எந்தன் சிறகுகள் உனக்காக 💕 01

அத்தியாயம் 01

சென்னை ரெயில்வே ஸ்டேஷனின் முன்பு தன் காரை கொண்டு வந்து நிறுத்தினான் ஸ்ரீதர்.

ஆறு வருடங்கள் கழித்து அவன் சொந்த ஊரிற்க்கு செல்லப் போகின்றான்.

ஆறு வருடங்களுக்கு முன்பு ரெயினில் அவன் படிப்பு, திறமை, தன்னம்பிக்கையையும் துணையாக கொண்டு வந்திருந்தான். ஆனால் இன்று தனக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்கி, வசதி வாய்ப்போடு பெயர் சொல்லிக் கொள்ளும் ஒரு தொழில் அதிபன்.

நினைத்தால் அவன் காரிலேயே தன் ஊருக்கு செல்ல முடியும். ஆனால் அவன் மனதின் ஓசை பழையதை மீட்டிப் பார்க்க சொல்ல, இதோ தன் ஊருக்கு செல்லும் ரெயினில் ஏறி அமர்ந்து விட்டான்.

அவன் உடமைகளை சரி பார்த்தானோ இல்லையோ, தோளில் இருந்த பையில் இருக்கும் ஆறு கொலுசுகளை சரி பார்த்துக் கொண்டான். அவை இல்லாமல் தன் மனம் கொய்தவளை காண முடியாதே.

தன் ஃபோனை எடுத்து ஊரில் இருக்கும் தன் நண்பனுக்கு அழைத்தான்.

அந்த பக்கம் ஐங்கரன் அழைப்பை ஏற்றதும் “மச்சான்! ஊருக்கு வாரேன்.. என் அக்கா மகள கட்டிக்க தயாரா வாரேன்.. என் வீட்டுல சொல்லிடு…” என்று சொல்ல

“டேய் ஸ்ரீ! நிசமாவாடா.. செமடா இந்த நாளுக்காக தான் காத்திருந்தேன்.. ஐமாய்ச்சிடலாம், நீ பத்திரமா ஊர் வந்து சேரு…” என்று சொல்லி அழைப்பை துண்டித்த ஐங்கரனுக்கு அத்தனை சந்தோஷம்.

இங்கோ ஐங்கரனுடன் பேசி விட்டு, அழைப்பு துண்டிக்கப்பட்டதும், எப்போதும் போல் ஃபோனை திருப்பி காதலாக பார்த்தான். ஃபோன் கவர் சற்று வித்தியாசமாக இருந்தது.

சின்ன சின்ன வட்டம், அதை விட சற்று பெரிய வட்டம், இடை இடையே சின்னதும் பெரியதுமாக கோபுர வடிவம் என்று, கருப்பு, சிகப்பு நிற பெண்கள் நெற்றியில் வைக்கும் ஸ்டிக்கர் பொட்டுகளை கொண்டு உருவாக்கியது தான் அந்த ஃபோன் கவர்.

அவன் பிரியமானவளின் காந்த கண்களில் தொலைந்து போகாமல் ஆடவனை இழுத்து பிடிப்பது, அவளின் இரு புருவங்களின் மத்தியில் திமிராக ஒட்டிக் கொள்ளும் பொட்டு தான்.

அது என்னவோ அவளின் நெற்றி பொட்டில் அவனுக்கு அப்படி ஒரு பித்து. அவள் பிறந்ததில் இருந்து அவன் தானே வைத்து விடுகின்றான்.

அவள் வளர்ந்த பின்பும் எந்த பொட்டு வைப்பது என்று குழம்பி நிற்க, அவனே தான் தேர்ந்து எடுத்து வைத்து விடுவான். அந்த பொட்டை அடுத்த நாள் அவள் கண்ணாடியில் ஒட்டி வைத்தால், மறுநொடியே அது இவன் ஃபோன் கவரில் இருக்கும்.

அதேபோல் அவன் வாங்கி கொடுக்கும் கொலுசுகள் தான் அவள் காலை தஞ்சம் கொண்டு தங்களை மெருகேற்றிக் கொள்ளும்.

