அத்தியாயம்-17
மலையக டவுனுக்கு பஸ்ஸில் வந்திறங்கிய கவி, ஒருவழியாக வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தாள். யாரிடம் விசாரித்து அம்மா இருக்கும் இடத்தை எப்படித் தெரிந்துகொள்வது என்று யோசித்துக்கொண்டே கண்ணைச் சுழற்றியவளின் பார்வையில், நடந்து வந்துகொண்டிருந்த ராஜ் பட்டான்.
முகத்தில் மலர்ச்சியுடன், “ராஜண்ணா…” என்று கூப்பிட்டபடி அவனிடம் ஓடினாள். அவளைக் கண்டு ஒருநொடி முகம் மலர்ந்தவனின் நெற்றி சுருங்கியது.
“கவி, நீ எப்படி இங்கே வந்தாய்? ரவி கூட்டி வந்தானா?” என்றவனின் பார்வை, ரவியைத் தேடியது.
“இல்லை அண்ணா… நானே தான் வந்தேன்….தனியாக.” என்றவள்,
“அம்மா எங்கே இருக்கிறார்கள் அண்ணா? என்னை அவரிடம் கூட்டிப்போகிறீர்களா?” என்று ஏக்கத்தோடு கேட்டாள்.
“தனியாகவா வந்தாய்?” அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் கேட்டவன் நடந்தவைகளை அறிந்துகொண்டதும் முகம் கடுத்தான்.
பெண்ணா அந்த மனுஷி என்று மனதில் வெறுப்போடு நினைத்தவனுக்கு, கவியின் கழுத்தில் இல்லாத தாலியை நினைத்து நிம்மதி அடைவதா அல்லது கவலைப்படுவதா என்றே தெரியாமல் இருந்தது.
அவன் கவியை மரகதத்திடம் கூட்டி வராமல் இருந்ததற்குக் காரணம் அந்தத் தாலி. இனி அவளை அவர் பார்த்தாலும் அவருக்கு மன ரீதியாக எந்த ஆபத்தும் வராது. அந்த வகையில் கொஞ்சம் நிம்மதி.
ஆனால் இனிக் கவியின் வாழ்க்கை? குழந்தை ஒன்று விளையாடிவிட்டு எறிந்த பொம்மையின் நிலையாக அல்லவா ஆகிவிட்டது அவள் வாழ்க்கை! இதை ரவி தெரிந்து செய்தானா இல்லை தெரியாமல் செய்தானா? எப்படி இருந்தாலும் பாதிக்கப்பட்டது இந்த அப்பாவிப் பெண்ணல்லவா….
ரவியிடம் இதற்காக சண்டை இடுவதா அல்லது நடந்தவைகளை ஒதுக்கிவிட்டு அவளை மேலே படிப்பிப்பதா? ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு.
எதைச் செய்வதாக இருந்தாலும் மரகதத்துடன் கலந்து பேசி அவரின் முடிப்படியே நடக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டவன் மனதில் சுமை ஒன்று ஏறி அமர்ந்துகொண்டது.
“கவி… நீ உன் அம்மாவைப் பார்க்க முதலில் சில விசயங்களை நான் உனக்குச் சொல்லவேண்டும். அதன்படிதான் நீ நடந்துகொள்ள வேண்டும். சரிதானா?” என்றான்.
“சரிண்ணா. நீங்கள் சொல்வது போலவே செய்கிறேன். நீங்களும் அம்மாவும் சொன்னதைக் கேட்காமல் அந்த வர்மாவோடு சண்டை பிடித்ததற்குத் தண்டனையாகத்தான் அம்மாவுக்கு உடம்பு முடியாமல் போய்விட்டது. இனி நீங்கள் என்ன சொன்னாலும் நான் கட்டாயம் கேட்பேன் அண்ணா…” என்றாள் தழுதழுத்த குரலில்.
உன் அம்மா மட்டுமா பாதிக்கப்பட்டார். உன் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டதே என்று நினைத்தவனுக்கு மனம் கனத்தது.
துக்கத்தில் அடைத்த தொண்டையை செருமிக்கொண்டு, “கவி, ஆன்ட்டி க்கு எந்த அதிர்ச்சியான விசயமும் இப்போதைக்குச் சொல்ல வேண்டாம் என்று வைத்தியர் சொல்லி இருக்கிறார். அதனால் நீ உன் அம்மாவிடம் இப்போதைக்கு எதுவும் சொல்லகூடாது. பிறகு வீட்டுக்குப் போனபிறகு மெல்லச் சொல்லிக்கொள்ளலாம். அவர் கேட்டால் என் நண்பனின் வீட்டில், அவனின் அம்மாவுடன் தங்கியதாகச் சொல்லலாம். சரியா?” என்று அவன் கேட்கவும்,
எந்தவிதமான யோசனையும் இன்றி, “சரிண்ணா.. அப்படியே சொல்கிறேன். ஆனால் அம்மா தூண்டித்தூண்டிக் கேட்பார்களே…அப்போ என்ன செய்வது?” என்று கேட்டாள் அவள்.
