அத்தியாயம் 11
“காயூ குட்டி!.. ஓய் சிங்காரி!.. எங்கடி இருக்க?…” என்று தன்னவளை ஆசையாக அழைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான் ஸ்ரீதர்.
கையில் அவளுக்காக அவன் முதன் முதலில் பார்த்து, பார்த்து எடுத்த இளஞ் சிவப்பு வண்ண பட்டு புடவையின் பை இருந்தது.
அது மாலை வேளை என்பதால் காலேஜ் விட்டு வந்து, குளித்து விட்டு, உடை மாற்றிக் கொண்டிருந்தவள், தலை வழியாக மாட்டிக் கொண்டிருந்த சுடிதாரை அவசரமாக அணிந்து கொண்டு, மாமனின் குரலுக்கு ஆசையாக ஓடி வந்தாள்.
அப்போதுதான் குளித்து விட்டு வந்ததால் பனியில் நனைந்த புத்தம் புது ரோஜாவாக ஸ்ரீதரின் கண்ணுக்கு தெரிந்தாள் அவன் செல்ல சிங்காரி.
“மாமா!…” என்று எப்போதும் அவன் மீது இருக்கும் அன்பை ஒன்று திரட்டி முகத்திலும் குரலிலும் காட்டி அழைக்க
“இந்தா நீ கேட்ட புடவ.. அதே கலர்ல…” என்று அந்த பையை அவளிடம் நீட்ட
கண்கள் மின்ன ஆசையாக அதை வாங்கிக் கொண்டவள், அதை ஆர்வமாக பிரித்துப் பார்க்கும் முன்
“குளிச்சிட்டு அப்படியே வந்தியா?…” என்று அவள் முகத்தை ஒற்றை கையால் பற்றி, தன் ஃபோனில் இருந்த ஒரு பொட்டை எடுத்து வைத்து விட்டவன், அவளின் முகத்தில் விழுந்து கிடந்த முடியை காதோரமாக பின்னுக்கு தள்ளி விட,
“ம்ம், இப்ப தான் குளிச்சேன்.. நீங்க கூப்பிடவும் அப்படியே ஓடி வந்துட்டேன்…” என்று மாமனுக்கு பதில் சொன்னாலும் கைகள் புடவையை எடுத்து அதன் அழகை ரசித்தது.
“வாவ் மாமா! புடவ ரொம்ப அழகா இருக்கு…” என்று மகிழ்ச்சியாக தன் தோளில் ஒரு பக்கமாக போட்டுக் கொள்ள,
அவளை ரசித்துப் பார்த்தவன் “உனக்கு ரொம்ப நல்லா இருக்கு…” என்று காதலோடு சொல்ல
அவன் கண்களில் வழிந்த காதலை கண்டு, நாணம் கொண்ட பெண்ணவள், அவனுக்கு கண்களால் சுற்றத்தை உணர்த்த,
அப்போதுதான் கவனித்தான் ஸ்ரீதர் அவர்கள் இருவரையும் ஆழந்து பார்த்துக் கொண்டே கமலமும் பத்மினியும் ஹாலில் அமர்ந்து இருப்பதை,
காயத்ரி உடனே பாட்டி அம்மாவிடம் திரும்பி “பாட்டி!, அம்மா! புடவ எப்படி இருக்கு.. ரொம்ப அழகா இருக்குல…” என்று கேட்க
கமலம் “உனக்காக உன் மாமன் எடுத்தது.. மொத்த கடையையுமே அலசி போட்டு தான் எடுத்து வந்திருப்பான்.. அதுதான் உனக்கு அம்சமா பொருந்தி இருக்கு…” என்று சொல்ல
பத்மினி மகளிடம் எதுவும் சொல்லாமல், “புடவ எடுக்க போறதா இருந்தா சொல்லியிருக்கலாமே ஸ்ரீ.. உனக்கும் புது வேஷ்டி சட்ட எடுக்கணும்னு இப்போதான் அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தேன்…” என்று சொல்ல
“எனக்கு எதுக்குக்கா புது வேட்டி சட்ட?…” என்று ஸ்ரீதர் புரியாமல் கேட்க
“உனக்கு பொண்ணு பாக்க போக தான்…” என்று அழுங்காமல் குலுங்காமல் அவனின் தலையில் இடியை இறக்கி இருந்தார் பத்மினி.
