23
வீடு வந்த கண்ணன், வழமை போல ஜனனியுடன் மல்லுக்கட்டி, அவள் சேட்டைகளுக்கு ஈடுகொடுத்து ஒருமாதிரித் தயாராகி, தாய் ஆசை ஆசையாகத் தயாரித்துப் பாசமாகப் பரிமாறிய காலையுணவை உண்டு விட்டு வைத்தியசாலைக்குப் புறப்பட்டான்.
வைத்தியசாலையை வந்தடைந்து காரை நிறுத்திவிட்டு, வைத்தியசாலையின் பக்கவாட்டில் இருக்கும் கதவு வழியாக உள்ளே நுழைந்தவன், எப்போதும் போலவே படிகளின் வழியாக ஏறி மூன்றாம் தளத்தின் கோடியிலுள்ள தன்னறைக்குள் சென்றமர்ந்து நேரத்தைப் பார்த்தவன், அது ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்கவும், ஒன்பதரைக்குள் முக்கியமான தொலைபேசி அழைப்பொன்று வருமென்பதால், பார்க்க வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டே அதற்காகக் காத்திருக்கத் தொடங்கினான்.
இவன் வருவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்னரே நிதியும் மற்றவர்களும் அங்கே வந்திருந்தார்கள்.
எவ்வித முன் அனுமதியுமின்றிக் கூட்டமாக வந்திருந்தவர்கள், அவ்வைத்தியசாலையின் நிர்வாகத்தைப் பொறுப்பாக நடத்தும், கண்ணனைப் பார்க்க வேண்டும் என்றதும் அதிசயமாகப் பார்த்தாள், வரவேற்பில் அமர்ந்திருந்த பெண்.
இதுவரை எவரும் இப்படி வராதது அவள் வியப்புக்கு வலு சேர்த்தது.
எது எப்படி இருந்தாலும் தன் மனதிலெழுந்த கேள்விகளைப் புறந்தள்ளிய அப்பெண், தன் வேலையைச் சரி வரச் செய்ய நினைத்து, “அவர் இன்னும் வரவில்லை; எப்படியும் ஒன்பது மணிபோலத் தான் வருவார்; விசிட்டர்ஸ் ரூமில் காத்திருங்க.’’ மரியாதையுடன் சொன்னவள் தன் வேலையை தொடர்ந்திருந்தாள்.
துடிக்கும் மனதுடன் காத்திருக்கத் தொடங்கினர், நிதியும் மற்றோரும்!
ஒன்பது மணிக்குப் பத்து நிமிடங்கள் இருக்கையில் அங்கு வந்த லைலா, இரவுப்பணியில் இருந்த பெண்ணிடமிருந்து பணியை ஏற்றுக் கொண்டவளின் பார்வை எதிரே இருந்த விருந்தினர் அறையில் பதிந்து விலகியது.
“இவர்கள் யாராய் இருக்கும்? காலையிலேயே வந்து இங்க அமர்ந்து இருக்கிறார்கள்! பார்த்தால் வைத்தியம் பார்க்க வந்தவர்கள் போலத் தெரியலையே!” முணுமுணுத்தபடி, ஏற்கனவே பணியில் இருந்தவளிடம் விசாரித்தாள்.
அவள் கூறிய பதில் இவளை யோசிக்க வைத்தது. பின், ஒரு முடிவுடன் விருந்தினர் அறை நோக்கிச் சென்றவள், வாயிலருகில் அமர்ந்திருந்த இந்திரனிடம் கதைத்து, அவர்கள் நெதர்லாந்தில் இருந்து வந்திருப்பதை அறிந்து கொண்டதும் அவளுள் ஆயிரம் ஆயிரம் கற்பனைகள் படையெடுக்க ஆரம்பித்தன!
எவ்வளவு கேட்டும், “கண்ணனைப் பார்க்க வேணும் …சொந்த விசயம்.’’ என்றதற்கு மேல் அறிய முடியாதிருக்கவே குழப்பம் மறையாது திரும்பியவள், மீண்டும் எதையோ நினைத்துக்கொண்டு இந்திரனை நாடினாள்.
