அழகான எதிர்காலம் தாரிகாவின் உருவில் கண்ணெதிரே காத்திருந்தும், கவியாக அவனைத் தேடி வரப்போவது இல்லை என்று தெரிந்திருந்தும், செய்த தவறில் இருந்து தப்பிக்க அவன் நினைக்கவில்லையே!
அவளே மறுத்தபோது கூட எவ்வளவு உறுதியாக நின்று இந்தத் தாலியை அவள் கழுத்தில் ஏற்றி இருக்கிறான் அவன்.
ஊர் உலகத்துக்கும், பெற்ற மகளுக்கும் கணவன் இறந்துவிட்டான் என்று சொல்லியவளால், அவளின் மனச்சாட்சிக்கு என்ன சொல்லமுடியும்?
தாலியும் இல்லாமல் கட்டிய கணவனும் இல்லாமல் ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறோமே என்று அவள் மனச்சாட்சியே அவளை இவ்வளவு நாளும் குத்தியிருக்கிறதே! அதற்குக் காரணம் அவன்தான் என்றாலும் இன்று அவனே அதை நிவர்த்தியும் செய்துவிட்டானே!
இனி அவள் அவன் மனைவி! அந்த உரிமையைத் தந்தது அவன் கட்டிய தாலி! கழுத்தில் தொங்கிய தாலியைக் குனிந்து பார்த்தவள் அருகில் இருந்த கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான். கண்களில் கோர்த்த நீரோடு அவனைப் பார்த்தவளின் அதரங்கள் புன்னைகையில் அழகாய் விரிந்தது.
அந்த அழகில் சொக்கிப்போனவன், “இதென்ன.. இப்படி ஆளை விழுங்கும் பார்வை பார்க்கிறாய்..” என்று அவள் காதோரமாகக் கிசுகிசுத்தவன் அவள் கரத்தை அழுந்தப் பற்றிக்கொண்டான்.
அந்த இடத்தில் அதை மட்டும்தானே அவனால் செய்யமுடியும்!
முகம் சிவக்கத் தலையைக் குனிந்து கொண்டாள் கவி.
ஒருவழியாக அத்தனை சடங்குகளும் முடிந்து, மதிய உணவும் முடிந்து அமர்ந்திருந்த ரவியையும் கவியையும் சுற்றி கனகேந்திரம், நந்தன், சாந்தி, ராஜ், நிரு எல்லோரும் அமர்ந்து இருந்தனர்.
அவர்களுக்கு அருகிலேயே ரதீசாவுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் பாவை.
காஞ்சனாவும் சகுந்தலாவும் சாப்பிட்டுவிட்டுக் கைகளைக் கழுவிக்கொண்டு இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
வரும் தாயைக் கண்ட ரவிக்கு மனத்தாங்கலாக இருந்தது. முதல்தான் அவர் பாவையை விசாரிக்காதபோதும், இன்றாவது அவளுடன் கதைப்பார் என்று அவன் எதிர்பார்க்க, அந்த எதிர்பார்ப்பைப் பொய்யாக்கினார் சகுந்தலா.
அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்த பாவையின் மீது அவர் பார்வை அடிக்கடி பட்டாலும், அவளோடு அவர் கதைக்கவே இல்லை.
இதை இப்படியே விடக்கூடாது என்று நினைத்த ரவி, “ஓவிம்மா… இங்கே வா…” என்று மகளை அழைத்தான்.
“என்னப்பா…?” என்றபடி வந்த மகளிடம்,
“அங்கே வருபவர்கள் யார் என்று தெரியுமா…?” என்று சகுந்தலாவையும் காஞ்சனாவையும் காட்டிக் கேட்டான்.
“ஓ… தெரியுமே! சகுந்தலா அம்மம்மாவும் காஞ்சனா அம்மம்மாவும்..” என்றாள் அவன் மகள்.
“காஞ்சனா அம்மம்மா உனக்கு அம்மம்மாதான். ஆனால் சகுந்தலா அம்மம்மா உனக்கு அப்பம்மா…” என்றான் ரவி மகளையே பார்த்து.
