‘எழுந்து குணமாகி வாங்கப்பா. நான் உழைத்து உங்களை இருத்திவைத்து சாப்பாடு போடுகிறேன்..’ என்று மனதால் தந்தையோடு கதைத்தவனின் கண்கள் கலங்கியது.
கண்ணீரை இயலாமையுடன் துடைத்தவன், நான் ஆண்பிள்ளை! அழக்கூடாது! என் அப்பா எழுந்து வருவார். நான் உழைத்து அவரை ராஜா மாதிரி வைத்துப்பார்ப்பேன் என்று நினைத்துக்கொண்டான்.
தோட்டத்தை சுற்றிப் பார்த்துவிட்டு, மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தவனை விறாந்தை(ஹால்) மேசையில் இருந்த கவியின் தாலி வரவேற்றது.
வெளியே சென்று வந்ததில் கொஞ்சம் சமணப்பட்டிருந்த அவன் மனதின் அமைதி அந்த நொடியே கெட்டது.
முகம் இறுக, “அம்மா..!” என்று கத்தினான் ரவி.
“எதற்கு இந்தக் காட்டுக் கத்தல் கத்துகிறாய்..?” என்று அவனைக் கடிந்தபடி உள்ளிருந்து வெளியே வந்தார் சகுந்தலா.
“என்னம்மா இது?” என்று தாலியைக் காட்டிக் கேட்டான்.
“ஏன்? பார்த்தால் தெரியவில்லை? நீ அவளின் கழுத்தில் கட்டியது. அவளே கழட்டி வைத்துவிட்டுப் போய்விட்டாள். அதுவும் சும்மா போகவில்லை! என்னைப் பிடிக்கவில்லையாம் அவளுக்கு, இந்த வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லையாம்! நீதான் விருப்பம் இல்லாதவளை இழுத்துக்கொண்டு வந்தாயாம். அவளுக்கு அவன் இருக்கிறானாம், அவன் தன்னைப் பார்த்துக் கொள்வானாம் என்று என்னிடமே சொல்லிவிட்டுப் போய்விட்டாள். இதை எல்லாம் என் காதால் கேட்கவேண்டி இருக்கிறது எனக்கு!” என்று அனைத்தையுமே தலைகீழாக மாற்றிச் சொன்னார் சகுந்தலா.
மகன் ராஜைக் கண்டு கேட்டுவிட்டால் எல்லாமே கெட்டுவிடும் என்பதால், ராஜுக்கும் கவிக்கும் தொடர்பு என்பதுபோல் சொன்னவர், வேண்டுமென்றே தான் கவி வைத்துவிட்டுப் போன தாலியைக் கூட அவர் எடுக்கவில்லை.
அதைக் கேட்டவனுக்குக் கண்கள் சிவந்து தாடை இறுகியது. இப்போதே கவியைப் பிடித்து இழுத்துவந்து கன்னம் கன்னமாக அறையவேண்டும் போல் வந்தது கோபம்.
அண்ணா அண்ணா என்று வெளிவேசம் போட்டுக்கொண்டு இரண்டுபேரும் எப்படியெல்லாம் நடித்திருக்கிறார்கள். அவளை எல்லாம் நல்லவள் என்று நம்பி தாலியைக் கட்டினேனே நான்… அவனை நல்ல நண்பன் என்று நம்பி அம்மாவிடம் அவனுக்காகச் சண்டை பிடித்தேனே என்று ராஜையும் கவியையும் மனதில் திட்டித் தீர்த்தான் ரவி.
அம்மா பொய் சொல்வார் என்று நினைக்காத ரவியும் தாய் சொன்னவைகளை அப்படியே நம்பிவிட்டான். கவி அவனை அலட்சியப்படுத்தி, உதறிப் போனதில் கோபம் வந்தாலும், ஒருவித விடுதலை உணர்வையும் உணர்ந்தான் ரவி.
இதுவரை கழுத்தில் கிடந்து கனத்த கல்லு நீங்கியது போல ஒரு பெருமூச்சும் வெளியேறியது அவனுக்கு.