“சார் உங்க சொந்த ஊர்…இலங்கையா?’’ ஓர் எதிர்பார்ப்பில் கேட்க, அவள் தயங்கிக்கொண்டு கேட்ட விதத்தில் மென்னகை புரிந்த இந்திரன், “ஓம்’’ என்றவர், “எங்கட தமிழ் தான் அதைச் சொல்லாமல் சொல்லி விடுமே.’’ என்றதும், தலையாட்டிவிட்டு விரைந்து வந்தவள், அவசரமாக, உற்றதோழி ஜனனிக்கு அழைப்பை ஏற்படுத்தினாள்.
கீழே விருந்தினர் அறையில் அமர்ந்திருந்த நிதிக்கோ இருப்புக் கொள்ளவில்லை. இங்கு வந்தமர்ந்ததில் இருந்து நொடிக்கொருதரம் முன்னே சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தில் பார்வையை பதித்து மீட்டவள், உடல் சில்லிட்டு நாக்குவறண்டு இன்னதென்று சொல்ல முடியாத தவிப்பில் தவித்துக் கொண்டிருந்தாள்.
நகராமல் நகரும் நேரத்தை மெல்ல மெல்லத் தள்ளிக்கொண்டே, அருகில் அமர்ந்திருந்த வசியின் கரத்தை இறுகப் பற்றியவாறு அமர்ந்திருந்தவள், மணி ஒன்பதைத் தொட்டது தான் தாமதம், வரவேற்பில் இருந்த லைலாவிடம் சென்று, “கண்ணண் வந்திட்டாரா?’’ என்றாள், முழுவதுமாகப் பதற்றத்தில் குளித்தக் குரலில்!
‘இது யாரு இப்படி முகத்தில் அடிப்பது போல பெயரைச் சொல்லிக் கொண்டு வந்து நிற்பது?’ என்ற எண்ணத்துடன் கணனித்திரையில் பதித்திருந்த விழிகளை நிதி மீது நிலைக்க விட்ட லைலா, தன் முன் வந்து நிற்பவளை அப்போது தான் முழுமையாகப் பார்த்தாள்.
அவளுக்குத் தன் கண்களையே நம்பமுடியவில்லை! சற்றுமுன் இந்திரனுடன் சென்று கதைக்கும் போது, இவள் பக்கவாட்டில் திரும்பியிருந்து காயாவுடன் கதைத்துக் கொண்டிருந்ததால், லைலா அவளின் முகத்தை நன்றாகக் கவனிக்கவில்லை. இப்போதோ, தன்னையறியாது இருக்கையை விட்டு எழுந்தவள், வியப்பும் அதிர்ச்சியும் கலந்த பார்வையை நிதியில் நிலைக்க விட்டவாறே வாயடைத்து நின்றாள்.
தான் கேட்டதும் அப்பெண்ணில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்தாலும், அக்கணம் “அது ஏன்?’’ என்று ஆராயத் தோன்றவில்லை நிதிக்கு! அவளுக்கோ எப்படியும் கண்ணனைக் கண்டு விடும் அவசரம்.
‘ஐயோ… கேட்டதற்குப் பதில் சொல்லாமல், இவா ஏன் என்னை அதிசயப்பிறவியைப் பார்க்கிற மாதிரிப் பார்க்கிறா?!’ என நினைத்தவள், கொஞ்சம் அழுத்தமும், ஏகத்துக்குப் பதற்றத்தையும், இலேசாக அழுகையையும் கலந்த குரலில்,
“கண்ணன் வந்திட்டாரா? ஒன்பதுக்குப் பார்க்கலாமென்று இங்க முதல் இருந்தவா சொல்லித்தான் நாங்க இவ்வளவு நேரமாக் காத்திருக்கிறம்.’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே இந்திரனும் மற்றவர்களும் அவ்விடம் வந்தனர்.
