11
சித்திரை மாத ஆரம்பம்!
இளவேனில் காலத்தொடக்கம் தனது அதீத முயற்சியால், எதிரியான பனிக்குளிரிலிருந்து இயற்கையை மெல்ல மெல்ல மீட்டுத் தன் வசப்படுத்திக் கொண்டிருந்தது.
இதன் ஆரம்பமாய், இலைகளற்று மொட்டையாகக் காட்சியளித்த மரங்களில் மெல்ல மெல்ல செந்தளிர்கள் எட்டிப் பார்த்தன.
எங்கும் மொட்டுக்கள் விட்டு, விதம் விதமான வண்ண மலர்கள் வருகை தரத்தொடங்கின.
பறவைகளின் இனப்பெருக்கக்காலம் நெருங்குவதன் அறிகுறியாய் அவற்றின் இன்னிசைக் கொண்டாட்டமும் ஆரம்பித்திருந்தது.
இதற்கெல்லாம் உச்சமாக, உலகிலேயே ‘டியூலிப்’ மலர்களிற்குப் பெயர் போன இந்நாட்டில் அம்மலர்ப்படுக்கைகள் மலர்ந்து, வண்ணக் கம்பளங்கள் விரித்தது போல் பரந்து, ‘எம் அழகைப் பார்த்து இரசியுங்கள்!’ எனப் பெருமனதாக அனுமதி அளித்ததோடு, தம் அழகால் சுற்றுப்புறத்தையே வசியம் செய்து கொண்டிருந்தன.
இங்கு வாழும் மக்களுமே, கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் மனங்களிலும் குளிர்க்காலச் சோம்பலை விரட்டி. உற்சாகத் தளிர்களை நிரம்பிக் கொண்டிருந்தனர்.
எப்போதுமே இங்கு வாழும் மக்கள் சூரிய ஒளியையும் கோடையையும், சிறிதும் அசட்டையோடு எதிர்கொள்ள மாட்டார்கள். ஏதாவது ஒரு வழியில் முழுமையாக இரசிக்கவும் அதன் பயனை அடையவுமே முனைவார்கள். அக்காலப்பகுதியைத் தம் மகிழ்ச்சிக்காகவே ஒதுக்கிக் கொள்வர்.
ஆனால், இங்கு வாழும் நம்மவர்களில் பெரும்பாலானோருக்கு எல்லாக் காலமும் ஒன்று தான். வேலை வேலை; ஓட்டம் ஓட்டம் தான் என்றாலும் அவர்கள் உள்ளங்களுமே கோடையின் வருகையை மிக ஆவலாக எதிர்பார்த்திருக்கும் .
கல்லூரி முடிய சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் நிதி. வீட்டில் தலைக்கு மேலே வேலை இருந்தது. எதையெதை எப்பெப்போ செய்வதென மனதில் கணக்கிட்டபடி, தோழி சனா சொல்லும் கதைகளுக்கும்(பேச்சுக்களிற்கும்) பதிலழித்தவாறே வந்து கொண்டிருந்தாள் அவள்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன் வசி வீட்டிற்குச் சென்று திரும்பிய பின், ஒவ்வொருவரின் நாட்களும் வழமை போல கழிந்தாலும், வசியும் நிதியும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.
இதுவரை, நெருங்கிய நட்பென்று சொல்லச் சனாவைத் தவிர யாருமே இருக்கவில்லை இவளுக்கு. சனாவுடனும் ஒரு அளவுக்கு மேல் மனதில் உள்ளதைப் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. அந்தக்குறை சனாவுக்குமே இருந்தாலும், அவர்கள் வழமைப்படி ‘‘உனக்கு விருப்பம் இல்லாததைச் சொல்லாதே; விரும்பினால் சொல்லு!’’ என்று, சென்று விடுவாள்.
ஆனால், வசியுடன் நன்றாகக் கதைத்துப் பழகத் தொடங்கியதில் இருந்து அவன் இவளுக்கு மிகவும் இன்றியமையாதவனாகிப் போனான். எந்த விடயமென்றாலும் அவனிடம் சொல்வதும், அவன் ஆலோசனைகளைப் பெறுவதும் அவளின் வழமையாகி விட்டது.
அதுமட்டுமின்றி, இப்போதெல்லாம் புவனியின் ஏச்சுப் பேச்சுக்களை எல்லாம் சிரித்துக்கொண்டே கேட்கப் பழகிவிட்டாள்.
தன் மனப்பாரத்தை இறக்கி வைக்க ஒரு ஜீவன் காத்திருக்கிறான் என்பதே அவளுக்கு யானைப் பலத்தைக் கொடுத்தது.