இந்த ஆறு வருடங்களாக அவள் நெற்றி தொட்ட பொட்டு இவனிடம் வரவும் இல்லை, இவன் கையினால் கொடுத்த கொலுசு அவள் கால்களை சேரவுமில்லை.

இதோ இன்னும் ஆறு மணிநேரத்தில் அவன் சொந்தமானவளை பார்க்கப் போகின்றான். அந்த நினைப்பே அவனை சிறகு இல்லாமல் வானில் பறக்க வைத்தது.

ரெயின் வேகமாக முன் நகர, அவன் நினைவுகள் பின் நோக்கி இதமாக நகர்ந்தது.

*******
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் வெண்பாறை.

சுற்றிலும் பசுமையான வயல்கள், பழைய ஆலமரங்கள், தலைமுறை தலைமுறையாக வாழும் குடும்பங்கள், மழைக்காலத்தில் பனிமூடும் மலைப்பாதைகள் கொண்ட ஊர்.

அந்த ஊரில் ஒரு சாதாரண விவசாய குடும்பம் தான் ஸ்ரீதர் குடும்பம்.

அப்பா செல்வம், அம்மா கமலம், ஒரேயொரு அக்கா பத்மினி. அவனுக்கும் பத்மினிக்கும் எட்டு வயது வித்தியாசம்.

இளையவனை இன்னொரு தாயாக வளர்த்தது பத்மினி தான். அதனால் தான் என்னவோ தமக்கை மீது அளவுகடந்த பிரியம் ஸ்ரீதருக்கு .

பத்மினி பொன்மஞ்சள் நிற அழகி. அதனாலேயே அவளின் பதினெட்டு வயதிலேயே தானாக வரன்கள் தேடி வர ஆரம்பித்தது.

அப்படி வந்த வரங்களில் ஒன்றுதான் பக்கத்து ஊரைச் சேர்ந்த சாமிதுரை செவ்வந்தி தம்பதியினரின் மூத்த புதல்வன் ஆனந்தனின் வரன்.

செல்வம் குடும்பத்தை விட சற்று வசதியான குடும்பம். ஆனந்தனுக்கு பிறகு ஜெகதீசன் என்ற தம்பியும், அம்பிகா என்ற தங்கையும் இருந்தனர்.

தங்கைக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும், தம்பிக்கு அவன் காதலிக்கும் பெண்ணுடன் திருமணம் நடத்த வேண்டும் என்பதாலும், 25 வயது ஆனந்தனுக்கு அவசரமாக வரன் தேட, அவனுக்கு பத்மினியை கோயிலில் பார்த்து பிடித்து போக, நேராகவே பெண் கேட்டு வந்துவிட்டனர்.

செல்வம் கமலம் தம்பதியனருக்கும் ஆனந்தனை பிடித்து போக, பத்மினியின் விருப்பம் கேட்க, அவளுக்கும் பார்த்ததும் காதல் துளிர்த்து இருந்தது.

எனவே இரு வீட்டினரின் விருப்பத்துடன் கோலாகலமாக நடந்தது ஆனந்தன் பத்மினி திருமணம்.

பத்மினி புகுந்த வீடு செல்லும் போது தாய் தந்தையை விட அழுது கரைந்தது அவன் ஸ்ரீதர் தான்.

அக்கா தம்பி இருவரின் பாச பிணைப்பை பார்த்த ஆனந்தன்

“ஸ்ரீ! இதோ பக்கத்து ஊர்ல தான் உன் அக்கா இருக்க போறா.. சனி ஞாயிறு அங்க வந்து உன் அக்கா கூடவே தங்கிக்க…” என்று மச்சானை சமாதானம் செய்து மனைவியை அழைத்துச் சென்றான்.

பத்மினியின் வாழ்க்கை கணவனின் காதலோடு, சராசரி மாமியார் மருமகள் உட்பூசலோடு இனிமையாகவே சென்றது.

ஸ்ரீதர் தான் மாமன் சொன்ன சமாதான வார்த்தைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு, சனி ஞாயிறு அங்கு சென்று தமக்கையின் மீது அன்பை பொழிந்தான்.

அதில் செவ்வந்திக்கு பிடித்தமே இல்லை. அதை ஜாடைமாடையாக சொன்னாலும் நேரடியாக எதுவும் பிரச்சினை செய்யவில்லை.

