அவள் வந்து மோதிய வேகத்தில் அப்படியும் இப்படியும் தள்ளாடிய கண்ணன், தொடர்ந்து அவளில் இருந்து கிளம்பிய அழுகை ஒலியில் நெஞ்சு பிளக்கும் வேதனையை அனுபவித்தான்.
“அண்ணா…ஏன்ணா இப்பிடிச் செய்தாய்? வாயைத் திறந்து சொல்லண்ணா? உனக்கு நாங்க எல்லாம் தேவையில்லாமல் போய்ட்டமா? அம்மா சும்மா திட்டினால் கூட அவவோட சண்டைக்குப் போறனீங்க…இன்றைக்கு யாரோ வந்து அடிக்கப் பார்த்துக் கொண்டு நிற்கிறீங்களே…ஏன்? சொல்லு… சொல்லு…’’ அழுகையூடே அவனை உலுக்கினாள்.
தான் செய்த தவறைப் புரிந்து கொண்ட ஜனனி, நிதியின் அவலமான அழுகையையும், கணவனின் சொல்லவொண்ணா வேதனையையும் செய்வதறியாது பார்த்து நின்றாள்.
இந்திரன் உட்பட மற்றவர்களும் அதே நிலையில் தான் நின்றிருந்தார்கள்.
அங்கு கேட்ட சத்தத்தையும் கூடி நின்றவர்களையும் பார்த்துவிட்டு விரைந்து வந்திருந்த மனோகரும், மருமகளின் கோபத்தைக் கூட தடுக்கும் திராணியின்றித் திக்பிரமையில் நின்றவர், ஜனனி மறுபடியும் அவர்களை நோக்கி நகர, ‘இவள் திரும்பவும் அந்தப் பிள்ளையைப் போட்டு அடிக்கப் போறாளா? இது வைத்தியசாலை என்பதைக் கூட மறந்து விட்டாள்!’ ஜனனி மீது கோபத்துடன் முன்னேறியவரை, நிதியின் கதறல் ஊசியாக நெஞ்சை பதம் பார்த்தது. தீராத ‘குற்றவுணர்ச்சி’ அவரை ஆட்கொண்டு வதைத்து மகிழ்ந்தது.
மிகுந்த பிரயத்தனத்தில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவர் முறைப்பாகவே மருமகளை ஏறிட்டார்.
“ஜனனி என்ன இதெல்லாம்! அங்க நிற்பது வேற யாரும் இல்லைம்மா உன் புருஷன்.” கடிந்து கொள்ளும் பார்வையுடன் குரலில் கண்டிப்புடன் ஆரம்பித்தார்.
“இங்க வந்து நிற்பவர்கள் யாராக இருப்பார்கள் என்பதற்கு இன்னும் ஏதும் சான்று தேவையா சொல்லு பாப்போம்?” என்றவர் குரல் மிகத் தாழ்ந்து ஒலித்தது. பார்வை நிதியில் இருக்க, மருமகளுக்குச் சொல்வது போலத் தனக்குத் தானே கூறிக் கொண்டார்.
“அதனால…இவர்களை நீ எப்படி வரவேற்க வேண்டும்? முதலில் நம்ம வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போ; அங்க போய் எல்லாத்தையும் விளக்கமாகப் பேசலாம்.’’ என்றபோது நன்றாகவே சுதாகரித்திருந்தார் மனோகர்.
அடுத்து, பாறையாக இறுகிப்போய் அசையாது நிற்கும் மகனை நெருங்கியவர், ஆதரவாக அவன் தோளில் கரம் பதித்தார். அக்கரம் தந்த அழுத்தம் கண்ணனின் விழிகளை உடைப்பெடுக்கச் செய்தது.
“அப்பா!” தத்தளித்து நிற்கும் சிறுவனாக முனகியவனைக் கனிவோடு நோக்கியவர், “கண்ணா ப்ளீஸ்…’’ மனதில் நினைப்பதைச் சொல்லவிடாது எதுவோ அடைத்துக் கொண்டது அவருக்கு!
