எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 12

அத்தியாயம் 12

ஸ்ரீதரின் அறையில் இருந்த ஐங்கரனால் அவன் கூறியதை நம்பவே முடியவில்லை. மீண்டும் கேட்டான் “அக்கா வாடா அப்படி சொன்னாங்க?…” என்று 

வந்ததிலிருந்து திரும்பத் திரும்ப அதே கேள்வியை கேட்ட நண்பனை முறைத்து பார்த்த ஸ்ரீதர் “நீ ரிபீட்டா ஒரே கேள்விய கேக்குறதுக்கு நான் இதெல்லாம் சொல்லல.. நான் இல்லனாலும் என்னோட இடத்துல இருந்து நீ தான் எல்லாத்தையும் பாத்துக்கணும்.. பாத்துப்பல…” என்று கேட்க 

“டேய் என்னடா இது? நான் பாத்துப்பேன்.. ஆனா எதுக்கு சொல்லாம கொள்ளாம போக போறேன்னு சொல்ற…?” என்று கேட்க 

“அதுக்கு காரணம் இருக்குடா.. இப்பவே நான் கூட இருந்தும் காயத்ரிக்கு படிப்பு மேல கவனம் சிதறுது.. என் கூட இருக்க தான் அவ ஆசைப்படுறா.. இப்போ பிரிஞ்சு போய் வேற எங்கேயோ நான் இருந்துட்டு, இங்க அவ கூட பேசிட்டு இருந்தேன்னா விடிய விடிய என் கூடவே பேசிட்டு இருப்பா.. மொத்தமா அவ படிப்பு மேல இருக்கிற ஆர்வம் குறஞ்சிடும்..அவளோட லட்சியத்த என்னால ஈட்டி கொடுக்க முடியாதுன்னு அக்கா சொல்லிடுச்சு.. அது அப்படி இல்ல என்னாலயும் என் காதலாலயும் காயத்ரிய அவ நினைச்சத அடைய வைக்க முடியும்னு நான் நிரூபிக்கணும்.. அதுக்கு நான் இங்க தொடர்பு வச்சுக்க கூடாது.. 

…இன்னொரு விஷயம் ஒருவேள என்னால முடியாம போயிடுச்சுன்னா.. நான் எங்க இருக்கேன்னு தெரிஞ்சா தானே தேடி வருவாங்க.. இல்லன்னா அக்கா ஆசைப்பட்ட மாதிரி காயத்ரிக்கு பொருத்தமான மாப்…” அதற்கு மேல் சொல்ல முடியாமல் தொண்டைகுழியில் வார்த்தை சிக்கியது. 

“பாத்தியா இத கூட உன்னால சொல்ல முடியல.. நீ எப்படிடா அவள விட்டுக் கொடுப்ப.. உங்க ரெண்டு பேரோட உறவு சாதாரணமா பாத்து, பேசி, பழகி ஆரம்பிச்சது இல்ல.. அவ பிறந்ததிலிருந்து உன்னோட ஊனோடயும் உயிரோடயும் கலந்துட்டா.. எனக்கு நம்பிக்கை இருக்கு மச்சான், கண்டிப்பா நீ நினைச்ச மாதிரி உன் வாழ்க்கை அமையும்.. இருந்தாலும் அக்காவ கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணலாம்டா…” என்று சொல்ல 

“இல்ல டா.. எங்க கல்யாணம் எல்லாரோட முழு மன திருப்தியோட நடக்கணும்.. சின்ன நெருடலோட கூட காயத்ரிய என்கிட்ட கை புடிச்சி அக்கா தரக்கூடாது…”என்று கூறியவன் 

அவன் வரும் வரை ஐங்கரன் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக விளக்கிச் சொல்ல, கேட்டுக் கொண்ட ஐங்கரனும் 

“சரிடா, என்கிட்டயாவது அடிக்கடி ஃபோன்ல பேசு.. ரொம்ப கஷ்டமா இருக்குடா…” என்று சொல்லி ஸ்ரீதரை அணைத்து கொண்டான், அவன் அன்பின் வெளிப்பாடாக. 

