அத்தியாயம்-28
தன்னிடம் உள்ள திறப்பினால் வீட்டின் வாசற்கதவைத் திறந்து, ரவி உள்ளே செல்ல வீடு முழுவதும் கும்மிருட்டாக இருந்தது. நான் வராமல் அம்மா தூங்கப் போகமாட்டாரே என்று நினைத்துக்கொண்டே விறாந்தையின் மின்விளக்கைப் போட்டவன், அங்கே இருந்த சோபாவில் கைகள் இரண்டையும் தலைக்குத் தலையணையாக்கி ஒரு பக்கமாக சரிந்து சோர்வோடு படுத்திருந்த தாயைப் பார்த்ததும் தவித்துப்போனான்.
அவர் செய்தது பிழை என்று தெரிந்தாலும், அவரை அந்த நிலையில் பார்த்தவனுக்கு வலித்தது. இன்று காலையில், அவரின் முகமும் பாராமல், எங்கே போகிறோம் என்றும் சொல்லாமல் அவரை அலட்சியப்படுத்திச் சென்றது நினைவில் வர குற்ற உணர்ச்சி அவனைத் தாக்கியது.
தான் காட்டிய அலட்சியத்திலும் கோபத்திலும் அவருக்கே ஏதும் நடந்துவிட்டதோ என்று பயந்தவன், “அம்மா..” என்று அழைத்தபடியே அவர் அருகில் விரைந்தான். “இங்கே ஏன் படுத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டபடி தாயைத் தட்டி எழுப்பினான்.
திடுக்கிட்டு எழுந்த சகுந்தலா அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு முறைத்தார். அவரின் விழிகள் சுவரில் தொங்கிய மணிக்கூட்டை நோக்கி நகர, அது இரவு எட்டே முக்கால் என்றது.
அவரின் பார்வையைத் தொடர்ந்து தானும் நேரத்தைப் பார்த்தவனுக்கு தாயை நிமிர்ந்து பார்க்கமுடியவில்லை.
காலையில் வெளியேறியவன் அவ்வளவு நேரமும் வீட்டுக்கும் வரமால் தாயையும் மறந்தல்லவா இருந்துவிட்டான்.
“சாரிம்மா….”
எதுவும் சொல்லவில்லை சகுந்தலா.
“சாப்பிட்டீர்களா…?” அப்போதும் அவர் பேசவில்லை.
தாயின் கோபமும் அதில் உள்ள நியாயமும் புரிய அவரின் கையைப் பிடித்து, “நான் நேற்றுப் பேசியது தப்புத்தான். ஏதோ கோபத்தில் உங்களிடம் கத்திவிட்டேன்… மன்னித்துக்கொள்ளுங்கள்.” என்றான்.
மகனை நிமிர்ந்து பார்த்தவரின் விழிகளில் அப்பட்டமான வலி தெரிந்தது. அவன் நேற்றுக் கேட்ட கேள்விகள் அத்தனையும் சாட்டையடிகளாக மாறி அவரை நோகடித்திருந்தாலும், நடந்தவைகளால் மகன் தன்னை வெறுத்து ஒதுக்கிவிட்டானோ, அதனால் தான் இன்று தன் முகம் பார்த்து அவன் ஒரு வார்த்தை கதைக்கவில்லையோ என்கிற நினைப்பே அவரை அதிகமாக வதைத்தது.
இதுவரை தன்னை மட்டுமே சுற்றி வந்த பிள்ளை, தான் மட்டுமே உலகம் என்று வாழ்ந்த பிள்ளை இன்று அவரை உதாசீனம் செய்துவிட்டானே….
அவன் குற்றம் சாட்டியதை விட அவனின் புறக்கணிப்பு அவரைப் பலமாகக் காயப்படுத்தியது.
இனி என்னோடு கதைக்க மாட்டானோ… வீட்டுக்கு வரமாட்டானோ… என்னை கைவிட்டு விட்டானோ என்று ஒவ்வொரு நொடியும் அல்லவா துடித்துத் தவித்துப்போனார். அவரை நரக வேதனையில் துடிக்க வைத்துவிட்டானே…..