வசியின் கடும் போராட்டத்தின் பின் இந்திரனின் அனுமதியுடன் ட்ரைவிங் கோச்சிங் கிளாசிலும் சேர்ந்தவள், ஒவ்வொரு சனியும் அதற்கான வகுப்புக்கும் செல்லத் தொடங்கியுள்ளாள்.
எல்லாமே வழமை போலப் போய்க் கொண்டிருந்தாலும், எதிலுமே பெரியதாக மாற்றமில்லை என்றாலும், இந்நாட்களில், நிதியின் மனதில் மிகவும் சந்தோசம் நிரம்பி வழிகின்றது என்பதே உண்மை . அதற்கு முழுக்காரணமும் அவள் அன்பு நண்பன் வசியே!
ஆமாம், தன்மனமே தன் வசமற்று அவன் புறம் சாயும் போதெல்லாம், ‘‘இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வருமா?’’ என்று, தன்னைத் தானே கேட்டு அடக்கிக் கொள்பவள், ‘‘அவர், என்ர மிக நல்ல நண்பன்.’’ தன்னுள்ளே உருப்போட்டுக் கொள்வாள்.
இருநாட்கள் கழித்து இளவேனில் கால விடுமுறை ஆரம்பிக்கின்றது. அதோடு, வரும் சனிக்கிழமை ரதீஷின் பதினெட்டாவது பிறந்தநாள். அதற்கு, அவன் நண்பர்களையும், வசி, நிர்மலா வீட்டையும் சேர்த்து, சிறு விருந்துக்கு வீட்டிலேயே ஒழுங்கு செய்துள்ளார்கள். அதற்கான ஆயத்தங்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் இவள்தான் செய்து கொண்டிருகிறாள். இன்று அவளுக்கு வீட்டில் வேலை இருப்பதற்குக் காரணமும் இதுதான்.
வீட்டை வந்தடைந்தவள், சனாவிற்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு வீட்டினுள் சென்று குளித்து உடை மாற்றிவிட்டு வந்து, தனக்கெனத் தேநீர் தயாரித்துக் கொண்டிருக்கும் போது, தொலைபேசியில் கதைத்துக்கொண்டே வந்த புவனி, தொலைபேசியை அதன் இடத்தில் வைத்து விட்டு, ‘‘என்ன நிதி…இப்பவே ரோல்ஸ் சுத்தத் தொடங்கப் போறியா?’’ என்று வினவினார்.
‘‘ஓம் மாமி…இப்பவே தொடங்கினால் தான் சரியாக இருக்கும்.‘’ என்றவள், தேநீரை ஒருகையில் பிடித்து அருந்திக்கொண்டே, சமையலறை மேடையில் புவனி செய்து வைத்திருந்த ரோல்ஸுக்கான கறியைத் திறந்து பார்த்தவள், டி-பிரிட்ஜில் இருந்து ரோல்ஸ் பேப்பரையும் வெளியில் எடுத்து வைத்திருப்பதைப் பார்த்து விட்டு ‘‘நான் ரோல்ஸ் சுத்திட்டு…இரவைக்கு இடியப்பம் அவிக்கிறன் மாமி.’’ என்றுவிட்டு, விரைந்து தேநீரை அருந்திவிட்டு வேலையைத் தொடங்கினாள்.
இப்படியான வேலைகளில் உதவி செய்து கொடுத்தாலும், இந்தப் பலகாரம், சிற்றுண்டி செய்வதில் கொஞ்சமும் பொறுமை கிடையாது புவனிக்கு.
நிதியோ, சிறுவயதில் இருந்தே இப்படியான வேலைகளை ஆசையாகச் செய்வாள். புவனியும் அதற்கு ஒரு போதும் தடை சொல்வதில்லை. தன்னால் முடிந்ததைச் செய்து கொடுத்து விட்டு ஒதுங்கி விடுவார்.
என்னதான் வெளியில் நிதியைத் திட்டினாலும், மனதினுள் அவளிலும் அவளின் திறமையிலும் மிகுந்த நம்பிக்கை உண்டு புவனிக்கு.
‘‘விருந்துச் சாப்பாட்டை வெளியில் வாங்குவம்.’’ என்று அவர் சொல்ல, அதை மறுத்த நிதி, ‘‘எனக்கு வெள்ளியோட கல்லூரிக்கும் விடுமுறை தானே? நானே சமைக்கிறன். மக்கிற்கும் லீவு எடுத்திருக்கிறன்.’’ என்று சொல்லி விட்டாள்.
அவளுமே சமையலில் ஆர்வமிக்கவள் என்பதாலும், மிகவும் ருசியாகச் சமைப்பாள் என்பதாலும், தானும் உதவிகள் செய்து கொடுத்தால் சமாளிக்கலாம் என்று அவரும் பேசாமல் விட்டு விட்டார்.