காரணம் இல்லாமல் ராஜ் எதுவும் சொல்ல மாட்டான் என்று அவளுக்குத் தெரியும்.
“அப்படிக் கேட்டால் நீங்கள் முதலில் சுகமாகி வீட்டுக்கு வாருங்கள். அங்கே வைத்து எல்லாம் சொல்கிறேன் என்று சொல்லிவிடு. கவனம் கவி! எதையும் உளறி அவரை இன்னும் நோயாளி ஆக்கிவிடாதே…” என்று எச்சரித்துவிட்டு, அவளை அழைத்துக்கொண்டு மரகதத்தின் அறைக்குச் சென்றான்.
அறைக்குள் வந்த மகளைக் கண்டதும் ஆனந்த அதிர்ச்சியில் பேச்சு வர மறுத்தது மரகதத்துக்கு. மகள்தானா தன் முன்னால் நிற்பது என்று கண்களை மூடி மூடித் திறந்தார்.
அவள்தான் என்று உறுதியானதும், கைகளை விரித்து அவளை அழைக்கவும் ஓடிச்சென்று அந்தக் கைகளுக்குள் புகுந்துகொண்ட கவிக்கு விம்மல் வெடித்தது.
காடுமேடு கடந்து வந்தது போல் தாயின் மடி சாய்ந்த நொடி சுகமாக உணர்ந்தாள் கவி.
மரகதத்துக்கும் அதே நிலைதான். கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைக்க மறந்து, மகளின் முகம் தொடங்கிக் கைகள் வரை தடவிக்கொடுத்தது, அவரின் உழைத்து ஓய்ந்த கரங்கள்.
தாய் மகளின் அந்த அழகிய சந்திப்பைப் பார்த்த ராஜுக்குமே கண்கள் கலங்கியது.
“இங்கே நானும் ஒருவன் இருக்கிறேன். என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை.” என்றான் பொய்க்கோபமாக.
அவனைக் கண்டதும், கைகள் இரண்டையும் கூப்பி, “என் மகளை என் கண்ணில் காட்டிய தெய்வம் ஐயா நீ…” என்றார் மரகதம் அழுகையுடன்.
கண்கள் கலங்கியபோதும், “ஆன்ட்டி ! என்ன செய்கிறீர்கள். என் தங்கையாகத்தான் கவியை நான் நினைக்கிறேன். ஒரு அண்ணா என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் செய்தேன். அதற்கு வயதில் பெரியவர் நீங்கள் என்னைக் கும்பிடுவதா?” என்று அதட்டினான்.
“உனக்குத் தெரியாது ராஜ். என் உயிரை நீ மீட்டுத் தந்திருக்கிறாய். நீ என் கடவுள்தான்….” என்றவர்
“உன் அம்மா மிகவும் கொடுத்து வைத்தவர் ராஜ். உன்னைப் போன்ற ஒரு பிள்ளை கிடைக்க. என் மகளும் கொடுத்துவைத்தவள். கூடப்பிறக்காதபோதும் இப்படி ஒரு அண்ணன் கிடைத்திருக்கிறானே. தப்பித்தவறி எனக்கு எதுவும் நடந்துவிட்டால், என் மகளைக் கைவிட்டு விடாதே ராஜ். நீ சொன்னதுபோல அவள் உன் தங்கைதான்.” என்றவர் கவியிடம் திரும்பி,
“கவி, உனக்கும் சொல்கிறேன். அம்மாவுக்கு ஏதாவது நடந்து நான் இல்லாமல் போனாலும், ராஜ் சொல்வதைக் கேட்டு நீ நடக்கவேண்டும். அவன்தான் உனக்கு அம்மா, அப்பா, அண்ணா எல்லாமே.. சரியா?” என்றவரின் குரல் தழுதழுத்தது.
“ஆன்ட்டி …”
“அம்மா… ஏன்மா இப்படி எல்லாம் சொல்கிறீர்கள்? இனி நான் உங்கள் பேச்சைத் தட்டவே மாட்டேன். இப்படி எல்லாம் கதைக்காதீர்கள். எனக்குப் பயமாக இருக்கிறது…” என்று அழுதாள் கவி.
