என்றும் உன் நிழலாக 21 – 1

21

சென்னை அடையார் பகுதியில், சுப்பிரமணியம் காலனியில் உள்ளது அந்த அழகிய மாளிகை!

இருள் விலகி ஒளி பரவிக் கொண்டிருக்கும் அழகிய அதிகாலைப்பொழுதிலேயே, அங்கிருந்து, சுப்ரபாதம் ஒலிக்கும் குரல் காற்றில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தது.

தம்மைச் சந்திக்கவென நாடு விட்டு நாடு வந்து, நெஞ்சு நிறைந்த எதிர்பார்ப்பும் ஆவலுமாக நிதியும் மற்றவர்களும் காத்திருக்கிறார்கள் என்பதைச் சிறிதும் உணராமலேயே, அவசரம் அவசரமாகத் தேநீரைத் தயாரித்துக் கொண்டிருந்தார் அவ்வீட்டரசி விமலா.

“இன்று எழுந்து வர கொஞ்சம் தாமதமாகிடுச்சு! அதுக்கு அப்பாவும் மகனுமா வந்து நேரம் காட்டி காலில் சுடுதண்ணி கொட்டின போல நின்னு அவசரப்படுவாங்க. ஆனாப் போகப் போவது ஜாகிங்.’’ முணுமுணுப்போடு தேநீரைக் கப்புகளில் ஊற்றிக்கொண்டிருந்தவர்,

“என்ன விமலா, காலையிலேயே ரொம்ப வேலை போல! வேலையோட வேலையா எங்களுக்குக் கொஞ்சம் சூடா ஏதாவது கிடைக்குமா?’’ என, தனது வழமையான குறும்பும் மிடுக்குமாய் வந்த கணவனையும், அவரருகில் அமைதியாக, உதடுகளில் என்றும் மறையாது காணப்படும் மெல்லிய புன்முறுவலுடன் வந்த செல்லமகன் கண்ணனையும் பார்த்ததும் முகம் மலர்ந்தார்.

“கண்ணா நல்லாத் தூங்கினாயாடா? இரவு ரொம்ப நேரமா அறையில வெளிச்சம் எரிஞ்சிதே.’’ என்றவர்,

“எங்கேடா ஜனனி, இன்னும் எழும்பவில்லையா? தலையிடி என்று சொன்னாள், இப்போது எப்படி இருக்கு!’’

மருமகளைப் பற்றி விசாரித்துக்கொண்டே கணவனைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்புடன் இருவருக்கும் தேநீரைக் கொடுத்தார்.

மகன் அருகில் நிற்பதையும் பொருட்படுத்தாமல் அன்பு மனையாளின் அழகு முகத்தை இரசித்துக்கொண்டே, “என்ன விமலா சிரிப்பு? அதை அப்படியே வெளியே எடுத்து விட்டா…நாங்களும் சேர்ந்து சிரிப்போமே!’’ என்ற மனோகர்,

“என்ன கண்ணா நான் சொல்லுறது சரி தானே?’’ மகனையும் துணைக்கழைத்தார்.

கண்ணனோ அதே மென்முறுவலுடன், “கொஞ்சம் வேலைகள் இருந்ததும்மா அதுதான்…முடித்துட்டே படுத்தேன்; நல்லாத் தூங்கினேன்மா.’’ என்றவன்,

“ஜனனி எழுந்திட்டா, இப்போது வருவா. தலையிடி சுகமாம்.’’ என்றவாறே அருகிலிருந்த கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தவன், பெற்றவர்களின் செல்லச் சண்டையை இரசிக்கத் தயாராகினான்.

முகம் புன்னகையால் நிறைய கணவனை ஏறிட்டார் விமலா.

“இல்லை…அது வேறொன்றும் இல்லை. இப்படி அவசரம் அவசரமா நீங்களும் விடாம நடக்க…ஓட என்று போறீங்க…ஆனா…’’ சொல்லி நிறுத்தியவரின் பார்வை கணவனின் தொப்பையில்!

உடனே, தொப்பையை உள்ளிழுத்துக் கொண்ட மனோகர், அசட்டுச் சிரிப்புடன் மகனையும் மனைவியையும் பார்த்தார்.

“அட இது…பரம்பரை விமல். ஆனாலும் உங்க அண்ணாவைவிடப் பரவாயில்லைத் தானே!

அவனும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அது இது என்று எத்தனையோ செய்கின்றான். பசிக்குக் கூட ஆசைப்பட்டதைச் சாப்பிடாமல் இருக்கின்றான். நான் அப்படியா?’’ மனைவி யாரை உள்ளிழுத்தால் வாயை மூடுவார் என நன்றாகத் தெரிந்து, விமலாவின் அண்ணனும், தன் உயிர் நண்பனும், இவர்களின் தொழில்துறைப் பங்காளனும் தன் மருமகளின் தந்தையுமான கிருஷ்ணனின் தொப்பையைப் பற்றிக் கதைக்கத் தொடங்கினார்.

