‘‘இவர் உம்மை விரும்புறாராம்; அதை, அம்மா அப்பாவிட்டச் சொல்லிக் கலியாணம் செய்யச் சம்மதம் கேட்டார்; இதுதான் நடந்த எல்லாவற்றுக்கும் காரணம்.’’
விசயத்தைத் தெளிவாகப் போட்டு உடைத்தவனுக்கு, வசி நிதியை விரும்புகிறான் என்பதும், நிதியுமே அவனை நேசிக்கிறாள் என்பதும் பெரும்பாலும் உறுதியாகியிருந்தது.
அதனால், ‘இந்த விசயம் லேசில முடியாமல், இன்னும் என்னென்ன பிரச்சனைகளைக் கொண்டு வருமோ?’ என்ற பதற்றமும் பயமும் அவனுள் உருவானது.
ரதீஷ் சொன்னதை உள்வாங்கிக் கொண்டவளுக்கோ, தான் சரியாகத் தான் கேட்டோமா என்றே சந்தேகமாக இருந்தது.
ரதீஷ் சொன்னதற்கு மௌனம் காத்து அவள் சந்தேகத்தை ஓட்டிவிட்டான் ரஞ்சன்.
தன்புறம் பார்க்காது, சோர்வுடன் நகர்ந்து சென்று சாப்பாட்டு மேசையில் இருந்த கதிரையை(இருக்கை) இழுத்துப்போட்டு அமர்ந்த ரஞ்சனை தீர்க்கமாகத் தொடர்ந்த நிதியின் விழிகள், மிகையான தவிப்போடு இந்திரனை நாடியது.
அவர் தன் பதிலுக்காகக் காத்திருப்பதை உணர்ந்தவளுள் நடுக்கத்தின் ஆக்கிரமிப்பே!
‘கடைசியில், எது நடக்கக்கூடாது என்று ஒதுங்கி ஒதுங்கிப் போனேனோ அது நடந்திருக்கு!’ கலக்கத்தோடு நினைத்தவளுக்கு, ரஞ்சன் மீது கோபம் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியாதிருந்தது.
அடுத்தநொடி, அவனருகில் சென்று, உறுதிமிக்க விழிகளால் அவனை நோக்கினாள்.
‘‘ரதீஷ் சொன்னது உண்மையா? நீங்க அப்படிச் சொன்னீங்களா?’’
கேட்கும் போதே அவள் விழிகள் நிறைந்துவிட்டன; மனத்திலிருந்த கோபத்தைக் குரல் தாங்கி வந்திருந்தது.
அவன் பார்வையும் அவள் முகத்தில் தான்; ஆனால், மௌனத்தை உடைக்கவில்லை.
‘‘இங்க பாருங்க, முதன் முதலா உங்களைப் பார்த்தில இருந்து இப்ப வரைக்கும் என்ர அண்ணா என்னோட இருக்கிறார் என்றுதான் நினைச்சுக் கொண்டிருக்கிறன்.”
தான் இந்த வார்த்தைகளைச் சொல்கையில் அவன் முகம் உச்ச கட்ட அதிர்வைப் பிரதிபலித்ததை உணர்ந்துகொண்டாள் அவள். அவள் மனம் வேதனையில் முனகியது. இருந்தும் சொல்லவந்ததை நிறுத்தாது தொடர்ந்தாள்.
“அப்பிடித்தான் உங்களோட பழகினன். மாமி உங்களை அண்ணா என்று சொல்ல வேணாம் என்று சொன்னதாலதான் வாய்விட்டுக் கூப்பிடேல்ல. மற்றும்படி, உங்களை ஒருகணம் கூட வேற மாதிரி நினைக்கேல்ல.’’
கணீரென்று சொன்னவள் தொடந்து கதைக்க முடியாது திணறியவாறே, கோப விழிகளால் அவனை நோக்கினாள்.
‘‘உங்கட விருப்பத்தை வெளியில் சொல்ல முதல், என்ர விருப்பம் பற்றி அறியவேணும் என்று நினைக்கேல்லையா நீங்க ? நான் சம்மதிப்பன் என்று எப்பிடி நினைச்சீங்க?’’ சீறியவள், திரும்பியும் பாராது விடு விடுவென்று படியேறிச் சென்று மறைந்தாள்.
