13
பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையை எழுதி முடித்து, காரில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான் ரஞ்சன்.
நிதி மீதுள்ள தன் விருப்பை வீட்டில் சொல்லிவிடுவதென முடிவெடுத்திருந்தாலும், இன்றுவரை அதற்கான சந்தர்ப்பங்கள் இவனுக்கு அமையவில்லை.
ரதீஷ் பிறந்ததினத்துக்கு அடுத்தநாள், புவனி வீட்டின் மாடிப்படியில் தவறி விழுந்துவிட்டார் இவன் அம்மம்மா. வலக்காலில் சுளுக்கு, விழும் போது கையை ஊன்றியதால் இடக்கைவிரல்கள் மடிந்து என, இரண்டு கிழமைகளுக்கும் மேலாக மிகவும் வருந்திவிட்டார் அவர்.
வந்த இடத்தில் இப்படியாகிப் போச்சே என்று எல்லோருமே பதற்றமாகத் திரிந்ததால், இவனால், சொந்த விடயம் பற்றிக் கதைப்பதை நினைத்தும் பார்க்க முடியவில்லை.
இவன் அப்படி இருந்தாலும், ரதீஷால் அமைதியாக இருக்க முடியவில்லை. வசி, நிதி பற்றிய தன் எண்ணத்தை எப்படியும் தமையனுக்கு உணர்த்த முயன்றான்.
‘‘நீங்க தான் நிதியை விரும்புறீங்கண்ணா; அவள்…’’ எனத் தடுமாறினாலும், ‘‘அவள்… சொல்லிலோ செயலிலோ அப்பிடி எதையும் காட்டியதாக நான் காண இல்லண்ணா; அதுதான் யோசைனையாக இருக்கு; பார்த்தண்ணா, வீணாப் பிரச்சனைகள் வேணாமே!’’ என எச்சரித்த விதத்திலும் குழம்பிப் போனான் இவன்.
இறுதிப்பரீட்சையும் நெருங்கவே அதோடு நேரத்தைச் செலவழித்ததில், பின்னரும், பெற்றவர்களுடன் கதைக்க முடியாமல் போய் விட்டது. எல்லாம் முடிந்து இதோ, ‘இன்று எப்படியும் வீட்டில் சொல்ல வேணும்!’ என்ற முடிவுடன் வீடு திரும்பியவன், இரவுணவின்பின், ரதீஷையும் பக்கத்தில் பிடித்து வைத்துக்கொண்டு மெல்ல மெல்லத் தன் விருப்பத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.
அதைக்கேட்டதும் அதிர்ந்த புவனியோ சுறுசுறுவென்று தாக்கிய கோபத்தால் கொதித்துப் போனார் என்றால், இந்திரனோ மனம் நிறைந்து போனார்.
தன் மனதில் ஒரு மூலையில் இருந்த ஆசை இவ்வளவு அழகாக நிறைவேறப் போவதை நினைத்து நினைத்து மகிழ்ந்தே போனார் அவர்.
‘கடைசியில நான் நினைத்துப் பயந்த மாதிரியே நடந்திட்டுதே! இந்த அமுக்குண்ணிக்கள்ளி, பேசாமடந்தையாக இருந்திருந்து இப்படி என்ர தலையில் மண்ணள்ளிப் போட்டுட்டாளே! ஒருமாதிரி என்ர பிள்ளையை வளைச்சிப் போட்டுட்டாளே!’ மனதில் தாறுமாறாகத் திட்டித் தீர்த்தார் புவனி.
அதோடு, மகன் சொன்னதைக் கேட்டதும் மகிழ்ந்து போன கணவரைத் தீயாகச் சுட்டது புவனியின் பார்வை.
‘இந்தாளுக்கென்ன? சும்மாவே தங்கச்சி மகள் என்றால் உயிர்; இனிக் கேட்கவும் வேணுமா?’ உள்ளத்தில் கொதித்தவர், ‘நான் விட்டால் தானே! என்ர மகன் என்ர பேச்சை எப்பிடி மீறிப் போறான் என்று பார்க்கிறன்.’ மகன் மீதுள்ள நம்பிக்கையில் இவ்வாறு எண்ணினார்.