தாலியைக் கட்டிய அந்த நிமிடம் அவள்தான் இனி அவன் மனைவி என்று நினைத்தாலும், பள்ளிமாணவர்கள், நண்பர்கள், அவன் அம்மா என்று எல்லோரும் நடந்துகொண்ட முறைகள் அவனை வெட்க வைத்தது.
தான் ஏதோ கேவலமான ஒன்றைச் செய்துவிட்டதாக நினைத்தவனுக்கு, கவியை எப்படி ஓரம்கட்டுவது என்கிற யோசனைதான் இன்று முழுவதுமே இருந்தது.
அவளைத் தன் மனைவி என்று சொல்வதையே வெட்கமான ஒன்றாக நினைத்தான். அவள் கழுத்தில் தாலியைக் கட்டியபிரகுதான் அவனுக்கு இத்தனை பிரச்சினைகளும்.
அதனால் அவளே போய்விட்டாள் என்பது இதுவரை அடைத்திருந்த மூச்சுக்காற்று விடுப்பட்டது போன்று உணர்ந்தான்.
ஆனாலும், என்னை உதறிவிட்டுப் போனாளே என்கிற வன்மமும் மனதில் விழுந்தது. என்னிடம் இல்லாதது அந்த ராஜிடம் அப்படி என்னதான் இருக்கிறது? அவனை விட வசதியில் வேறு நான் உயர்ந்தவன் என்று மனம் குமுறினாலும், போய்விட்டாள், இனியாவது நிம்மதியாக இருப்போம் என்றும் நினைத்துக்கொண்டான் ரவி.
ஆக, வீட்டை விட்டுப் போன கவியைத் தேடும் எண்ணம் கூட அவனுக்கு இல்லை!
அதற்குமேல் தாயோடு எதுவும் கதைக்காது மதிய உணவை உண்டுவிட்டு, அறைக்குள் புந்து கட்டிலில் சாய்ந்தவனுக்கு நல்ல உறக்கம் வந்தது.
இதுவரை தனக்கு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தொலைந்தது என்ற எண்ணத்தாலோ?
மாலை எழுந்து வந்தவனை, விறாந்தையில் சகுந்தலாவுடன் அமர்ந்திருந்த காஞ்சனா புன்னகையுடன் வரவேற்றார்.
ரவிக்கோ அவரைப் பார்த்ததும் தடுமாற்றமாக இருந்தது.
அம்மா எல்லாவற்றையும் அவரிடம் சொல்லியிருப்பாரோ என்று தாயை அவன் பார்க்க, சகுந்தலா முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
தாய் மகனுக்குள் நடந்த பார்வைப் பரிமாற்றங்களைப் பார்த்துவிட்டு, “சகுந்தலா, நீ ரவிக்கு மாலை சிற்றுண்டியும் குடிப்பதற்கு ஏதாவதும் எடுத்துவா….” என்று சகுந்தலாவை அனுப்பிவைத்தார் காஞ்சனா.
அதுவே அவருக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்று உணர்த்தியது ரவிக்கு.
இப்போது அவர் முகத்தைப் பார்க்கச் சங்கடமாக இருந்தது அவனுக்கு.
“எப்படி. இருக்கிறீர்கள் ஆன்ட்டி ? நந்தனும் அங்கிளும் எங்கே?” என்றான் வீட்டுக்கு வந்தவருடன் பேச வேண்டுமே என்பதற்காக.
“நந்தன் கொழும்பில்தான். உன் அங்கிள் ஏதோ தொழில் விசயமாக இந்தியா போய்விட்டார். வர ஒரு வாரமாகும். அங்கே நான் வவுனியாவில் தனியாக இருப்பதற்கு இங்கே உங்களுடன் இருக்கலாமே என்று வந்துவிட்டேன். என்ன ரவி, நான் உங்களுடன் ஒரு கிழமை(வாரம்) இருக்கலாமா?” என்று கேலியாகக் கேட்டார்.
