அத்தியாயம் 09
அன்றுடன் உலகம் அழிந்து விடும் நினைத்தனரோ, இல்லை அவர்கள் உலகம் மட்டும் இயக்கத்தை நிறுத்தி விட்டதோ என்னவோ, காதல் கிள்ளைகளின் பிணைந்து கொண்ட இதழ்கள் பிரியவே இல்லை.
வெளியே இருந்து வந்த “காயத்ரி!” என்ற பத்மினியின் குரலில் தான் இருவரும் சுயத்திற்கே வந்தனர்.
“அச்சோ அம்மா!…” என்று காயத்ரி ஸ்ரீதரை தள்ளி விட்டுவிட்டு ஓட பார்க்க, தன் கழுத்தில் கிடந்த துண்டை எடுத்து அவள் இடையில் போட்டு பிடித்துக் கொண்டவன்,
“எங்க ஓடுற?…” என்று கேட்க
“மாமா விடுங்க.. அம்மா கூப்பிடுகிறாங்க…” என்று சொல்ல
அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன் “என் சிங்காரியே!.. நீ இப்ப எப்படி இருக்க தெரியுமா?.. இப்படியே போய் அக்கா முன்னாடி நின்னனு வை, உன் படிப்பு முடிய முன்னாடி நம்ம கல்யாணம் நடந்துரும் பரவாயில்லையா?…” என்று கேட்க
“என்ன? எப்படி இருக்கேன்?…” என்றவளுக்கு எப்படி தெரியும், அவன் கைவனத்தில் கலைந்த தலைமுடியும், சிவந்த முகமும், தடித்த அதரங்களும் அப்பட்டமாக தெரிந்ததுவே.
அவளை அப்படியே திருப்பி, அங்கிருந்த கண்ணாடியில் காட்ட, தன்னை பார்த்தவள், நெஞ்சில் கையை வைத்து அதிர்ந்து போய் நிற்க,
“ஏய் ரொம்ப அதிர்ச்சியாகாத, போகப்போக இதவிட சேதாரம் இருக்கும்…” என்று அவள் தோளில் நாடியை குற்றி, கண்ணாடியை பார்த்தவாறு அவன் கூற
“க்ஹூம், மாமா!.. என்ன பண்ணி வச்சிருக்கீங்க?.. இதோட எப்படி நான் வெளியே போக?…” என்று கேட்க
“மாமன் எதுக்கு இருக்கேன்…” என்றவன் தன் கையில் இருந்த துண்டினால் அவள் முகத்தை துடைத்து விட்டவன், அவனே தலையை கலைத்துவிட்டு, மீண்டும் தலைவாரி பின்னல் போட்டு விட்டு,
அவளின் அடர்ந்த புருவம் இரண்டையும் ரசனையாக தன் விரல் கொண்டு நீவி விட்டவன், தன் ஃபோனை எடுத்து அதன் பின் ஒட்டி இருந்த பொட்டு ஒன்றை எடுத்து, அவள் நெற்றியில் வைத்து விட,
“அட கள்ள மாமா.. என் பொட்டை எல்லாம் எடுத்து ஃபோன்ல ஒட்டி வைப்பீங்க நான் பாத்திருக்கேன்.. ஆனா அதுக்கு பின்னுக்கு இப்படி ஒரு காதல் மன்னன் அவதாரம் இருக்குனு தெரியாம போச்சு…” என்று அவள் குறும்பாக சொல்ல
“என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்றது, இதோ, இந்த ரெண்டும் தான்…” என்று சொல்லி அவள் இரு கண்களையும் காட்டி
“இதுக்குள்ள தொலைஞ்சு போக விடாம, என்ன காப்பாத்துறது இதுதான்…” என்று பொட்டை தொட்டு காட்டியவன், அவள் பிந்தலையில் கையை கொடுத்து, அந்த ஒற்றைப் பொட்டுக்கு இத்தனை நாட்கள் வைக்க வேண்டும் என்று நினைத்த முத்தத்தை அழுத்தி, நிறுத்தி, நிதானமாக வைத்தான்.
