15
மெல்ல மெல்ல காலைக்கடன்களை முடித்து விட்டு வெளியே வந்த நிதி, பிளேட்டொன்றில் பாண் டோஸ்டுடன் மேலே வந்து கொண்டிருந்த ரதீஷை கண்டதும், “நான் கீழ வந்து சாப்பிட்டிருப்பனே…நீர் ஏன் மினக்கெட்டு இங்க கொண்டு வாறீர்?’’ எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, தங்கள் அறைக்கதவைத் திறந்து வெளிப்பட்டார் புவனி.
முதல் நாளிரவு நடந்த களேபரத்தில் கொதித்துக் கொண்டிருந்தவரை எவ்வளவோ முயன்று சமாதானம் செய்திருந்தார் இந்திரன்.
‘‘இப்ப என்ன, நிதியை ரஞ்சனுக்குச் செய்யிறதில உங்களுக்கு விருப்பமில்லை, அவ்வளவும் தானே? அதுதான் அவளே முடியாது என்று முடிவாகச் சொல்லீட்டாளே! இனியும் இந்தக் கதையை வளர்க்க வேணாம் புவனி. பாருங்க, இந்தச் சண்டையெல்லாம் இப்பத் தேவையா?’’ என, மிகவும் நயமாகச் சமாதானம் செய்ததில் கொஞ்சமே கொஞ்சமாக மனம்மாறி இருந்தவர், ரதீஷ் சாப்பாட்டுடன் மேலே வந்து கொண்டிருப்பதையும் நிதி சொன்னதையும் கேட்டதும் வெகுண்டு போனார்.
‘‘ஏன்டா…உனக்கு வெட்மா இல்லையா? இவா பெரிய மகாராணி, இவாவுக்கு நீ சேவை செய்யிறயா? பெற்ற தாய் நான் இவ்வளவு நேரமா எழும்பி வரேல்லையே என்று வந்து எட்டிப் பார்த்தியா?” கடும் கோபத்தில் கத்தினார்.
அப்படியே மருண்டு போய் குளியலறை வாயிலைப் பற்றிக் கொண்டிருந்த நிதியின் முகத்தை ஒருகணம் உறுத்துப் பார்த்தவருக்கு, ஏனோ அவளை அப்படியே நாலு சாத்துச் சாத்தலாம் போல் கோபம் வந்தது.
‘பின்ன என்ன! முதல் முதலாக இவளால் தான் எனக்கும் அவருக்கும் பிரச்சனை வந்தது. அதில் வென்று இங்கு வந்து நிரந்தரமாக இருந்ததும் போதாதென்று, என்ர மகனிட மனசைக் குழப்பி, அவனைத் தவிக்க விட்டிட்டாளே!
அவரிட்ட என்னை அடி வாங்க வச்சதும் போதாதென்று இப்ப இவனைக் கொண்டு வேலையும் வாங்குறாளே!’
கடும்கோபத்துடன் நினைத்துக் கொண்டவர், அக்கோபத்தை, அவளைக் குத்திக் குதறும் வார்த்தைகளில் பிரயோகித்தார்.
‘‘உனக்குக் கொஞ்சம் சரி மானரோசம் இருக்கா? நேற்று அவ்வளவு கதைச்ச பிறகும், அப்பிடி ஏதும் இருந்திருந்தால் இன்னும் இங்க இருப்பியா? அதுவும் ரூமுக்கு கொண்டு வந்து சாப்பாடு வேற!
ம்ம்…உன்னை என்ன சொல்லுறது? நான் பெத்ததுகளைச் சொல்ல வேணும்.
அது எப்படி உனக்கு ரோசம் இருக்கும்? உன்னைப் பெத்ததுகளைப் போலத்தானே நீயும் வாங்கி வாங்கிப் பிழைக்கிறதிலேயே குறியா இருக்கிறாய்.
இந்த மாதிரிச் சீவியம் நடத்திரத்துக்குப் பதிலாத் தலையை எங்கயாவது கொண்டு போய் ஒரேயடியாக் குடுக்கலாம்.’’ தன்னையும் மீறி உச்சக் குரலில் கத்தினார்.