காயத்ரி அதிர்ந்து விழி விரித்து, தாயைப் பார்த்தவள், திரும்பி மாமனை பார்க்க,
“பொண்ணு பாக்கவா? என்கிட்ட சொல்லவே இல்ல…” என்று புருவம் முடிச்சிட பத்மினியை ஆழ்ந்து பார்த்து ஸ்ரீதர் கேட்க
“பொண்ணு பாக்க தான்.. 27 வயசாகுது உனக்கு, கல்யாணம் பண்ணனும்ல…” என்று பத்மினி சொல்ல
“இப்ப என்ன அவசரம்.. ஒரு மூணு வருஷம் போகட்டும்…” என்று தனக்கு வேறு பெண்ணை பார்க்க துணிந்து விட்டார்களா என்ற வலியை மறைத்துக் கொண்டு சொல்ல
கமலமோ “என்னடா பேசுற.. இன்னும் மூணு வருஷம் கழிச்சுனா உனக்கு அப்போ 30 வயசு, அப்போ இது மாதிரி சம்மந்தம் கிடைக்குமா தெரியாது.. கையில இருக்குற பொண்ண விட்டுட்டு, அப்ப போய் பொண்ணு கிடைக்காம தேட சொல்றியா?…” என்று கேட்க
அவனையே தவிப்பாக பார்த்துக் கொண்டிருந்த காயத்ரியை ஒரு நொடி பார்த்துவிட்டு, “முதல்ல யார கேட்டு இப்போ பொண்ணு பாக்க முடிவு பண்ணுனீங்க?…” என்று ஸ்ரீதர் கேட்க
“யார கேக்கணும்.. இப்போ உனக்கு கல்யாண வயசு தானே.. எப்பவோ உனக்கு பாக்க ஆரம்பிச்சாச்சு.. நேத்து தான் அக்கா ஒரு பொண்ண பாத்து இது சரியா வரும்னு சொன்னா.. எனக்கும் அந்த பொண்ண புடிச்சிருக்கு.. போட்டோ இருக்கு நீயும் பாரு, அடுத்த வாரம் நேர்ல போய் பாக்கலாம்.. புடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்.. இல்லனா வேற பொண்ணு பாக்கலாம்.. அத விட்டுட்டு இப்போ கல்யாணமே வேணாம்னா என்ன அர்த்தம்…” என்று கமலம் கேட்க
முதலில் பத்மினி தான் அவனுக்கான பெண்ணை தேர்வு செய்தார் என்பதில் பேர் அதிர்ச்சி தான் ஸ்ரீதருக்கு.
இருந்தும் ஒருவேளை தான் காயத்ரியை மனதில் நினைத்திருப்பது தெரியாமல் இந்த முடிவை எடுத்திருக்க கூடும் என்று நினைத்தவன், தாயும் தமக்கையும் தன் திருமணத்தில் தீவிரமாக இருப்பதை உணர்ந்து, ஆழ மூச்சு எடுத்துக்கொண்டு தன் மனதை கூறினான்.
“அது.. அக்கா! காயூ குட்டி படிப்பு முடியட்டும்.. அதுக்கப்புறம் கல்யாணத்த பத்தி பேசலாம்…” என்று மறைமுகமாக சொல்ல
ஸ்ரீதர் என்ன சொல்ல வருகின்றான் என்பது கமலத்திற்கு சட்டென புரியா விட்டாலும், பத்மினிக்கு நன்கு விளங்கியது.
“அவ படிப்புக்கும் உன்னோட கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்…?” என்று எதுவும் தெரியாதது போல் பத்மினி கேட்க
“ஏன்னா எனக்கு காயூ குட்டிய கல்யாணம் பண்ணிக்கணும்.. எனக்கு பொண்டாட்டினா அது காயூ குட்டி தான்…” என்று காயத்ரியை காதலாக பார்த்து, அழுத்தமான குரலில் உறுதியுடன் சொல்ல
கமலத்திற்கு ஸ்ரீதர் கூறியதை கேட்டதில் முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், பின் பேத்தியையும் மகனையும் மாறி மாறி பார்த்தவரின் முகம் பூவாக மலர்ந்தது.
சில நாட்களாக அவர் மனதிலும் அடிக்கடி வந்து சென்ற நினைப்பு தான். இருந்தும் தான்தான் தவறாக நினைக்கின்றோம் என்று அதை பொருட்படுத்தாமல் விட்டவர், இப்போது இருவருக்கிடையிலும் உள்ள அன்னியோன்யத்தை மனதில் ஓட்டி பார்த்துக் கொண்டவர், பொருத்தமான ஜோடி தான் என்று மனம் பூரித்து போனார்.
ஆனால் பத்மினியின் முகம் பிடித்தமின்மையை காட்டி, கடுமையாக மாறியது.