நண்பனை தட்டிக் கொடுத்து சமாதானம் செய்த ஸ்ரீதர், தனது படிப்புக்கான சான்றிதழ்களையும், தனக்கு தேவையான உடமைளையும் ஒரு பையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவன், அதை ஐங்கரனிடம் கொடுத்து “நீ வண்டிய ஸ்டார்ட் பண்ணு.. நான் காயத்ரிய பாத்துட்டு வாரேன்…” என்றவனுக்கு நிச்சயமாக அவள் முகத்தை பார்க்கும் துணிவு இருக்கவில்லை. 

இருந்தும் அழுது கொண்டே மொட்டை மாடிக்கு சென்றவள் இன்னும் கீழே வரவில்லையே, கண்டிப்பாக இந்த நிமிஷம் வரை கண்ணீரில் கரைந்து கொண்டிருப்பாள் என்பது தெரியும். 

அவளை அப்படி பார்க்கவும் முடியாது, உன்னை விட்டு செல்கின்றேன் என்று கூறி அவளிடம் விடை பெற்றுக் கொள்ளவும் முடியாது. இருந்தும் எதிர்காலத்தை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தவன், உள்ளத்தின் நடுக்கத்தை உடலில் காட்டிக் கொள்ளாமல், அழுத்தமான நடையுடன் மாடி படிகளில் ஏறி மொட்டை மாடிக்கு வந்திருந்தான். 

எப்போதும் அவர்கள் இருவரும் அமரும் தண்ணீர் டாங்கின் பின், கால்கள் இரண்டையும் மடக்கி, கைகளால் கட்டிக் கொண்டு முட்டியில் தலையை வைத்திருந்தாள்.

அழுகின்றாள் என்பது அவள் உடல் குலுங்குவதிலேயே தெரிந்தது. ஐயோ என்று இவன் இதயமும் கதறி துடித்தது.

தான் உடைந்தால் அவளை சமாளிக்க முடியாது என்பது புரிய, கலங்கத் துடித்த கண்களை விரித்து, எச்சிலை கூட்டி விழுங்கியவன், ஆழ மூச்சு எடுத்துக்கொண்டு, அவளை நெருங்கி முட்டி போட்டு அவள் அருகில் அமர்ந்தான். 

“காயூ..காயூ குட்டி!…” என்று அவள் தலையில் கையை வைக்க, அவன் முகம் பார்க்காமல் பாய்ந்து கழுத்தோடு அவனை கட்டிக் கொண்டாள்.

“மாமா! மாமா! ஏன் மாமா!.. இதெல்லாம் கனவு தானே.. நாம இன்னும் தூங்கிட்டு தானே இருக்கோம்.. மாமா நீ என்ன விட்டுட்டு போக மாட்ட இல்ல.. போக மாட்ட அது எப்படி போவ.. நீ இல்லன்னா நான் செத்தே போவேனே…” என்று விம்மி வெடித்து அழுதாள்.

அவன் சினேகமானவள் வடிக்கும் ஒவ்வொரு துளி கண்ணிருக்கும், அவன் இதயத்தில் இருந்து இரத்தமே கசிந்தது. மூச்சு விட முடியாமல் சுவாசத்திற்கு ஏங்கினான்.

அவள் தந்தையை இழந்த போது கூட இப்படி அழுதாளா என்று தெரியாது. ஆனால் இப்போது உயிரை பிடுங்கி எடுக்கும் வலியை அனுபவிப்பது போல் துடித்து கதறுகின்றாள். தாங்கிக் கொள்ளுமா அவன் காதல் நெஞ்சம்.