தன் அறையில் தனக்குத் தானே சண்டையிட்டுக் கொண்டிருந்த ரஞ்சன் தாயின் சத்தம் கேட்டுப் பதறி எழுந்து கீழே வர, ரதீஷ் செய்வதறியாது படிகளில் தயங்கி நிற்க, நிதியின் அறையில் அமர்ந்திருந்த வசியோ, புவனி அவளை அடித்தார் என்ற பிறகும் பிரச்சனையைப் பெரிதாக்க விருப்பமின்றி மிகவும் முயன்று பொறுமையை இழுத்துப் பிடித்து வைத்திருந்தவன், அது இருந்த இடம் தெரியாமல் பறந்து போக, ‘‘சித்தீ..’’ என்ற உறுமலுடன் வெளிப்பட்டான்.
இக்காலைவேளையில், அதுவும் நிதியின் அறைக்குள்ளிருந்து தமக்கை மகனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை புவனி.
‘இவன் எங்க இங்க? அதுவும் இவளின்ட அறையில இருந்து! ரஞ்சன் என்றாலும் திருப்பிக் கதைக்கக் கொஞ்சம் யோசிப்பான். இவன், இவளை ஏதும் சொன்னால் முறைச்சுக்கொண்டு நிற்பானே!’ என, தனக்குத் தானே நினைத்துக் கொண்டவர், வெகுவாய்த் தன்னைச் சமாளித்துக்கொண்டு, ‘‘வாடா வா…என்ன இந்த நேரம்?அதுவும் இங்க…’’ பெரும் முயற்சியில் இயல்பாகக் கேட்டு வைத்தார்.
‘‘அதை விடுங்க… இப்ப எதுக்கு இப்பிடி இவளை ஏசுறீங்க? அதோட கைநீட்டி அடிப்பீங்களா? இப்ப உங்களுக்கு என்ன? இவள் இங்க இருக்கக்கூடாது, அவ்வளவும் தானே?’’ கண்கள் இடுங்க உக்கிரமாகக் கேட்டான்.
‘‘கடைசியும் முதலுமாச் சொல்லுறன் சித்தி, இனிமேல் இவளப்பற்றி ஒரு வார்த்தை…ஒருகதை(பேச்சு) தப்பாகக் கதைச்சாலும் நான் பொல்லாதவன் ஆகிருவன், பிறகு புலம்பாதீங்க!’’
தாழ்ந்த குரலில் சொன்னாலும் அதில் இருந்த ஆத்திரத்தையும் அவன் உக்கிர பார்வையையும் பார்த்த புவனி திகைத்துத் தான் போய் விட்டார்.
‘இவன் வசிதானா? என்னட்டையா இப்பிடிக் கதைக்கிறான்? இவளுக்காக ஏனிப்படி உருகிறான்?’
அதிர்ந்து நின்ற புவனிக்குள் பல கேள்விகள் முளை விட்டன.
வசியோ, அதே ஆத்திரத்துடன் நிதியிடம் பார்வையைத் திருப்பினான்.
‘‘உனக்குக் காது கேட்கிது தானே? உன்ர அருமை மாமி சொன்னது விளங்கிச்சா? இனியும் நீ இங்க இருக்கத் தேவையில்லை, வா போகலாம்.’’ என, அவள் கரம் பற்றி இழுத்துக்கொண்டு படியிறங்க, புவனியின் பேச்சில் அதிர்ந்து நின்ற நிதியுமே பொம்மை போல அவன் இழுத்த இழுப்புக்கு அப்படியே வந்து விட்டாள்.
இதை, இப்படி ஒரு தலையீட்டை, அதுவும் வசியிடமிருந்து கொஞ்சமும் கற்பனை பண்ணிப் பார்த்திராத புவனி, மாடிப் படியில் அதிர்ந்து போய் நிற்கும் ரஞ்சனை உறுத்து விழித்தார்.