கணவனின் துணையும் இல்லாமல் மகனை மட்டுமே நம்பி, அவனைச் சுற்றியே தன் வாழ்க்கையின் வட்டத்தை அமைத்து வாழ்ந்து வந்தவரை,அவனின் ஒதுக்குதல் பலமாகக் காயப்படுத்தி இருந்தது.
அந்த புறக்கணிப்பைத் தாங்கும் சக்தி இல்லாமல் போனதில் அதுவே சுயபச்சாதாபமாக மாறி அவருக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.
“என்னிடம் எதற்காக மன்னிப்புக் கேட்கிறாய்? இனி நான் உனக்குத் தேவை இல்லையே. கஷ்டப்பட்டு வளர்த்து, படிப்பித்து, தொழிலையும் கையில் தந்து உன்னை மனிதனாக்கி விட்டேன். இப்போது நீ பெரிய மனிதன். போதாக்குறைக்கு மனைவி மகள் என்று உனக்கென்று ஒரு குடும்பமும் வந்துவிட்டது. அதனால் இனி நான் இருந்தாலும் ஒன்றுதான் செத்தாலும் ஒன்றுதான் என்று என்னை ஒதுக்கிவிட்டாயோ..?” என்று ஆத்திரத்தோடு கேட்டவரின் விழிகள் கண்ணீரை வடித்தது.
“ஐயோ அம்மா…! இது என்ன பேச்சு? நீங்களும் என்னைப் புரிந்துகொள்ளவிட்டால் எப்படிம்மா? கவியின் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டேன் என்று தெரிந்திருந்தும் கூட அன்று நந்தனின் வீட்டில் அவளைப் பார்த்தும் அவளுடன் சேர நான் நினைக்கவில்லையே. ஆனால் மகள் இருக்கிறாள் என்று தெரிந்தபிறகும் எப்படிம்மா விடமுடியும்?” என்று கேட்டான்.
“அதற்காக நீங்கள் தேவை இல்லை என்று அர்த்தமாகுமா?
எனக்கு நீங்கள் மிக முக்கியம். என் அம்மாவுக்கு ஈடாக யாருமே இல்லை. அதேபோல என் மனைவி மகளும் எனக்கு முக்கியம். ஒருவருக்காக மற்றவரை என்னால் விடமுடியாதும்மா.” என்று அவருக்குத் தன் நிலையைப் புரியவைக்க முயன்றான் ரவி.
“ஆனாலும் நேற்று நான் அப்படிப் பேசியது தப்புத்தான். என்னை மன்னித்துகொள்ளுங்கள்.” தவிப்போடு தாயின் கரம் பற்றி மன்னிப்பை வேண்டினான் ரவி.
“அதுதான் சொல்கிறேனே. இனி உனக்கு உன் மனைவி மகள்தான் முக்கியம். நானெல்லாம் உனக்குத் தேவையில்லை.” என்று இருந்த கோபத்தில் வீம்போடு சொன்னவர், அவனிடமிருந்து தன் கையை உதறி விடுவித்துக்கொண்டார்.
அதற்கு மேலும் அவனோடு கதைக்க விருப்பம் இல்லாமல் எழுந்துகொண்டவருக்கு தலைசுற்றவும், நிற்க முடியாமல் தள்ளாடினார்.
அவரின் தடுமாற்றத்தில், “என்னம்மா?” என்று பதறியவன், “ஏதாவது சாப்பிட்டீர்களா இல்லையா..?”என்று கூர் பார்வையுடன் தாயைப் பார்த்துக் கேட்டான்.
“எனக்கு ஒன்றுமில்லை. விடு!” என்றபடி, பிடிவாதமாக அறைக்குள் செல்ல முயன்றவரை வற்புறுத்தி மறுபடியும் சோபாவிலேயே அமர்த்திவிட்டு சமையல் அறைக்குள் விரைந்தான்.
அங்கே தாய் சாப்பிட்டதற்கான எந்த அடையாளமும் இருக்கவில்லை. ராஜ் வீட்டிலும் கவி வீட்டிலும் தான் நன்றாகச் சாப்பிட தாய் பட்டிகினி கிடந்திருக்கிறாரே என்று வருந்தியவன், ஒரு கப்பில் பால் கொண்டுவந்து நீட்டினான்.
