என்றும் உன் நிழலாக 12 – 1

12

சனிக்கிழமை மாலை, ரதீஷின் பிறந்ததினத்தில் கலந்து கொள்வதற்காய் புறப்பட்டாள் காயா. தான் செய்த அழகிய பிறந்தநாள் கேக்கைக் கொண்டு செல்வதற்குத் தயாராக எடுத்து வைத்தவள், ‘‘இன்னும் நேரமிருக்கு; ஐஞ்சுக்குத் தானே கார் அனுப்பிறதா நிதி சொன்னவா, கொஞ்ச நேரம் டிவி பார்ப்பம்.’’ தனக்குத்தானே சொன்னபடி தொலைக்காட்சியின் முன்னால் சென்றமர்ந்தாள்.

காயா, வீட்டுக்கு ஒரே செல்லப்பிள்ளை. திருமணம் முடித்து ஐந்து வருடங்களாகியும் இன்னமும் குழந்தை இல்லையே என்று ஏங்கி, பல தெய்வங்களை வேண்டி, வரமாகப் பெற்ற செல்லக் குழந்தை. அப்படியிருந்தும், அவள் சிறுவயது முதல் அனுபவித்ததென்னவோ, தனிமை தனிமை தனிமையே !

எந்நேரமும் வேலை வேலை என்று ஓடும் பெற்றவர்கள். மகளின் தனிமை உணர்ந்தும், தெரிந்தும் அதைப் போக்க முயலவில்லை.

‘‘இதெல்லாம் இங்கு சகஜம்…காசு இருந்தால் தானே எதுவும் செய்யலாம்; எல்லாமே அவளட எதிர்காலத்துக்குத் தானே!’’ என, தம்மைத் தாமே சமாதானம் செய்தபடி இருந்துவிட்டார்கள், அவள் பெற்றவர்கள். அவளோ அவளுக்குள் முடங்கிவிட்டாள்.

அவளுக்கு எல்லாம் இருந்தும் எதிலும் பற்றில்லாமல் போய்விட்டது, ஒன்றே ஒன்றைத் தவிர !

இவள் ரதீஷின் சிறுவயதுத் தோழி! இங்கு நான்காவது பிறந்த தினத்தின் அடுத்தநாளில் இருந்து முழுநேரமாகப் பாடசாலைக்குச் செல்வார்கள். அப்போதிருந்தே காயாவும் ரதீஷும் ஒன்றாகப் படிக்கிறார்கள்.

அப்போதெல்லாம் சில சமயங்களில், ரதீஷுடன் அவன் வீட்டிற்குச் சென்று விளையாடிவிட்டு, வேலை முடிந்து தாய் வரும் வரை அவர்கள் வீட்டில் நின்றுவிட்டு வந்திருக்கிறாள்.

அவளுக்கு அங்கே எல்லோரையும் மிகவும் பிடிக்கும். அதுவும் தன் பெற்றவர்கள் தன்னுடன் நேரத்தைச் செலவழிக்காமல் வேலை வேலை என்று அலைய, ரதீஷ் வீட்டிலுமே இருவரும் வேலைக்குச் சென்றாலும், புவனி, பிள்ளைகளின் தேவைகளைக் கவனித்த பின்னரே, அதுவும் பிள்ளைகள் பாடசாலையில் இருக்கும் நேரத்தில் மட்டும் பகுதி நேரமாக வேலை செய்வதால், அவரின் அக்கறையையும் கவனிப்பையும் பார்த்து அவரில் இவளுக்குத் தனிப்பட்ட பிரியமுண்டு.

புவனிக்கும் காயாவை மிகவும் பிடிக்கும் என்றாலும், அவள் பெற்றவர்களில் பெரிதாக நல்லபிப்பிராயம் இல்லை. அவர் பார்வையில், காசு ஆசையில் அதனைத் துரத்திக்கொண்டு, அங்கே இங்கே என்ன நடக்கின்றது என்று பாராமல் தலைதெறிக்க ஓடுபவர்களாகவே தோன்றும்.

அவர்களின் செய்கைகள் பார்ப்போரை அப்படியே எண்ண வைக்கும். அதனால், என்னதான் காயா போக வர என இருந்தாலும், இரு குடும்பங்களுமாகப் பெரிதாகப் போக்குவரத்து வைத்துக் கொள்வதில்லை. அதுவும் காயாவின் பெற்றோர்களான செல்விக்கும் ராஜனுக்கும் இப்படி ஆட்களை வீட்டுக்கு அழைத்து வந்து பழகுவதில் பெரிதாக விருப்பம் இல்லை. அதற்கு முதல், நேர காலம் வேண்டாமா?!