அதேநேரம், ‘இது அவசரப்பட்டு கதைக்கின்ற விசயமில்லை. அதுவும் இந்தக்காலத்தில்…இந்த நாட்டில். பிறகு, எடுத்தன் கவிழ்த்தன் என்று ஒன்று கிடக்க ஒன்றைச் செய்துவிட்டு வந்து நின்றால் எதுவுமே செய்ய முடியாது.’ என்ற எச்சரிக்கையுணர்வும் அவருள் எழுந்தது.
‘புவனி, பொறுமை! பொறுமை!’ தனக்குத் தானே பல தடவைகள் சொல்லிக் கொண்டவர், மனதிலுள்ளதை சொல்லிவிட்டுச் சங்கடம் விலகாது தன்னையே பார்த்திருக்கும் மகனை உற்றுப் பார்த்தார்.
‘‘ஏன் தம்பி! இது என்ன திடீரென்று இப்படியொரு குண்டைத் தூக்கிப் போடுறாய்?! உனக்கென்ன விசரே பிடிச்சிருக்கு? கொஞ்சம் சரி யோசிச்சுத் தான் கதைக்கிறயா?
யாராவது இதைக் கேட்டால் சிரிப்பாச் சிரிப்பீனம். நீங்க மூன்று பேரும் ஒன்றாச் சகோதரங்களாக வளர்ந்திட்டு…இப்பக் கலியாணம் செய்யவிருப்பம் என்று சொல்லுறாய் அப்பு! உனக்கு என்ன…இதெல்லாம் விளையாட்டா இருக்கா?’’
கோபத்தை விழுங்கிவிட்டு ஆதங்கமாகவே வினவினார்.
‘‘பிறகு, நாங்க பெரியாட்கள் என்று எதுக்கு இருக்கிறம்? உங்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களைச் செய்து தர மட்டும் தானா நாங்க?’’
அடங்கிய கோபத்துடன் நிதானமாகவே வார்த்தைகளைத் துப்பினார்.
தாயின் கொந்தளிப்பை எதிர்பார்த்த ரதீஷ், அவரின் ஆதங்கமான பேச்சில் அவஸ்தையுடன் நெளிந்தான். அதைப் பார்க்கப் பார்க்கப் பொறுக்கவில்லை புவனிக்கு!
‘‘ஏன்டா? இது உனக்கும் தெரியும் போல! எருமை மாதிரி வளந்திருக்கிறீங்க, செய்வதெல்லாம் குழந்தைப்பிள்ளை வேலை என்ன? எல்லாத்துக்கும் இன்றைக்கு வரட்டும் அந்த ஊமக்கொட்டான்.’’ சீறியபடி சின்ன மகனை எரித்துவிடும் பார்வை பார்த்தவரின் கோபம், பொறுமையை விரட்டவே முனைந்தது.
இதுவரை மௌனம் காத்த இந்திரன், மனைவியின் எரிச்சலையோ எதிர்ப்பையோ கருத்தில் கொள்ளாது மூத்த மகனிடம் திரும்பினார்.
‘‘அது எல்லாம் சரி தான் ரஞ்சன், நிதிக்கும் இதில சம்மதமா?’’ என, அக்கறையும் அறியும் ஆவலுமாக வினவவும் செய்தார்.
இதைக்கேட்டதும், இதுவரை இழுத்து வைத்திருந்த பொறுமையைக் கைவிட்டுவிட்டார் புவனி.
விசுக்கென்று கணவனை நோக்கியவர் விழிகள் தீயைக் கக்கின!
‘‘ஏன், அவளுக்கு என்ன கசக்கவா போகுது?’’
நெரித்த புருவங்களும் சினந்த முகமுமாக உறுமியவர் கணவருடன் வாய்த்தர்க்கத்தில் இறங்கிவிட்டார்.
வெகு நாட்களுக்கு முன், நிதியை இங்கு அழைத்து வரத் தம் தந்தை முடிவு செய்த போது, அடிக்கடி, இவர்கள் இருவரும் வாக்குவாதப்பட்டதும் சண்டை பிடித்துக்கொண்டதும் தான் மகன்களின் நினைவிலாடியது.
‘அய்யோ! என்னால தான் அம்மாவும் அப்பாவும் சண்டை போடீனம்.’ குற்றவுணர்வில் குன்றிப் போனான் ரஞ்சன்.