*****
கனடாவிலிருந்து மகள்களைப் பார்த்துவிட்டு அவர்களுடன் சில காலம் தங்கிச் செல்லும் எண்ணத்துடன் வந்திருந்தார், சுமி புவனியின் தாயார் கனகாம்பிகை.
இவரின் கணவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனடி சேர்ந்து விட்டார். ஒரே மகனுடன் கனடாவில் வசித்து வருபவர், இப்படி இடைக்கிடை தம் மகள்களிடம் வந்து தங்கிச் செல்வது வழக்கம்.
வேலையிலிருந்து வந்த கணவருக்கும் மகனுக்கும் தாயாருக்குமாக இரவுச் சாப்பாட்டைப் பரிமாறிக்கொண்டே, ‘‘நாளைக்கு ஒரு நாலு மணி போல புவனி வீட்டுக்குப் போவமா? கொஞ்சம் முதல் போனால் நிதிக்கு உதவியாக இருக்குமென்று நினைச்சன்.’’ என்றார் சுமி.
‘‘இல்ல சுமி, எனக்கு ஐஞ்சு மணிவரை வகுப்பிருக்கு; உங்களுக்கு எப்பிடி வசி?’’ மகனிடம் வினவினார் ஜீவானந்தம்.
‘‘எனக்கும் ஐஞ்சுக்குத் தான் முடியும்மா; நீங்களும் அம்மம்மாவும் மூன்று மணிக்கு வெளிக்கிட்டால், கூட்டிக்கொண்டு போய் விடுவன்; பிறகு, நானும் அப்பாவும் வாறம்.’’ என்ற வசி, ‘‘நிர்மி எப்ப வருவாள் என்று கேட்டிங்களா?’’ தங்கை பற்றி வினவினான்.
‘‘ம்ம்…அவள் ஆறுமணிவாக்கில் தான் வருவாளாம். அங்கயும் நேரத்துக்குப் போய்த் தான் என்னத்துக்கு? நிதி எதையும் செய்யவா விடப் போறாள்? என்றாலும் ஒரு கையுதவிக்குத் தானே.’’ என்றவர்,
‘‘நான் ஆட்டிறைச்சி சமைச்சுக் கொண்டு போறன்; மிச்சம் எல்லாம் அவள் தான் செய்யப் போறாள்.’’ என்றதும், இவர்களின் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த அவரின் தாயாரோ, ‘‘அவள்… பிள்ளை நல்ல கெட்டிக்காரி; கடகடவென்று செய்திருவாள்.’’ தானும் உரையாடலில் கலந்து கொண்டார்.
இப்படி, தொடர்ந்து கலகலப்பாகக் கதைத்தபடி உணவுண்டாலும், சுமியின் குரலே சுரத்தில்லாமல் இருந்தது.
இப்போதெல்லாம் அவர் இப்படித் தான் இருக்கிறார். தாயின் வருகை கொஞ்சமே கொஞ்சமாய் ஆறுதலாக இருந்தாலும், முன்னரைப் போல் சந்தோசமாகப் பொழுதைக் கழிக்க முடியவில்லை.
அதன் காரணம் நன்றாகத் தெரிந்தும் ஜீவானந்தத்தால் அதை நிவர்த்தி செய்யும் வகையில் எதுவும் செய்ய முடியவில்லை.
வளர்ந்த பிள்ளைகளாச்சே! சிறுவயதிலிருந்து அவர்கள் விருப்புக்கு மதிப்பளித்து வளர்த்துவிட்டு, இப்போ. வாழ்க்கை பற்றிய முக்கியமான முடிவில் மகனை வற்புறுத்த முடியவில்லை.
‘சரி, என்னதான் செய்றான் என்று கொஞ்சநாள் பொறுத்துப் பார்ப்பம்!’ என நினைத்துப் பொறுத்துக் கொண்டிருந்தாலும், அன்பு மனையாளின் கலக்கத்தைப் பார்க்கும் போது மகன் மீது மனவருத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் இருக்கின்றது அவருக்கு!
மூன்று மாதங்களுக்கு முன், நிதி தனக்கானவள் என்று எப்போது ஐயமற உணர்ந்து கொண்டானோ, அடுத்தநாளே, ‘‘அம்மா…நான்…இந்தக் கலியாணம் சரியாய் வருமென்று நினைக்கேல்ல; நிஷாவை என்னால கலியாணம் செய்ய முடியாதம்மா.’’ உறுதியாகச் சொல்லிவிட்டான் வசி.
இதனைக் கேட்ட சுமியோ அதிர்ந்து போய் விட்டார்.