காயாவுக்கோ, ரதீஷ் வீட்டில் எல்லோரையும் பிடித்தாலும், நிதியை அவ்வளவாகப் பிடிக்காது. அதற்குக் காரணம் ரதீஷும் ரஞ்சனும் மாறி மாறி நிதியில் காட்டும் அக்கறையும் பாசமுமே!

‘அம்மா அப்பாவை விட்டுட்டு இவையளிட ஆதரவில வந்திருக்கிற நிதியை, இவையள் எவ்வளவு பாசமாப் பார்த்துக் கொள்ளீனம்! எனக்கு எல்லாம் இருந்தும் இப்படிக் கவனிக்க ஒருவரும் இல்லையே!’ என்ற ஏக்கத்தில், நிதியை எப்போதும் தவிர்த்து விடுவாள். இதைப் போகப் போக உணர்ந்து கொண்ட நிதியும் இவளை விட்டு ஒதுங்கியே இருப்பாள்.

வழமையாக, தங்கள் வீட்டில் வரும் பிறந்தநாட்களிற்கு தானேதான் கேக்கைத் தாயாரிப்பாள் நிதி. இம்முறை, தான் கேக் செய்முறை வகுப்புக்குப் போய்ப் பழகியதாகச் சொன்ன காயா, தானே நண்பனுக்காய் கேக் செய்கிறேன் என்றதும், நிதியும் பேசாமல் தலையாட்டி விலகிக் கொண்டாள்.

தனது பெற்றவர்கள் இருவரும் வேலைக்குச் சென்று விடவே, அருகில் என்றாலும் கேக்கையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால், நிதி கார் அனுப்புறேன் என்றதும் தலையாட்டியவளுக்கு, ‘நிதி என்ன அந்த வீட்டுக்கு எஜமானியா? நான் ரதீஷைக் கேட்டிருந்தால் அவனே வந்து கூட்டிக்கொண்டு போயிருப்பான். அதுக்குள்ள நிதி முந்திட்டா.’ என, நிதிக்கு மனதில் திட்டிய காயா, ரதீஷ் வீட்டுக்குப் போகக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தவறாமல் செல்வதற்கு இன்னுமொரு முக்கிய காரணம் உண்டு.

அதை இப்போது அவளால் வெளியில் சொல்ல முடியாது. அந்த விடயம் பற்றிக் கதைப்பதற்குச் சமயம் பார்த்துக் காத்திருக்கிறாள். ஆனால், அந்த சமயம் தான் இலேசில் அமைவதாய் இல்லை. அங்கேயும் நிதியின் தலையீடு வருமோ என்ற சந்தேகம் வேறு இப்போ இவளைப் போட்டு ஆட்டிப் படைக்கின்றது.

*****

சமையல் வேலைகளை முடித்து சமையலறையைச் சுத்தம் செய்த நிதி, தானும் சென்று தலைக்குக் குளித்துத் தயாராகி வந்தாள்.

அப்போது தான் உள்ளே வந்தனர் சரளாவும் அவர் மகள் லக்ஷியும். இவள் புன்முறுவலுடன் வரவேற்க, உள்ளிருந்து வந்த புவனி, தோழியையும் வருங்கால மூத்த மருமகளாகத் தான் மனதில் நினைத்துள்ள லக்ஷியையும் அழைத்துக் கொண்டு வரவேற்பறைக்குள் சென்றார்.

‘இவையளும் வரப் போறதா மாமி சொல்லவேயில்லையே! சரி பிரச்சினையில்லை, எல்லாம் நிறையவே செய்திருக்கிறன் தானே.’ என நினைத்துக்கொண்டே, தேநீர் தயாரிக்கவென நகர்ந்தவளை நிறுத்தியது சுமியின் குரல்.

‘‘நிதி…நீ நில்லடா… நான் போடுறன்.’’ அவளை முந்திச் செல்ல முயன்றார்.

‘‘அய்யோ சுமி மாமி! எத்தனைதரம் சொல்லீட்டன்? இது ஒரு சின்ன வேலை, இதை நான் செய்ய மாட்டனா? இப்ப எனக்கு வேற ஒரு வேலையும் இல்லை.’’ மாடிப்படியால் நகரவிடாது குறுக்கே நின்றபடி சொன்னவளை, பாசத்துடன் வருடின சுமியின் விழிகள்.