பத்மினியும் தம்பியிடம் மறைமுகமாக எவ்வளவோ சொல்லி விட்டாள். சிறுவன் என்பதால் அது எதுவும் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை.

ஆனந்தனும் “விடு மினி.. அம்மா எப்பவும் அப்படி தானே…” என்று மச்சானுக்கு வீட்டில் முழு சுதந்திரம் கொடுத்திருந்தான்.

பின்னே அக்கா மீது இருந்த பாசத்தை அப்படியே மாமான் மீதும் காட்டுவான் ஸ்ரீதர். அதனால் பாசமான மச்சானை அவனுக்கும் ரொம்ப பிடிக்கும்.

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்க மேலும் மகிழ்ச்சியை கூட்டும் விதமாக பத்மினி கர்ப்பமானாள்.

தன் அன்பு அக்காவிற்கு குட்டி பாப்பா பிறக்க போகும் செய்தியை கேட்டு துள்ளி குதித்தான் ஸ்ரீதர்.

நாட்கள் செல்லச் செல்ல பெரிதாக வளரும் தன் அக்காவின் வயிற்றை பார்த்து பார்த்து ஆசையாக காத்திருந்தான்.

பத்மினி ஏழாம் மாதம் வளைகாப்பு நடந்து முடிய தாய் வீடு வந்தாள். அன்றில் இருந்து தமக்கை தன்னை பார்த்துக் கொண்டதை போலவே அவளையும் பாத்துக் கொண்டான் ஸ்ரீதர்.

வயிற்றில் இருக்கும் குழந்தையை தொட்டு, தொட்டுப் பார்த்துக் கொண்டு, கதைகள் பேசுவான். அந்த குட்டியும் சில நேரம் வயிற்றில் அசைந்து கொடுத்தால் போதும், அன்று முழுவதும் காண்போர் அனைவரிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்வான்.

தன் ஆசை தமக்கையின் குழந்தை. அக்கா தன்னை வளர்த்தை போல் பாசமாக என் அக்கா மகளை வளர்க்க வேண்டும் என்பது மட்டுமே அப்போதைய ஸ்ரீதரின் எண்ணம்.

அவனின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் பத்மினிக்கு பெண் குழந்தை தான் பிறந்தது .

அதில் பத்மினியின் மாமியார் செவ்வந்திக்கு முதலில் சந்தோஷம் இருக்கவில்லை. பின்பு பாசமாக அள்ளிக் கொண்டார்.

ஏன் என்றால் தன் மகளின் இரண்டு வயது மகன் அரவிந்த்க்கு திருமணம் செய்து கொடுக்கலாம் என்ற அம்பிகாவின் பேச்சு தான்.

என் அண்ணன் மகள் தான் என் வீட்டு மருமகள் என அப்பவே அடிக்கடி சொல்ல ஆரம்பித்து விட்டாள் அம்பிகா.

குழந்தைக்கு காயத்ரி என்று பெயர் சூட்டினார். அவள் பிறந்த பின் முதலில் குழந்தைக்கு பொட்டு வைக்க கமலம் முயல, அவரை தடுத்து “என் குட்டிக்கு நான் தான் வைப்பேன்…” என்று முதலில் ஸ்ரீதர் வைத்து விட்டான்.

குழந்தைக்கு மூன்று மாதங்கள் முடிந்த பின்னர், புகுந்த வீடு செல்ல இருந்த பத்மினி கையில் இருந்த காயத்ரியை வாங்கிக் கொண்டு “காயு குட்டிய தரவே மாட்டேன்…” என்று ஸ்ரீதர் செய்த ஆர்பாட்டம் கொஞ்சநஞ்சம் இல்லை.

எதை எதையோ சொல்லி, பின்பு அவனையும் உடன் கூட்டிச் சென்று, பின் படிப்பை காரணம் காட்டி தான் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின் எப்பவும் போல் சனி, ஞாயிறு பத்மினி வீட்டில் தான் ஸ்ரீதர். கமலம் கையினால் செய்து தரும் பொட்டை தான் காயத்ரி வைக்க வேண்டும் என்று அவனே கொண்டு வந்து, வைத்து விட்டும் போவான்.