“தேவையில்லாம உளராத ஸ்ரீ.. நீ நினைக்கிறது எப்பவும் நடக்காது…” என்று காட்டமாக சொல்ல
மாமன் தன்னைத்தான் கட்டிப்பேன் என்று சொன்னதில் மகிழ்ந்து புன்னகையுடன் நின்றிருந்த காயத்ரி, தாய் முடியாது என்று மறுத்து விடவும் அதிர்ச்சியாக அவரை பார்த்தாள்.
அவளை விட பேரதிர்ச்சியில் உறைந்து நின்றான் ஸ்ரீதர். சத்தியமாக அவன் இதை பத்மினியிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை.
ஒருவேளை தங்கள் இருவரின் விருப்பம் தெரிந்தால் உடனே திருமணம் செய்து வைக்க துணிவார்களோ என்று தான் தாய்க்கும் தமக்கைக்கும் தெரியாமல் மறைத்தான்.
ஆனால் தன் விருப்பம் என்னவென்று தெரிந்த பின்னர் தமக்கை பெண் தர மாட்டேன் என்று மறுத்து கூறுவார் என்பதை அவன் கனவில் கூட நினைத்திருக்கவில்லை.
இதயம் பலமாக அடி வாங்கியது. பத்மினி கூறியது சரிதானா என்பதை கிரகித்துக் கொள்ளவே அவனுக்கு சில மணித்துளிகள் எடுத்தது.
இடிந்து போய் நிற்கும் மாமனை பார்க்க முடியாமல் “அம்மா!…” என்று கலங்கிய கண்களுடன் காயத்ரி தாயிடம் பேச எடுக்க
“நீ வாய மூடுடி.. இது எனக்கும் அவனுக்குமான பேச்சு வார்த்த.. நீ சின்ன பொண்ணு உனக்கு எதுவும் தெரியாது.. நான் பேசி முடிக்கிற வரைக்கும் பேசக்கூடாது…” என்று ஒற்றை விரலை நீட்டி மகளை எச்சரிக்கை செய்ய
“அம்மா மாமாவ எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நான் சின்ன பொண்ணுதான், இப்போ கல்யாணம் பண்ணிக்கிற வயசு இல்ல, ஆனா கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது மாமா கூட தான்…” என்று அவளும் தன் மனதை உறுதியாக கூறி விட
“தெரியும்டி, நீ இதத்தான் சொல்லுவேன்னு தெரியும்.. உனக்கு இப்போ எது சரி தப்புன்னு முடிவு எடுக்குற அளவுக்கு வயசு வந்துடல.. அதுலயும் உன் வாழ்க்கைக்கு எது சரின்னு முடிவெடுக்கிற அளவுக்கு பக்குவம் உனக்கு இன்னும் இல்ல.. அது வந்தா கூட நான் சொல்ற மாப்பிள்ளைய தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்.. உன்ன யாருக்கு கட்டிக் கொடுக்கணும்னு முடிவு எடுக்க வேண்டியது நான் தான்.. இப்போ உன் மனசுல இருக்கிறது இவன் மேல இருக்கிற பாசம் மட்டும் தான்.. அது மட்டும் போதாது நமக்கான வாழ்க்கை துணை யாருன்னு முடிவு பண்றதுக்கு.. கூடவே இருந்து, இவன் உன்ன காதலிக்கிறேன்னு சொன்னதும் உனக்கும் காதல் வந்துருச்சா?.. ஒரே ஒரு வருஷம் உன் கண்ணுக்கு தெரியாம இவன் காணாம போயிட்டான்னு வை இவன மறந்துட்டு உன் வாழ்க்கைய பாக்க ஆரம்பிச்சிடுவ.. உன்ன இவன் கைக்குள்ளயே வச்சிருந்து, இவன் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துட்டான்.. அத விட்டு நீ இப்போ வெளிய வர முடியாம சிக்கி இருக்கலாம்.. ஆனா நான் சொன்ன மாதிரி கொஞ்ச நாள் பிரிஞ்சி இருந்தேனா, உனக்கு இவனோட துணை இல்ல யாரோட துணையும் தேவைப்படாதுனு புரியும்…” என்று என்றும் இல்லாத ஒரு பத்மினியாக மாறி நின்றார் அவர்.
பத்மினி அவரின் வாழ்க்கையை வைத்து மகள் யாரின் கையையும் எதிர் பார்த்து வாழ கூடாது யாரின் கை சிறைக்குள்ளும் சிக்க கூடாது என்று யோசித்தார்.
காயத்ரிக்கு ஸ்ரீதரின் கைகள் சிறை அல்ல அவளுக்கான சிறகுகள் என்பது அவருக்கு புரியவில்லை.