அதுவரை நிதியின் முகத்தில் விழிகள் நிலைக்க ஒரு பொம்மை போல் அசையாது நின்றிருந்த லைலா, கண்ணனைத் தேடிக்கொண்டு ஆட்கள் அதுவும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளார்கள் என்று தோழியிடம் சொன்னதும், தான் புறப்பட்டு வருவதாகவும், அதுவரை, கண்ணனைப் பார்க்க அனுமதிக்க வேண்டாமென்றும் ஜனனி சொன்னதைக் கூட மறந்த நிலையில்,
“மூன்றாவது மாடியில்…கடைசியில் அலுவலகப் பகுதி இருக்கு, அங்கு போனதும் முதல் அறை…அவரோடது.’’ தட்டுத் தடுமாறிச் சொன்னவளோ, அவர்கள் அப்பால் விரைந்து நகரவும் தொப்பென்று இருக்கையில் அமர்ந்து விட்டாள் .
நிதியைக் கவனிக்காது, தம் வேலைகளில் ஈடுபட்டிருந்த வரவேற்பில் பணிபுரியும் மற்றைய பெண்களிருவரும், தொப்பென்றமர்ந்த லைலாவின் அதிர்ந்த நிலையைப் பார்த்தவர்கள், “லைலா என்னாச்சு? உடம்புக்கு ஏதும் செய்யுதா?’’ என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது, பதற்றமாக ஓடி வந்தாள் ஜனனி.
ஓய்ந்து போய் அமர்ந்திருந்த தோழியின் முன் வந்து நின்ற ஜனனி, ஆளரவமின்றிக் காணப்பட்ட விருந்தினர் அறையில் பார்வையை ஓட்டி மீட்டாள்.
“எங்கடி அவங்க? நீயேன்டி இப்படி ஒரு மாதிரி இருக்கிறாய்?’’ தோழியிடம் கேட்க, தன்னுணர்வு பெற்ற லைலா, தான் கண்டதையும் அவர்கள் கண்ணனைக் காணச் சென்றதையும் திக்கித் திக்கிச் சொன்னதும், “நான் அவ்வளவு சொன்ன பிறகும் நீ இப்படிச் செய்திருக்கிறாய்; லூசாடி நீ?’’ சீறிய ஜனனி, கணவனின் அறையை நோக்கி வேகமாக ஓடினாள்.
தன்னுடன் கூட வந்தவர்கள் வருகிறார்களா என்பதையோ, ஓடிச் செல்லும் தன்னை எதிர்ப்படுபவர்கள் வித்தியாசமாகப் பார்ப்பதையோ சிறிதும் பொருட்படுத்தாது, லிஃப்ட்டுக்கு கூடக் காத்திராமல் மின்னல் வேகத்தில் மூன்றாம் தளத்தை வந்தடைந்த நிதி, அலுவலகப்பகுதியை அடையாளம் கண்டு, ‘கண்ணன்’ என்ற பெயர்ப்பலகை பொருத்தியிருந்த அறைக்கதவைச் சடாரென்று திறந்தாள்.
திடீரென்று கதவு திறபட, மேசையின் பின்னாலிருந்து திகைப்போடு எழுந்தான் கண்ணன்.
அவன் நெடிய உருவம் இவள் விழிகளில் பட்ட கணம் உடல் விறைக்க அப்படியே சிலையானாள் நிதி.
மறுகணம், நடுக்கமெடுத்த இதய ஆழத்திலிருந்து குபீரென்று சீறிவந்த கேவல் ஒலி தொண்டைக்குழியில் சிக்குப்பட்டு அவஸ்தையளிக்க, மின்னலாகப் பாய்ந்து சென்று அவனை இறுகக் கட்டிக்கொண்டவள் கதறிவிட்டாள்.
