எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 26 – 2

அவன் கொடுத்த உயிர்கொண்டு, அழகிய ஓவியமாய் அவன் மடியில் வீற்றிருந்த மகளைப் பாசத்தோடு தழுவியது அவன் விழிகள்.

 

கண்ணுக்குத் தெரியாத ஒருவித பாசம் அவன் மீது தோன்றியபோதும் ஒருவித சங்கடமும் பாவையின் முகத்தில் தெரிந்தது.

 

அந்தச் சின்னப் பெண்ணின் மூளைக்குள்ளும் பல கேள்விகள். பல குழப்பங்கள். ஆனாலும் மனதின் ஒரு மூலையில் ஒருவித பரவசம் தோன்றுவதையும் உணர்ந்தாள்.

 

‘என் அப்பா..’ மனதால் சொல்லிப்பார்க்கவே உடல் சிலிர்த்தது அவளுக்கு. அமைதியாகவே தந்தையின் மடியில் அமர்ந்திருந்தாள் பாவை.

 

முதலில் அவளோடு நிறையக் கதைக்கவேண்டும் என்கிற ஆர்வம் நிறைந்திருந்த ரவிக்கு இப்போது மகளைக் கைக்குள்ளேயே இப்படியே வைத்திருந்தாலே போதும் என்று தோன்றியது. மகளின் கைகளை வருடி, அவளின் பிஞ்சு விரல்களை நீவி தனக்கும் மகளுக்கும் மட்டுமேயான உலகில் மூழ்கிப்போனான் அவன்.

 

“இப்படியே ஆளாளுக்கு எவ்வளவு நேரம்தான் அமைதியாக இருக்கப் போகிறீர்கள்? வாருங்கள் சாப்பிடலாம்..” என்று எல்லோரையும் சாப்பிட அழைத்து, அங்கே நிலவிய அமைதியை முடிவுக்குக் கொண்டுவந்தாள் நிரு.

 

“ஆமாம். நேரமும் போகிறது. சாப்பிடலாம் வா ரவி…..” என்றபடி கைகளைக் கழுவிக்கொண்டு சாப்பிட அமர்ந்தான் ராஜ்.

 

எதிர் எதிரே மும்மூன்று பேர் அமரக்கூடிய அந்தச் சாப்பாட்டு மேசையில் ராஜும் நிருவும் ஒருபக்கமாக அமர, அடுத்தபக்கத்தில் ரவி அமர்ந்துகொண்டான்.

 

தானும் சாப்பிட வந்த பாவை நிருவின் பக்கத்தில் அமரப்போக, “ஒவிம்மா, இங்கே அப்பாவின் பக்கத்தில் வந்திருந்து சாப்பிடு…” என்று மகளைத் தன்னருகில் அழைத்தான் ரவி.

 

கொஞ்சம் தயங்கியபோதும் எதுவும் சொல்லாது ரவியின் அருகில் வந்து அமர்ந்துகொண்டாள் பாவை.

 

எல்லோருக்கும் உணவைக் கவி பரிமாறுவதைப் பார்த்துவிட்டு, “நீயும் எங்களோடு அமர்ந்து சாப்பிடு கவி. நமக்கு நாமே பரிமாறிக்கொள்ளலாம்..” என்றான் ரவி.

 

“ஆமாம் கவி. ரவியண்ணா சொல்வதுதான் சரி. நானும் உன்னோடு சேர்ந்து பிறகு சாப்பிடுகிறேன் என்றால் அதையும் நீ கேட்கவில்லை. அதனால் நீயும் உட்கார். எல்லோரும் ஒன்றாகவே சாப்பிடலாம்…” என்றாள் நிரு. குடும்பமாக அமர்ந்து சாப்பிட ரவி விரும்புகிறான் என்பதைப் புரிந்துகொண்டாள் அவள்.

 

எதையோ சொல்ல வாயெடுத்த கவி, “அதுதானே கவி. நீமட்டும் தனியாக அமர்ந்து சாப்பிடுவதைவிட எல்லோரும் ஒன்றாகவே சாப்பிடலாம். அதனால் நீயும் அமர்ந்துகொள்.” என்று ராஜும் சொல்லவும், விருப்பம் இல்லாதபோதும் ஒன்றும் சொல்லமுடியாமல் அமர்ந்துகொண்டாள்.

 

வார்த்தைகளில் வடிக்கமுடியாத அளவுக்கு ரவியின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. மகள் நடுவில் அமர்ந்திருக்க அவளின் ஒருபக்கம் மனைவியும் அடுத்த பக்கம் தானுமாக அமர்ந்து உணவுண்பது, நிறைவைக் கொடுத்தது அவனுக்கு.

