‘புவனி சொன்னதை விடவும் விசயம் பெரிசு போல!’ என நினைத்துக் கொண்டவர், ‘‘என்ன தம்பி நடந்தது? ஏன் நிதி இப்படி வந்திருக்கிறாள்?’’ எனக் கேட்டவரை, கூர்மையாகப் பார்த்தான் மைந்தன்.
‘‘அம்மா…இப்ப இதில நின்று எல்லாம் சொன்னால் தான் உள்ளுக்குள்ள விடுவீங்களா?’’ ஒரு மாதிரிக் குரலில் கேட்டவனை முறைத்தவர், ‘‘ஐயோ ராசா…அப்பிடியில்லை, நிதி நீ உள்ளுக்கு வாடாம்மா.’’ என்றவாறே, வீட்டினுள் அழைத்துச் சென்றார்.
‘‘அவளுக்குச் சாப்பிட ஏதாவது குடுங்கம்மா, இரவும் சாப்பிடேல்ல, இப்பவும் காய்ச்சலுக்கு மருந்து குடிச்சாள், இன்னும் ஒன்றும் சாப்பிடேல்ல.’’ சொல்லியவாறே அவனும் உள்ளே நுழைந்தான்.
மூத்தமகளுடன் வந்த நிதியை, எதுவுமே தெரியாதவர் மாதிரி அன்பாகவே வரவேற்றார் வசியின் பாட்டி.
“சாப்பாடு எடுத்து வைக்கிறன்…” எனச் சென்ற சுமி சிறிது நேரத்தில் சாப்பிட அழைக்க, ‘‘நீங்களும் சாப்பிட்டு இருக்கமாட்டீங்க…வாங்கோவன் சாப்பிடலாம்.’’ தன் முன்னேயிருந்து தன்னையே பார்த்திருந்தவனையும் அழைத்தாள் நிதி.
சிறு தலையசைப்புடன் எழுந்து வந்தவன் எதுவுமே பேசாமல் சாப்பிட அமர, தானும் அமர்ந்தவள், பாசமாக உபசரித்த சுமியின் முன்னாலும், தன்னையே பார்த்துப் பார்த்து உண்ணும் வசியின் முன்னாலும், சாப்பிடாமல் எழ மனமின்றி டோஸ்டை எடுத்துக் கடித்தவளால் அதை விழுங்கக் கூட கஷ்டமாக இருந்தது.
ஒருமாதிரி ஒரு டோஸ்டை சாப்பிட்டவள், ‘‘போதும் மாமி..’’ எழுந்து கை கழுவிவிட்டு முதல் இருந்த இடத்தில் மறுபடியும் வந்து அமர்ந்தவளுள், இடம் மாறியதும், கொஞ்சமே என்றாலும் உள்ளே சென்ற உணவும் சிறிது தெம்பைத் தந்ததில், ‘அடுத்து என்ன செய்யிறது?’ என்ற கேள்வியோடு, ‘நான் இவரோட வந்திருக்கக் கூடாதோ?’ என்ற எண்ணமும் போட்டியிட்டுக்கொண்டு எழுந்தது. அதோடு நிற்காது, ‘மாமா வந்ததும் என்ன சொல்லுவார்?’ என மாறி மாறிக் கேள்வி மேல் கேள்வியாக எழுந்த வண்ணம் இருந்தது.
சாப்பிடாமல் அரைகுறையாக எழுந்து செல்லும் நிதியைத் தடுக்க முனைந்து, மகனின் கண்ணசைவில் பேசாதிருந்த சுமி, அவனும் சாப்பிட்டதும் அவளருகில் வந்தமர்ந்து ஆதரவாக அவள் தலையை தடவியதும், அப்படியே அவர் மடியில் தலை சாய்த்தவள் குமுறி அழுதுவிட்டாள்.
‘‘இங்க பாரம்மா…இப்ப ஏன் அழுகிறாய்? உனக்குப் புவனியைப் பற்றித் தெரியாதா? ஏதோ ஒரு கோவத்தில கத்தி இருப்பாள். அதைப் பெரிசா எடுத்துக் கொண்டு இப்படியா காய்ச்சலை இழுத்துக் கொள்ளுறது? முதல் கண்ணைத் துடையும் பார்ப்பம்.’’
