22
தங்கள் வைத்தியசாலையின் கீழ்த்தளத்தின் கோடியிலுள்ள தனது அலுவலக அறையில் வந்தமர்ந்த கண்ணனுக்கு, “அப்பாடா’’ என்று ஆயாசமாய் இருந்தது!
காலையில் ஒன்பது மணிக்கு வங்கியின் முகாமையாளருடன் இருந்த முக்கிய சந்திப்பை எவ்வளவோ தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெற்றிகரமாக முடித்தவன் இதோ வந்தமர்கின்றான் .
இன்றைய பொழுதும் எப்போதும் போலவே புலர்ந்தாலும், வைத்தியசாலைக்குப் புறப்படுவதற்கு முன்னர் தானும் தாயும் கதைத்தவற்றைக் கேட்டுக்கொண்டு வந்து நின்ற ஜனனி, அதன் பிறகு அவனைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி விட்டாளே!
அதை நினைக்கையில் அவள் மீது என்றுமில்லாதவாறு கோபம் பொத்துக்கொண்டு வந்தது இவனுக்கு!
தாயின் முகத்துக்காக மட்டுமே அவள் செய்யும் சீண்டல்களையெல்லாம் கண்டும் காணாதவாறு இத்தனை நாட்களும் இருந்து வந்தான் கண்ணன்.
ஆனால், ‘இப்போதோ காதலிக்கிறேன் என்று சொல்லி என் உயிரை வாங்குறாளே!’ என நினைத்துக்கொண்டவன், ‘இந்த உயிர் இருந்து தான் என்ன பயன்?’ என்ற எண்ணம் மின்னலாய் வந்து போனதைத் தடுக்க முடியாமல் வேதனையில் திணறினான்.
இந்தச் சில வருடங்களாய் நெஞ்சை அறுக்கும் வேதனையை முழுங்கிக் கொண்டு, தனக்காகத் தன் மகிழ்ச்சிக்காக வாழும் பெற்றவர்களின் தன்னலமற்ற அன்பிற்காகத் தன்னை அமைதிப்படுத்தி வாழ முயன்று, அதில் பெரும்பாலும் வெற்றி கண்டிருக்கும் இவ்வேளையில், புதிதாக முளைத்திருக்கும் ஜனனியின் அன்புத் தொல்லையால் இவன் மூச்சு முட்டிப் போனான் என்பதில் ஐயமில்லை!
‘எனக்கு நிச்சயமாகத் தெரியும், அவர்கள் வீட்டில் யாருமே இதற்குச் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள். அப்படியிருக்க, இந்தப்பொண்ணுக்கு ஏன் வீண் பிடிவாதம்?’ என எண்ணியவன் நினைவில், கோபத்தால் கோவைப்பழமாகச் சிவந்த விழிகளுடன், காலையில் ஜனனி நின்ற கோலம் வந்து அவன் மனத்தையும் இலேசாக அசைத்துப் பார்த்தது மட்டுமின்றி, அவனும் காலையில் நடந்த நினைவுகளுள் அமிழ்ந்து போனான்.
தாங்கள் கதைத்தவற்றை ஜனனி கேட்டு விட்டாள் என்பதை, அவள் நின்ற தோரணையை வைத்தே உணர்ந்த கண்ணனும் விமலாவும் ஒருவர் முகத்தை ஒருவர் கலவரமாகப் பார்க்க, வேகமாய் உள்ளே வந்த ஜனனி எட்டி கண்ணனின் சேர்ட்டைக் கொத்தாகப் பிடித்தாள்.
“ஓஹோ சார்…என்னைக் கல்யாணம் செய்தால் சந்நியாசம் போய் விடுவீங்களோ? அந்த மாதர் சங்கத்து மரிக்கொளுந்துவின் தங்கச்சி மகள், ஸ்டைல் ராணியைக் கட்டுவதற்கு மட்டும் யோசிச்சுச் சொல்லுவீங்களா? அவளுக்கு டிரைவரா காலம் முழுதும் இருக்கிறது மட்டும், அப்படியே குளுகுளு என்று இருக்குமாக்கும்..’’ என்று சொல்லி ஒரு உலுக்கு உலுக்கினாள்.