“சகுந்தலா அம்மம்மா.. இல்லையில்லை அப்பம்மா உங்களுடைய அம்மா. இல்லையா அப்பா..?”
“ஆமாம்டா செல்லம். அவர்கள் என் அம்மா. நீ அப்பம்மா என்று சொல்லவேண்டும்..” என்று அவன் சொல்லிக்கொடுக்கவும், அவர்கள் இருவரும் இவர்கள் அருகே வரவும் சரியாக இருந்தது.
காஞ்சனாவுக்கு அருகில் அமரப்போன சகுந்தலாவை, “அப்பம்மா, இங்கே வாருங்கள். எனக்குப் பக்கத்தில் இருக்கலாம்…” என்று தன்னருகில் இருந்த கதிரையைக் காட்டி அழைத்தாள் பாவை.
அதை எதிர்பார்க்காத சகுந்தலா செய்வதறியாது அப்படியே நின்றார். பேத்தி இப்படித் தன்னுடன் நேரடியாகக் கதைப்பாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ரவியின் முகத்தை அதிர்வோடு அவர் பார்க்க, அவரையே அவனும் பார்த்தான். அவனிடமிருந்து பார்வையை விலக்கி கவியை அவர் நோக்க முகத்தைத் திருப்பிக்கொண்டாள் கவி.
“வாங்க அப்பம்மா…..” என்று மீண்டும் அழைத்தாள் பாவை.
மீண்டும் பார்வையை பாவையை நோக்கித் திருப்பியவர் ஒன்றுமே சொல்லமுடியாமல் மெல்ல நடந்துசென்று அவளின் அருகில் அமர்ந்துகொண்டார்.
“ஏன் அப்பம்மா, நீங்கள் என்னோடு இவ்வளவு நேரமும் கதைக்கவே இல்லை..?” குழந்தை அல்லவா மனதில் தோன்றியதை வெளிப்படையாகவே கேட்டாள்.
சகுந்தலாவுக்குத்தான் பெரும் திண்டாட்டமாக இருந்தது. ரவியிடமும் கவியிடமும் பாராமுகம் காட்டியவரால் பாவையிடம் அதைச் செய்ய முடியவில்லை.
சற்றுத் திணறிவிட்டு, “அது… நீ உன் அப்பாவுக்கு அருகிலேயே நின்றாயா… அதுதான் நான் உன்னைக் கூப்பிடவில்லை…” என்றார் ஒருவழியாக.
“ஆமாம் அப்பம்மா. அங்கே புகையில் அப்பாவுக்கு ஒரே வியர்த்துக்கொட்டியது. அதுதான் அவருக்கு நெற்றியை, முகத்தைத் துடைத்துவிடுவதற்கு என்னை அருகிலேயே நிற்கச்சொன்னார் அப்பா…” என்றாள், தன் அப்பம்மாவின் சமாளிப்புப் புரியாமல்.
வம்பு பேசும் கூட்டம் எங்கேயும் உண்டுதானே. அவர்களின் பேச்சு மகளின் காதில் எட்டிவிடக்கூடாது என்று நினைத்து, முடிந்தவரை மகளைத் தன் அருகிலேயே வைத்துக்கொண்டான் ரவி.
“உங்களுக்கும், அம்மாவும் நானும் இருப்பது தெரியாதா அப்பம்மா…?” என்கிற கேள்வியை, பாவையிடமிருந்து அந்த நேரத்தில் ரவிகூட எதிர்பார்க்கவில்லை என்பது அவனின் அதிர்ந்த முகத்தில் தெரிந்தது.
சகுந்தலா அந்தக் குழந்தையின் முன்னால் குன்றிப் போனார். இதுவரை நான் செய்தது சரிதான் என்று பிடிவாதமாக இருந்தவரை நொறுக்கிப்போட்டது அந்தக் கேள்வி.