உள்ளே துடித்துப் போனாலும், கடிந்து கொள்ளும் குரலில் ஆறுதலாகவே சொன்னார் சுமி.
புவனி, தான் நிதியை அடித்தது தவிர்த்து மிகுதி விடயங்களை தொலைபேசியில் சொல்லியிருந்ததால், ரஞ்சன் இவளை விரும்புவதாய் சொன்னதால், தங்கை நிச்சயமாக தாறுமாறாக திட்டியிருப்பாள் என்று தெரிந்திருந்தாலும், நிதியின் அழுகையைக் குறைக்கும் வண்ணமே கதைத்தார்.
மெல்ல அவள் அழுகை குறையவும், ‘‘கொஞ்ச நேரம் போய் படும், கொஞ்சத்தில தெம்பாக எழும்பலாம்.’’ என்றவர், ‘‘வாம்மா கொண்டு போய் விடுறன்.’’ சொல்லிக்கொண்டே எழுந்தார்.
அவள் அழுவதை முகம் இறுகப் பார்த்துக்கொண்டே கைபேசியில் தன் தந்தையுடன் கதைத்துக் கொண்டிருந்த வசி, அன்றைய சில வகுப்புக்களை அடுத்த நாளுக்கு மாற்றியவன், தாய் அவளை கூட்டிக்கொண்டு எழ, ‘‘இல்லம்மா…நானே கூட்டிக்கொண்டு போய் விடுறன்.’’ என்றபடி வந்தான்.
நிதியோ, ‘‘இல்ல வேணாம், எனக்கு நித்திர எல்லாம் வரேல்ல ; நான் இங்கயே இருக்கிறன்.’’ அவசரமாக மொழிந்தவளை ஒரு வெருட்டல் பார்வை பார்த்தான் வசி .
‘‘இல்ல நிதி…கொஞ்ச நேரம் சரி ரெஸ்ட் எடும்…வாரும்.’’ வற்புறுத்தி மேலே அழைத்துச் சென்றவன், நேரே தன் அறைக்குள் நுழைந்து, வாசலில் தயங்கி நின்றவளின் கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்று, அங்கிருந்த மெத்தென்ற இருக்கையில் அமர்ந்து அவளையும் அமர்த்திவிட்டு அவளையே உற்று நோக்கினான்.
‘‘இப்ப…எதை நினைச்சு அழுகிறீர்? இனி நீர் எதையும் நினைச்சுக் குழம்பத் தேவையே இல்லை. உமக்கு நான் இருக்கிறன். எல்லாம் பார்த்துக் கொள்ளுறன்மா.’’
விழிகளில் நேசம் வழிய, குரலில் அன்பு கனியச் சொன்னதும், அவள் விழிகள் மீண்டும் குபுக்கென்று கசிந்தன.
‘‘இங்க பாரும்…இப்படி ஒரு அழுகுண்ணியா நீர்? அட! இது தெரியாமல் தேவையில்லாமல் நான் மாட்டிக்கொண்டனா? வசி! இனி உனக்கு தண்ணியைக் கூட்டித்தள்ளவே பொழுது போயிரும்.’’ அவளை மீட்க, பரிகாசம் செய்தான்.
அவன் கிண்டலில் முறைத்துக்கொண்டு எழப் போனவளை பிடித்து திரும்பவும் அமர்த்திக் கொண்டவன், ‘‘என்ன, கோபம் வருது போல! இது எல்லாம் சொல்லி வைத்த மாதிரி என்னட்ட மட்டும் தான் வருமா? சித்தியைப் பார்த்தால் இந்தக் கோபம் எங்க போய்ப் பதுங்கிறது நிதி?’’
திரும்பவும் சீண்டியவனின் முகம் சட்டென்று தீவிரமாய் மாறியது.