“என்ன ஆன்ட்டி இப்படிக் கேட்கிறீர்கள்? ஒரு கிழமை என்ன, எப்போதும் நீங்கள் எங்களுடனே இருந்தாலும் எங்களுக்குச் சந்தோசம் தான்…” என்றான் ரவி.
அவனின் சொன்னதைக் கேட்டுச் சிரித்தாலும் அவனையே நேராகப் பார்த்தார் காஞ்சனா.
அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல், “என்..ன என்ன ஆன்ட்டி ?” என்றான் தடுமாற்றமாக ரவி.
“நடந்தவைகளை உன் அம்மா சொன்னாள்…” என்றார் அவர் நேரடியாக.
தன்னை நினைத்துத் தானே வெட்கித் தலைகுனிந்தான் ரவி.
“நீ செய்தது சரியா ரவி?”
“ஆன்ட்டி ….அது…”
“எனக்கு விளக்கம் எதுவும் வேண்டாம் ரவி. சரி, ஏதோ சின்னப்பிள்ளைத் தனமாக ஒன்றைச் செய்துவிட்டாய். அதற்காகப் படிப்பைத் தொலைத்துவிட்டு நிற்கலாமா? சொல்? உன் அம்மா உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தாள். அவளை இப்படி அழ வைத்துவிட்டாயே ரவி. இனிப் படிப்புக்கு என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டார் காஞ்சனா.
ஒன்றும் சொல்லாமல், சொல்லவும் தெரியாமல் தலை குனிந்திருந்தான் ரவி.
அவனைச் சிறிது நேரம் பாத்திருந்தவர், “நந்தனுடன் கொழும்பில் இருந்து படிக்கிறாயா? உனக்கும் இடம் மாறி இருப்பது நன்றாக இருக்கும். ம்?” என்று அவர் கேட்கவும் முகம் மலர, “சரி ஆன்ட்டி!” என்றான் ரவி.
அவனுக்கும் இந்த ஊரில் இருப்பது மூச்சு முட்டுவது போன்று இருக்க, சந்தோசமாகச் சம்மதித்தான்.
“இங்கு நடந்தவைகள் எதையும் நானும் நந்தனிடம் சொல்லமாட்டேன். நீயும் சொல்லவேண்டாம் சரிதானா? அந்தப் பெண் அவ்வளவாக நல்லவள் இல்லையாமே. உன் அம்மா சொன்னாள். அவளைப் பற்றி நாம் இனிக் கதைக்கக் கூடாது. மறந்துவிடுவோம்! நீயும் மறந்துவிடு!” சிறு கண்டிப்புடன் அவர் சொல்லவும், ராஜுடன் அவள் சென்றதை அம்மா சொல்லி இருக்கிறார் போல என்று மனதில் நினைத்தவன் சரி என்பதாகத் தலையை அசைத்தான்.
நந்தனும் கொழும்பில் இருப்பதால்,கொழும்புக்குச் செல்வது மகிழ்ச்சியையே கொடுத்தது அவனுக்கு.
அவன் சம்மதம் சொன்னதுதான் தாமதம், அன்று இரவே அவனை கொழும்புக்குப் பெட்டி கட்டிவிட்டனர் சகுந்தலாவும் காஞ்சனாவும்.
சகுந்தலாவுக்கு ராஜால் ஏதும் பிரச்சினை வந்துவிடுமோ என்று பயமாக இருந்தது. அப்படி எந்தப் பிரச்சினையும் வருகையில் ரவி இங்கு இருக்கக்கூடாது என்று நினைத்தவர், காரியங்களை மிக விரைவாகச் செய்து அவனைக் கொழும்புக்கு அனுப்பியும் விட்டார்.
அடுத்த நாள் காலை “நான் கொழும்புக்கு வந்து சேர்ந்துவிட்டேன் அம்மா.” என்று ரவி கொழும்பிலிருந்து சொன்னபிறகே நிம்மதியாக மூச்சுவிட்டார் சகுந்தலா.

