எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு 29 – 2

 

“அம்மா, அப்பாவுக்கும் வாங்கிக்குடுங்கம்மா. அப்பா பாவம்…”

 

மகள் தகப்பனுக்காக பரிந்துரை செய்யவும், “ம்..ம்..” என்கிற முணுமுணுப்போடு குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டாள் கவி.

 

ஒருவழியாக மூவரும் தயாராகி வெளியே வர மணியும் வந்து சேர்ந்தாள். அவளிடம் தந்தையின் அறிமுகத்தை இனிதாகவே நடத்திவைத்தாள் பாவை.

 

முதலில் பாவையையும் மணியையும் பள்ளியில் இறக்கியவனிடம், “என்னைக் கூப்பிடவும் வருவீர்களாப்பா..?” என்கிற மகளின் ஆர்வமான கேள்விக்கு, “கட்டாயம் செல்லம்…” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்துவிட்டு காரைக் கிளப்பினான் ரவி.

 

“என்னை வீட்டில் இறக்கிவிடுங்கள்..” என்றாள் கவி அவன் முகம் பாராது.

 

“காலையில் நான் சொன்னதை நீ காதில் வாங்கவில்லையா….?”

 

“இங்கே பாருங்கள்! எனக்கு ஒன்று தேவை என்றால் அதை வாங்க எனக்குத் தெரியும். அதனால் நீங்கள் ஒன்றும் எனக்கு வாங்கித்தரத் தேவையில்லை! பாவை இருந்ததால் தான் இதையெல்லாம் அப்போதே சொல்லவில்லை. என்னை வீட்டில் விடுங்கள்..” என்றாள் கோபமாக.

 

“நான் வாங்கித்தருகிறேன் என்றால் உனக்கு வாங்கத் தெரியாது என்று அர்த்தமா? அதோடு இப்போது நாம் வாங்கச் செல்வது நம் திருமணத்திற்குத் தேவையான துணிமணிகளை.” என்றான் அவன் வெகு சாதரணமாக.

 

கவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. திருமணத்திற்கு அவள் சம்மதித்துவிட்டாள் தான். ஆனாலும் அதற்கு அவள் மனதளவில் தயாராவதற்கு அவகாசம் வேண்டாமா….

 

திருமணம் என்றால் என்ன என்றோ அல்லது அதில் மனைவியாக அவளின் கடமை என்னவென்றோ அறியாமல் இருக்க இன்னும் அவள் பதினைந்து வயதுச் சிறுமியல்லவே….

 

நெற்றியில் அவன் பதித்த முத்தத்தையே ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறேன்…. இதில் கல்யாணம்… அதன் பிறகு…. மூச்சடைத்தது கவிக்கு.

 

“என்னதான் உங்கள் மனதில் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்..?” என்று கோபத்தில் பொங்கியவளிடம்,

 

“நேற்று இரவு முழுவதும் உன்னையும் ஓவியையும் தான் நினைத்துக்கொண்டே இருந்தேன்..”என்றான் அவன் சாவகாசமாக.

 

பெரிய காதல் மன்னன். கடமை தவறாத தகப்பன். எங்களையே நினைத்தானாம்… பெரிதாக சொல்ல வந்துவிட்டான் என்று நினைத்தவளுக்குப் பத்திக்கொண்டு வந்தது.

 

“எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும்..” என்றாள் அவள் அறிவிப்பாக.

 

“எதற்கு..?” சுருக்கமாகக் கேட்டான் அவன்.

 

ஆத்திரம் வந்தது அவளுக்கு. திருமணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது அவனுக்கும் தெரியும் தானே… அப்படி இருந்தும் தெரியாதவன் போல் எதற்கு என்று கேட்டால் என்ன சொல்வது?

 

“இந்தக் கருமம் பிடித்த கல்யாணத்துக்கு நான் தயாராகத்தான்…” ஆத்திரத்தில் வார்த்தைகளைச் சிதறவிட்டாள் கவி.

 

அதைக் கேட்டவனின் தாடை இறுக, கல்லாய் மாறிய அவன் முகத்தைப் பார்க்கப் பயமாக இருந்தது கவிக்கு.

 

வார்த்தைகளை விட்டுவிட்டோம் என்று புரிந்தபோதும் மன்னிப்புக் கேட்கப் பிடிக்கவில்லை அவளுக்கு. பின்னே, எப்போதும் தான் நினைப்பது மட்டும்தான் நடக்கவேண்டும் என்று நினைத்தால் இப்படி அவ்வப்போது குட்டு வாங்கத்தானே வேண்டும்….

 

சற்று நேரம் அமைதியில் கழிய, “வருகிற வெள்ளிக்கிழமை தான் கல்யாணம். அதற்குள் தயாராகிக்கொள்!” என்றான் அவன் இறுகிய குரலில்.

