எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 28 – 2

“உன்னை அப்படி வாழவைக்கவேண்டும் இப்படி வாழவைக்க வேண்டும் என்று கனவு கண்ட என்னால் எப்படிடா இப்படியான ஒருத்திக்குக் கட்டிவைக்க முடியும்?” என்று அவனிடமே கேட்டார்.

 

“அன்று மட்டும் அல்ல இன்றுமே என்னால் முடியாது! ஆனால் இங்கேதான் என் விருப்பு வெறுப்புக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டதே. அதனால் உன் விருப்பப்படியே செய்துகொள்!” என்று ஆத்திரத்தோடு பேச ஆரம்பித்தவர் விரக்தியோடு முடித்தார்.

 

என்ன நடந்திருந்தாலும் மகன் தன்னை ஒதுக்கி அவர்களை நாடினான் என்பது சகுந்தலாவின் தாய் மனதுக்கு விழுந்த பெரிய அடி என்பதை அவரின் பேச்சு காட்டியது.

அது புரிந்தாலும் அப்பா இல்லாதவள் என்று கவியை அவர் சொன்னது அவனுக்கு வருத்தமாக இருந்தது.

 

“அப்பா இல்லாமல் போனதுக்கும் கவிக்கும் என்னம்மா தொடர்பு? அவள் மிகவும் நல்லவள். அவளுக்குக் கட்டாயத் தாலியைக் கட்டி மனைவியாக்கிப் பிள்ளையையும் கொடுத்தவன் நான். நீங்கள் தண்டிப்பதாக இருந்தாலும் கண்டிப்பதாக இருந்தாலும் அதை எனக்குத்தான் செய்யவேண்டும். ஏனெனில் முழுப் பிழையையும் செய்தது நான். ஆனால் இந்தப் பன்னிரண்டு வருடமும் கஷ்டப்பட்டு, மகளை வளர்த்தது அவள். அதனால், இனி எதற்காகவும் அவளைக் கஷ்டப்பட விடமாட்டேன்! இனியாவது அவளை நான் சந்தோசமாக வைத்திருக்கவேண்டும் அம்மா.” என்றான் உறுதியான குரலில்.

 

“பாவம்மா பாவை. அப்பா நான் தான் என்று தெரிந்ததும் அவளுக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா? என் பிள்ளை என்னை விட்டுப் பிரிவதற்கு நீங்கள் காரணமாக இருந்துவிட்டீர்களே அம்மா..” என்றான் ரவி, தாயின் தவறை உணர்த்திவிடும் வேகத்தோடு.

 

“என்னடா நான் காரணம் என்கிறாய்? பதினைந்து வயதில் ஒரு பெண் பெற்றவர்களை விட்டுவிட்டு ஒருவனோடு வருகிறாள் என்பதே அவளின் ஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்கும் விஷயம். இதில் விடுதியில் தங்கியது வேறு! அப்படியானவள் வயிற்றில் என் பிள்ளையின் பிள்ளைதான் இருக்கிறது என்பதை என்னால் எப்படி நம்ப முடியும்?” என்று ஆங்காரத்தோடு கேட்டவர்,

 

“இதை எல்லாவற்றையும் விட, என் மகன் அப்படி நடந்துகொள்ள மாட்டான் என்று மலைபோல் நம்பினேன்டா. ராஜ் என்னிடம் சொன்னபோது, அப்பாவியான என் பிள்ளை மீது அவன் அவதூறைச் சுமத்துகிறானே என்று கோபம் வந்தது எனக்கு. ஆனால் பார்.. என் பிள்ளையை நான் ஒழுங்காக வளர்க்கவில்லை என்பதை அவனே உச்சம் தலையில் ஆணி அடித்ததுபோல் அடித்துச் சொல்லிவிட்டான் எனக்கு..” என்றவருக்கு, தான் என்ன சொன்னாலும் இனி அவர்களை அவன் விடமாட்டான் என்பது மிக நன்றாகவே புரிந்தது.

 

வார்த்தைக்கு வார்த்தை ‘என் மகள்’ என்று சொந்தம் கொண்டாடும் அவனுக்குத் தன் உள்ளம் புரியவில்லையா என்று நினைத்து,விரக்தியான புன்னகை ஒன்றைச் சிந்தியவர் தொடர்ந்து,

 

“உனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்று தெரிந்த இந்த இரண்டு நாட்களிலேயே இந்த உருகு உருகிறாயே, இதே உன் மகள் நாளைக்கு அப்பன் யார் என்றே தெரியாத, படிப்பைக் கூட முடிக்காத, குடும்பப் பின்னணியே இல்லாத ஒருவனைக் காதலிக்கிறேன் என்று வந்து நின்றால் கட்டி வைப்பாயா..?” என்று தன் பக்க நியாயத்தை நிரூபித்துவிடும் வேகத்தோடு கேட்டார் சகுந்தலா.

 

அவனால் முடியுமா? முடியாது என்று மனம் அடித்து சொன்னது!

 

இந்த இரண்டு நாட்களிலேயே எத்தனை எத்தனை கனவுகளைக் கண்டுவிட்டான் மகளை மையப்படுத்தி. அப்படி அவன் உருவகப்படுத்தி வைத்திருக்கும் வளமான வாழ்க்கைக்கு முற்றிலும் மாறான ஒரு வாழ்க்கையைத் தன்னால் மகளுக்கு வழங்க முடியாதே….

 

அவனின் பேச்சற்ற நிலையே அவன் மனதைச் சொல்ல, “முடியாது இல்லையா? அதேதான், என் பிள்ளையின் வாழ்க்கையைப் பாதிக்கும் எதையும் செய்ய என்னாலும் முடியாது!” என்றார் அவர் உறுதியாக.

