உன்னில் என்னைத் தொலைத்தேனடி…! – நிதனிபிரபு
அத்தியாயம்1
“பாட்டி, நான் வீட்ட போகப்போறன். நீங்க கால ஆட்டுறேல்ல, சரியா? நாளைக்கு நான் வாறவரைக்கும் இப்பிடியே வச்சிருக்கோணும் என்ன!” என்று அவரின் பாதத்தை வருடிக்கொடுத்தாள் ஷர்மினி.
“நா.. ளைக்குத்தான் இனி வருவியா?” முகம் வாடக் கேட்டார் அவர். கிளிநொச்சி அரச வைத்தியசாலையில் அநாதரவான நிலையில் கிடக்கும் அவருக்கு இரண்டு நாட்களுக்குள் அவள் பேத்தியைப்போல் ஆகியிருந்தாள்.
வீதியில் நடந்துவந்தவரை மோட்டார் வண்டியில் வந்த யாரோ இடித்துவிட்டு ஓடிவிட்டார்களாம் என்று சேர்த்திருந்தார்கள். கால் முறிந்திருந்தது. சாத்திரசிகிச்சையை முடித்துக் கட்டுப் போட்டிருந்தார்கள். தாதியாகப் பணிபுரியும் ஷர்மினியின் கனிவும் பொறுப்பும் அவரை அப்படிக் கேட்க வைத்தது.
அவளுக்கு அன்னைதான் கண்முன்னால் வந்துபோனார். காலையில் வேலைக்கு அவள் புறப்படுகையில் அவர் முகம் எப்படி வாடுமோ அப்படித்தான் வேலை முடிந்து புறப்படுகையில் இங்கே இருப்பவர்கள் வாடுவார்கள். இரண்டு பொழுதுகளிலும் மனம் பாரமாகிவிடும்.
ஆனால், காலையில் வீட்டிலிருந்து வேலைக்குப் புறப்படுவதும் மாலையில் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு புறப்படுவதும் கட்டாயமான ஒன்றுதானே. அவளால் என்னதான் செய்யமுடியும்?
“அதென்ன நா.. ளைக்கு? இந்தா.. பக்கத்தில இருக்கிற ‘நாளைக்கு’ ஓடி வந்திடும். நீங்க மருந்தைப் போட்டுக்கொண்டு நித்திரை கொண்டு எழும்பேக்க நான் வந்திடுவன். இல்லாட்டியும் தமாக்கா இருக்கிறா. என்ன வேணும் எண்டாலும் கேளுங்கோ செய்வா.” என்று கனிவுடனேயே விடைபெற்று வந்து, அங்கே அவர்களுக்கு என்று ஒதுக்கிய அறையிலேயே தன் வெள்ளை உடையை மாற்றிக்கொண்டு புறப்பட்டாள்.
வெளியே வந்து உதயனைத் தேடி விழிகளைச் சுழற்றினாள். காணவில்லை என்றதும், “எங்கடா நிக்கிறாய்?” என்று ஒரு மெசேஜை தட்டிமுடிக்க முதலே, “இங்க நிக்கிறன்.” என்று வாயால் சொல்லிக்கொண்டு அவளின் சைக்கிள் அருகே தன்னுடையதைக் கொண்டுவந்து நிறுத்தினான் அவன்.
“நான் மெஜேஸ்ல கேட்டது உனக்கு எப்பிடித் தெரியும்?”
“ம்… சிஐடி வச்சுக் கண்டுபிடிச்சனான்!” என்றான் நக்கலாக. “ஒவ்வொரு நாளும் இதேநேரம் நீ அனுப்புற மெசேஜ எடுத்துப்பார். ஒரு எழுத்து மாறாது. அதே ‘எங்கடா நிக்கிறாய்?’ தான். வயசுல மூத்தவனாச்சே எண்டு கொஞ்சமாவது மரியாதை தாறியா?” என்று முறைத்தான் அவன்.
“உனக்கு..! மரியாதை..! தந்திட்டாலும்! பேசாம வா!” என்றபடி அவள் சைக்கிளில் ஏறி மிதிக்க ஆரம்பித்தாள்.
ஷர்மினியின் தமையன் சயந்தனோடு கூடப்படித்தவன்தான் உதயன். சின்ன வயதில் இவள் அளவே அவனது உயரமும் இருந்ததில் அப்போதிருந்தே அவன் இவளுக்கு, ‘உதயன்’ தான்.