‘‘வசி அண்ணா…வேணாம்; கொஞ்சம் பொறுங்க.’’ என, அவர்கள் பின்னால் ஓடும் ரதீஷையும் முறைப்பாகவே பார்த்துவிட்டு, அதே கோபத்துடன் தன்னறைக்குள் சென்று தொலைபேசியை எடுத்தவர், நேற்றிரவு நடந்ததில் இருந்து இப்பொழுது வசி நிதியை அழைத்துச் செல்லும் வரை நடந்தவற்றை தனக்குச் சாதகமாக, தமக்கை சுமியிடம் ஒப்பித்த பின்னரே ஓய்ந்தார்.
‘‘அக்கா…தேவையில்லாத தலையிடிய நீயே வீட்டுக்குள்ள விட்டிராத! பிறகு நான் படுறபாடு தான் உனக்கும்.” எச்சரிக்கை.
“எனக்கும் கூட இனிமேலும் அவளை இங்கயே தங்க வைக்க விருப்பமில்லை. பேசாமல் ஒரு ரூம் பார்த்துக் கொண்டு போகச் சொல்லுற முடிவில் தான் இருந்தன். அதற்குள்ள இவன் வசிக்கு மறை கழன்று போயிட்டுதாக்கா ?’’ என, கட கடவென்று பொரிந்து விட்டுத் தொலைபேசியை வைத்தார்.
அந்தப் பக்கம் கேட்டிருந்த சுமியோ, ‘‘ஓ! இதுதானா தேத்தண்ணியையும் குடிக்காமல் அவ்வளவு அவசரமாகப் போன காரணம்…’’ என நினைத்துக் கொண்டவர், தன் அருகில் வந்து ‘‘என்ன?’’ என்று கேட்ட தாயிடம் புவனி சொன்னதைச் சொன்னார்.
மகன் எது செய்தாலும் சரியாகத்தான் செய்வான் என்ற நம்பிக்கை இருந்தாலும், ‘‘இப்பிடி அவளை அங்க இருந்து அதுவும் இந்திரன் இல்லாத நேரத்தில் கூட்டிக்கொண்டு வாறது சரியாப்பட இல்லையே அம்மா! வரட்டும் பார்ப்பம்.’’ என்று தாயிடம் சொன்னவருக்கு, வசியின் இச்செய்கை பெரும் குழப்பத்தை உருவாக்கியது.
மனதில் குழப்பத்துடனும் சஞ்சலத்துடனும் மகனின் வருகைக்காகக் காத்திருந்தார் சுமி.
புறப்பட்ட வேகத்தில் வீட்டின் முன்பாகக் காரைக் கொண்டு வந்து நிறுத்திய வசி, இன்னமும், திகைப்பும் அதிர்ச்சியும் மறையாது அமர்ந்திருப்பவளைத் திரும்பிப் பார்த்த மறுகணம் அவளை இழுத்து அணைத்திருந்தான்.
அவன் இறுகிய அணைப்புக்குள் வாகாக அடங்கியவளின் உள்ளமோ, இதுவரை தான் சுமந்து திரிந்த ஆதரவற்ற நிலை மெல்ல மெல்ல பின்வாங்குவதை தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டது!
இத்தனை காலமாக தனிமைத் தவிப்புடன் ஆறுதல் தேடி அலைந்த அலைப்புறுதல், மெல்ல மெல்ல ஆசுவாச மூச்சுடன் அடங்கிப் போனதையும் உணர்ந்து கொண்டவள், மெதுவாகத் தலை நிமிர்ந்து அவனை நோக்கினாள்.
கன்றிக் கசங்கிய வதனமும் கலங்கிச் சிவந்த விழிகளுமாகத் தன்னை நோக்கியவளை, எல்லையில்லா நேசத்துடன் பிடிவாதமாகச் சிறைப்பிடித்தன அவன் விழிகள்.
அவள் முகத்தில் கலைந்து கிடந்த கேசங்களை உரிமையோடு அவன் விரல்கள் அப்புறப்படுத்த, மெல்லக் குனிந்து அவள் பட்டு நெற்றியில் ஆதரவாக முத்தமிட்டான் வசி.