“கவி! அழுகையை நிறுத்து. ஆன்ட்டிக்கு அப்படி எதுவும் நடக்காது. ஆன்ட்டி நீங்களும் இப்படி எல்லாம் பேசாதீர்கள். கவியின் பிள்ளைகளை நீங்கள் தூக்கி வளர்க்க வேண்டாமா….” என்று இருவரையும் அதட்டினான் ராஜ்.
“ம்ம்.. உண்மைதான். அவளின் பிள்ளைகளைப் பார்த்துவிட்டுத்தான் நான் கண்மூடுவேன். ஆனால் நான் சொன்னவைகளை இருவரும் எப்போதும் மறக்கக்கூடாது..” என்றார் மரகதம், சேலைத் தலைப்பால் கண்ணைத் துடைத்தபடி.
அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறார் என்பதை உணர்ந்தவன், “ஆன்ட்டி, உங்கள் மாத்திரைகளை வாங்கி வந்துவிட்டேன். முதலில் அதை விழுங்கிவிட்டுத் தூங்குங்கள்.” என்றபடி அவரின் மாத்திரைகளைக் கொடுத்தான்.
“நான் கொஞ்சம் கவியுடன் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு அதை விழுங்குகிறேனே… இந்த ஐந்து நாட்களும் அவள் எங்கே போனாள், என்ன நடந்தது என்று அறியாவிட்டால் என்னால் தூங்கவே முடியாது ராஜ்.” என்று சிறுபிள்ளை போல் கெஞ்சியவரைப் பார்த்து இதமாகச் சிரித்தான் ராஜ்.
“உங்கள் மகள் உங்களிடம் வந்துவிட்டாள் ஆன்ட்டி. இனிக் காலம்பூரா அவளோடு இருந்து கதைக்கலாம். அதற்கு முதலில் உங்கள் உடம்பைத் தேற்றுங்கள். அதற்கு இப்போது இதை விழுங்குங்கள்…” என்றவாறே மாத்திரைகளை அவன் கொடுக்கவும், முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு அவற்றை விழுங்கினார் மரகதம்.
கோபமாக இருக்கிறாராம்….!
ராஜுக்குச் சிரிப்புக் கூட வரும்போல் இருந்தது. வயதானவர்கள் குழந்தைகளுக்குச் சமம் என்று இதனால்தான் சொல்வார்களோ என்று நினைத்துக்கொண்டான்.
“கவி, நீ வீட்டுக்குப் போய்விடாதே… அம்மா அருகிலேயே இரம்மா…” என்றவர், அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டே கட்டிலில் சாய்ந்தார்.
இதை எல்லாம் பாத்திருந்த கவியின் மனம் ஊமையாக அழுதது. இதே அம்மாவுக்கு என்மேல் பாசமே இல்லை. எதற்கெடுத்தாலும் அடிக்கிறார் என்று எத்தனை தடவைகள் தாயைத் திட்டி இருப்பாள்.
இன்று அவர் தன்னில் வைத்திருக்கும் அன்பைப் பார்க்கையில், இனி அவரின் மனம் நோகும் எந்தக் காரியங்களையும் செய்யக் கூடாது என்று தனக்குத் தானே முடிவு எடுத்துக்கொண்டாள்.
காலம் கடந்தபிறகு எடுத்த முடிவு என்று அவள் அறிகையில்……..???
அவர் உறங்கியதும், அங்கேயே இருக்கும்படி கவியிடம் சொல்லிவிட்டுத் தன் தந்தையைப் பார்க்கச் சென்றான் ராஜ். அவரின் நிலையோ சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.
பக்கவாத நோய் அவரை மிகவும் ஆழமாக பாதித்து இருந்தது. முடிந்தவரை அவரைத் தேற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார்கள் வைத்தியர்கள்.
கவியின் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்று நிமிரமுடியாமல் தந்தையின் நிலை ராஜை இன்னும் வாட்டியது.
தூங்கிக்கொண்டு இருந்த அவரையே பாத்திருந்தவனின் மனதில் பல எண்ணங்கள்…..
இந்த நோய் வரும்வரை ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காது உழைத்த தந்தை.
தானும் வேலைக்கு வருகிறேன் என்றபோது, ‘அடுத்தவனுக்குக் கைகட்டி வேலை செய்யும் வாழ்க்கை என்னோடு முடியட்டும். நீ படித்து நல்ல உத்தியோகத்தில் இருக்கவேண்டும். அதை நான் பார்க்கவேண்டும்…’ என்று சொன்ன தந்தை இன்று பேச்சற்று இருந்த நிலை மனதை அழுத்தியது.