கீழே நடந்த வார்த்தையாடல்கள் அனைத்தையும், தம் அறையிலிருந்து ஒன்றுவிடாது கேட்டுக்கொண்டிருந்த புவனிக்கு, அடங்க மறுத்த ஆத்திரம் மீண்டும் பொங்கியெழ, படியால் ஏறி வந்தவளை மறித்துப் பிடித்துக் கொண்டார்.
‘‘ஏன்டி, உனக்கு அவ்வளவு கொழுப்பா? அப்ப மகராணிக்கு என்ர மகனைப் பிடிக்கேல்ல என்ன? அந்தளவுக்கு உன்னைவிட அவன் தரம் குறைஞ்சவனா? இந்த வீட்டு எச்சில் சாப்பாட்டைச் சாப்பிட்டு வளர்ந்த உனக்கு இவ்வளவு திமிராடி?‘’ என்றவாறு, மீண்டும் ஒரு அறை வைத்தார்.
தாயின் குரல் கேட்டதுமே விரைந்து படியேறத் தொடங்கியிருந்தான் ரஞ்சன்.
பாய்ந்து வந்து தாயிடமிருந்து அவளை விலக்கியவன், ‘‘அம்மா வேணாம் மா…கடைசியாச் சொல்லுறன், என்னை விசரனாக மாற்றாதீங்க! இனியொருதரம் இவளில உங்கட கைபட்டால், நான் மனிசனா இருக்க மாட்டன்!’’ கடித்த பற்களிடையே உறுமினான்.
சீறும் காளையாக நின்ற மகனை அகங்காரமாக முறைத்தார் புவனி.
‘‘டேய் மகனே…வா வா. இப்ப என்ன சொன்ன? மனிசனா இருக்க மாட்டியா? அதுவும் இவளை அடிச்சா?
ஏன்டா? நீ இப்ப மட்டும் மனிசனாகவா இருக்கிற?
பெற்ற தாயை அந்த மனிசன் போட்டு அடிக்கேக்க ரெண்டு தடிமாடுகளும் பார்த்துக்கொண்டு நிற்கிறீங்களே! இப்ப, இந்த நன்றி கெட்டவளுக்காக வக்காலத்து வாங்க வாறியா ?
நீ எல்லாம் நல்லா வருவாயடா. உழைச்சுக் கொட்டத்தான் உனக்கு அம்மா வேணும் என்ன?’’ மூச்சிரைத்தது அவருக்கு!
கலக்கமும் பயமும் ஆட்கொள்ள, ரஞ்சனின் பிடியில் ஒடுங்கி நின்ற நிதி மீது, வெறுப்பால் நிறைந்த விழிகளைத் திருப்பினார் புவனி.
‘‘நீ நல்லாவே இருக்க மாட்டாய்டி. உன்ர அப்பனும் ஆத்தாளும் உன்னைப் பெற்றது மட்டும் தான்டி. உன்னை வளர்த்த எனக்கு என்ர புருசன் கையால அடி வாங்கித் தந்து, பிள்ளைகள் என்னை எதிர்க்கிற மாதிரிச் செய்து விட்டாய். எப்படி நீ நல்லா இருகிறாய் என்று பார்க்கிறன்.’’
சாபமாகச் சொல்லியவாறே மீண்டும் தன்னறைக்குள் புகுந்து கொண்டார்.
அப்படியே உறைந்து போய் நின்ற நிதியும், அதுவரை தன்னைப் பற்றியிருந்த ரஞ்சனை உதறிவிட்டு தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.
இங்கெல்லாம் குளியலறை தவிர, மற்றை அறைகளில் பெரும்பாலும் தாழ் இருப்பதில்லை. இவர்கள் வீடும் அவ்வாறே இருக்கும்.