அவனையும் அறியாமல் கண்களில் வலிந்த கண்ணீரை தோள்பட்டையில் துடைத்துக் கொண்டவன் “இங்க பாரு குட்டி.. மாமன பாரு…” என்று அவள் முகத்தை கைகளில் தாங்கி தன்னை பார்க்க வைத்தவன் 

“மாமா சொன்னா கேட்டுப்பல்ல.. நமக்கு இந்த பிரிவு அவசியம் தான்.. நீயும் படிக்கணும்.. உன்னோட ஆசைப்படி, என்னோட ஆசைப்படி நீ ஆடிட்டர் ஆகணும்.. இப்போ உனக்கு சின்ன வயசு, உனக்கு விபரம் புரியணும்னா குறைஞ்சது 24 வயசு ஆகணும்.. அதுக்குள்ள மாமாவும் உன் அம்மா எதிர்பார்த்த மாதிரி உனக்கு தகுதியானவனா திரும்பி வர்றதுக்கு முயற்சி பண்றேன்…” என்று ஸ்ரீதர் சொல்ல 

“என்ன தகுதி.. காசு பணமா? என் மாமன் தான் என்னோட உலகமே.. அதுக்கு மேல எனக்கு என்ன வேணும்…” என்று காயத்ரி கேட்க 

“காசு பணத்துக்காக மட்டும் இல்ல.. நான் உன்ன என் கைக்குள்ளயே வச்சு உன்ன சுயமா யோசிக்க விடாம என் இஷ்டத்துக்கு உன்ன ஆட்டி வைக்கிறேன்னு அக்கா சொல்லுது.. அது உண்மையா? அப்போ நான் என்ன கட்டிக்கிறியானு கேட்டதுக்காக தான் நீ சம்மதம் சொன்னியா?…” என்று கேட்க 

அவள் முறைத்துப் பார்க்க 

“இல்லல்ல.. அப்போ அத நிரூபி.. நான் உன் பக்கத்துல இருந்தாலும் தூரமா இருந்தாலும் உன் மனசுல நான் தான் இருக்கேன்னு நிரூபிக்கிறதுக்கு இது ஒரு வாய்ப்பு.. அது மட்டும் இல்ல இப்போலாம் நீ சரியா படிக்கிறது இல்ல, இரவு முழுசும் என் கூடவே இருக்க, நைட்ல சரியான தூக்கம் இல்லாததால காலேஜ்ல நீ தூங்கி வழியல்ல.. என்னதான் நான் சொல்லிக் கொடுத்தாலும் காலேஜ்ல சொல்லிக் கொடுக்கிறதையும் நீ கவனிக்கனும்..நம்ம காதல் எந்த வகையிலயும் உன்னோட லட்சியத்துக்கு தடங்கலா இருக்காதுன்னு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்.. நீ படிச்சு முடி மாமா உனக்காக திரும்பி வருவேன்.. 

…அதுவரைக்கும் நமக்குள்ள வேற எந்த தொடர்பும் வேணாம்.. என்னாலயும் உன்ன திரும்ப ஒரு தடவ பாத்துட்டா விலகி இருக்க முடியாது.. நீயும் நான் எங்க இருக்கேன்னு தெரிஞ்சுட்டா என்ன விட்டு விலகி இருக்க மாட்ட.. அதுக்கு தான் இது, கண்டிப்பாக படிப்பு முடிய உன் முன்னாடி வருவேன்.. அப்படி நான் வரலன்னா நீ அக்கா சொல்றத கேளு.. இல்ல நான் வாரத்துக்கு இடையில உன் மனசு மாறிட்டாலும் எனக்கு பிரச்சனை இல்ல…” என்று ஸ்ரீதர் சொல்ல 

ஓங்கி அவனை அரைந்திருந்தாள் காயத்ரி. “என்ன விளையாடுறயா? என் மனசு மாறிடும்னு நினைக்கிறயா?…” என்று கண்ணீரோடு அவன் சட்டையை பிடித்து கேட்க 