பின் முகத்திற்கு சற்று பவுடர் போட்டு, ஒரு வழியாக அவளை அலங்கரித்து முடித்தவன், சற்று தள்ளி நின்று அவளை ரசனையாக பார்த்து “இப்போ ஓகே.. இப்போ போ.. அக்கா கண்டுபிடிக்க மாட்டா…” என்று சொல்ல
அவளும் கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள் “இதெல்லாம் நல்லா தான் பண்றீங்க மாமா.. ஆனா பதினெட்டாவது பிறந்த நாளுக்கு புடவ எடுத்து தர சொல்லி கேட்டேன்.. ஏன் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டீங்க?…” என்று கேட்க
அவளை தன் புறமாக திருப்பி, அவனை கொல்லாமல் கொல்லும் விழிகளுக்களை பார்த்துக் கொண்டே
“நீ தாவணியில வந்து நின்னாலே தவணை முறையில என் உசுரு போகுது.. இதுல புடவையில பாத்து பட்டுனு மூச்சு நின்னுட்டா என்ன பண்றது…” என்று காதலோடு மோகத்தை கலந்து சொல்ல
அவன் கூறிய அழகும், விதமும் அவளுள் ஊடுருவ, அவளது கன்னத்தின் சிவப்பை எதைக்கொண்டு சரி செய்வது என்று மீண்டும் தடுமாறி நின்றான் ஸ்ரீதர்.
அவன் சொந்தமானவளை, இப்படியே தன் கைக்குள்ளேயே வைத்துக் கொண்டு, ரசித்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றினாலும், தன் நெஞ்சுக்குள் முழுதாக பொத்தி வைக்க இன்னும் காலம் கனியவில்லையே என்பதால்
“அடியே போதும்.. இப்படியே நீ வெட்கப்பட்டுட்டே இரு.. நானும் முத்தம் கொடுத்துக்கிட்டே இருப்பேன்.. உன் அம்மாவோ இல்ல என் அம்மாவோ பாத்தாங்கன்னு வை.. அடுத்த முகூர்த்தத்துலேயே கல்யாணம் தான்.. அதனால சமத்தா ஓடிப் போயிரு…” என்று சொல்ல
“புடிச்சு வச்சுக்கிட்டு ஓடிப்போனா எப்படி போறது…” என்று சொன்னவள், அவன் நெஞ்சில் கையை வைத்து தள்ளி விட்டு விட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.
ஸ்ரீதரும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டவன், குளிப்பதற்காக குளியலறை நுழைந்து கொண்டான்.
அதன் பிறகு வந்த நாட்கள் கல்லூரி பாடத்துடன் சேர்ந்து, காதல் பாடமும் அரங்கேற ஆரம்பித்தது.
என்னதான் காயத்ரி மீது அளவு கடந்த காதலும், தாபமும் வழிந்து ஓடினாலும், அவளது படிப்பின் மீது மிகுந்த கவனமாக இருந்தான் ஸ்ரீதர்.
அதனால் தனிமையில் இருவரும் அதிக நேரம் இருந்தால் கவனம் சிதறிவிடும் என்பதால், அதிகப்படியான நேரங்களில் ஹாலில் வைத்து தான் அவளுக்கான பாடங்களை சொல்லிக் கொடுப்பான்.
இருவருக்கும் தனிமை வேண்டும் என்று தோன்றினால் மட்டுமே அறைக்கு வர சொல்லிவிட்டு சென்று விடுவான்.
அன்றும் அப்படித்தான் ஹாலில் வைத்து அவளது பாடங்களை சொல்லிக் கொடுத்து முடித்து விட்டான்.
எப்போதும் இல்லாமல் அன்று ஏனோ காயத்ரியின் கண்களுக்கு அசர அடிக்கும் ஆண்மையுடன், அவளை சுண்டி இழுக்கும் வசீகரத்துடன் அவள் மாமன் தெரிய, அவனின் அருகாமை வேண்டும் என்று வெட்கமின்றி மனது கூட்பாடு போட,
சாப்பிட்டுவிட்டு அறைக்கு செல்ல இருந்தவனிடம் “மாமா புது கணக்கு பண்ணனும்.. உங்க ரூமுக்கு வரட்டுமா…” என்று கண்ணை சிமிட்டி கேட்க
அவள் எதற்கு கேட்கின்றாள் என்பது புரிந்துவிட, நீர் அருந்தாமலே புற ஏறியது ஸ்ரீதருக்கு.