கண்ணனின் நெஞ்சைவிட்டுத் தலையெடுக்காது குமுறும் நிதியில் பார்வை பதிய, மீண்டும் கணப்பொழுது உறைந்து நின்றவர், “இங்க பாரும்மா, நீ சொல்லாமலே யாரென்று தெரியுது!” என்றவருக்கு அதற்குமேல் வார்த்தை எழவிலை. தவிப்போடு மகனை நாடியது அவர் பார்வை!
“போதும் கண்ணா…இங்க எதுவும் பேச வேண்டாம். அம்மாவுக்குக் கால் பண்ணிச் சொல்கிறேன். நீங்க இவங்கள முதல் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போங்க…நான் பின்னால வரேன்.’’ முயன்று கம்பீரமாகவே சொன்னவர் சட்டென்று நகர்ந்து இந்திரனிடமும் மற்றவர்களிடமும் சுருக்கமாகத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
அதேவேகத்தில் எல்லோரையையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தன் மைத்துனரும் ஜனனியின் தந்தையுமான கிருஷ்ணனிடம் விசயத்தைச் சொல்லி, அவரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.
காரில் செல்கையிலும், தமையனை விட்டு நகரவே மாட்டேன் என்ற தீர்மானத்தில் அவன் கரங்களை இறுகப் பற்றியவாறே, அவனோடு ஒட்டிக் கொண்டமர்ந்த நிதி, தன் மறுபக்கத்தில் அமர்ந்த காயாவையோ முன்பக்கம் அமர்ந்திருந்த இந்திரனையோ தெரிந்த மனிதர்களாகவே பார்க்கவில்லை!
அக்கணம், தன் உலகில் தானும் தன் செல்ல அண்ணாவும் மட்டுமே வாழ்வதாக உணர்ந்தாள் அவள்.
இல்லவே இல்லை என்றாகிவிட்ட ஓர் உறவு, இனி இந்தப் பிறப்பில் காணவே முடியாதென நினைத்த ஓர் உயிர், தனது வாழ்விலிருந்து நிஜத்தில் மறைந்து நினைவில் வாழும் உற்ற உடன் பிறப்பு, இன்றோ, “உங்கட நினைப்பு எல்லாமே மொத்தமாகப் பிழை! நான் நிஜத்திலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறன்!’’ என்று சொன்னால், அதை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?
அப்படிப்பட்ட ஒரு நிலையில், ஒரு மயக்கத்தில், அதிர்ச்சி முற்றும் விலகாமல் தான் இருந்தனர் நிதியும் மற்றவர்களும்.
“இப்பிடி இருக்குமோ?’’ என்ற சந்தேகத்தில் புறப்பட்டு வந்திருந்தாலும், நடைமுறைச்சாத்தியம் மிகவும் சொற்பம் என்பதும் மிகத்தெளிவாகத் தெரிந்தே புறப்பட்டு வந்திருந்தார்கள்.
ஆனாலும், “அப்பிடியே இருக்க வேணும்; கண்ணனும் தனஜ்சயனும் ஒருவராகவே இருக்க வேணும்.’’ என்ற ஆசை, பிராத்தனைகள் மட்டும் குறையவில்லை.
இன்றோ, அது அத்தனையும் பலித்து, அதுதான் நிஜம் என்று வெட்ட வெளிச்சமாகி விட்டது. எந்த விதமான விளக்கங்களும் இன்றியே, உருவ ஒற்றுமை மட்டுமின்றி, மனோகரின் நடத்தையும் சேர்ந்தே கண்ணனும் தனாவும் ஒருவரே என்பதை இந்திரனுக்கும் மற்றவர்களுக்கும் தெளிவாக்கி விட்டதே!
இக்கணத்தில், நிதியைப் பொறுத்தவரையில், உயிருக்கு உயிராய் நேசித்த வசி, மிகவும் பாசம் வைத்த ரஞ்சன், இவர்களுக்காகவே வாழ வேண்டுமென்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் உடன் பிறப்புக்கள், தாய், தந்தை என யாருமே அவள் நினைவில் இல்லவே இல்லை! அவள் நினைவை முழுமையாக நிறைத்திருப்பவன், அவள் அன்பு அண்ணன் தனஜ்சயனே!