 

தொடர்ந்து, “அன்றைய என் செயல்களும் பேச்சும் அதிகப்படியாக இருந்திருக்கலாம். அது அடுத்தவர்களைப் பாதித்து இருக்கலாம். அதை எல்லாம் என்னால் யோசிக்க முடியாது. எனக்கு நீயும் உன் வாழ்க்கையும் தான் முக்கியம்!” என்றார் தெளிவாக.

 

“நான் செய்தவைகளால் உனக்கோ அல்லது உன் மனைவிக்கோ நான் கெட்டவளாகத் தெரிந்தால், நான் கெட்டவளாகவே இருந்துவிட்டுப் போகிறேன். அதைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது!” என்று அப்போதும் நிமிர்வாகவே சொன்னார்.

 

“உனக்கு இன்று மனைவி மகள் இருக்கலாம். ஆனால் எனக்கு நீமட்டும் தான்…” என்றவரின் குரல் இப்போது கரகரத்துக் கலங்கியது.

 

ரவிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவரைச் சமாதானம் செய்யும் வகை தெரியாமல் கையாலாகாத தனத்துடன் தாயையே பார்த்துக்கொண்டு இருந்தான். ஆனால், எதற்காகவும் தன் முடிவை மாற்றிக்கொள்ளும் எண்ணம் மட்டும் அவனுக்கு இல்லை!

 

அவனைப் பார்த்த சகுந்தலாவுக்கு இனித் தான் செய்வதற்கோ சொல்வதற்கோ எதுவுமில்லை என்று புரிந்தது.

 

எனவே நிமிர்ந்து அமர்ந்து, “என்ன முடிவு எடுத்து இருக்கிறீர்கள்?” என்று எந்த உணர்வையும் காட்டாத குரலில் கேட்டார்.

 

ராஜிடம் ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று தலையை நிமிர்த்திச் சொன்னவனுக்கு இப்போது தாயிடம் சொல்லத் தடுமாற்றமாக இருந்தது.

 

சும்மாவே எதிரும் புதிருமாக இருப்பவர்களிடம் எதற்கு இன்னும் இன்னும் பகைமை உணர்வை ஊட்டுவான் என்று நினைத்து, கவியின் நிபந்தனைகளைத் தன்னுடயை விருப்பம் என்பதாக மாற்றி, கோவிலில் வைத்து சொந்தங்கள் சூழ திருமணத்தை நடத்த முடிவு செய்திருப்பதைச் சொன்னான்.

 

அதைக் கேட்டவர், தன் ஒரேயொரு மகனின் திருமணம் பற்றிய அவரின் கனவுக்கோட்டைகள் அத்தனையும் தரை மட்டமாக்கப்பட்டதை உணர்ந்து கொண்டார்.

 

போதாக்குறைக்கு யாரோ ஒருவரைப் போல தான் ஒதுக்கப்பட்டு, தனக்குத் தகவலாக மட்டுமே மகனின் திருமணம் சொல்லப்படுவதை நினைக்க வலித்தது. ஆனாலும் நடப்பதைத் தடுக்கும் சக்தி இனித் தனக்கு இல்லை என்பதையும் நன்றாகப் புரிந்துகொண்டார்.

 

“சரிதான். எப்போது திருமணம்..?” என்றவரின் குரலில், மறைக்கப் பார்த்தும் வலி எட்டிப் பார்த்தது.

 

“வருகிற வெள்ளியே திருமணத்தை முடிக்கலாம் என்று நினைக்கிறேன் அம்மா.. ஆனால் அன்றே திருமணத்தைப் பதிவும் செய்யலாமா என்று தெரியவில்லை. அதை ஒருக்கால் நாளை விசாரிக்கவேண்டும். இரண்டும் ஒரே நாளில் நடப்பதுதான் வசதி. அதனால் எப்போது என்பது உறுதியாக நாளைதான் தெரியும்…” என்றான் ரவி.

 

சிலநொடிகள் மௌனமாக இருந்துவிட்டு பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவர், இனிப் பேச ஒன்றும் இல்லையே என்பதாக மகனைப் பார்த்துவிட்டு எழுந்துகொண்டார்.

 

எழுந்தவரிடம், “மலையகத்துக்கு நாளைக்கு அழைத்து எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள். நான் நந்தன் குடும்பத்துக்கும் சாந்தினி குடும்பத்துக்கும் சொல்லிவிடுகிறேன்.” என்றான் ரவி.

 

ஒரு தலையசைப்போடு அவர் நகரவும், “பழமாவது சாப்பிட்டுவிட்டுப் பாடுங்கம்மா. பிறகு பசிக்கும்..” என்று வேண்டினான் ரவி.

 

“பசி இல்லை. அதைவிடப் பால் குடித்ததே வயிறு நிரம்பிவிட்டது. என்னைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும். அதைவிட இனி என்னை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் தெரியும். அதனால் விடு..” என்று இறுக்கமான குரலில் சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டார் சகுந்தலா.

 

அவர் சென்றதும், “ஊப்…” என்று மூச்சுக் காற்றை வெளியிட்டுத் தலையைக் கையில் தாங்கிக்கொண்டு குனிந்தவனுக்கு மலைப்பாக இருந்தது.

 

மனைவி மக்களைப் பார்ப்பதா அல்லது பெற்ற தாயை பார்ப்பதா?

 

இந்த இரண்டு நாட்களும் எல்லோருடனும் அவர்களுக்குஏற்ற வகையில் கதைத்துக் கதைத்தே களைத்துப் போனான் ரவி.

 

error: Alert: Content selection is disabled!!