பதில் சொல்ல முடியாமல் அதிர்ந்த முகத்தோடு திகைத்து நின்றவரின் கண்கள் கலங்கியது. அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “வெளியே திரியும் அப்பாவுக்கே நீங்கள் இருப்பது தெரியாது என்கையில் வீட்டிலேயே இருக்கும் அப்பம்மாவுக்கு எப்படித் தெரிந்திருக்கும்…” என்று மகளிடம் பதில் சொன்னான் ரவி.
அவன் சொன்னதை உள்வாங்கிக்கொண்ட பாவையின் முகம் குழப்பத்தைக் காட்டியது.
“ஆனால் அப்பா, அது எப்படி உங்களுக்கு நாங்கள் இருப்பது தெரியாமல் போனது…?” கேட்கும் விதம் தெரியாதபோதும், ஏதோ ஒன்று பொருந்தவில்லை என்கிற அளவில் புரிந்தது போல அந்த ரெண்டும் கெட்டான் வயதுக்குழந்தைக்கு.
கவியைத் திரும்பிப் பார்த்தான் ரவி. ‘தேவையா உனக்கு…? அம்மாவை அறிமுகப்படுத்துகிறேன் என்று தொடங்கினாய் இல்லையா…. பதிலைசொல்….’ என்பதாக இருந்தது அவளின் பதில் பார்வை.
அங்கிருந்த எல்லோரும் அமைதியாகவே இருந்தனர். ரவியின் குடும்பத்துக்குள் நடந்த குளறுபடிகள் அத்தனையும் அறிந்தவர்கள் என்பதால் மௌனமாகவே நடப்பதைப் பாத்திருந்தனர்.
மெல்லத் தன்னைச் சமாளித்துக்கொண்ட ரவி, “அதுவாடா குட்டி… அங்கே மலையகத்தில் நீ உன் அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கிறாய் என்பது தெரியாமல், உன் அம்மாவுக்கும் சொல்லாமல் அப்பா கொழும்புக்குப் படிக்கச் சென்றுவிட்டேன். அப்போது உன் ராஜ் மாமா வவுனியாவுக்கு வந்தானா, அம்மாவுக்கு அங்கே தனியாக இருக்கப் பயமாக இருந்ததில் அவளும் வவுனியாவுக்கு வந்துவிட்டாள். அதனால் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது.
“ஆனாலும் இந்தக் குட்டிம்மாவையும் உன் அம்மாவையும் தேடி வராமல் இருந்தது அப்பா செய்த பிழைதான். அப்பாவை மன்னித்துவிடுடா குட்டி… என் பெரியபெண் என்னை மன்னிப்பாளா..?” என்று மகளிடமும் மனமார மன்னிப்புக் கேட்டான் ரவி.
கலகலத்துச் சிரித்து, “சரிப்பா….” என்று பெரியவளாக அவன் மன்னிப்பை ஏற்றுக்கொண்டவள் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “இனி என்னையும் அம்மாவையும் விட்டுவிட்டு போகமாட்டீர்கள் தானேப்பா…” என்று ஆவலே வடிவாகக் கேட்டாள்.
அதைக் கேட்டவனின் விழிகளில் மெல்லிய நீர்ப் படலம். அங்கிருந்த அனைவருக்குமே நெஞ்சம் உருகிவிட்டது. கவியோ விட்டால் கதறிவிடுவேன் என்கிற நிலையில், கீழுதட்டைக் கடித்துக் கண்ணீரை அடக்கியபடி இருந்தாள்.
சகுந்தலாவின் கண்களோ அவரையும் மீறி கண்ணீர் வடித்துக்கொண்டே இருந்தது. ஒரு பச்சைக் குழந்தையின் தந்தை பாசத்தை இவ்வளவு நாளும் பறித்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி அவரைக் குத்தியது.
அவர் அழுவதைக் கண்டதும், “அச்சச்சோ அப்பம்மா. அழாதீர்கள். அதுதான் நீங்களும் அப்பாவும் எங்களிடம் வந்துவிட்டீர்களே…..” என்றவள், தன்னுடைய பிஞ்சுக் கரங்களால் சகுந்தலாவின் கண்களைத் துடைத்துவிட்டாள்.