‘‘நீர் இனி அந்த வீட்டுக்குப் போக வேணாம்; அம்மாட்ட விபரமாகச் சொல்லுறன்.’’ குரலிலும் தீவிரமே வெளிப்பட்டது.
சிலநிமிடங்கள் அங்கே மௌனம் கதைபேசிக் கொண்டிருக்க இருவரும் ஒருவர் ஒருவரைப் பார்த்திருந்தார்கள்.
‘‘நிதி, நேற்று அங்க என்னம்மா நடந்தது? எனக்கு இன்னும் ஒன்றும் சரியாகத் தெரியாது அதுதான்..’’
அறிந்து கொள்ளும் நோக்கில் மௌனம் கலைத்தான் வசி.
அப்படிக் கேட்டவனைக் கலங்கும் விழிகளால் நோக்கியவள், சட்டென்று அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். சிறிது நேரத்தில் மெல்ல மெல்ல இரவு நடந்தவற்றைச் சொல்லச் சொல்ல, கேட்டிருந்த வசிக்கோ, தன் சித்தி மீதிருந்த ஆத்திரம் மேலும் அதிகரித்தது.
‘ரஞ்சன் விரும்பிறன் என்று சொன்னால், அதற்குப் போய் இவளையா அடிப்பது? திருப்பி ஒரு வார்த்தை கதைக்கமாட்டாள் என்ற தைரியம் தானே!’’ நினைத்துக்கொண்டவன், அவள் தொடர்ந்து சொல்ல, கவனிக்கத் தொடங்கினான் .
நடந்ததைச் சொல்லி முடித்தவள், ‘‘நான் இதுவரையும் ஒருகணம் கூட ரஞ்சன், ரதீஷ் ரெண்டு பேரோடும் அவே என்ர மச்சான்கள் என்று நினைச்சுப் பழகினதில்லை. ஆனால் ரஞ்சன்…’’ கண்கள் கலங்கச் சொன்னவளைத் தன்னுடன் அணைத்துக் கொண்டான் அவன்.
‘‘விடும் நிதி…ஏதோ அவன் தன்ர விருப்பத்தை, அதுவும் வீட்டில தானே சொன்னான். நீர் அப்படி நினைக்காவிட்டாலும், முறையென்று பார்த்தால் மச்சான் தானே? அதுதான் அவன் அப்படிக் கேட்டிருக்கிறான். அந்தக் கதையை இனி மறந்திரும் .’’ என்றவன் மெல்ல அவளை விட்டெழுந்து,
‘‘நீர் கொஞ்ச நேரம் படும்…எனக்குக் கொஞ்ச அலுவல்கள் இருக்கு முடிச்சிட்டு வாறன்.’’ என்று செல்லத் தொடங்க, தயக்கத்தோடு பார்த்தாள் அவள்.
‘‘வசி…நான்…ஒரு கால் பண்ணவா? இன்றைக்குக் கிளாசுக்கு வரேல்ல என்றும் பின்னேரம் வேலைக்கு வரேல்ல என்றும் சொல்ல வேணும் . என்ர ஃபோன் வீட்டில…’’ மெல்லிய குரலில் அனுமதி கேட்க, திரும்பி வந்து அவளருகில் அமர்ந்து அவளை நன்றாக முறைத்தவன், தவிப்பாகத் தன் முகம் பார்த்துக் கலங்கிப் போய் இருப்பவளை இழுத்து தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டான்.
‘‘அசடா என்ன நீர்? இப்பக் கொஞ்சத்துக்கு முதல் தானே சொன்னன், இது உம் வீடு என்று. பிறகு என்ன இப்படிக் கேட்கிறீர்?’’ என்றவன், தன் அணைப்பை மேலும் இறுக்கினான்.
‘‘இன்னொருதரம் இப்படிக் கதைச்சால் எனக்குக் கெட்ட கோபம் வரும் சொல்லீட்டன்.’’ என்றவாறே, அவள் முகத்தை மெல்ல நிமிர்த்தி, அவளை உற்று நோக்கிக்கொண்டே அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
இதுவரை அவன் அணைத்த போதேல்லாம், தவித்திருந்தவளுக்கு ஒரு பாதுகாப்பு என்ற உணர்வும் ஆறுதலுமே அங்கே மேலோங்கி நின்றது!