 

மீன் பொரியல்களை மகள் ஆசையுடன் உண்பதைக் கண்ட ரவி, தன் தட்டில் இருந்த பொரியல்களில் இருந்து முள்ளை நீக்கிவிட்டு மீன்தசைகளை மகளின் தட்டில் போட்டான்.

 

பாவை கண்களை உயர்த்திக் கேள்வியாகப் பார்க்கவும், “சாப்பிடு…” என்று முகம் கனியச் சொன்னவன், குனிந்து சாப்பிட்ட மகளின் தலையை சுத்தமாக இருந்த கையால் வருடினான்.

 

மகளைப் பார்க்கையில் அவன் கண்களில் தெரிந்த கனிவு, அவளின் தலையை தடவிகொடுக்கையில் இருந்த பாசம்… இதையெல்லாம் பார்த்த கவிக்கு எரிச்சலாக இருந்தது.

 

ஆனாலும் ஒன்றும் சொல்லமுடியாமல் வாயை மூடிக்கொண்டு சாப்பிட்டாள்.

 

உணவுவேளை முடிந்தபிறகு சற்று நேரம் பொதுவாக பேசிக்கொண்டு இருந்துவிட்டு ராஜின் குடும்பம் கிளம்பியது.

 

ரவியை ராஜ் கேள்வியாகப் பார்க்க, “நீ போ ராஜ். நான் இன்னும் கொஞ்சநேரம் ஓவியாவுடன் இருந்துவிட்டுப் போகிறேன்…” என்றான் ரவி.

 

அதைக்கேட்ட கவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. இனி இதுதான் நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்தாலும், அதை அவள் இன்றே எதிர்பார்க்கவில்லை.

 

ராஜின் குடும்பம் சென்றதும் சமையலறைக்குள் புகுந்துகொண்டாள் கவி. மகளைத் தன்னருகில் அமர்த்தி, சோபாவில் அமர்ந்திருந்த ரவி அவளிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தான்.

 

ஒட்டும் இல்லாமல் ஒதுக்கமும் இல்லாமல் அவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள் பாவை.

 

“அப்பாவுடன் வருகிறாயா ஓவி? வெளியே போய்வரலாம்…” என்று ரவி கேட்கவும், சமையலறையை ஒதுக்கிக்கொண்டு இருந்த தாயைப் பார்த்தாள் பாவை.

 

அவளின் பார்வையை உணர்ந்து, “அம்மா ஒன்றும் சொல்லமாட்டாள். நீ வருகிறாயா? பள்ளிக்கூடம் போய்வந்தது களைப்பாக இல்லையே?” என்று கேட்டான் ரவி.

 

அவள் இல்லை என்று தலையை அசைக்கவும், “அப்படியானால் உடையை மாற்றிக்கொண்டு வா… போய்வரலாம்.” என்றான் ரவி.

 

எழுந்தவள் சமையலறைக்குள் சென்று தாயிடம் அனுமதி கேட்பது ரவியின் காதுகளில் விழுந்தது. கவி போய்வா என்று சொன்னபிறகே தயாராக உள்ளே சென்றாள் பாவை.

 

தயாராகி வந்தவளிடம் கார் திறப்பைக் கொடுத்து, “காரை திறந்து உள்ளே உட்கார். அப்பா இதோ வருகிறேன்..” என்று மகளை அனுப்பிவைத்தவன், மனைவியை நாடி சமையல் அறைக்குள் சென்றான்.

 

அவன் வருவது தெரிந்தபோதும் அதைக் கவனியாதவள் போல் வேலைகளைத் தொடர்ந்தவளிடம், “கவி, நானும் ஓவியும் வெளியே போய்வருகிறோம். நீ தனியே இருப்பாய் தானே…” என்றவனை, நிமிர்ந்துபார்த்து முறைத்தாள் கவி.

 

ஏதோ காலம் காலமாய் அவளுடன் குடும்பம் நடத்தியவன் போன்றும், அவளை விட்டு ஒரு நொடி கூடப் பிரிய முடியாமல் தவிப்பவன் போன்றும் இருந்த அவன் பேச்சு அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

 

ஆத்திரத்தோடு அவனை முறைத்த அந்தப் பெரிய விழிகளைத் தன் விழிகளால் ஊடுருவியவன், சட்டென்று அவள் கன்னங்களைக் கைகளில் ஏந்தி அவளின் பட்டான நெற்றியில் தன் உதடுகளை அழுத்தமாக ஒட்டி எடுத்தான்.

 

அதை எதிர்பாராதவள் திகைத்துவிழிக்கவும், “கவனமாக இரு. இருட்டுவதற்குள் வந்துவிடுகிறோம்..” என்றுஅவள் கன்னம் தட்டிச் சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினான் ரவி.

 

error: Alert: Content selection is disabled!!