அவன் தன்னை தெரிந்ததாகவோ அறிந்த மாதிரியோ காட்டிக் கொள்ளவில்லை என்பதையோ, “நிதி’’ என்று வாய் நிறைய அழைக்கவில்லை என்பதோ அவள் கருத்தில் கொஞ்சமும் பதியவில்லை.
வெளிநாடுகளுக்குத் தொகையாகப் பணம் கட்டிப் போக வசதி இல்லாததால், மக்களோடு மக்களாக சேர்ந்து படகுகளில் இந்தியா சென்றால், ஏதாவது தொழில் செய்து வருமானம் ஈட்டலாம் என்று நண்பர்களுடன் சேர்ந்து, தாயின் தாலிக்கொடி விற்ற பணத்தையும் எடுத்துக்கொண்டு புறபட்ட தமையன், படகு கவிழ்ந்து உயிர் விட்டதும், அந்த விபத்தில் யாருமே உயிர் தப்பவில்லை என்பதுமே இவர்கள் அறிந்தது.
உழைப்பைத் தேடிப் புறப்பட்டவன் உயிருடன் இருந்தும் இத்தனை வருடங்களாகத் தங்களைத் தவிக்க விட்டு விட்டான் என்பதும் அவள் நினைவில் துளியளவும் வரவில்லை!
அவளைப் பொறுத்த மட்டில், இக்கணத்தில் அவள் அடைந்த மகிழ்வையும் மனநிம்மதியை இனி எப்போதுமே அடையவே முடியாது.
கண்ணனும் அவனைச் சார்ந்தவர்கள் கூட, இன்னமும் பிரமிப்பில் இருந்து கொஞ்சமும் வெளிவரவில்லை.
தாமே அவன் உறவு, அவன் சொந்தபந்தம் அனைத்தும் தாமே என இதுவரை இருந்தவர்கள், இப்படி, திடீரென்று உறவாக அதுவும் கேள்வியே கேட்கத் தேவையில்லாதவையில் இவ்வளவு உருவ ஒற்றுமையுடன், ‘அண்ணா’ என்றொருத்தி உரிமைக்குரலுடன் வந்து நிற்பது கனவா என்று தோன்றியது அவர்களுக்கு!
தன் வலிய கரத்தை இறுகப் பிடித்திருக்கும் அந்த மெல்லிய கரத்தில் தன் பார்வையைப் பதித்த கண்ணனோ, நிதியின் மனநிலைக்கு நேரெதிரான மனநிலையில் இருந்தான்.
‘இக்கணம் நான் ஏன் உயிரோடு இருக்கிறேன்? என் உருவை ஒத்து இருப்பவள் என்னை வந்து அண்ணா என்று சொல்லிக் கதற, நானோ அவளைப் பற்றிக் கொஞ்சமும் அறியாமல், என் கடந்தகால நினைவுகளைப் புரட்டிப் பார்க்க முடியாமல், ‘எனக்கு உன்னைத் தெரியவில்லையே! நீ என் தங்கையா? இன்னமும் எனக்கு உறவென்று யார் யார் இருக்கிறார்கள்?’ என்று, கதறித் துடிக்கும் அவள் முகம் பார்த்துச் கேட்க வேண்டிய நிலையில் உள்ளேனே! ஆண்டவா! எனக்கு ஏன் இந்த நிலை? யாருக்குச் செய்த பாவம்? இல்லை ஏனிந்த தண்டனை?’ மனம் குமுறினான்.
‘இப்படி பழைய நினைவுகளைத் தொலைத்து விட்டு இருப்பவர்கள் திடீரென்று அதிர்ச்சி ஏற்பட்டால் மயங்குவார்கள், பிறகு பழைய நினவுகள் வந்து சுகமாக வாழ்வார்கள் என்றெல்லாம் திரைப்படங்களில் கதைகளில் கேள்விப்பட்டு இருக்கிறேனே! இதைவிட அதிர்ச்சி என்ற ஒன்றிருக்க முடியுமா? எனக்கு அப்படி ஏதும் நடக்கவில்லையே!’ என நினைத்துப் புலம்பினான்.
‘இத்தனை நாள்…நான் யார் என்று காட்டு என்று வேண்டியது இன்று கை கூடியும், என்னால் அதை அனுபவிக்க முடியவில்லையே!’’ வருந்தித் துடித்தான் அவன் .