 

“இன்று திருமணத்திற்குத் தேவையான துணிமணிகளை வாங்குகிறோம். வருகிற வெள்ளி நமக்குக் கோவிலில் வைத்துத் திருமணம். நீ சொன்னதுபோல எல்லா சொந்தங்களுக்கும் அழைப்பு விடுத்தும்விட்டேன்..” என்றான் அவன் அழுத்தமான குரலில் அறிவிப்பாக.

 

அவன் கட்டளையாகச் சொல்வதாலேயே அதை மறுக்கவேண்டும் என்கிற வேகம் வந்தது. அப்படியே மறுத்தாலும் அந்த மறுப்புக்கு மதிப்பு இல்லை என்று தெரிந்ததில் மனதில் ஆத்திரம் பொங்கியது. முகத்தைக் காரின் வெளியே திருப்பி தன்னுடைய மறுப்பைச் செயலில் காட்டினாள் கவி.

 

ரவி அதை லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. காரை கடைக்கு அருகில் நிறுத்தியவன், “வா…” என்கிற ஒற்றைச் சொல்லோடு இறங்கிக் கடைக்குள் சென்றான்.

 

அங்கே திருமணத்திற்கான சேலைகளைக் காட்டி அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்று கேட்டு, தனக்கு முழு திருப்தி இல்லாத பட்சத்தில் அவளின் தோளில் சேலையை வைத்துப் பார்த்துத் தேர்வு செய்தான் ரவி. அவனுக்கு எப்படியோ அவளுக்குத்தான் சங்கடமாக இருந்தது.

 

ஒவ்வொரு தடவையும் அவன் இயல்பாக அவளின் தோளைத் தொடும்போது, உடலில் ஒருவித நடுக்கம். அவனுக்கும் அப்படித்தானா என்று அறிந்துகொள்ள எதையோ பார்ப்பதுபோல் அவனை நோட்டம் விட்டாள். அவனோ வெகு மும்முரமாக சேலைத் தேர்வில் இறங்கி இருந்தான்.

 

அவளையும் மீறி அவளின் நினைவுகள், அன்று மலையகத்தில் நடந்த திருமணத்தையும் இப்போது நடக்கப்போகும் திருமணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தது. அதோடு தனக்காக இன்னொருவர் பார்த்துப் பார்த்து ஆடைகள் தெரிவு செய்வது…. அவனைப் பிடிக்காதபோதும் அவனின் அந்த அக்கறையான செயல் அவளுக்குப் பிடித்துத்தான் இருந்தது.

 

தாய் இருந்த காலத்தில் அவர் வாங்கி வருவதை அவள் உடுத்திக்கொள்வாள். ராஜோடு இருந்தகாலத்தில் ஓரளவுக்கு புத்தி இருந்தபடியால் முடிந்தவரை அவனுக்குத் தான் சுமையாக இருக்கக்கூடாது என்கிற எண்ணத்தில், அவன் கூப்பிட்டாலும் அவள் அவனோடு கடைகளுக்குச் சென்றது இல்லை.

 

மகளோடு தனியாகச் சென்றபிறகு தனக்குத் தானே வாங்கிக்கொள்வதில், கண்ணியமாகக் காட்டும் விதமாக, தரத்தையும், நெடுநாள் உழைக்குமா என்பதையும் கவனிப்பாளே தவிர, இப்படி அழகாய் இருக்குமா எனக்குப் பொருந்துமா என்றெல்லாம் அவள் யோசித்ததே இல்லை.

 

இன்று தனக்காக அவன் பார்த்துப் பார்த்து வாங்குவது, அவளின் மனதில் இருந்த தனிமை உணர்வை மெல்ல தட்டி சென்றது.

 

“கவி, இங்கே பார்… இந்த மயில்வண்ணச் சேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உனக்கும் பிடித்திருக்கிறதா…?” என்று ரவி கேட்கவும், அவளின் சிந்தனையில் அவனைப் பற்றிநல்லதாக எண்ணிக் கொண்டிருந்ததில்,

 

“எனக்கும் பிடித்திருக்கிறது. ஆனால் எதற்கு இவ்வளவு சேலைகள். அதனால் இதோடு எனக்கு எடுத்தது போதும். இனி உங்களுக்குப் பார்க்கலாம்…” என்றாள் தன்னை மறந்து.

 

முகம் மலர, கண்களில் ஆர்வம் மின்ன அவளைப் பார்த்தான் ரவி.

 

இவன் எதற்காக என்னை இப்படி பார்க்கிறான் என்று யோசித்தவளுக்கு, சொன்னது நினைவில் வரவும், அவனைப் பார்க்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். “இல்லையானால் உங்கள் மகள் என்னை விட்டுவைக்க மாட்டாள்…” என்று முணுமுணுத்தவள், அப்போதும் பதட்டத்தில் அவனுக்குப் பிடித்த விதமாக ‘உங்கள் மகள்’ என்று வார்த்தைகளை விட்டாள்.