நிதி அறைக்குள் சென்ற சற்று நேரத்தில், அவள் அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ரஞ்சன், கட்டிலில் படுத்திருந்து அழுது கொண்டிருந்தவளிடம், ‘‘நிதி பிளீஸ்மா, வா…வந்து சாப்பிட்டுட்டுப் படு; வெறும் வயிற்றோடு படுக்க வேணாம்.’’ கெஞ்சல் குரலில் சொல்ல, விறுக்கென்று தலையை நிமிர்த்திப் பார்த்தாள் அவள்.
‘‘இங்க பாருங்க, நீங்க என்னோட கதைக்கவே வேணாம். முதல் வெளிய போங்க. இல்லையென்றால் இப்பவே எங்கயாவது போயிருவன்.’’ வெறுப்புடன் வார்த்தைகள் தெறித்து விழுந்தன.
அடுத்த நொடி, கலங்கிச் சோர்ந்து போய் அவன் வெளியேறுவதைப் பார்த்ததும் நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது அவளுக்கு!
அவளுக்கு, புவனி அடித்ததில் கொஞ்சமும் வருத்தமோ கோபமோ இல்லை.
‘என்னை இங்க கூட்டிக்கொண்டு வந்து, வளர்த்து, இந்தளவுக்குக் கொண்டு வந்தவர்களுக்கு அந்தளவு உரிமை இல்லையா?’ என நினைத்தவள், தன்னால் புவனியும் இந்திரனும் சண்டையிட்டுக் கொண்டதை நினைத்து மிகவும் வருந்தினாள்.
அதோடு சேர்த்து, ‘என்னில உண்மையான அக்கறையும் பாசமும் கொண்ட ரஞ்சனை வருத்தி, அவர்ட மனசை உடைச்சிட்டனே!’ என்ற நினைப்பே தாங்க முடியாத வேதனையை அவளுள் சுரக்கச் செய்தது.
அந்தளவுக்கு ரஞ்சன் என்றால் அவளுக்கு உயிர்! எப்போதுமே அவன் அவளுக்கு விசேசம் தான்! அவனின் ஒவ்வொரு செயல்களிலும் தன் இழந்த தமையனை கண்டவளுக்கு, ‘நான் இல்லாமல் போகவில்லை, இங்கே உன்னுடன் தானிருக்கிறேன்!’ என உணர்தியவன் அவன். அவள் இதுவரையிலும் அப்படித்தான் உணர்ந்தாள்.
ஆனால் இன்று!
‘இந்த மாதிரி ஒரு நிலை வராமல் இருந்திருக்கக் கூடாதா?’ என நினைத்துத் தலையணையில் முகம் புதைத்துக் குமுறிக் குமுறி அழுதவளுக்கு, தான் யாருமற்ற அனாதை ஆகி விட்டது போன்றே தோன்றியது.
ஆரம்பத்தில், மிகவும் பாசமாகக் கதைத்த பெற்றவர்கள் கூட, இப்போதெல்லாம் தங்கள் தேவைகள் பற்றியே கதைப்பார்கள். அவர்களின் இச்செய்கையால் ஆரம்பத்தில் வேதனைப்பட்டவள், பிறகு, அதற்கும் பழகி விட்டாள். இதற்கெல்லாம் ஈடு செய்வது போலத் தங்கள் பாசத்தை எழுத்தில் வடித்தனுப்பும் இளையவர்களின் அன்பில் எப்போதும் இதம் காண்பாள் அவள்.
எந்த நிலையிலும், எவ்வளவு மனக்கஷ்டத்திலும், தனிமை தாக்கிய போதும், எப்படியும் நன்றாக வர வேண்டும் என்ற வைராக்கியத்தில் முயன்று நிமிர்ந்து உறுதியாய் நின்றவள், தேளாகக் கொட்டும் புவனியின் மொத்த வெறுப்பையும் சம்பாதித்து, செய்வதறியாது மறுகித் துடித்தபடி அழுது அழுது ஓய்ந்து போய், தன்னையறியாது அப்படியே உறங்கி விட்டாள்.