‘அய்யோ அண்ணா! நிதிக்கு இது தெரியவரும் போது இன்னும் என்னவெல்லாம் இருக்கோ?’ மனதுள் தவித்துச் செய்வதறியாது நின்றான் ரதீஷ்.
அந்நேரம் பார்த்து, வேலை முடிந்து வீட்டுக்கு வந்தாள் நிதி.
கராஜால் உள்ளே வந்து சைக்கிளை நிறுத்தி, செருப்பைக் கழட்டி விட்டு, ‘இதென்ன இவ்வளவு சத்தமாக் கதைக்கீனம்?’ என எண்ணியவாறே உள்ளே வந்தவளை, திறந்திருந்த கதவு வழியாகக் கண்டுவிட்டார் புவனி.
மறுநொடி, ஆத்திரம் கண்ணை மறைக்க, என்ன செய்கிறார் என்று மற்றவர்களும் நிதியும் உணரும் முன்னமே எழுந்து விரைந்தவர், அவள் தலைமயிரை கொத்தாகப் பற்றிக்கொண்டே கன்னமிரண்டிலும் மாறி மாறி அறைந்து தள்ளினார்.
இதுவரை, எவ்வளவுதான் ஏசினாலும்(திட்டினாலும்) பேசினாலும் ஒருதரம் கூட கைநீட்டியதில்லை இவர். அதுவும், வீட்டினர் அனைவரும் நிற்கையில் காரணமும் சொல்லாது கோபாவேசமாக வந்து அடித்தவரைத் தடுக்கும் எண்ணமின்றி விதிர்விதிர்த்து நின்றிருந்தாள் நிதி.
அவளுக்கு நாலு அறை விழுந்த பின்னரே, திகைப்பிலிருந்து விடுபட்டான் ரஞ்சன்.
மறுகணம், ‘‘அம்மாஆஆஆஆ…’’ கத்தலுடன் பாய்ந்து சென்று, அவர் பிடியிலிருந்து அவளை விடுவித்தான்.
‘‘உங்களுக்கென்ன விசரா? களைச்சுப் போய் வந்தவளை இப்பிடி அடிக்கிறீங்க! முதல், நீங்க எப்பிடி அவளில கை வைக்கலாம்?’’ அடங்காத ஆத்திரத்துடன் சீறிவிட்டான்.
இதுவரை, ஒருபோதும் இப்படி எதிர்த்துக் கதைத்திராத மகனின் நேரடிச் சீறலால் இன்னுமின்னும் சினமடைந்தார் புவனி.
‘‘இங்க பாரடி…உனக்கு ஓசியில் சோறு போட்டதற்கு என்ர பிள்ளையையே எனக்கு எதிராத் தூண்டி விடுறியா?’’ என்றபடி, மீண்டும் அவளை நெருங்கவும், கணப்பொழுதில் புயலாக வந்த இந்திரன், ஓங்கி ஒரு அறை கொடுத்தார்.
அறை வாங்கிய புவனிக்கு, அந்த இடமே ஒரு முறை சுழன்றது!
அவருக்கு நினைவு தெரிந்து யாருமே அவரை அடித்ததில்லை. வீட்டிலும் சரி திருமணத்தின் பின்னருமே ராணி போல் தான் வாழ்ந்து வந்தார்.
பெரும்பாலும் மனைவியின் பேச்சுக்கு மறுபேச்சே பேசுவதில்லை இந்திரன்.
அதே, மனைவியின் மறுப்புடன் நடத்திக்கொண்டது என்றால் அது நிதி விசயம் மட்டுமே! அடிக்கடி அக்குற்றவுணர்வு தலை காட்டுவதால் தான், நிதியைத் திட்டும் போதெல்லாம் மனைவியைக் கண்டிப்பதில்லை; கண்டு கொள்வதில்லை.
அவளை என்னதான் திட்டினாலும், வீட்டில் தங்க வைத்திருப்பதும், அவள் முன்னேற்றங்களுக்குத் தடை சொல்லாததுமே அவருக்குப் போதுமானதாக இருந்தது.
ஆனால் இன்று? ‘இது என்ர பெஞ்சாதியா?’ என்றிருந்தது!