அது போதாது என்று அவள் வளர வளர, கலர் கலர் காப்பு, முத்து மாலை, டிசைன் டிசைனாக பொட்டு, உடை, தலைக்கு ரிபன், கிளிப் என்று காயத்ரியை அலங்காரிக்கும் பொருட்கள் அனைத்தும் அவனே தேர்வு செய்து வாங்கி கொடுத்து விடுவான்.

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்க, காயத்ரியின் பதின்மூன்றாவது வயதில், ஒரு நாள் ஆனந்தன் மனைவி மகளுடன் ஸ்ரீதர் வீட்டிற்கு வந்திருந்தான்.

தன் தம்பிக்கு இரண்டாவது குழந்தை பிறந்து இருப்பதை நேரில் சொல்வது போல், அவர்களையும் பார்த்து விட்டு செல்லலாம் என்று.

ஸ்ரீதருக்கு அப்போது 22 வயது. காலேஜ் படித்துக் கொண்டிருந்தான். அக்காவின் குடும்பம் வருவது தெரியாததால் அன்று அவன் வீட்டில் இல்லை, காலேஜ் சென்றிருந்தான்.

ஆனந்தன் வீட்டிற்கு வரும் போது செல்வமும் வீட்டில் இல்லை.

“மாமா எங்க அத்த…?” என்று கேட்டவனுக்கு

“வயலுக்கு போயிருக்காங்க.. இருங்க மாப்பிள்ள, ஆள விட்டு வரச் சொல்றேன்…” என்று கமலம் பதில் சொல்ல

“இல்ல வேணாம் அத்த.. நானே போயி கூட்டிட்டு வாரேன்…” என்ற ஆனந்தன் செல்வத்தை தேடி வயலுக்கு வர

அங்கு வயலை நாசம் செய்யும் விலங்குகளுக்காக மின்சார வேலி போடப்பட்டு இருக்க, அதன் வீரியத்தை சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதை கவனிக்காத ஆனந்தன் பகல் வேளை என்பதால் மின் கம்பியை பொருட்படுத்தாமல் உரசியபடி தாண்ட, அதிகப்படியான மின்சாரம் பாய்ந்து அப்படியே நின்று விட்டான்.

தூரத்தில் இருந்த செல்வமும் அதை கண்டு விட்டு, மாப்பிள்ளையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தில், ஆனந்தனை பிடித்து இழுக்க முயற்சிக்க, அந்த கொடூர மின் அரக்கன் அவரையும் பிடித்துக் கொள்ள, இருவரின் உயிரும் ஒரேநேரத்தில் பறிபோனது.

ஒரே நேரத்தில் தாயும், மகளும் தாலியை இழந்து, தவித்து நிற்க, தாங்கி பிடிக்க வேண்டிய இடத்தில் இருந்தது ஸ்ரீதர் தான்.

தந்தைக்கு இறுதி சடங்கு செய்வதா, இல்லை தமக்கைக்கு துணையாக அவள் வீட்டிற்கு போவதா, தெரியாமல் பெரிதும் தடு மாறித்தான் போனான்.

ஒரு வழியாக செல்வத்திற்க்கான இறுதி கடமைகளை முடித்துவிட்டு, தமக்கையை பார்ப்பதற்காக ஓடி சென்றான்.

அதற்கு இடையில் ஆனந்தனின் உடலையும் அடக்கம் செய்திருந்தனர். ஆனால் பத்மினியின் புகுந்த வீட்டினர் அனைவரும் அவள்தான் ஆனந்தனை அழைத்துக்கொண்டு சென்று, கொலைக்கு கொடுத்து விட்டதாகவே கூறி ஒப்பாரி வைத்ததை தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எதிர்த்து வாதாடக்கூடிய இடத்திலும் ஸ்ரீதரின் குடும்பத்தினர் இருக்கவில்லை. மகனை பறிகொடுத்த துக்கத்தில் பேசுகின்றனர் என்று விட்டுவிட்டனர்.