“ஜனனி இதென்ன பழக்கம்!? முதல் கைய எடு! உனக்குக் கொஞ்சமும் மரியாதை தெரியாதா?
என் மகன் சொன்னதில என்ன பிழை சொல்லு பார்ப்போம். என் கண்ணுக்கு முன்னாலேயே அவன் சட்டையில் கைவைத்துக் கேள்வி கேட்கின்றாய்? அதுவும் என் வீட்டுக்குள்ள வந்து.’’
கோபமாகக் குறுக்கிட்ட அத்தை மீது தீ விழிகளைச் செலுத்தினாள் அவரின் அண்ணன் மகள்.
கண்ணனின் சேர்ட்டில் இருந்து கைகளை அகற்றாமலேயே, “அட அட… வாங்க வாங்க…என் செல்ல அத்தையே! எப்படி எப்படி… உங்க மகனை… அதுவும் உங்க வீட்டில வைத்து இப்படிக் கேள்வி கேட்கக் கூடாதா? அப்ப வெளியில கூட்டிக்கொண்டு போய் நான் கேக்க நினைக்கின்றதைக் கேட்கவா?’’ என்றவள் அதே கோபத்துடன்,
“இங்க பாருங்க அத்தை, நான் உங்க மேலயும் ரொம்பக் கோபமா இருக்கிறேன். உங்களுடன் இதில பேசுவதற்கு ஒன்றுமில்லை சரியா?
இது எனக்கும் இந்த முசுடுக்கும் உள்ள பிரச்சனை, நீங்க இதில ஒன்றும் பேசத் தேவையில்லை.
நான் உங்க மருமகள் தானே! அந்தப் பாசம் கொஞ்சம் சரி இருக்கா உங்களுக்கு? இந்த தடியன் மேல தான் பாசம்.’’
கோபமாகத் தொடங்கியவள் மெலிதான சோகம் இழையோட தீனமாக முடித்தாள்.
“ஜனனி முதல் வாயை அடக்கிப் பேசு, அவனை விட்டுக் கையை எடு!’’ என்று அவளை விலக்க முயன்ற தாயை மெல்லப் பிடித்து விலக்கினான் கண்ணன்.
“அம்மா கொஞ்சம் பொறுங்க, இவங்களோட நானே கதைக்கிறேன்.’’ மிகவும் பொறுமையாகச் சொன்னவன், தன் பொறுமையும் அமைதியுமே அவள் கோபத்தை விசிறி விடுகின்றது என்பதை அறியாமல், அவளுடன் கதைப்பதற்கு, இல்லை இல்லை போராடத் தயாராகினான்.
கண்ணனின் முகம் என்றும் போலவே அமைதியாக கொஞ்சமும் கோபத்தைக் காட்டாமல் இருப்பதைப் பார்த்த ஜனனி, ‘நான் வம்பிழுக்கும் போதெல்லாம் இவன் இப்படி பேசாமல் விலகிச் சென்று சென்றே, என்னை அவன்பால் இழுத்து இறுக்கி அவனுடன் பிணைத்துக்கொண்டான்.’ என்று நினைத்துக் கொண்டவள், மெல்ல அவன் முகத்தில் விழிகள் நிலைக்க கரங்களை அவனில் இருந்து விலக்கிவிட்டு அருகில் இருந்த சோஃபாவில் அமர்ந்து விசும்பி அழத் தொடங்கினாள்.
அவள் கொந்தளிக்கும் போது ஏதாவது சொல்லி அடக்கி அனுப்பலாம் என்று நினைத்த கண்ணனோ, இப்போது செய்வதறியாது திகைத்து நின்றுவிட்டான். இதுவரை தன் மருமகள் அழுது கண்டிராத விமலாவும், பதறிப் போய் அவளருகில் வந்துதமர்ந்து ஆதரவாய் அணைத்துக் கொண்டவர்,
“செல்லம்…இங்க பாருடா! முதல் இந்த பிடிவாத குணத்தை விடப் பழகு. உன்னை விடவும் வயதில் பெரியவனை எப்போதாவது மரியாதை கொடுத்துப் பேசியிருக்கிறாயா? இப்ப வந்து இவனைக் காதலிக்கின்றேன் என்றால் நம்பக் கூடியதாகவா இருக்கு?’’ என்றதும், விலுக்கென்று நிமிர்ந்து முறைத்தாள் ஜனனி.