“அவனும் உனக்கு அண்ணாம்மா” என்று தாய் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. நம்மை விட உயரமாக இருப்பவர்களைத்தான் அண்ணா என்று சொல்வதாய் எண்ணி இருந்தவளுக்குத் தன் உயரத்திலேயே இருந்தவனை அண்ணா என்று சொல்லவே முடியவில்லை. இப்போது, அவளை விடவும் அவன் உயரம்தான். என்றாலும் இன்றுவரை உதயனாகவே இருக்கிறான்.
சயந்தனின் நண்பன் என்றாலும் ஒற்றைப்பிள்ளையாய் பிறந்தவனுக்குக் கூடப்பிறக்காதவள், உயிர்த்தோழி, எதிரி எல்லாமே அவள்தான்.
இருவரும் சைக்கிளில் வந்துகொண்டிருக்க ஃபோன் வந்தது.
அவள் ஓடிக்கொண்டே எடுக்க, “உனக்கு எத்தின தரம் சொல்லுறது நிண்டு கதை, இல்ல ஃபோனை எடுக்காத எண்டு?” என்று அதட்டினான் உதயன்.
அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை அவள். “ஒரு கைல சைக்கிள், இன்னொரு கைல ஃபோன். அதெல்லாம் நாங்க சமாளிப்பம். நீ வா!” என்றபடி ஃபோனை காதுக்குக் கொடுத்தாள்.
“வீட்ட வாறியாடி?” பள்ளித்தோழி அபிராமி அந்தப்பக்கமிருந்து ஆவலாகக் கேட்டாள்.
“ஏன்? உன்ர அண்ணா சேர் இண்டைக்கும் வரேல்லப் போல. அதால பொழுது போக்குக்கு என்னைக் கூப்பிடுறியா?”
“ஓ! அப்ப அவன் வந்தாத்தான் வருவியா நீ?” நக்கல் குரலில் சீண்டினாள் அபிராமி.
“அய்யய்யோ ஆளவிடு! அவர் வந்தா நீ என்னைக் கவனிப்பியா?அந்தாள் நிக்கிற வரைக்கும் வரவே மாட்டன்.” என்று அவள் சொல்லிமுடிக்க முதலே,
“அண்ணாவை மரியாதை இல்லாமக் கதைக்காதடி!” என்று சீறினாள் அபிராமி.
“பார்றா! அண்ணனுக்கோர் கீதத்தை! இவ்வளவு ரோசம் இருக்கிறவள் அவரையே கூப்பிடு! என்னைவிடு!” என்றாள் ரோசத்தோடு.
இன்னும் சீண்டினால் வரமாட்டாள் என்று விளங்கிவிட, “ஆகத்தான் சீன் போடாம வாடி! என்ர செல்லம் எல்லா. என்ர குஞ்சு எல்லா. என்ர ஜிங்கிலி எல்லா.” என்று கெஞ்சினாள் தோழி.
கிழுக்கிச் சிரித்தபடி, “அந்தப் பயமும் பணிவும் எப்பவும் இருக்கட்டும்!” என்று, அப்போதும் மிதப்பாகச் சொல்லிவிட்டு வைத்தவளிடம், “என்ன? வெளிநாட்டு மாப்பிள்ளை இன்னும் வரேல்லையாமோ?” என்று சிரிப்போடு கேட்டான் உதயன்.
“ஹாஹா! ஓம் போல. அதுதான் என்னைக் கூப்பிடுறாள். நீ அம்மாவை ஒருக்காப் பாக்கிறியா. நான் போயிட்டு ஓடிவாறன்!”
அப்படிக் கேட்டவளைப் பொய்யாக முறைத்தான் அவன். “உனக்கு மாமியப் பாக்கக் கள்ளம். அதுதான் அவள் கூப்பிட்டதும் ஓடுறாய். போ போ மாமிட்ட போட்டுக் குடுக்கிறன்.” என்றுவிட்டு வீடு நோக்கி அவன் சைக்கிளை விட, “போடா டேய்!” என்றபடி இவள் அபிராமி வீட்டுக்குச் சைக்கிளைத் திருப்பினாள்.
உதயன் குடும்பமும் ஷர்மினியின் குடும்பமும் அயல் வீட்டினர். உறவில்லை. ஆனால், உறவாகத்தான் வாழ்ந்தனர். அதுவும், ஷர்மினியின் சின்ன வயதிலேயே அவளின் அப்பா இறந்துவிட அவர்களுக்குள் இருந்த பிணைப்பு இன்னுமே நெருக்கமாயிற்று.