அதெல்லாம் இல்லை, இத்தனை நாட்கள் அவர்களது சுய ரூபம் தெரியாமல் இருந்தது, இப்போதுதான் வெளி வருகின்றது என்பதை ஊர்ஜிதபடுத்தும் வகையில்,

பத்மினியை கொண்டு செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் முடிந்து, 16 வது நாள் காரியம் முடிந்த அன்றோடு, அவளை தாய் வீட்டுக்கு விரட்டி விட்டனர் அவள் புகுந்த வீட்டினர்.

ஸ்ரீதரும் அவர்களிடம் சண்டை போட்டு நியாயம் கேட்கவெல்லாம் விளையவில்லை. அவனை பொறுத்தவரை இப்போது தமக்கை தன்னுடன் இருப்பது தான் சிறந்தது என்றே எண்ணினான்.

காயத்ரியை சமாளிப்பது தான் பெரும் படாகி போனது. ஆனாலும் வீட்டின் ஆண் வாரிசாக குடும்பத் தலைவன் என்ற பதவியை தலையில் சுமந்து, அந்த 22 வயதிலேயே மூன்று பெண்களையும் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ளும் பக்குவத்தை பெற்றிருந்தான் ஸ்ரீதர்.

தந்தை செய்த விவசாயத்தையும், அதோடு தனது படிப்பையும் பார்த்துக் கொண்டு, வீட்டின் பொறுப்புக்களையும் சரிவர கொண்டு சென்றான்.

எல்லோரும் நடந்த இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தனர்.

அடுத்த வருஷமே தன் 14 வது வயதில் காயத்ரி பூப்படைந்தாள்.

தகப்பன் இல்லாத பிள்ளை என்ற ஒரு சொல் வரக்கூடாது என்பதற்காக, தாய் மாமன் ஸ்தானத்தையும் தாண்டி அக்கா மகளின் சங்கினை சிறப்பாக நடத்தி முடித்தான்.

பாவாடை தாவணியில், புது பொலிவுடன், தங்க பதுமையாக இருந்தவளை மனம் குளிர ஸ்ரீதர் பார்த்தான் என்றால்,

கவலையும் கலக்கமுமாக பத்மினி பார்த்தார்.

அக்காவின் முகமாற்றத்தை பார்த்த ஸ்ரீதர் “என்னக்கா சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல கவலையா இருக்க?…” என்று ஆதூரமாக தமக்கையின் தோளை அணைத்து கேட்க

“என்னனு சந்தோஷபட.. பொண்ணுங்க பாத்திருக்க வளந்திருவாங்க.. இதோ வயசுக்கு வந்துட்டா, இன்னொரு ஆறு ஏழு வருஷத்துல இவள கட்டிக் கொடுக்கணும்.. என்ன பண்ண போறேன்.. எனக்குன்னு போட்ட நகைய கூட என் புகுந்த வீட்டுல திருப்பி கொடுக்கல.. அவங்க கிட்ட போயிட்டு சண்ட போடவும் முடியாது.. இப்ப நம்ம குடும்பம் இருக்கிற நிலைக்கு எதிர்காலத்துல மாப்பிள வீட்டுல கேக்குற நகை போட்டு, சீரும் சிறப்புமா இவள கட்டி கொடுக்க முடியுமா.. இப்போ சடங்குக்கே உன் கையை மீறி தானே செஞ்சிருக்க…” என்று கவலைப்பட

“அக்கா எதுக்கு இத்தன யோசன.. அதுவும் நான் இருக்கும் போது.. இப்போ என்ன காயூ குட்டிக்கு நகை சேக்கணும்.. கல்யாணத்துக்கு காசு சேக்கணும் அவ்வளவுதானே.. இனிமே என் சம்பாத்தியம் மொத்தத்தையும் உன் கைக்கு கொண்டு வந்து தாரேன்.. எப்படி சேமிக்கணும், என்ன செய்யணும்னு நீயே பண்ணிக்கோ சரியா…” என்று விரிந்த புன்னகையுடன் தமக்கையின் தோளில் அழுத்தத்தை கொடுத்து ஸ்ரீதர் சொல்ல

பத்மினிக்கும் தம்பி இருக்க பயம் எதற்கு என்று தோன்ற புன்னகைத்தார்.

error: Alert: Content selection is disabled!!