மெலிதாக புன்னகைத்தவன் “அப்படி இல்ல.. உனக்கு தெரிஞ்ச ஒரே ஒரு ஆம்பள நான்தான்.. நீ வேற யாரோடையும் எங்கிட்ட பழகுன அளவுக்கு குளோசா பழகல.. எனக்குமே சின்ன பொண்ணு உன் மனச அங்குட்டு இங்குட்டு போக விடாம நான் தான் இழுத்து பிடிச்சிட்டனானு ஒரு குற்ற உணர்ச்சி இருக்கு காயூ.. அதுதான் அப்படி சொன்னேன்.. என்ன மறந்துட்டு நீ உன் இஷ்டம் போல இரு.. உனக்காக தான் நான் போய் இருக்கேன்னு நினைச்சுட்டு எனக்காக நீ காத்திருக்கணும் என்ற அவசியமில்ல.. உனக்கான முடிவ எடுக்குறதுக்கான முழு சுதந்திரம் உனக்கு இருக்கு.. எப்பவுமே தாய்ப் பறவ குஞ்ச சிறகுக்குள்ள வச்சிருக்குற மாதிரி உன்ன எனக்குள்ள வெச்சிருந்து பழகிட்டேன்.. இப்போ நான் விட்டுட்டேன்.. நீ உன் சிறகடிச்சு பறக்குறதுக்கு பழகிக்க.. என்று சொல்ல 

“ஐயோ எனக்கு எதுவும் தெரிஞ்சுக்க வேணாம்.. நான் எதுவும் தனியா கத்துக்க வேணாம்…” என்று ஸ்ரீதர் சொன்ன விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டு காயத்ரி சொல்ல 

இதற்கு மேல் அங்கு இருந்தால் அவளின் வேதனையை தாங்க முடியாமல், தமக்கையின் காலில் விழுந்து, தாலியை கட்டி விடுவோமோ என்று நினைத்தவன், எழுந்து வேகமாக படிகளில் இறங்கி வீட்டின் வெளியே வர 

கமலம் “ஸ்ரீ!” என்று கண்ணீருடன் அழைத்தவருக்கு போகாதே என்று தடுக்கவும் முடியவில்லை. அவன் வாழ்க்கையில் முன்னேற அல்லவா செல்கின்றான். எனவே தடங்கலாக எதையுமே கூற முடியவில்லை.

அதே நேரம் ஒற்றை மகனை பிரிந்து எப்படி இருப்பது என்றும் புரியவில்லை.

பத்மினியோ தம்பியை கலக்கமாக பார்த்தவர் “ஸ்ரீ எதுக்கு இதெல்லாம்.. நீ சொன்ன மாதிரி காலம் போகட்டும் பாத்துக்கலாம்…” என்று அவனை தடுக்க பார்க்க 

“இல்லக்கா.. என்ன பத்தி யோசிக்காதீங்க.. நீங்க பத்திரமா இருங்க.. எதுன்னாலும் ஐங்கரன் கிட்ட கேளுங்க…” என்று சொன்னவன் வண்டியில் ஏறி அமர, 

ஐங்கரன் அப்போது தான் வண்டியை உயிர்ப்பித்தான். அந்த சத்தத்தில் தான் நிமிர்ந்து தன் முன் இருந்த மாமனை தேடினாள் காயத்ரி. அவன் அங்கு இல்லை என்றதும் “மாமா!…” என்று அழுது கொண்டே கீழே செல்ல ஓடியவள், 

மோட்டார் சைக்கிளின் சத்ததில், தான் கீழே செல்லும் முன் மாமன் சென்று விட்டால் என்ன செய்வது என்று, மேலே இருந்தே வாசலை எட்டிப் பாரத்தாள்.

வண்டி வாயில் கேட்டை நெருங்க “மாமா போகாத மாமா!.. உன் காயூ குட்டிய விட்டுட்டு போகத மாமா.. நில்லு மாமா! உன் சிங்காரி நீ இல்லனா ஒன்னுமே இல்ல மாமா…!” என்று அவன் காதில் கேட்கும் படி கத்த 

ஐங்கரனின் தோளில் வைத்திருந்த ஸ்ரீதரின் கை அவன் தோளை அழுத்த, 

ஐங்கரன் வண்டியை நிறுத்த முனைய, “நிறுத்தாம போ!…” என்று சொன்னவன் குரலில் அத்தனை வேதனை, வலி, துக்கம்.

காயத்ரியின் மாமா என்ற கதறல் கேட்காத தூரம் சென்று கொண்டிருந்த வண்டியை கண்ணீர் நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டே அங்கேயே நின்றிருந்தாள் பூம்பாவை.

 

 

 

error: Alert: Content selection is disabled!!