இப்போதோ, அவனின் இந்த இதழ் ஒற்றல் அவனை அவளால் இதமாய் உணரச் செய்தது. அவனில் ஒன்றியவளின் முகம் இப்போது மெல்லிய நாணத்தைக் காட்ட, அதைப் பார்த்து வெகுவாக இரசித்தான் அவன்.
‘‘அட..என்ர செல்லத்தால் இப்பிடி வெட்கம் எல்லாம் பட முடியுமா என்ன?’’ என்றவாறே திரும்பவும் அவள் முகம் நோக்கிக் குனிய, அவனைப் பிடித்து தள்ளிக் கொண்டு எழுந்தாள் அவள்.
‘‘ஏதோ வேலையிருக்கு என்று சொன்னீங்க தானே? முதல் போய் அதைப் பாருங்க!’’ என்றபடி பால்கனியை நோக்கிச் செல்ல, எழுந்து வந்து செல்லமாக அவள் மூக்கு நுனியைப் பிடித்து ஆட்டியவன்,
‘‘சரி சரி…இப்பப் போறன்…ம்ம்ம்…பாவம் காச்சல் என்று பார்க்கிறன், இல்லாட்டி …’’ என்று அவளைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்துக்கொண்டே வெளியேறியவன், அறையை விட்டு வெளியில் வந்ததும் திரும்பவும் சிந்தனைகளால் முகம் சுருங்கிப் போனான்.
‘எல்லாம் சமாளிக்கலாம்; ரஞ்சனை எப்படிச் சமாளிக்கப் போறனோ?’ என்ற குழப்பத்துடன் கீழே வரவேற்பறை நோக்கி நடந்தான்.
அவன் அப்பால் சென்ற பின், கல்லூரிக்கும் சனாவுக்கும் அழைத்துத் தன்னால் இன்று வர முடியாது என்று கூறி, தனது மாலை வேலையையும் அடுத்த நாளிற்கு மாற்றி வைத்து விட்டு, பால்கனியில் இருந்த கதிரையில் வந்தமர்ந்தாள் நிதி.
தவழ்ந்து வந்த குளுகுளு காற்று இதமாக உடலைத் தழுவிச் செல்ல, மனதிலும் உடலிலும் மெல்லிய புத்துணர்வு பரவினாலும், அதனை அனுபவிக்க முயலவில்லை அவள்!
பக்கவாட்டில் பரந்து விரிந்து தெரிந்த அழகிய மலர்த்தோட்டத்தை விழிகள் அளவெடுக்க முனைந்தாலும், அவை, அதன் இரம்மியத்தைச் சிறிதும் உணர்ந்து கொள்ளவில்லை!
அவள் வாழ்வில், முதல்நாளிரவில் இருந்து சற்றும் எதிர்பாராமல் திடீர் திடீரென்று நடந்த சம்பவங்களால் நிலைகுலைந்து போனவள், அதிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள மிகவும் பிரயத்தனம் செய்தாள்.
சிந்திக்கும் திறனையிழந்து தன்னை மறந்து தவித்தவள், மெல்ல மெல்லத் தன் வழமையான திடத்தையும், எதையும் தாங்கிக்கொள்ளும் மனத்தையும் மீட்டிருந்தாள்.
அக்கணமே, ‘இப்ப நான் இங்கயிருப்பதும், வசி வா என்றதும் வீட்டை விட்டு வந்ததும் சரியா?’ என்ற சிந்தனையைத் தொடர்ந்து, முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உழன்றாள்.
அதன் முடிவில், ‘நான் இங்க வந்திருக்கக் கூடாது. என்னதான் என்றாலும் நான் இப்பிடிச் செய்தது பிழைதான்.’
குற்றவுணர்வோடு நினைத்தவள், ‘மாமா வேலையால் திரும்பி வாறதுக்கு முன் வீட்டுக்குப் போக வேணும்!’ உறுதியாக முடிவெடுத்தாள்.

