என்றும் உன் நிழலாக 2 – 1

2

காரில் ஏறியதிலிருந்து ஒத்தவார்த்தை கதைக்காதவனின் பக்கம் மறந்தும் திரும்பவில்லை நிதி. அப்படிக் கதைத்தால் மட்டும் சட்டுச்சட்டென்று எதிரொலி இருக்குமாக்கும்.

வெண்பனியால் மூடி மஞ்சள் விளக்கொளியில் மின்னிச் செல்லும் மரங்களையும், கண்ணுக்குக் குளிர்ச்சியாய் வெள்ளை வெளேரென பனிப்போர்வையில் நகரும் வீடுகளையும், பாதையோரங்களில் நிறுத்தியுள்ள பனிப்போர்வை போர்த்த வாகனங்களையும் விழியால் தொட்டு வந்தவள், ‘கடவுளே! இன்றைக்கு இவர் வந்திராவிட்டால், சைக்கிளை உருட்டிக் கொண்டு…ஆண்டவா! பனியில விறைச்சுப் போயிருப்பன்.’ மனதில் முணுமுணுத்துக் கொண்டாள்.

வசியோ, முறைப்பாகவே வந்து, இந்திரன் வீட்டின் முன்னால் காரை நிறுத்திவிட்டு அவள் புறமாகத் திரும்பினான்.

‘‘அவே எல்லாரும் வர நேரம் செல்லும் என்று நினைக்கிறன்; வீட்டைப் பூட்டிக் கொண்டு தூங்கும்; குட்நைட்!’’ சிறுபிள்ளைக்குச் சொல்வது போல் சொல்லிவிட்டு அவள் இறங்குவதற்காகக் காத்திருக்க, தயங்கியபடி நோக்கியவள், “தேங்க்ஸ்.’’ முணுமுணுத்துவிட்டு, ‘‘வாங்களன் தோசை சுட்டுத் தாறன்; இனி, வீட்டுக்குப் போய்ச் சாப்பிட இன்னும் நேரம் போயிரும்; என்னால தானே இன்னும் சாப்பிடவும் இல்லை.’’ தயக்கமாகவே கேட்டாள்.

சட்டென்று அவன் முகபாவனை மாறிற்று! விழிகள் மின்ன, புருவம் உயர்த்தி வெகுவாக ஆச்சரியம் காட்டினான்.

‘‘பரவாயில்லையே! உங்களுக்குக் கூட இப்படியெல்லாம் கதைக்க வருமா? அதுவும் என்னட்ட! ஹாஹா…ஹாஹா… ரஞ்சன், ரதீஷ், பிறகு…அதுதான் உம்மட செல்லம் அந்த சனா பேபி…இவையளோட மட்டும்தானே கதைப்பீங்க! ம்ம்…’’ மீண்டும் நகைத்தான்.

அவள் எதுவுமே சொல்லாது நின்றாள்.

‘‘அதுவும் சரிதான், முதல் முதல் ஆசையாக் கூப்பிட்டிருக்கிறீர், வேணாமெண்டு போக மனம் வரேல்ல; சரி வாரும்.’’ என்று சொல்லிக்கொண்டே இறங்கிக் காரைப் பூட்டியவன், அவள் வாயிலைத் திறந்து உள்ளே வந்து மின்விளைக்கைப் போட, நேரே சமையலறைக்குள் சென்று அங்கிருந்த தொலைக்காட்சியை இயக்கியபடி அமர்ந்து கொண்டான்.

யாழிலிருந்து வெளிநாட்டுக்கெனப் புறப்பட்ட இந்திரன், எங்கு போகிறோம் என்றில்லாம் அலைந்து திரிந்து, எத்தனையோ இடர்களுக்குப் பிறகு நெதர்லாந்து நாட்டை வந்தடைந்தவர், எவ்வளவோ பாடுகள் பட்டுத் தன்னை மேம்படுத்தி இன்று ஒரு நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த வீட்டைக் கட்டத் தொடங்கும் போதே வாங்கியிருந்ததால், தங்கள் விருப்பத்துக்கேற்ப உள்ளமைப்பை மாற்றிக் கட்டியிருந்தார் அவர்.

வீட்டின் முன்வாசல் நிலமட்டத்தை விட கொஞ்சம் ஏற்றத்திலும், அருகிலேயே கராஜ் நிலமட்டத்தை விட்டுக் கீழிறங்கியும் காணப்படுவதுடன், அவர்களின் சமையலறை அமைந்திருக்கும் நிலத்துடன் கூடிய தளம், பின்பக்கத்தில் பெரிய கால்வாய் ஓட, அதன் மேலே டெராஸ் போடப்பட்டு கொள்ளை அழகுடன் காணப்படும்.