தலையில் தட்டிக் கொண்டவன் தாயையும் தமக்கையையும் ஒரு நொடி பார்த்துவிட்டு “இப்ப என்ன புதுசா.. எதுவா இருந்தாலும் நாளைக்கு பாக்கலாம்.. இல்லன்னா நாளைக்கு காலேஜ்ல கேட்டுக்க…” என்று சொல்ல
“இப்பவே கணக்கு பண்ணனும் மாமா…” என்று அவள் சிணுங்களாக சொல்ல
அவளது உடல் மொழியில் இருந்த வித்தியாசம், குரலில் இருந்த பேதம் மற்றவர்களுக்கு புரியாமல் போனதோ என்னவோ, அவனுக்கு நன்கு விளங்கியது.
‘சின்ன குட்டி வச்சு செய்றா…’ என்று தனக்குள் நொந்து கொண்டவன் “சரி வா!…” என்று விட்டு தன் அறைக்குச் செல்ல,
அவளோ அன்று வெள்ளிக்கிழமை என்பதால் தாவணி உடுத்தி இருந்தாள், தனிமையில் அவளை சந்திக்க அவன் தடுமாறுவதற்கான காரணம் அவளுக்கு தெரியுமே, எனவே அந்த தாவணியை சுற்றிக்கொண்டு, துள்ளலோடு அவனது அறைக்கு செல்ல,
சூறாவளியாக சுழற்றி, அவளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன் “என்னடி அதப்பா.. எல்லார் முன்னாடியும் கணக்கு பண்ணலாமான்னு கூப்பிடுற…” என்று அதட்டுவது போல் கேட்க
“நான் புத்தகத்துல இருக்கிற கணக்க தான் சொன்னேன்.. உனக்கு தப்பா புரிஞ்சா நான் என்ன பண்றது.. நீதான் மாமா மோசம்…” என்று சொல்ல
“ஏய் கேடி நீ எந்த கணக்க சொன்னனு எனக்கு தெரியும்.. என்னடி மரியாதை எல்லாம் குறையுது…” என்று தன் மீசை முடியால் அவள் கன்னங்களை குறுகுறுக்க செய்து கொண்டே கேட்க
“தாய்மாமனுக்கு மரியாதை கொடுக்கலாம்.. தாலி கட்டி புருஷனாக போறவனுக்கெல்லாம் மரியாதை கிடையாது.. வேணுமா என்ன…” என்று கேட்க
“அதெல்லாம் யாருக்கு வேணும்…” என்றவன் உதடுகள் இப்போது அவள் சங்கு கழுத்தில் ஊர்வலம் போய்க்கொண்டு இருந்தது.
“அப்போ என்ன வேணும்…”
“கணக்கு பண்ண கூப்பிட்டது நீதானே.. நீதான் வேணும்.. எதுக்கு கூப்பிட்டாயோ அந்த வேலைய பாரு…” என்று சொல்ல
அவள் தான் ஆசையாக அவனை கூப்பிட்டாள், ஆனால் என்னவோ அவளாக முன்வந்து முத்தம் கொடுக்க வேண்டும் என்ற போது, நாணமும் வெட்கமும் நெட்டித்தள்ள,
“ஆசையா தான் இருக்கு.. ஆனா நீ பாத்தா என்னமோ பண்ணுது மாமா.. அதனால கண்ண மூடு…” என்று சொல்ல
“இதெல்லாம் ஓவர் டி.. என்னமோ இப்பதான் நம்ம ரெண்டு பேரும் பாத்து, பேசி, லவ் பண்ண ஆரம்பிச்ச மாதிரி பண்ற.. சின்ன வயசுல இருந்து ஒன்னா தான் சுத்துறோம்…” என்று அவன் சொல்ல
“எதுவா இருந்தா என்ன.. இப்போ தானே நீ இந்த மாதிரியெல்லாம் பண்ற.. சொன்னா கேளு மாமா.. எனக்கு உன்ன கொஞ்சணும்…” என்று சொல்ல
கரும்பு கசக்கவா போகின்றது, அழகாக புன்னகைத்தவன், அப்படியே அவள் முகத்தை பார்த்துக் கொண்டே இமைகள் இரண்டையும் மூடிக்கொள்ள,
சற்று எக்கி, அவன் முகத்தை பிடித்துக் கொண்டவள், அவன் ஒரு பக்க கன்னத்தில் அழுத்தி ஈர முத்தம் வைக்க
முத்தம் கொடுப்பதில் ஒரு சுகம் என்றால், வாங்குவதில் பேரானந்தம் அல்லவா, அதைத்தான் அனுபவித்துக் கொண்டிருந்தான் மன்னவன்.
