என்றும் உன் நிழலாக 2- 2

அதைக் கேட்டதும் முதலில் திகைத்தனர், நிதியின் பெற்றோர்.

‘‘அதெப்படி அண்ணா! அவள் சின்னப்பிள்ளை…’’ கண்ணீருடன் மறுத்தார் ரஞ்சிதம். என்னதான் இல்லாமையோ துன்பமோ பிள்ளையை அத்தூரமாகப் பிரிவதா என்றிருந்தது அவருக்கு!

‘‘இங்க பார் ரஞ்சி, இந்தச் சந்தர்ப்பம் பிறகு வரவே வராது. பிறகொரு காலத்தில் நீங்க விரும்பினாலும் முடியாமல் இருக்கும். உன்ர குடும்பம் இருக்கிற நிலைக்கு இவள்தான் இப்ப மூத்தவள்; அங்க வந்தால் உனக்குத் தானே நல்லது? நான் என்ன பிறத்தியாளா? இவ்வளவு யோசிக்கிற!’’ என்று பலவாறாகக் கடிந்து கொண்டார் இந்திரன்.

அவர்களும் தாமிருக்கும் அநாதரவான நிலையை நினைத்துப் பார்த்தவர்கள் எவ்வளவோ மனப்போராட்டத்தின் பின், ‘அவள் சரி எங்கயாவது போய் நன்றாக வாழட்டும்.’ என்ற நோக்கில், அரிய வாய்ப்பாக இந்திரனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்கள்.

அங்கு நிதியின் கண்ணீரோ, ‘‘உங்கள் எல்லாரையும் விட்டுட்டுப் போகவே மாட்டன்!’’ என்ற அவள் கெஞ்சல்களோ கவனத்தில் எடுபடவேயில்லை.

‘‘உன்ர தம்பி தங்கச்சிகளுக்காகச் சரி நீ போய்த் தான் ஆக வேணும்.’’ என்றுசொல்லி, அழுது கரைந்தவளை ஒருவாறு சமாதானம் செய்தனர்.

அக்கணம், தம்பி தங்கைகள் பிரிவு, அன்பு அண்ணாவின் மறைவு எனக் கலங்கிய அவளுள்ளம், தன் விருப்பை அசட்டை செய்து வெளிநாடு அனுப்பும் பெற்றவர்கள் மீது தன்னையறியாது கோபமே கொண்டது.

‘அண்ணா மட்டும் இருந்திருந்தால் கடைசிவரைக்கும் இவையளோட வெளிநாட்டுக்கு அனுப்ப ஓமென்றிருக்க மாட்டார்.’ இப்படி, மனதில் அழுதாலும் வெளியில் அமைதியாக இருந்தாள் சிறுமி நிதி.

இந்திரனோ, தன் வீட்டிலும் பெண் குழந்தைகள் இல்லாததால் இல்லாமையிலும் இழப்பிலும் வாடும் தங்கை மகள் தம்மோடு வந்திருக்கட்டும் என்று முழுமனதாக நிதியை அழைத்துவர முன் வந்தாலும், அவர் மனைவி புவனி மட்டும் இதனைத் துளியும் விரும்பவில்லை.

‘‘உங்களுக்கென்ன தலையெழுத்தா? இது வேண்டாத வேலை. நீங்கள்தானா அவேக்கு உதவ வேணும்? சொந்தச் சகோதரங்களே ஒதுங்கி நிற்கேக்க உங்களுக்கென்ன வந்தது?’’ கணவரிடம் வாதாடினார்.

‘‘அதுவும், பொம்பளப்பிள்ளை வேற; இது எவ்வளவு பெரிய பொறுப்பு! நாளைக்குப் பிள்ளை நல்லா வராட்டி, எல்லாரும் உங்களத் தான் குறை சொல்லுவீனம்.” என, எப்படியும் கணவனின் மனதை மாற்றி விடலாம் என எண்ணி எவ்வளவோ வாதிட்டுப் பார்த்தார். முடிவில் கணவனின் பிடிவாதமே வென்றது.

புவனி, அவளை முழுதாய் வெறுத்து ஒதுக்குவதற்கு இதுவே அடிப்படைக் காரணமாய் அமைந்துவிட்டது. ஒருபோதும் தன்னை எதிர்த்தோ தன் யோசனையை மீறியோ நடக்காத கணவர், இவ்விடயத்தில் தான் சொன்னவற்றைக் கொஞ்சமும் கேட்காததில் அச்சிறுமி மீதே வெறுப்படைந்தார் அவர்.