அதன்பிறகு எல்லாமே அம்மா தயாபரிதான். உதயனின் குடும்பத்தின் துணையோடு கார்மெண்ட்ஸ் வேலைக்குச் சென்று பிள்ளைகளை வளர்த்தார். பள்ளி முடிந்து வரும் பிள்ளைகள் இருவரும் படிப்பது முதற்கொண்டு உண்பது வரை உதயன் வீட்டில்தான். சிலநேரங்களில் உறங்குவதும் அங்கேதான். நட்பையும் சகோதர பாசத்தையும் இணைத்த உறவு அவர்களது.
ஒருகட்டத்தில் தயாபரியை முடக்குவாதம் தாக்கியது. அதைக்கண்டும் சோரவில்லை அவர். சோதனைக்குமேல் சோதனை என்பதுபோல அவரின் வாழ்க்கை பலமுறை தள்ளாடிய போதிலும் தன்னம்பிக்கையை மட்டுமே பலமாய்க் கொண்டு பிள்ளைகளைப் படிக்கவைத்தார். ஒருவழியாகச் சயந்தன் ஆசிரியர் தொழிலைப் பெற்றதும் அதற்காகவே காத்திருந்தது போன்று முடக்கு வாதத்தால் முற்றிலுமாக முடங்கிப்போனார்.
ஆரம்பத்திலேயே கவனித்திருக்க இவ்வளவு தூரம் பாதித்து இருக்காது என்று சொன்னபோது, பிள்ளைகளுக்குப் பெரும் கவலையாய்ப் போயிற்று. ஆனால், நடந்து முடிந்ததை எண்ணி என்ன செய்வது? தமிழ் வைத்தியம், ஆங்கில வைத்தியம் என்று எல்லாமே முடிந்தவரை பார்த்தும் ஓரளவுக்கு வலியைக் குறைக்க முடிந்ததே தவிர, எழுந்து நடக்கவே முடியாத அளவில் படுத்த படுக்கையானார் தயாபரி. சில நாட்கள் பரவாயில்லாமல் இருக்கிறது என்று மெல்ல மெல்ல அசைவார். அதற்கும் சேர்த்துவைத்து அடுத்தடுத்த நாட்கள் அவரைப் போட்டு வாட்டிவிடும்.
வேலைக்குப்போய்க் களைத்து வரும் பிள்ளைகளுக்கு ஒருவாய்ச் சோற்றினைச் சமைத்துக்கொடுக்க முடியாமல் இருக்கிறோமே என்று வருந்துவார்.
“நாங்க என்ன இன்னும் குழந்தைகளா அம்மா? நீங்க சமைச்சுத்தந்து சாப்பிட?” என்று கேட்டு, வெகு ருசியாகச் சமைத்து அவருக்கும் ஊட்டிவிடுவாள் ஷர்மினி.
தமையனின் சம்பாத்தியத்தில் படித்து ஷர்மினியும் தாதியானாள். தாயின் வைத்தியச் செலவுகளால் ஏழ்மைதான். ஆனால், அழகான ஏழ்மை. போதும் என்கிற மனதோடு, வருமானத்துக்கு ஏற்ற செலவோடு சந்தோசமாகவே கழிந்துகொண்டிருக்கிறது அவர்களின் நாட்கள்.
சயந்தன், வீட்டிலேயே நிற்கமாட்டான். காலையில் பள்ளிக்கூடம் என்றால் மாலையில் டியூஷன் சென்றுவிடுவான். இரவில் கூட வசதியானவர்கள் பிள்ளைகளுக்கு வீட்டுக்கே சென்று பிரைவேட்டாகச் சொல்லிக்கொடுத்தான். கணித ஆசிரியர் என்பதால் வருமானமும் நன்றாகவே வந்துகொண்டிருந்தது. என்ன அத்தனையும் முடக்குவாதத்தால் பரிதவிக்கும் தாய்க்குச் செய்வதிலேயே கரைந்துகொண்டிருந்தது. இருவருமே பொறுப்பான பிள்ளைகள். வீட்டுக் கஷ்டத்தை உணர்ந்தவர்கள். தாயைக் குணப்படுத்த முடியாவிட்டாலும் அவரின் வலியையாவது குறைப்போம் என்று காசைத் தண்ணீராகச் செலவு செய்துகொண்டிருந்தார்கள்.