“உங்களுக்கு ஆ ஊ என்றால் என் அண்ணாவை இழுக்காட்டி சரிவராதே!’’ குறைப்பட்டார் விமலா.

சமையல் வேலை செய்யும் நாகம்மாவிடம் காலைச்சமையலுக்கு வெண்பொங்கலும் வடையும் செய்யச் சொல்லிவிட்டு, தன் தேநீர் கோப்பையோடு வந்தமர, மாடியிலிருந்து வந்தாள் மருமகள் ஜனனி.

“மோர்னிங் அத்தை, மோர்னிங் மாமா.’’ என்றவள், நாகம்மா கொண்டு வந்த தேநீரை வாங்கிக்கொண்டே கணவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“இங்க பாருங்க…நல்ல பிள்ளைகளாட்டம் இரண்டு பேரும் கொஞ்ச நேரம் நில்லுங்க, ரசித்து ருசித்து டீயக் குடித்துட்டு ஜாகிங் வருகிறேன்.’’ சொன்னவள், கணவனின் லேசான முறைப்பையோ அவன் நேரத்தைப் பார்ப்பதையோ கொஞ்சமும் பொருட்படுத்தாது ஆறுதலாகத் தேநீரை அருந்தத் தொடங்கினாள்.

“ராஜாத்தி…தலையிடி சுகமா?’’ அன்புடன் கேட்ட விமலாவிற்கு, “ம்ம்… இப்போ இல்ல அத்தை..’’ என்றவள் தேநீரை அருந்தி முடிக்கும் வரை பொறுமையாக அமர்ந்திருந்து அவளையும் அழைத்துக்கொண்டு செல்லும் கணவரையும் மகனையும் இளநகையுடன் பார்த்திருந்த விமலாவின் நினைவலைகள், மகனையும் மருமகளையும் அவர்கள் இணைந்ததையும் தொட்டுப்பார்க்க விளைந்தது!

 

பெரும் செல்வந்தக் குடும்பத்து ஒரே பெண் வாரிசு விமலா! அவர் தந்தை புகழ் பெற்ற இருதய சிகிச்சை நிபுணர். அதுமட்டுமின்றி, அடையார் அண்ணாநகர் மேற்கில் சொந்தமாக ஒரு வைத்தியசாலையை நடத்தி வருகின்றனர்.

அங்கு மருத்துவராக வேலை செய்த தன் உயிர் நண்பன் மனோகரும் விமலாவும் ஒருவரை ஒருவர் விரும்பவே, திருமணம் செய்து வைத்து, தன் கண்ணான தங்கையின் கணவரையும் தம் வைத்தியசாலையில் பங்குதாரராக சேர்த்துக் கொண்டார் கிருஷ்ணன்.

அவரும் அங்கே குழந்தைப் பேறு வைத்திய நிபுணராக பணியாற்றுகிறார். கிருஷ்ணனும் மனைவி ஜீவிதா, மகள்கள் ஜனனி, ஜமுனா மற்றும் பெற்றோர்களுடன் இதே இடத்தில் கொஞ்சம் தள்ளி வசித்து வருகின்றார்.

 

சிலமாதங்களின் முன்…

 

ஒவ்வொருவரும் தத்தம் வேலைகளுக்குப் புறப்படும் பரபரப்பில் இருக்கும் சுறுசுறுப்பான காலைவேளையில், விமலாவின் அண்ணன் கிருஷ்ணன் வீட்டில் அவர் மனைவியோ ஆற்றாமையுடன் கத்திக் கொண்டிருந்தார்.

“ஜனனி.. இது என்ன பழக்கம்! முதல் எழுந்து வந்து கதவைத் திற!

உனக்கு இப்ப வரவர பிடிவாதம் கூடிக் கொண்டே போகுது. எல்லாம் இந்த வீட்டுப் பெரியவர்கள் கொடுக்கும் செல்லம். பொம்பளப் பிள்ளையை ஆம்பிள மாதிரி வளர்த்தால், கடைசியில இப்படித் தான் நடக்கும். நான் தலைப்பாடா அடித்துக் கொண்டும் ஒரு பயனும் இல்ல. கடைசியில இப்ப…’’

மகளுடன் சேர்ந்து கணவர், மாமா, மாமி எல்லோருக்கும் அர்ச்சனைகள் செய்தார்.

நேற்றைய வாக்குவாதத்தின் தொடர்ச்சியாக காலையிலேயே தன்னுடன் சண்டை போட்டு, அறைக் கதவைத் தாளிட்டுக்கொண்டு உள்ளேயே அமர்ந்திருக்கும் மகளை வெளியில் வரவைக்கும் முயற்சியில், கடந்த ஒருமணி நேரத்துக்கும் மேலாக ஈடுபட்டிருக்கும் ஜீவிதா, தன் முயற்சியில் சிறிதும் அயராது தொண்டைத்தண்ணி வற்றும் மட்டும் கத்திக்கொண்டே இருந்தார்.

அதற்குப் பயன் தான் எதுவுமே இருக்கவில்லை!