நிதியின் அறையை விட்டு வெளியில் வந்த ரஞ்சன், மேலே தன்னறைக்குள் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டவனுக்கு, இது சுலபத்தில் முடியும் காரியமில்லை என்றும், தாயின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்வதென்பது அவ்வளவு இலகுவான விடயமன்று எனவும் மிக நன்றாகவே தெரியும். ஆனால், அவன் அறியாதது, கொஞ்சமும் எதிர்பாராதது, நிதியின் இப்பதில்!
முதலில், கட்டாயமாக அறிந்திருக்க வேண்டிய நிதியின் மனநிலை, அவளது விருப்பம் பற்றி அவன் அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டானே!
தன்னைப் போலவே அவளுக்கும் தன்னில் நேசம், அதாவது காதல் உண்டா என்பதை அவன் அறியத் தவறி விட்டான்.
எந்த விடயமென்றாலும் தன்னிடன் சொல்பவள், ஆலோசனை கேட்பவள், உதவி கேட்பவள், தன்னிடம் மற்றவர்களை விட அதிகமாய்ப் பேசிப் பழகுபவள், தான் அவளை விரும்புவது போலவே தன்னில் நேசம் கொண்டிருப்பாள் என்று நினைத்து விட்டான் இவன்.
அப்படியே தன்னைப் போல அவளுக்குத் தன்மேல் காதல் என்று இல்லையென்றாலும், பெற்றவர்களின் அனுமதியுடன் அவளை அணுகினால், திருமணத்திற்கு மறுக்க மாட்டாள் என்று நினைத்து விட்டான்.
ஆனால் அவளோ, ‘‘அண்ணா என்று நினைத்துப் பழகினேன்!’’ எனச் சுலபமாகச் சொல்வாள் என்று ஒருகணம் கூட யோசித்துப் பார்த்ததில்லையே!
அவன் என்ன அவளுக்கு அண்ணனா அப்படி நினைப்பதற்கு?
தன் அன்னைக்குப் பயந்தே தன்னை விட்டு விலகிப் போகின்றாள் என்று நினைத்திருக்க, ‘கடைசியில…என்ர அன்பைக் கிண்டல் கேலிக்குரியதாக்கி விட்டாளே!’ என எண்ணி மனம் வெதும்பியவாறே கட்டிலில் அமர்ந்தவனுக்கு, துக்கத்தில் நெஞ்சம் வெடித்து விடும் போல் வலித்தது.
அவனைப் பொறுத்த மட்டில், பார்த்துப் பார்த்துத் தான் வளர்த்திருந்த காதல் மரம், அவன் நம்பிக்கை, ஆசை அனைத்தையும் இறுகக் கட்டியணைத்துக் கொண்டு ஒரே கணத்தில் வேரறுந்து விழுந்து விட்டது!
பூவாய், காயாய், கனியாய்ச் செழித்து வளர்ந்து, மணம் வீசும் என்று அவன் கற்பனையில் நினைத்திருக்க, அதுவோ, பரிதாபமாக அரைகுறையில் சிதைந்து விட்டது.
இதுவரை தன் கற்பனை தந்த சுகத்தில், மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தவன், இன்று நிஜம் புரிய, தன் நேசம் ஒருதலையானது என்பது மூளையில் உறைக்க, அதன் வீரியம் தாங்காது பரிதாபகரமாய் நிலைகுலைந்து துவண்டு விட்டான்.
உயிராக நினைத்தவளின் மறுப்பும், அதை விட உயிராக நினைத்து மதித்த தாயின் வெறுப்பும் அவனைப் போட்டு வாட்டி வதைத்தது.
தன்னில் தன் செய்கைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவனுக்கோ, இன்று, அடுத்தது என்ன செய்வதென்றே புரியவில்லை.
‘‘என்ன தான் என்றாலும், யார் என்ன சொன்னாலும், நிதியே மறுத்தாலும், அவளை…அவள் மேல் நான் வச்ச காதலை,பாசத்தை எல்லாம் சுலபமாக உதறிட்டு அவளைக் கலியாணம் செய்ய நினைச்சதை உண்மையில்லை என்று சொல்லி அதில இருந்து விடுபட முடியுமா என்ன ?’’
வாய்விட்டே புலம்பியவனால், அக்கணம் ஏற்பட்ட வேதனையையும் வலியையும் வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை.