 

ரவிக்கோ மனம் துள்ளியது. இவளை எப்படி மாற்றப்போகிறோம் என்று ஏங்கியவனின் ஏக்கத்தை அவளின் பேச்சு துடைத்தெறிந்தது. அவளின் மனதை மாற்றிவிடலாம் என்கிற நம்பிக்கை உண்டாக, ஒருகையால் மனைவியின் தோளைச் சுற்றிவளைத்துத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

 

அதை எதிர்பாராததில் கவி திகைத்துப்போனாள்.

 

“இது கடை..” என்றாள் முணுமுணுப்பாக.

 

‘தனி இடம் என்றால் பரவாயில்லையா?’ என்கிற கேள்வியைத் தாங்கி அவன் விழிகள் அவளைப் பார்த்துச் சிரித்தது.

 

இது என்ன இப்படி உளறிக்கொட்டி எப்போது பார்த்தாலும் இவனிடம் மாட்டிக்கொள்கிறோமே என்று நினைத்து, “வி…விடுங்கள்..” என்றாள் மெல்லிய குரலில், தலையைக் குனிந்து.

 

சின்னச் சிரிப்போடு அவளை விட்டவன், “இதை எல்லாம் எடுத்து வையுங்கள். மற்றவைகளோடு சேர்த்து மொத்தமாக பில் போட்டுக்கொள்கிறோம்….” என்று விற்பனையாளரிடம் சொல்லிவிட்டு, “வா.. எனக்குப் பார்க்கலாம்..” என்று மனைவியின் கையைப் பிடித்து ஆண்கள் பகுதிக்கு அழைத்துச் சென்றான்.

 

அங்கே சென்றவன் தனக்கான ஆடைகளை தேர்வு செய்வதற்கு அவசரம் காட்டவே இல்லை. அவளாகத் தெரிவு செய்யட்டும் என்று காத்திருந்தான். அவன் எதிர்பார்ப்பு புரிந்தபோதும், இதுவரை ஆண்களுக்கு வாங்கிப் பழகி இராதவளுக்கு எதை எப்படி வாங்குவது என்று புரியவில்லை. அதை அவனிடம் சொல்லவும் பிடிக்கவில்லை.

 

அதோடு எதற்கு அவனுக்கு நான் தெரிவு செய்யவேண்டும் என்று மனமும் முரண்டியது. எனவே அமைதியாகவே நின்றாள்.

 

நேரம் கடந்தபோதும் அவள் அசையாது நிற்கவே, முகம் சுருங்க விற்பனையாளர் காட்டியதில் கைக்கு எட்டிய ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தான் ரவி.

 

அதுவரை இருந்த உற்சாகம் வடிந்துவிட்ட அவன் முகத்தைப் பார்த்தபோது எடுத்து கொடுத்திருக்கலாமோ, எனக்கு அவனே பார்த்துப் பார்த்து எடுத்தானே என்று தோன்றிய எண்ணத்தை, நான் கேட்டேனா எடுத்துத் தரச்சொல்லி என்கிற வீம்பு வந்து அடக்கியது.

 

எனவே எதுவும் பேசாது அவன் பின்னால் சென்றாள் கவி.

 

அதன் பிறகு தேவையற்ற பேச்சுக்கள் இன்றி திருமணத்திற்குத் தேவையான அனைத்து பொருட்களும், தாலி உட்பட ஒரு மௌனத்திலேயே வாங்கி முடித்தனர்.

 

முடிச்சு விழுந்திருந்த நெற்றியும் நெரித்திருந்த புருவங்களும் அவன் எதையோ தீவிரமாகச் சிந்திக்கிறான் என்று காட்டியது. என்ன என்று கேட்கத் தயக்கமாக இருந்ததில் அமைதியாகவே நடந்தாள்.

 

நேரமும் மதியமாகிவிட, மதிய உணவை அங்கேயே முடிக்க எண்ணி, உயர்தர ஹோட்டல் ஒன்றுக்கு கவியை அழைத்துக்கொண்டு சென்றான் ரவி.

 

இரண்டிரண்டு கதிரைகள் எதிரெதிரே போடப்பட்டு இருந்த மேசையில் வெளிப்பக்கம் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டாள் கவி. தனக்கு நேரெதிரே அவன் அமர்வான் என்று அவள் நினைக்க, “உள்ளே தள்ளி இரு..” என்று சுவர் பக்கமாக இருந்த கதிரைக்கு அவளை மாற்றிவிட்டு, அவளின் அருகில் அமர்ந்துகொண்டான் ரவி.

 

இருவரின் தோள்களும் உரசிக்கொள்ளும் நிலை. எதிரே இரண்டு கதிரைகள் இருக்க அதில் அமர்வதை விட்டுவிட்டு எதற்கு இங்கே என்னை இடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான் என்று சினமாக இருந்தது கவிக்கு.

error: Alert: Content selection is disabled!!