மனைவியை இப்படி ஒரு ஆத்திரக்காரியாகவும் கொடுமைக்காரியாகவும் காண விரும்பாது தடுமாறியவருக்கு, நிதியை அடித்ததைக் கொஞ்சமும் ஏற்க முடியவில்லை. அதுவே கையோங்கத் தூண்டியது.
ஆத்திர மிகுதியில் அடித்தவரோ, மனைவியின் அதிர்ந்த பார்வையில் நொறுங்கித்தான் போனார்.
எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல், இருந்த இடத்தை விட்டு எழாது அமர்ந்திருக்கும் இளைய மகனையும், நிதியைத் தன் ஆயுள் முழுமைக்கும் காக்கப் போகிறவன் போன்ற பாவனையில் பிடித்து நிற்கும் மூத்த மகனையும், வெறுப்பும் விரக்தியுமாகத் தொட்டு மீண்டது புவனியின் பார்வை!
கடைசியாக, என்னவென்று அறிய முடியாத பார்வையை கணவர் மீது செலுத்தியவர், விடுவிடுவென மாடியேறி, கதவை ஓங்கிச் சாத்தி விட்டுத் தம்மறைக்குள் புகுந்து கொண்டார்.
புரியாத பார்வை சிந்தியபடி, மௌனியாகப் போகும் மனைவியைப் பார்வையால் தொடர்ந்த இந்திரன், அவர் பின்னால் ஒரு எட்டு வைத்துவிட்டு நின்றுவிட்டார்.
‘இப்ப இவவுக்குப் பின்னால போனால், இன்னும் பேச்சுவார்த்தை பெரிதாகி வீண்சண்டை தான் வரும்; கொஞ்ச நேரத்தால் போய்ச் சமாதானப்படுத்துவம்.’ மிகவும் சோர்வுடன் நினைத்துக்கொண்டார்.
‘இப்ப என்ன…அவா செய்தது மட்டும் சரியா? பாவம்…காலைல போய் இப்பத் தான் வந்தாள்; அவளைப் போய் இந்த அடி அடிச்சால் கோபம் வராமல் வேறென்ன வரும்?’
மனதில் முணுமுணுத்தவருக்கு, மனைவி மேல் பரிவு வந்தாலும், அவரின் செய்கையில் எழுந்த ஆத்திரம் அடங்க மறுத்தது.
‘அதைவிட… தான் விரும்புறன் என்று சொன்னவன், தாய் அவளை அடிக்கிறார் என்ற கோபத்தில ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லியிருந்தால்? அதை வாழ்நாள் முழுதும் மறக்க முடியுமா? ஏன் இந்த மனிசிக்கு இப்பிடிப் புத்தி போகுதோ?’ மனதில் அங்கலாய்த்துக்கொண்டே சென்று ஆயாசமாக அமர்ந்து கொண்டார் .
சில நிமிடங்களில் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள் நிதி. தன்னைப் பிடித்திருந்த ரஞ்சனின் கரங்களை விலக்கியவள், ‘‘இங்க இப்ப என்ன நடந்தது? மாமி ஏன் அப்பிடிக் கதைச்சார் ? என்னைப் போய்..’’
சொல்லும் போதே அடக்கமாட்டாமல் அழுகையில் கேவியவள், கேள்வியாகவே மூவரையும் பார்த்தாள்.
அதுவரையிலும் தன்னை வெகுவாக அடக்கிக்கொண்டிருந்த ரதீஷ் ஒரு முடிவோடு எழுந்தான்.
‘இந்த விசயம் இன்றைக்கே முடிவுக்கு வரட்டும்.’ என நினைத்தவாறே, அவளருகில் வந்தவன் பார்வை கூர்மையாக அவள் முகத்தில் படிந்தது.
‘‘நிதி…இங்க இப்ப என்ன நடந்தது என்றால்…இதோ நிக்கிறாரே பெரியவர்…’’ என்றவன், வேதனையையும் கோபத்தையும் முகத்தில் கலவையாகப் பூசிக்கொண்டு அருகில் நின்ற ரஞ்சன் மேல் பார்வையை பதித்தெடுத்துவிட்டு, ஒருவித அழுத்தத்துடன் தொடர்ந்தான்.