இலங்கையில் இருக்கும் வரையிலும் சரி, நெதர்லாந்து வந்த பின்னுமே, நிதியை ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை அவர். பெரும்பான்மையான நேரத்தில் அவள் ஒரு சிறுபிள்ளை என்பதைக் கூட மறந்து விடுவார்.

நெதர்லாந்தில் வந்திறங்கியவர்களை வரவேற்கவென விமான நிலையத்திற்கு வந்திருந்தார், வசியின் தந்தை ஜீவானந்தம்.

புது இடத்துக்கே உரிய மிரட்சியை தன் வட்ட விழிகளின் உருட்டலில் வெளிப்படுத்தி, அறிமுகமற்ற மார்கழிக்குளிர் போட்டிருந்த ஆடைகளை மீறி உள்ளே ஊடுருவியதால் நடுங்கியபடி, இந்திரனின் பின்னால் தயங்கித் தயங்கி வந்த சிறுமியை முதல் பார்வையிலேயே அவருக்கு மிகவும் பிடித்துப் போனது.

அவள் தலையை ஆதரவாகத் தடவியவாறே தன்னை அறிமுகப் படுத்தியவரை, முதல் பார்வையிலேயே அவளுக்கும் பிடித்துப் போனது.

ஜீவானந்தம் கேட்டவைகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டே விமானநிலையத்தில் இருந்து கீழேயுள்ள கார் நிறுத்துமிடம் வந்தவர்கள், காரில் ஏறி அமரவும் காரை எடுத்தார் ஜீவானந்தம்.

வெளியில் எங்கு பார்த்தாலும் பனியால் மூடப்பட்டிருக்க, பகல்பொழுதில் கூட இரவு போல் வெளிச்சம் மங்கி இருந்ததை விழிகள் விரித்து வியப்பாகப் பார்த்துக்கொண்டு வந்த நிதி, காரில் ஹீட்டர் வேலை செய்தாலும் பழக்கமற்ற குளிரைத் தாங்க முடியாமல் நடுங்குவதை முன் கண்ணாடி வழியாகக் கண்டுகொண்டார் ஜீவானந்தம்.

‘‘புவனி…பிள்ளைக்குக் குளிருது போல, உங்களோட அணைஞ்சு இருக்கச் சொல்லுங்க!’’ அவளருகில் அமர்ந்திருந்த மைத்துனியிடம் சொல்ல, தமக்கையின் கணவரை முறைத்துப் பார்த்த புவனி, பதில் சொல்லவில்லை; பார்வையை அலட்சியமாக வெளிப்புறமாகத் திருப்பிக் கொண்டார்.

சட்டென்று திரும்பிப் பார்த்த இந்திரன், ‘‘என்ன நிதி குளிருதா?’’ என்றதற்கு, அவளின் இல்லையென்ற விரைந்த தலையாட்டலைப் பார்த்த ஜீவானந்தம் பொறுமையிழந்து, காரை ஓரமாக நிறுத்தி இறங்கியவர், பின் டிக்கியில் இருந்த பெரிய கம்பளிப் போர்வையை எடுத்து போர்த்திவிட்ட பின்னரே காரை எடுத்தார்.

இச்செய்கையில், நிதியின் மனதில் நிரந்தரமாய் இடம் பிடித்துக் கொண்டார் ஜீவானந்தம்.

வீடு வந்த பின், ‘‘இது தான் உன்ர ரூம்.’’ என்று சொன்னதுடன் தன் கடமை முடிந்தது என்று அப்பால் சென்றுவிட்டார் புவனி.

சிறிது நேரம் அங்குமிங்குமாக மருட்சியாய்ப் பார்த்திருந்தவள், பயணக் களைப்புப் போகக் குளிப்போம் என நினைத்துக் குளியலறைக்குள் சென்று வியப்பாக வாய் திறந்தபடியே பல நிமிடங்கள் நின்று விட்டாள்.

அவர்கள் கொழும்பில் தங்கியிருந்த விடுதியும் குளியலறை ஷவர் மற்றைய வசதிகளுடன் இருந்தாலும், ’இவ்வளவு பெரிதாக வடிவா இருக்கேல்ல!’ என நினைத்தவாறே, அந்த அழகிய குளியலறையைச் சுற்றித் தன் வட்டவிழிகளைச் சுழலவிட்டவாறே கதவை மூடிவிட்டுக் குளிப்பதற்கென ஷவரைத் திறந்தவள்,‘‘ஹையோம்மா!’’ என அலறிக் கொண்டு அப்பால் துள்ளி நகர்ந்தாள்.