மூடியிருக்கும் தமக்கையின் அறைக் கதவையும், கத்திக்கொண்டே வேலையாட்களுக்கு வேலைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் தாயையும், பரிதாபமாகப் பார்த்தாள் இரண்டாவது மகள்.

“ஹையோம்மா… விடுங்க…விடுங்க! அவள் வேண்டும் என்றால் வந்து சாப்பிடட்டும்…கல்லூரிக்குப் போகட்டும். இல்லையா பூட்டிட்டு இன்றைக்கு ஒருநாளைக்கு உள்ளுக்குள்ளே இருக்கட்டும்மா. ஒருநாளாவது இவளோட படிக்கிற அத்தனை பேரும் சந்தோசமா இருக்கட்டும்.’’ கேலியாகச் சொல்லிக்கொண்டே காலை உணவிற்காக வந்தமர்ந்தவள், பிளஸ் டூ மாணவி, தன் தமக்கையில் உயிரானவள், ஆனால், தமக்கைக்கு நேர் எதிர்க் குணமுடையவள்.

தமக்கையின் ஆசையையும், அதனை மறுக்கும் வீட்டுப் பெரியவர்களையும் நினைத்துப் பார்த்து மனதில் மிகவும் கஷ்டப்படுபவள், தமக்கையின் செய்கைகளில் மிகுந்த நம்பிக்கை உடையவள் ஆனபடியால், ‘அக்கா எப்படியும் தான் நினைத்ததை முடித்திடுவாள், இந்த அம்மா கடைசியில கத்துறது தான் மிச்சம்.’ என நினைத்து, தன் அன்னைக்காக பரிதாபப்பட்டவள், தாய் தட்டில் வைத்த பூப்போன்ற இட்லியைத் தேங்காய் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிடத் தொடங்கினாள்.

நடுத்தரவர்கத்தில் இருந்து இப்பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு வந்த ஜீவிதா, மிகவும் பொறுமை வாய்ந்த அமரிகையான மருமகள் தான். ஆனால், அவர் மூத்த மகள் ஜனனியோ, பத்துப் பெண்கள் சேர்ந்து அடிக்கும் கொட்டத்தை ஒரே ஆளாகச் செய்யக் கூடியவள். அவள் வீட்டில் நிற்கும் எந்த நேரமும் அம்மாவுக்கும் மகளுக்கும் போர் தான்.

தந்தை கிருஷ்ணனோ, தன் மகளின் வாயாடித்தனத்தை மிகவும் இரசித்து, அவள் கன்னத்தில் தட்டித் தன் ஆதரவை வழங்கிச் செல்வார்.

தாத்தா பாட்டி பற்றிக் கேட்கவும் வேண்டுமா? தங்கள் செல்லப் பேத்தி, தங்கள் வீட்டு மகாலக்ஷ்மி எது செய்தாலும், அது அவர்களுக்கு பெரிதாகவே தோன்றியது.

இதையெல்லாம் விட, அவள் அத்தை விமலாவும் மாமா மனோகரும் அவளைத் தங்கள் பெண்ணாகவே சீராட்டுவார்கள் .

கிண்டி பொறியியல் கல்லூரியில் கடைசி வருடத்தில் படித்துக் கொண்டிருக்கும் அவள் செய்யும் சேட்டைகள் அனைத்தையும் இதுவரை பொறுத்த அவள் குடும்பத்தினர் கூட, இப்போது அவளுக்காகக் கதைக்க மறுத்து விட்டனர். அவள் ஆசைக்கு மறுப்பாகத் தலை அசைத்து விட்டனர்.

விரும்பி ஆசைப்பட்டுக் கேட்கும் முன்பே அவள் மனமறிந்து, தேவையானவை தேவையற்றவை, முக்கியமானவை முக்கியமற்றவை என்ற பாகுபாடு இன்றி, எல்லாவற்றையும் பூர்த்தி செய்த அவள் குடும்பம், இன்று, அவள் விரும்பிக் கேட்ட விடயத்தில் ஒட்டு மொத்தமாக மறுப்பை வெளிக்காட்டி விட்டனர்.

இதுதான் இன்று ஜனனியின் கோபம் உச்சகட்டத்தைத் தொட்டதன் முக்கிய காரணம் .

தாயின் காட்டுக் கத்தலை சிறிதும் பொருட்படுத்தாது அறையில் முடங்கிக் கிடந்தவள், ‘இன்று இந்த விசயத்துக்கு ஒரு முடிவு கட்டாமல் நான் கல்லூரி செல்வதில்லை.’ என்று முடிவெடுத்து விரைந்து தயாராகி வெளியில் வந்தவள், அவள் அறையிலேயே ஒரு கண்ணை வைத்து நடமாடிக் கொண்டிருந்த தாயின் எரிக்கும் பார்வையில் வசமாகச் சிக்கிக் கொண்டதும், தயக்கமின்றி, தாயின் கோப விழிகளைத் தாங்கி நின்றன, அவள் அழகிய நயன விழிகள்!

error: Alert: Content selection is disabled!!