மற்றைய கன்னத்திலும் முத்தம் வைத்தவள், அப்படியே நெற்றி, மூக்கு என்று ஆசையாக முத்த வைத்துக் கொண்டு வந்து, இதழ்களை நெருங்கும் சமயம் சற்று கூச்சமாக இருக்க,
அவளும் கண்களை மூடிக்கொண்டு, அவன் இதழ்களை நெருங்க, அவள் சற்று இடைவெளி எடுத்த போதே கண்ணை திறந்து கொண்டவன், கண்களை மூடிக்கொண்டு முத்தமிட நெருங்கியவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.
இருவரின் உடலும் ஒன்றாக சிலிர்த்து அடங்கியது.
ஆடவனோ இழுத்து சுவைக்க, பெண்ணவளோ கிறங்கி மயங்க, மணித்துளிகள் கடந்த பின்னர், மனமே இன்றி அவளை விட்டவன்
“போடி! இருக்குதான் இன்னைக்கு உன்ன ரூமுக்கு கூப்பிடாம இருந்தேன்…” என்று சொல்ல
அவளுக்கும் அவன் முகம் பார்க்க முடியவில்லை, அது முத்த பரிமாற்றத்திற்காக கிடையாது, அவனது கைகள் இரண்டும் இப்போது இருந்த இடம் வேறு என்பதால்.
தாவணி பாவாடை அல்லவா உடுத்தி இருந்தாள், எனவே இடைவெளிகளில் அவன் கை தாராளமாக பூந்து விளையாடி விட்டது.
“சரி இனி வரல.. கைய எடு மாமா…” என்று முனகலாக பாவையவள் சொல்ல
அப்போது தான், இடையில் ஒன்றும் அதற்கு மேல் ஒன்றுமாக இருந்த கைகளை மெதுவாக எடுத்தான்.
காயத்ரியோ பித்து பிடித்தது போல் தனது அறைகுக்கு சென்று விட,
ஸ்ரீதரோ தாபம் தலைக்கு ஏறி, சித்தம் தொலைத்து படுக்கையில் கிடந்தான்.
“ச்சே நான் கண்ட்ரோலா இருந்திருக்கணும்…” என்று தன்னையே திட்டிக் கொண்டவன் தான் இரு கைகளையும் தூக்கிப் பார்த்து “என்னையும் மீறி எனக்கு எதிரா செயல்படுதுங்க இதுங்க, தூ…” என்று காற்றில் துப்பி கொண்டவன்
அதே கைகள் மோட்சம் பெற்றது போல் தன் கழுத்திற்கு அடியில் வைத்துக் கொண்டு படுத்து விட்டான்.
************
சில நாட்கள் சென்றிருக்க, அன்று காலை காயத்ரி தன் அறையை விட்டு வெளியே வரவில்லை.
அவளுக்காக தனது அறையில் காத்திருந்தவன், வெளியே வந்து சாற்றி இருந்த அவளது அறையை பார்த்து விட்டு
“அக்கா காயூ குட்டி எங்க?.. காலேஜ் போகலயா?…” என்று கேட்க
“இல்லடா இன்னைக்கு லீவு.. உள்ள தான் படுத்திருக்கா…” என்று சொல்ல
ஏதோ சட்டென புரிய, ஹாலில் இருந்த காலண்டரை பார்த்தான். அவளைப் பற்றிய எல்லா விடையமும் அவனுக்கு அத்துபடியே, எனவே எதற்காக அறையில் அடைந்து கிடக்கின்றாள் என்பது புரிய,
இம்முறை ஏனோ அம்மா, அக்கா அவளை பார்த்துக் கொள்வார்கள் என்று அவர்களிடம் பொறுப்பை விட்டு விட்டு, தன் வேலையை கவனிக்க செல்ல முடியவில்லை.
உரிமை பட்டவன், உடமை பட்டவன் அவன் தானே, ஆசை வரும்போது அள்ளி கொஞ்ச மட்டுமா அவள் வேண்டும், அவளுக்கு அரவணைப்பு தேவைப்படும் போது இவன் கூட இருக்க வேண்டுமே.