அவர் குடிக்க மறுக்கவும் ஒருவழியாக மிரட்டி உருட்டி அதைப் பருக வைத்தான்.
அவர் பாலைக் குடித்து முடித்ததும், அவரின் அருகில் அமர்ந்து, “நீங்களே கவியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு என்னிடம் அவளாகப் போனாள் என்று சொன்னதும், பிள்ளை உருவானதை ராஜ் உங்களிடம் சொல்லியும் நீங்கள் அதை என்னிடம் இருந்து மறைத்தடுவிட்டீர்கள் என்றும் தெரிந்தபோது, என் அம்மா இப்படிச் செய்துவிட்டாரே என்று கோபம் வந்துவிட்டது. அதனால்தான் கத்திவிட்டேன்….” என்றவன், தான் கோபப்பட்டதன் காரணத்தையும் அதில் உள்ள நியாயத்தையும் அவருக்கு புரியவைக்க முயன்றான்.
ஆனால் சகுந்தலாவோ, “அப்படியானால் அன்று நான் வேறு என்ன செய்திருக்கவேண்டும் என்று நீ நினைக்கிறாய்?” என்று நிதானமாகக் கேட்டார்.
அதைக் கேட்டவன், தான் இவ்வளவு சொல்லியும் தாய்க்குப் புரியவில்லையா என்கிற அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தான்.
“என்னம்மா? அன்று நீங்கள் செய்தது தவறில்லையா?” என்றவனின் கேள்வியில், அவர் அவனைப் புரிந்து கொள்கிறார் இல்லையே என்கிற ஆதங்கம் இருந்தது.
“இல்லை! இப்போது வரைக்கும் ஒரு அம்மாவாக நான் செய்தது தவறாக எனக்குப் படவில்லை!” என்றார் சகுந்தலா ஆணித்தரமாக.
திகைப்போடு அவன் அவரைப் பார்க்க, “படிப்பைக் கூட முடித்திராத அந்த வயதில் ஒருத்தியை நீ கூட்டிக்கொண்டு வந்தால் என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறாய்? ஊரைக் கூட்டி உங்களுக்குத் திருமணம் செய்து வைத்திருக்க வேண்டுமா? அல்லது படிப்பும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்று உங்களை வீட்டுக்குள் வைத்து குடும்பம் நடத்த விட்டிருக்க வேண்டுமா? அப்படி விட்டிருக்க வருடத்து ஒரு பிள்ளையாகப் பெறுவது மட்டும்தான் உங்கள் வேலையாக இருந்திருக்கும்.” என்றவரை நிமிர்ந்து பார்க்கமுடியவில்லை அவனால்.
அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லையே!
“அப்படி இருந்தும் உங்கள் இருவரினதும் படிப்பு முடிந்ததும் உன் மனதுக்குப் பிடித்த அவளையே உனக்குக் கட்டிவைக்கவேண்டும், அதுவரை உங்கள் இருவரிடமும் பேசி அவளை அவள் வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம் என்று நினைத்துத்தான் விடுதிக்கு வந்தேன். அங்கே வந்து பார்த்தால், பதினைந்து வயதில் அழகே இல்… ஒருத்தியைக் காட்டுகிறாய். அவளுக்கு அவளின் அப்பாவைக் கூட யார் என்றே தெரியாது.
“என்னதான் உன் மனதுக்குப் பிடித்தவளாக இருக்கவேண்டும் என்று நினைத்தாலும், அப்படியான ஒருத்தியை உனக்கு மனைவியாக்கும் அளவுக்குப் பரந்த மனது எனக்கு இல்லை! எனக்கு என் பிள்ளையின் வாழ்க்கை முக்கியம். அவன் சீரும் சிறப்புமாக வாழவேண்டும் என்பது என்னுடைய கனவு மட்டும் அல்ல அது உன் அப்பாவுடைய கனவும் கூட.” என்றார் அவர் தெளிவாக.