கராஜையும், சாதாரண வீட்டுக்கதவு, ஹீட்டர் எல்லாம் போட்டு அறை போலவே செய்திருந்தார். இவர்கள் வழமையாக நுழைவாயிலாக இந்த வாயிலையே பாவிப்பர்.

சமையலறையும் தற்போதைய வழமையான வீடுகள் போல வரவேற்பறையோடு இல்லாமல், நிலத்தோடு இருந்த பெரிய படுக்கையறையைச் சமையலறையாக மாற்றி அமைத்திருந்தார்.

அதோடு, எட்டுப்பேர் அமரக்கூடிய வகையிலான சாப்பாட்டு மேசையும், அருகிலேயே தொலைக்காட்சியும் மெத்தென்ற இருக்கையும் போட்டு அதுவே ஒரு வரவேற்பறையுடன் கூடிய சமையலறையாகக் காணப்பட்டது.

விரைந்து சென்று முகம் கழுவி வந்த நிதி, தோசைக்கல்லை வைத்து முறுக முறுக நான்கு தோசைகளைச் சுட்டெடுத்தாள்.

அதோடு, பகல் சமைத்திருந்த கறிகளையும் சூடு பண்ணி மேசையில் தயாராக வைத்து விட்டு, ‘‘வாங்க சாப்பிடலாம்.’’ என அழைக்கும் வரை, தொலைக்காட்சி பார்ப்பதென்ற பெயரில் அவள் தோசை சுடும் விரைவைப் பார்த்திருந்தவன், அவள் கூப்பிட்டதும் அமைதியாய்ச் சென்று சாப்பிட அமர்ந்தவனுக்கோ தோசை என்றால் உயிர்; அதுவும், எண்ணைய் விட்டு முறுமுறுப்பாய்ச் சுடும் தோசைக்கு அவன் பரம இரசிகன்.

அமைதியாக இரசித்து ருசித்து ஒரு தோசையைச் சாப்பிட்டவன், திடீரென்று நினைவு வந்தவனாக, ‘‘நிதி…’’ அவளை அழைத்தான்.

எதிரே அடுப்படியிலிருந்து என்னவென் பதாகத் திரும்பிப் பார்த்தாள் நிதி,

‘‘ரெண்டுபேருமாகத்தானே வந்தம்; உமக்கும் பசிக்கும் தானே? பாரும், நான் சத்தம் போடாமல் சாப்பிடத் தொடங்கீட்டன்.” என்றவன், “நீரும் வாரும்…சேர்ந்தே சாப்பிடலாம்.’’ கனிவாக அழைத்தான்.

‘‘இல்ல இல்ல…நீங்க சாப்பிடுங்க; எனக்குப் பசியில்லை.’’ இன்னுமிரண்டு தோசைகளுடன் வந்து அதனைத் தட்டில் வைத்தபடியே கூறினாள் அவள்.

‘‘இஞ்ச பாரும், இப்ப நீரும் வந்து சாப்பிடாட்டி நான் பேசாமல் போய்க் கொண்டே இருப்பன்; எப்படி வசதி?’’ மிரட்டலாகக் கேட்டவனைப் பரிதாபமாய்ப் பார்த்தாள் நிதி.

‘‘ப்ளீஸ்…எனக்குப் பசியில்ல; நீங்க சாப்பிடுங்கோ; நான் கொஞ்ச நேரத்தால சாப்பிடுறன்.’’ மீண்டும் சொல்ல, அதைக் கேட்டவன் கதிரையில்(இருக்கை) இருந்து எழ எத்தனித்தான்.

‘‘இல்ல இல்ல…இருந்து சாப்பிடுங்க. இன்னும் ரெண்டு சுட்டுக்கொண்டு வாறன்.’’ அவசரமாய்ச் சொல்லி அவன் எழுவதைத் தடுத்தவள், மேலும் சில தோசைகளைச் சுட்டுக்கொண்டு வந்து வைத்துவிட்டுத் தானும் அமர்ந்து உண்ணத் தொடங்க, அவனும் அமைதியாக உண்டு முடித்தவன், ‘‘அப்பா! இப்பத்தான் மனிசனுக்கு போன உயிர் திரும்பியிருக்கு! இப்பிடி நேரம் பிந்தி ஒரு நாளும் சாப்பிட்டதில்ல என்றாலும், நீர் ஆசையாச் சுட்டுத் தந்ததில் ரெண்டு கூடவே சாப்பிட்டிட்டன்.’’ முறுவலுடன் கூறியவன் அதன் பிறகு அங்கு தாமதிக்கவில்லை.

“சரி நிதி… நல்லா நேரம் போயிட்டுது; நான் போய்ட்டு வாறன்.’’ அவள் தலையாட்டலைப் பெற்றுக்கொண்டு வெளியேறினான்.