இருந்தும் அந்த மூன்று நாட்களில் அம்மா அக்காவிடம் அவளை கவனிக்க சொல்லிவிட்டு, தள்ளி நிற்பவன், இன்று புதிதாக உரிமை எடுத்துக் கொண்டு அவளது அறைக்கு சென்று, அவளை அள்ளி எடுத்து அரவணைப்பு கொடுக்க தயக்கமாக இருந்தது.
எனவே “சரி க்கா.. நீ அவள பாத்துக்க.. ஏதாவது வேணும்னா ஃபோன் பண்ணு…” என்று சொன்னவன் தன் பைக் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டான்.
அவன் சென்றது என்னவோ அவளுக்காக சாக்லேட், நட்ஸ் வாங்கி கொண்டு இளநீர் பறித்துக் கொண்டு வரத்தான்.
அவற்றை கொண்டு வந்தவன் பத்மினியிடம் கொடுத்துவிட்டு, தன் அறைக்கு சென்று விட்டான். எப்போதும் ஸ்ரீதர் இதை செய்வான் என்பதால் பத்மினி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அன்றைய நாள் முழுவதும் அவளை பார்க்க முடியாமல், ஒரு நாளிலேயே பசலை நோய் கண்டவன் போல் சோர்ந்து போனான் தலைவன்.
இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்கிவிட, தூக்காமல் தவித்து கிடந்தவன் எழுந்து காயத்ரி அறைகுக்கு வந்தான்.
வயிற்று வலியால் சுருண்டு படுத்திருந்தாள்.
அவளை அப்படி பார்க்கவே உள்ளம் பிசைந்தது.
“காயூ குட்டி!…” என்று அவளது தோளை தொட, அவளும் தூங்காமல் இருந்திருப்பாள் போலும் உடனே “மாமா!…” என்று எழுந்து கொள்ள
“என்னடா குட்டி, தூக்கம் வரலயா?…” என்று கனிவாக கேட்க
அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள் “இல்ல மாமா.. தூங்க முடியல…” என்றவள்
அவன் நெஞ்சில் நாடியைக் குற்றி, அவன் முகம் பார்த்து “மாமா அன்னைக்கு நீ காய்ச்சல்ல இருந்தப்போ, என்ன இழுத்து பிடிச்சு தூங்க வச்சியே, சுகமா இருந்துச்சு மாமா.. இப்பவும் என்ன உன் நெஞ்சுல போட்டு தட்டிக் கொடுக்கிறயா?…” என்று ஏக்கமாக கேட்க
மறுக்க தோன்றுமா அவனுக்கு, ஆனால் இருவரும் ஒரு அறையில் இருப்பதை தற்செயலாக அம்மாவோ அக்காவோ பார்த்தால் சரி வராது என்பதால்
அவள் போர்த்தி இருந்த போர்வையோடே, அப்படியே கைகளில் அள்ளிக் கொண்டவன் “வா மாமா உன்ன தூங்க வைக்கிறேன்…” என்றவாறு தூக்கிக் கொண்டு படிகளில் ஏறி மொட்டை மாடிக்கு வந்தான்.
மொட்டை மாடி சுவரில் அவன் அமர்ந்து கொண்டு, தன் கால்களுக்கு இடையில் அவளை அமர்த்திக் கொள்ள, ஒருக்கழித்து அமர்ந்து கொண்டவள், அவன் தோளில் தலையை சாய்த்து, தன் மூச்சுக் காற்றை அவன் கழுத்தோடு மோத விட்டவள், அவன் வயிற்றோடு கையை போட்டு கட்டிக் கொண்டு விழிகளை மூடிக் கொள்ள,
அவள் அடிவயிற்றை மென்மையாக தடவி கொடுத்தவன் “வலிக்குதடி?…” என்று கேட்க
“ம்ம்!, எப்பவும் போல தான் மாமா…” என்று முணகலாக சொன்னவள் தூங்க
தன் இரு கைகளாலும் அவளை அணைத்துக் கொண்டவன், அவள் தூங்கும் வரை அவள் நெற்றியில் முத்தம் வைத்துக் கொண்டிருந்தான்.
காரிகையோ அவள் கேட்ட சுகம் கிடைத்ததில் இதமாக துயில் கொள்ள…
கண்ணாளனோ கன்னித்தோகையவள் தன் மார்பில் கிடக்கும் மயக்கத்தில் தலையை சுவற்றில் சாய்த்து கண்ணயர்ந்தான்.