அவர் மூன்றுமணிக்கு வரும்போதே அனேக வேலைகளை முடித்திருந்தாள். புவனியும் உதவிகள் செய்து கொடுத்திருந்தார், அதனால் இவருக்குப் பெரிதாகச் செய்வதற்கு ஒன்றுமிருக்கவில்லை.

அதேநேரம் இருந்த ஒன்று இரண்டையும் செய்ய அவளுடன் மல்லுக்கு நிற்க வேண்டியிருந்தது.

அதட்டி உருட்டி அவள் செய்து வைத்திருந்த கட்லட்டுக்களையும் ரோல்சையும் பொரித்தெடுத்தார்; அவ்வளவே!

‘தலைக்கு முழுகி வந்திருக்கிறாள். இனிச்சரி கொஞ்சம் ஓய்வாய் இருக்கட்டும் என்று நினைச்சா, அதை இந்தப்பிள்ளை காதில வேண்டுகிறாளில்லையே! என்ன பிள்ளை இவள்!’ என, பாசமாக மனதில் கடிந்து கொண்டவர், ‘‘குஞ்சு…நான் இந்த வேலையைப் பார்க்கிறன்; நீ ஏதாவது சாப்பிடு; மத்தியானமும் சாப்பிடாமல் நிற்கிறாய்.’’ பரிவாகச் சொல்ல, அவளோ அவரை அப்படியே பிடித்து வரவேற்பறை நோக்கித் திருப்பினாள்.

‘‘சரி சரி…நான் சாப்பிட்டுட்டே வந்தவேக்கும் உங்களுக்கும் சேர்த்துக் குடிக்கவும் சாப்பிடவும் எடுத்துக்கொண்டு வாறன்.” என்றவள், “ஐஞ்சு மணியாகுது, காயாவைக் கூட்டிக்கொண்டு வரவும் யாரையாவது அனுப்ப வேணும். நீங்க அச்சாப்பிள்ளை போல போய் சரளா ஆன்ட்டியோட கதைச்சுக் கொண்டிருங்க!’’ சொன்னவேகத்தில் சமையலறை நோக்கிப் படிகளால் இறங்கத் தொடங்கியிருந்தாள்.

‘சரியான பிடிவாதக்காரி! இருந்தாலும் அருமையான பிள்ளை. இவளப் போய் புவனிக்கு எப்படித் தான் திட்ட மனம் வருகுதோ?’ என நினைத்தபடி, செல்பவளைப் பார்த்திருந்த சுமி, அவள் உரு மறையவும் தானும் வரவேற்பறைக்குள் நுழைந்தார்.

கீழே, சமையலறைக்குப் பின்புறமாய் இருந்த டெராசில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தனர் ரஞ்சன், ரதீஷ் மற்றும் ரதீஷின் இரு டச்சு நண்பர்கள்.

‘‘உங்களுக்கு ஏதாவது தேவையா?’’ அவர்களிடம் கேட்டு உபசரித்தவள், ரஞ்சனைத் தலைசைப்பால் உள்ளே அழைத்தாள்.

‘‘என்ன நிதி…ஏதும் செய்ய வேணுமா?‘’ என வந்தான் அவன்.

‘‘ஒரு சின்ன உதவி செய்ய வேணும், காயாவக் கூட்டிக்கொண்டு வாறீங்களா? கேக்கையும் கொண்டு நடந்து வாறது கஷ்டம் தானே?’’ என்றதும், அவளைத் தாராளமாய் முறைத்தான் அவன் .

‘‘ஓமோம்…(ஆமா ஆமா) எல்லாருக்கும் எல்லாம் கஷ்டம்; நீர் மட்டும் எல்லா வேலைகளையும் உம் தலையில போட்டுக்கொண்டு திரியும்; அதுவும் சாப்பாடு தண்ணி இல்லாமல்.’’ என்றவனுக்கு, தான் கோபமாகச் சொன்னதை வேடிக்கையாக எடுத்து முறுவலிப்பவளைப் பார்த்து இன்னமும் கோபமேறியது!

‘‘இப்ப வர வர நீர் செய்யிறதை எல்லாம் பார்க்கேக்க …’’ என்று சொல்லத் தொடங்கவே, பேப்பர் தட்டுக்களை எடுத்து வைத்து, அதில் தான் முதல் நாளிரவு செய்த ரெட் வெல்வெட் கேக்கை அழகாய்த் துண்டு போட்டு எடுத்து வைக்கத் தொடங்கியிருந்தாள் அவள். அதோடு, கோபப்படுபவனைப் பார்த்து அழகாகச் சிரிக்கவும் செய்தாள்.

error: Alert: Content selection is disabled!!