அவன் அப்பால் சென்றதும் கதவைப் பூட்டியவள், ‘‘அப்பாடா!’’ பெருமூச்சை வெளியேற்றியபடியே, சமையலறையில் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அன்றைய அலுப்புத் தீர சுடுநீரில் குளித்து முடித்து ஆறுதலாய்க் கட்டிலில் வந்தமர்ந்தவளின் விழிகளோ, ஏறக்குறைய ஒன்பது வருடங்களாகத் தான் தங்கியிருக்கும் அச்சிறு அறையைச் சுற்றி ஒருதரம் வலம் வர, மனமோ, தன்னையறியாமலே தான் முதன் முதல் இங்கு வந்ததை நினைத்துப் பார்த்தது.

யாழில், கொழும்புத்துறை என்ற இடத்தில், தங்கள் தூரத்து உறவினர் ஒருவரின் சிறு ஓட்டு வீட்டில் வாழ்ந்து வந்தனர் நிதி குடும்பத்தினர்.

அம்மா ரஞ்சிதம், அப்பா நாதன், ஆசை அண்ணா தனஞ்சயன், தம்பி, தங்கைகள் இருவர், என ஐந்து பிள்ளைகள் கொண்ட, வசதியில் நடுத்தரத்துக்கும் கீழ் நிலையில் உள்ள குடும்பம் அவளுடையது. வீட்டின் அருகிலேயே சிறு பலசரக்குக் கடையை நடத்தி வந்தார் நாதன்.

பத்தும் பத்தாமலும் வருமானம் வந்து கொண்டிருந்தாலும் ஓரளவுக்குக் குடும்ப வண்டி முக்கி முனகி நகர்ந்து கொண்டிருந்த வேளையில், அவர்களை இன்னும் சோதித்துப் பார்க்கும் விதமாய், எதிர்பாராமல் விபத்தொன்றில் சிக்கிய நாதன் தன் வலது காலை இழக்கும் நிலை ஏற்பட்டது.

சிலமாதங்களில் அதிலிருந்து குணமாகி வந்தாலும், கடையைத் தனியே கவனிக்க முடியாமல் போக அக்குடும்பமே ஆட்டம் கண்டு நின்றது.

பசி பட்டினி அறிமுகமாக, அதைப் பார்த்த வீட்டின் மூத்தவன் தனஞ்சயன் பெற்றவர்களின் எதிர்ப்பையும் மீறி, தந்தைக்கு உதவுவதற்காகத் தன் படிப்பை நிறுத்திவிட்டுக் கடையைக் கவனிக்கத் தொடங்கினான்.

இதனால், ஓரளவுக்குக் குடும்பத்தின் வறுமை நிலை கட்டுக்குள் வந்திருந்த நேரம், எல்லோர் மனதிலும் போல் தனா மனதிலும் ஒளிமயமான வாழ்வைப் படம் பிடித்துக் காட்டத் தொடங்கியது, வெளிநாட்டு ஆசை!

விளைவு? அதற்கான பெருந்தொகைப் பணம் தன்னிடம் இல்லையே என ஏங்கியவன், கடைசியில், இலங்கையை விட்டுப் போனால் நிச்சயம் தங்கள் வாழ்வை மேம்படுத்தலாம் என்ற நம்பிக்கையில், ஒருவழியாக முயன்று, தன் ஏக்கத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக வீட்டில் போராடி அனுமதி பெற்று அவசரம் அவசரமாகப் புறப்பட்டவன், அதே வேகத்தில் அவர்களை மொத்தமாகத் தவிக்கவிட்டுவிட்டு ஒரேயடியாகப் போய்ச் சேர்ந்து விட்டான்.

நெடுநெடுவென்று வளர்ந்து, அவர்கள் இதயத்தில் குடும்பத்தின் நம்பிக்கையாய் நிலைபெற்றிருந்த மகனின் இழப்பால் துவண்டனர் பெற்றோரும் இளையவர்களும்.

இப்படி, அவர்கள் எவ்வித எதிர்கால எதிர்பார்ப்புகளுமின்றி வாடி நின்ற போது, நெதர்லாந்தில் வசித்து வந்த ரஞ்சிதத்தின் ஒன்றுவிட்ட அண்ணன் இந்திரன், தன் சித்தியின் மகள், மகனை இழந்து குழந்தைகளுடன் வாடுகிறாள் என்று அவர்களைப் பார்க்க வந்தது மட்டுமின்றி, அங்கே, தனது அழகிய விழிகளில் சோகத்தை நிரப்பி, தானே காவல் என்பது போல தம்பி தங்கைகளை அணைத்துக்கொண்டு நின்ற நிதியைப் பார்த்தவர், ஏதோ ஒரு வேகத்தில் அவளைத் தான் தத்து எடுத்துக்கொள்வதாகச் சொல்லிக் கேட்டார்.

error: Alert: Content selection is disabled!!