ஆமாம்…அவளுக்குச் சுடுநீர் குளிர்நீர்…இப்படிக் குழாயால் வரும் என்பதே தெரியாது. வழமை போல திறக்க, வந்து விழுந்த சில்லிட்ட குளிர்நீரில் நனைந்து நடுங்கியவள், தான் கத்தியதும் கதவு தட்டப்படுவதை உணர்ந்து அவசரமாய்ச் சட்டையைப் போட்டுக்கொண்டு பயத்துடனே கதவைத் திறந்தவளுக்கு, அங்கே நின்ற மெல்லிய நெடியவனைக் கண்டதும் தன் அன்புத் தமையன் நினைவே முதலில் வந்தது.

அங்கு நின்றவனில் தன் தமையனையே கண்டாள் நிதி.

தமையனின் நினைவு, உடலில் பட்ட குளிர்நீரின் சிலிர்ப்பு, குடும்பத்தின் பிரிவு, அறியாத இடம் என அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து, அவளையும் அறியாமலேயே அவள் விழிகளைக் கலங்கடித்தன.

அவளை ஆர்வமாய்ப் பார்த்தான் ரஞ்சன்.

‘’ஹேய்! நீங்க நிதி…சரியா? நான் ரஞ்சன்; உங்கட மாமாட மூத்த மகன். சரி…அது இருக்கட்டும்…நீங்க ஏன்?’’ கேட்டவாறே உள்ளே பார்த்தவன், குளியலறை நனைந்திருப்பதையும், அவள் ஈர உடலில் சட்டையைப் போட்டிருப்பதையும் பார்த்து, ‘‘குளிக்கப் போறீங்களா நிதி?’’ மென்மையும் கனிவுமாகக் கேட்டவாறே, கைபிடித்து அழைத்துச் சென்று, எவ்வாறு சுடுநீர் வர குழாயைத் திறப்பது, சோப், பேஸ்ட், ஷம்போ என்பவை எல்லாம் எங்கு உண்டு என்று எடுத்துக் கொடுத்தவன், ‘‘சரி, இனிக் குளியுங்க!’’ என, அவள் தோளில் தட்டிவிட்டு அப்பால் அகன்றான்.

அன்றிலிருந்து இன்று வரை, இத்தனை வருடங்களாக அவளுக்கு இந்த வீட்டில் ஆறுதல் தேறுதல், கேட்காமல் முகம் பார்த்துப் பார்த்து உதவுவது எல்லாம் அவனே தான்.

புவனி எந்தளவுக்கு இவளை ஒரு பொருட்டாகக் கருதாமல் ஒதுக்கி அசட்டையாக இருப்பாரோ, அதை ஈடுசெய்யும் வகையில் ரஞ்சனும் அவன் தம்பி ரதீஷும் அவள் மீது மிகுந்த பாசமும் அக்கறையும் கொண்டவர்களாகவே இருந்து வருகின்றனர்.

இந்திரனோ, ஒரு போதும் வெளிப்படையாகத் தன் அன்பைக் காட்டாவிடினும், அவரும் அவளில் பாசமாகவே இருப்பார். அதனால் தானோ என்னவோ புவனியை அப்படியே அவரின் சிடுசிடுப்புக்களுடன் ஏற்கப் பழகிவிட்டாள் இவள்.

கட்டிலில் இருந்தவாறே இதையெல்லாம் நினைத்துப் பார்த்தவளின் இதழில் ஒரு அழகிய புன்னகை ரஞ்சனை நினைத்து வந்து போனாலும், இப்போதெல்லாம், அவன் உதவ முன்வருவதே அவளுக்கு வேதனை தருவதாய், அவனை விட்டுத் ‘தூரமாய் விலகிச் செல்!’ என்று, மனம் எச்சரிப்பதாய் இருந்தாலும், அவன் மேல் அவளுக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட, ‘என் அண்ணா போல!’ என்ற உணர்வு, அப்படியே வளர்ந்து அழகாய் உறுதியாய் உள்ளது.

ஆனால், அவன் மனதில் அவள் பற்றி?

 

error: Alert: Content selection is disabled!!