அவளோ, மீண்டும் அவன் நெஞ்சத்தில் தஞ்சம் கொண்டாள்.
இருவர் நெஞ்சங்களும் தத்தம் இலயங்களை மாறி மாறி இரசித்துக் கொள்ள, சில பல நொடிகள் அங்கு அமைதி அழகாக ஆட்சி புரிந்து நின்றது.
“நிதி…”
அவன் குரல் இரகசியமாக அவளை விளித்து விருப்பமின்றியே மௌனத்தைக் கலைத்தது.
“ம்ம்ம்…” என்றவள் தலையோ நிமிர நினைக்கவில்லை.
‘‘நீர் இப்ப வந்திருக்கிறது உம் வீடு!”
இப்போது திடமாக ஒலித்தது அவன் குரல். சட்டென்று நிமிர்ந்து நோக்கியவளின் விழிகளோ கண்ணிமைக்கும் கணத்தில் பனித்துப் போயின!
அவள் விழிகளை ஊடுருவியது அவன் பார்வை!
“ஓம் நிதி! இங்க இருந்து போ என்று உம்மை எவராலுமே சொல்ல முடியாது. அதை எப்பவுமே நினைவில வச்சுக் கொள்ளும்.” சொல்லிக்கொண்டே, அவள் கன்னம் நனைக்க முயன்ற விழிநீரைத் தாமதியாமல் துடைத்து விட்டான்.
“நானும்… இந்த வீடும்…ஏன் என்னுடன் சம்பந்தப்பட்டது எல்லாமே உமக்குச் சொந்தமானது…சரியா?’’
கணீரென்று உறுதியாகச் சொன்னவன், பேச்சற்று விழிவிரித்துப் பார்த்தவளை மீண்டும் இறுக அணைத்துக் கொண்டான்.
‘‘எத்தனையோ சந்தர்ப்பங்களில என்ர நேசத்தைச் சொல்ல நினைச்சுச் சரியான சந்தர்ப்பம் வரேல்ல என்று அமைதியாக இருந்தன்மா! ஆனால், நிச்சயமா இப்பி டி ஒரு சந்தர்ப்பத்தில சொல்ல வேண்டி வரும் என்று நினைக்கேல்ல.”
அவள் சிரம் மீது கன்னம் பதித்திருந்தவனின் இதழ்கள் முணுமுணுத்தன.
“ஆனாலும் பரவாயில்லை, உமக்கும் என்னில விருப்பமென்று எனக்கு நல்லாவே தெரியும். அதை வெளிப்படையா ரெண்டு பேருமே தெரிஞ்சு கொண்டது சந்தோசம்மா.’’
அவன் வார்த்தைகளில் நம்பிக்கையும் மகிழ்வும் கைகோர்த்து நின்றன.
எதுவுமே பேசாது கலங்கிய விழிகளை அவன் நெஞ்சில் புதைத்து மறைத்தவளை சிறிது நேரம் அணைத்தவாறே இருந்தவன், வாசல் கதவைத் திறந்து கொண்டு தாய் வருவதைக் கண்டு, ‘‘நிதி அம்மா வாறாடா.’’ அவளை மெல்ல விலத்தினான்.
கலக்கத்துடன் விலகியவளிடம், ‘‘நீர் ஒன்றுமே கதைக்க வேணாம் , நான் சொல்லிக் கொள்ளுறன்.’’ என்றவாறே இறங்கி, அவள் புறம் வந்து கதவைத் திறக்க, தயங்கிக்கொண்டே இறங்கியவளைப் பார்த்த சுமியோ, உண்மையாகவே கொஞ்சம் அருண்டு தான் போய்விட்டார்.
இதுவரையில், ஒருதரம் கூட இவளை இப்படிக் கண்டதில்லை. எந்நேரமும் அமைதியும் சுறுசுறுப்பும் நேர்த்தியுமாக வளைய வருபவளாச்சே!
இன்று, வீங்கி, கன்றிச் சிவந்த முகமும் கசங்கிய ஆடையுமாக சோர்வுடன் கண்டவருக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