“இப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க? நான் சும்மா பொழுதுபோக்குக்கு உங்க மகனைப் பிடிச்சிருக்கு என்று சொன்னேன் என்றா? ‘’ என்றவள், தான் இருந்த இடத்தை விட்டெழுந்தாள்.
“நீங்க நான் சொல்வதை நம்பவில்லை. இந்த முசுடுக்கு என்னோட வாழுறதும் சந்நியாசம் போறதும் சமன். வீட்டிலையும் என் பேச்சைக் காது கொடுத்தே கேட்க மாட்டார்களாம்.” இறுக்கிய குரலில் கூறினாள்.
“சரி விடுங்க…ஒரு பிரச்சனையும் இல்லை. ‘’ சொல்லிக்கொண்டே, அருகில் சிலை போல அவள் கதைப்பதைக் கேட்டுக் கொண்டு நிற்கும் கண்ணனை உறுத்துப் பார்த்தவள், “நானும் பார்க்கின்றேன், நீ எப்படி இன்னொருத்தியை கல்யாணம் செய்வாய் என்று. நான் உயிரோட இருக்கும் வரை அது நடக்காது. இது சத்தியம்.’’ விருட்டென்று வெளியேறி விட்டாள்.
அவள் சென்ற பின் ஓய்ந்து போய் அப்படியே அமர்ந்த கண்ணன், வேலை அழைக்கவே அதனைப் பார்க்கச் சென்று விட்டு இதோ வந்து அமர்ந்துள்ளான்.
இறுக மூடியிருந்த கண்களைத் திறந்து தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டெழுந்து யன்னல் அருகில் நின்று இலக்கற்று வெறித்துக் கொண்டிருந்தவனின் நினைவில், ஜனனியின் ஆக்ரோசப் பேச்சு இலேசாகக் கலக்கத்தை உண்டு பண்ணியது.
‘இந்தப் பிள்ள ஒன்று கிடக்க ஒன்று ஏதாவது முட்டாள்தனமாகச் செய்து கொண்டால்?’ என்று நினைத்தவன் உடனேயே அந்த நினைப்பை மறுத்தும் கொண்டான்.
“இல்லவே இல்ல… அப்படி ஏதுமென்றால் என் கழுத்தை நெரித்துக் கொன்றாலும் கொல்லுவாவேயொழியத் தான் ஒன்றும் செய்து கொள்ள மாட்டா..’’ என நினைத்துக் கொண்டவன், அந்த நினைவும் அவளின் அடாவடியான சுபாவமும் நினைவில் வந்ததும், முகத்தில் என்றும் இல்லாதவாறு சிரிப்பைப் பெரிதாகப் பூசிக்கொண்டவன், தொலைபேசி அழைக்கவே அதனை எடுக்கச் சென்றான்.
*****
ஜனனி எங்கெல்லாம் செல்வாள் என்று யோசித்து, தேடித் தேடிக் களைத்தே விட்டான் கண்ணன். அவன் மனம் கலங்கி உடல் பதறியது!
‘என்னால் இவர்களுள் பிரச்சனை, எல்லாவற்றுக்கும் மேலாக ஜனனிக்கு ஏதாவது நேர்ந்திருந்தால்?’ இப்படி, கற்பனை பண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை அவனால். அந்நினைவே அவனைச் சுட்டுப்பொசுக்கியது.
வைத்தியசாலையில், தனக்கு வந்த அழைப்பை ஏற்றவன், அது தாயார் என அறிந்ததும், “சொல்லுங்கம்மா… அப்பாவோடு மதியம் சாப்பிட வருவேன்மா.’’ என்றவன், “இல்ல ராஜா…அது வந்து…’’ தாயின் குரலில் ஒலித்த பதற்றம் அவனையும் ஊடுருவியது.
“அம்மா…என்ன விசயம்? ஏதாவது பிரச்சனையா?’’ அவதியாக கேட்டான்.
