிட்டீர்களே அம்மா… எனக்குத்தான் என் அப்பாவுடன் நெடுங்காலம் வாழக் கொடுத்து வைக்கவில்லை. என் குழந்தைக்கும் அது நடக்க நீங்கள் காரணமாக இருந்துவிட்டீர்களே.வலிக்கிறது எனக்கு. உங்களுக்கு நான் எப்படியோ அப்படித்தானே எனக்கு என் குழந்தையும்…. இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் நீங்களெல்லாம் என்ன தாய்?” என்று கேட்டவனைத் திகைப்போடு நிமிர்ந்து பார்த்தார் சகுந்தலா.
ரவியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாட்டையாக மாறிச் சுழன்றடித்தது என்றால், அவரைக் குற்றம் சாட்டிய அவன் விழிகள் அவரைக் கொன்று போட்டது.
அவன் வார்த்தைகளில் வலி, வேதனை, வெறுப்பு, துயர் அத்தனையும் கொட்டிக்கிடந்தது. சீற்றம் நிறைந்த விழிகளால் வெறுப்போடு அவன் அவரைப் பார்த்தநொடிகளில் சகுந்தலா முற்றாக நொறுங்கிப் போனார்.
பன்னிரண்டு வருடங்களுக்கு முதலில் நடந்து, முடிந்துவிட்டது என்று அவர் முற்றுப்புள்ளி வைத்த விடயம், இன்று பூதாகரமாக அவரைத் தாக்கியது. அதிர்ச்சியில் உறைந்தவர் மகனையே விழி அகலாது பாத்திருந்தார்.
தன் சொல் தட்டாத மகன், அம்மா என்ற சொல்லுக்கு அடுத்தது பேசாத மகன் இன்று வெறுப்போடு அவரை பார்ப்பதும் எடுத்தெறிந்து பேசுவதும் வேதனையோடு அவரையே குத்தி காட்டுவதும் நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது அவருக்கு