எவ்வித அறிவிப்பும் இல்லாமல் கதவு திறபடவும் என்ன இது என்ற எரிச்சலோடு எழுந்த கண்ணன், அங்கு நின்றவளைப் பார்த்து அசையமறந்து நின்று விட்டான். அவன் பார்வை அவள் முகத்தில் பட்டு, அவன் மூளையில் பதிவாகிய கணத்தில், உடல் முழுவதும் கிடுகிடுக்க விழிகளிமைக்க மறந்து சமைந்து நின்றான் அவன்.
சிந்திக்கும் திறன் தொலைத்து நின்றவன், அவள் வந்து கட்டிப்பிடித்துக் கதறியதில் இதயத்தைப் பிழியும் வேதனையைத் துல்லியமாக உணர்ந்து கொண்டான்.
அவன் இமைகள் தாமாகத் தாழ்ந்து இறுக மூடிக்கொள்ள, அவன் அனுமதி வேண்டாத நடுங்கும் கரமிரண்டும் அவளை அணைத்துக் கொண்டன!
நிதியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து வந்தும், அவள் வந்து சிலபல வினாடிகளின் பின்னரே இந்திரனும் மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்.
அங்கே, நிதி கண்ணனைக் கட்டிக்கொண்டு கதறிய காட்சியைப் பார்த்தவர்கள் வாயிலில் சிலையென நிற்க, மூச்சிரைக்க ஓடிவந்த வேகத்தில் அவர்களைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் ஜனனி.
தன் ஆருயிர்க்கணவனை இன்னொரு பெண் அணைத்து நிற்பதைப் பார்த்தவளுக்குச் சற்றுமுன் லைலா சொன்னவை எவையுமே நினைவில் வரவேயில்லை.
மிகுந்த சினத்தோடு நெருங்கி ஒரே இழுப்பில் நிதியைப் பிரித்தெடுத்தவள் கண்ணிமைக்கும் நேரத்தில் பளாரென்று அறைந்து விட்டாள்.
வாயிலில் அதிர்ச்சி கலையாமல் நின்றவர்கள் என்னவென்று உணரும் முன், மனைவியின் வருகையை கண்ணன் உணருமுன் அறைந்திருந்தாள் ஜனனி.
அப்போதும் அவள் கோபம் அடங்கவில்லை.
“ஏய்!” என்ற கூவலோடு முன்னேறிய வசியைச் சிறிதும் பொருட்படுத்தாது நிதியை நோக்கி முன்னேறினாள் அவள்.
எதிர்பாராது வாங்கிய அடியில் சுழன்று எதிரிலிருந்த சுவரில் மோதி நின்ற நிதி, அதிர்வோடிய முகத்தோடு ஜனனியை ஏறிட்டாள்.
அவள் பார்வையை தாங்கிக்கொண்ட ஜனனியின் சர்வாங்கமும் அசைவற்றுப் போனது.
அதேகணம், விழிகளிலும் புத்தியிலும் விழுந்திருந்த ஆத்திரமெனும் திரை சுக்குநூறாராகிப் போக, சற்றுமுன் லைலா சொன்னது அப்போதுதான் அவள் சிந்தைக்குத் தெளிவாகியது.
“டி.. கண்ணன் அண்ணா போலவே அந்தப் பெண்ணின் முகமும் இருக்குடி; கலர் மட்டும் தான்டி வேற!’’ லைலாவின் குரல் அவள் காதோரமாக ரீங்காரமிட, பேரலையாக எழுந்த அதிர்வோடு கணவன் புறம் திரும்பினாள்.
அவனோ, விழிகள் கலங்க செய்வதறியாது நின்றிருந்தான். நடப்பது எதையும் கிரகிக்கும் சக்தி தொலைத்து நின்றான் கண்ணன். அவன் விழிகள் மட்டும் நிதியை விட்டு அகலவில்லை.
“நிதி!” என்றவாறே தன்னை நோக்கி வந்த வசியையும், அதிர்ந்து நின்றுவிட்ட ஜனனியையும் கண்ணிமைப்பொழுதில் கடந்து சென்று மீண்டும் தமையனை இறுக கட்டிக்கொண்டாள் நிதி.