“ஜனனி கல்லூரிக்கு செல்லவில்லையாம்; எங்கே போனாள் என்று தெரியாமல் தேடுகிறார்கள்; கால்பண்ணினாலும் எடுக்கிறாள் இல்லை ராஜா..” குரல் நடுங்கச் சொன்னவருள் விபரீத கற்பனைகள்.
“எனக்கு என்னவோ பயமா இருக்குத் தம்பி! அவள் போகும் போது என்ன சொல்லிட்டுப் போனாள், கொஞ்சம் யோசித்துப் பார். நீ…நீ கொஞ்சம் வர முடியுமாய்யா?’’ நடுங்கும் குரலில் கேட்டவருக்கு, “இதோம்மா, நான் இப்பவே வருகிறேன்.’’ என்று விரைந்தவன், அப்போதிருந்து, இதோ மணி இரண்டுக்கும் மேலாகி விட்டது, தேடிக் களைத்து எப்பயனுமின்றி வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்.
தம் வீட்டுக்கருகில் வந்தவன், முக்கியமான ஒரு இடத்தில் அவளைத் தேடிப் பார்க்காதது திடீரென நினைவில் வர, காரை வளைத்துத் திருப்பி வந்த வழியே விரைந்தான்.
“கடவுளே…அங்க சரி இருக்க வேண்டும்.’’ அவனையுமறியாது முணுமுணுத்தன அவன் உதடுகள். இதுவரை, தெய்வங்களே தம் காதுகளைப் பொத்திக்கொள்ளும் அளவுக்கு வேறு ஒரேயொரு கோரிக்கையை தினமும் பல தடவைகள் அனுப்பிக் கொண்டிருந்தவன், இன்று முதல் முதலாக, புத்தம் புதியதாக ஒரு கோரிக்கையை அவர்களுக்கு அனுப்பியவாறு, காரை ‘எலியட் பீச்’ (பெசன்ட் நகர் பீச்) நோக்கிச் செலுத்தினான்.
விரைந்து சென்று காரை நிறுத்தத்தில் விட்டுவிட்டு, சுற்றிலும் ஒருமுறை விழிகளைச் சூழற்றியவன் பார்வையில், தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜனனியின் பிங்க் கலர் ஸ்கூட்டி பட, “ஹப்பாடி!’’ அப்படியே தொய்ந்து போய் அமர்ந்து விட்டான் அவன்.
இந்தச் சில மணிநேரமாக அவனுக்கு எதுவுமே நினைவில் வரவில்லை. தன் மனத்தை அறுக்கும், விடை காண முடியாமல் தத்தளிக்கும் கேள்விகள் எதுவுமே நினைவில் இல்லை! அந்தளவுக்கு, மொத்தமாக அவன் நினைவினை ஆக்கிரமித்திருந்தாள் ஜனனி.
“அவளைக் காணவில்லையா? போனவள் வருவாள் தானேம்மா, இல்லையோ அவங்க வீட்டில தேடாமலா இருப்பார்கள்?’’ என்று சாதாரணமாகச் சொல்லி விட்டு அமைதியாய் இருக்க முடியவில்லை.
“அவர்கள் தேடினால் தேடட்டும்…நானும் தேடுகிறேன்.’’ எனப் புறப்பட்டு, தன் தேடலில் தோல்வியுடன் திரும்பியவன், இங்கிருந்தாலும் இருக்கலாம் எனும் சந்தேகத்தில் தான் இங்கு வந்திருந்தான்.
‘வண்டி நிற்பதால் இங்குதான் எங்காவது இருப்பாள்.’ என நினைத்துக் கொண்டு, காரைப் பூட்டி விட்டு இறங்கி நாலாபுறமும் விழிகளைச் சுழற்றியவாறே விரைந்து நடக்கத் தொடங்கினான் கண்ணன்.
தென்சென்னை வாழ்மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமான ‘பெசன்ட் நகர் கடற்கரையில், ஆள் நடமாற்றம் குறைவாக இருந்த அம்மதிய வேளையில், கடலையே வெறித்தபடி அவள் அமர்ந்திருந்த தோற்றத்தில் மனதில் குற்ற உணர்ச்சி மேலிட, அவளைக்கண்டு கொண்டதில் மனதில் பரவிய நிம்மதியுணர்வுடன் அவளருகில் சென்றமர்ந்தான்.