ஷர்மினியின் தோழி அபிராமி. ஆரம்பக் காலங்களிலேயே வசதியான குடும்பம்தான். தமையன் சுவிஸில் வசிப்பதால் இன்னுமே வசதி. பெற்றவர்கள் வேலைக்கு விடாததால் போவதில்லை. அவளுக்கும் காலையில் எழுந்து ஓடி, மாலையில் களைத்துப்போய் வரும் அந்த வாழ்க்கையில் நாட்டமில்லை. எனவே, வீட்டில் இருந்துகொண்டாள். அதனால், அடிக்கடி இப்படி ஷர்மினியைக் கூப்பிட்டு வைத்து அரட்டை அடிப்பாள். அல்லது, அவள் இவள் வீட்டுக்கு வருவாள். ஷர்மினிக்கு அங்கே போவது என்றால் மிகவுமே பிடிக்கும்.
வாழை மரங்கள், தென்னை மரங்கள், மாமரம், முருங்கை மரம் என்று சுற்றிவரப் புடை சூழ்ந்திருக்கும் மரங்களுக்கு நடுவே இரண்டு மாடியில் அமைந்த பெரிய வீடு அவர்களது. பெரிய முற்றம். அதனைச் சுற்றி அழகழகான குரோட்டன்ஸ். விதம் விதமான பூக்கள், மல்லிகைப் பந்தல் என்று பார்க்க பார்க்க அழகு.
இது எல்லாவற்றையும் விட முற்றத்தில் இருக்கும் ஊஞ்சல் அவளுக்கு மிகவுமே பிரியமானது. உயர்ந்த கொப்பு ஒன்றில் கட்டப்பட்டிருந்ததால் நன்றாக உந்தி ஆடினால் அந்த வீட்டு மாடியின் பால்கனியைக்கூடப் பாத்துவிட்டு வரலாம். இப்படி, எல்லாமே அவளுக்குப் பிடித்தமாதிரித்தான்.
அந்த வீட்டுக்குள் நடமாடுகையில், தோழியோடு சோபாவில் சோம்பலாய் அமர்ந்திருந்து ஏதாவது படம் பார்க்கையில், ஊஞ்சலாடுகையில் என்று அந்தப் பொழுதுகளை மிகவுமே விரும்புவாள். எனவே, ஆர்வத்தோடு சென்றாள்.
இவளைக் கண்டதும், “வாடி! வாவாவா!” என்று, ஓடிவந்தாள் அபி.
சைக்கிளை எப்போதும்போல நிழலுக்குள் நிறுத்திவிட்டு, “என்ன மேடம், அண்ணா சேர் வரேல்ல எண்டதும் போரடிக்குதோ?” என்று கேட்டாள் ஷர்மினி.
அதைக் கேட்டுக்கொண்டு வந்த அபியின் அம்மா தேவகி, “தம்பி வ..” என்று ஆரம்பிக்க, “அம்மா! அவள் வேலை முடிஞ்சு களைச்சுப்போய் அப்பிடியே இங்க வந்திருக்கிறாள். குடிக்க ஏதாவது கொண்டுவாங்கோ.” என்றாள் அபி.
அப்படி, அன்னையிடம் வேலை ஏவியவளை முறைத்தாள் ஷர்மி. “நீ போய் எடுத்துக்கொண்டு வாறத விட்டுட்டு ஆண்ட்டியை ஏவுறாய்!” என்று அவளைக் கடிந்துவிட்டு, “ஆண்ட்டி, விடுங்கோ. நானே வந்து எடுக்கிறன்.” என்று அவருக்குச் சத்தமாகக் குரல் கொடுத்தபடி அவளுக்கு மிகவுமே பிடித்த ஊஞ்சலில் ஓடிப்போய் ஏறினாள்.
அங்கே, மேல்மாடியில் அப்போதுதான் குளித்துமுடித்துக் குளியலறையில் இருந்து இடுப்பில் டவலோடு வந்த சீராளனின் காதில் அந்தக்குரல் வந்து மோதியது.
‘யாரிது? புதுக் குரலா இருக்கே?’ இன்னோர் டவலால் தலையைத் துவட்டியபடி பால்கனிக்கு வந்து எட்டிப்பார்த்தான்.
அவன் அபியின் அண்ணா. ஷர்மினியின் பாஷையில் சொல்லப்போனால் ‘அண்ணா சேர்’.

