என்றும் உன் நிழலாக 22 – 2

தன்னருகில் ஆள் அமர்ந்ததைக்கூட உணராதவளாகக் கடலையே வெறித்துக் கொண்டிருந்தவளின் அழகிய வதனம், வாடி, கண்கள் கலங்கி, சோர்ந்து போய் யாருமற்றவள் போல அவளிருந்த கோலம் அவன் நெஞ்சில் வலியை ஏற்படுத்தியது.

இக்கோலத்தில் அவளைக் கண்ட அந்த நிமிடம், “இவளின் இந்த நிலைக்கு நானா காரணம்?’ என்ற கேள்வியின் தாக்கத்தால் மனம் துணுக்குற்றவன், எல்லாவித ஐஸ்வரியங்களையும் உடைய ராஜகுமாரி போன்றவள், தனக்கே தனக்காக, தன் அன்பிற்காக ஏங்குவது இலேசான இதத்தையும் பெருமிதத்தையும் தர மெதுவாக, “ஜனனி’’ என்று அழைத்தான்.

அவன் குரல் செவியில் நுழைந்ததும் திடுக்கிட்டு பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தவளால், தன் கண்களையே தன்னால் நம்ப முடியாது, பல தடவைகள் இமைகள் மூடித்திறந்தவள், தன்னருகில் அமர்ந்திருப்பது தான் மனத்தில் வரித்துக் கொண்டவேனே என்ற நிஜம் உணர்த்த, அப்போதும் நம்ப முடியாத குரலில், “நீங்களா?!’’ என்று ஆச்சரியக்குரல் எழுப்பினாள்.

தன்னை இதுவரையிலும் ஒருமையில் அழைத்து வந்தவள், அது தனக்கு பிடிப்பதில்லை என்று தெரிந்தும் அப்படியே தொடர்ந்து அழைத்து அடாவடி செய்பவள், இன்று மரியாதை கொடுத்து விளிக்கவும், மென்னகை பரவிய முகத்துடன் அவளைப் பார்த்தவனுக்கு, கணத்தில், அவள் சொல்லாமல் கொள்ளாமல் இங்கு வந்தமர்ந்திருப்பதும், தாங்கள் இவ்வளவு நேரமாக ஒவ்வொரு பக்கமாகத் தேடித் திரிந்ததும் நினைவில் வந்தது.

“உங்களுக்கென்ன விசரா? இப்படி ஃபோனையும் எடுக்காமல் இந்த வெயிலில வந்திருந்து எந்தக் கோட்டையைப் பிடிக்கத் தவம் செய்யிறீங்க?’’ கடு கடு குரலில் கேட்கவும், தலையைச் சிலிர்த்துக் கொண்டாள் அவள்.

“இங்க பாருங்க, நான் எந்தக் கோட்டையைப் பிடிச்சாத்தான் உங்களுக்கென்ன? இல்ல…இந்தக் கடலில விழுந்து செத்துப் போனாலும் உங்களுக்கென்ன?’’ ஆத்திரத்தில் கத்தினாள்.

“ஹேய்… லூசா உனக்கு! எந்த நேரமும் சாகிற கதை…அப்படியே போட்டேன் என்றால்…’’

கோபத்தில் கையோங்கிய கண்ணன் கணத்தில் தான் செய்யவிருந்த காரியம் உறைக்க, கையைக் கீழே தாழ்த்திக் கொண்டவன் அவளைச் சங்கடமாகப் பார்த்தான்.

“இங்க பாருங்க, இவ்வளவு நேரமாக எவ்வளவு கவலையாகத் தேடித் திரிந்தேன் தெரியுமா? அந்தக் கோபத்தில…ஸாரி…’’

தாழ்ந்துவிட்ட குரலில் தர்மசங்கடத்துடன் சொன்னவன், பேச்சை வளர்க்க விருப்பம் கொள்ளவில்லை.

“வாங்க போகலாம்… வீட்டில எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.’’ என்று ஏழ எத்தனிக்க, தான் எவ்வளவு அடாவடியாக கதைத்து வம்பிழுத்தாலும், மரியாதையாக கதைத்து ஒதுங்குபவனின் இன்றைய உரிமையான அதட்டலில் உச்சி குளிர்ந்த ஜனனி, எப்படியும் தன் காதல் ஜெயித்து விடும் என்ற நம்பிக்கை ஏற்பட, தன் வழமையான திடத்தைப் பெற்றுக் கொண்டவள், அவன் கரத்தைப் பிடித்திழுத்து மீண்டும் அமர வைத்தாள்.

திகைத்துப் போனவன் தன் கையை விலக்க முயல, விடாது இறுக்கிப் பிடித்துக் கொண்டவள், அவனருகில் நெருங்கியமர்ந்து கொண்டே நேசம் பொங்கும் அழகு விழிகளால் அவனை நோக்கினாள்.

“இங்க பாருங்க…நீங்க இரண்டு அறை விட்டிருந்தாலும் எனக்குச் சந்தோசம் தான்; கோபமே வராது. ஆனால்…என் மேல் விருப்பம் இல்லை என்று மட்டும் சொல்லாதீங்க!” என்றவளின் குரல் நடுங்கியது.

“அப்படிச் சொல்லிச் சொல்லியே…நான் இப்ப சொன்னதை… அதுதான் இப்படியே கடலில விழப் போகிறேன் என்று…அதை நிஜமாகச் செய்ய வைக்காதீங்க.’’ என்றவள் அவன் முறைப்பையும், தான் பிடித்திருந்ததையும் மீறி கோபத்துடன் ஏழ எத்தனிப்பதையும் பார்த்து, அப்படியே அவன் தோளில் சாய்ந்து விசும்பி அழத் தொடங்கினாள்.

தன் தோள் சாய்ந்து அழுபவளிடம், “ஜனனி…இதென்ன! இங்க பாருங்க, முதல் இந்த அழுகையை நிறுத்துங்க. எழுந்து வாங்க வீட்டில போய் மிகுதியைக் கதைக்கலாம்..’’ பதறினான் அவன்.

“இல்ல…இல்ல…இதை நான் இப்பவே சொல்ல வேண்டும். நான் இங்க வந்து அமர்ந்ததில் இருந்து எத்தனையோதரம் இப்படியே கடலுக்குள் விழு என்று மனம் சொல்ல சொல்லக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தேன். ஆனால்…’’ என்று, திரும்பவும் சொன்னதையே சொல்ல, அக்குரலில் இருந்த தீவிரமும் வேதனையும் மனதில் உறைக்க பேச்சற்றுப் போனவன், தன்னையறியாமலேயே அவளைச் சுற்றி அணைத்துக் கொண்டான்.

இதுவரை, எவ்வளவோ தடவைகள் தன் மனத்தை அவனுக்கு உணர்த்த முயன்ற போதெல்லாம், பிடிகொடாமல் உணர்ச்சியற்ற பார்வையைப் பதிலாகத் தந்து விலகிப் போகப் போக, தன் ஏமாற்றத்தை மறைத்து அவனை வார்த்தைகளால் சீண்டிச் சென்றவள், இன்று, முதன் முதல் தன்னைத் தேடித் திரிந்து காணாததில் தடுமாறி, கண்டு கொண்டதும் சந்தோசத்தை அப்பட்டமாக முகம் பிரதிபலிக்க, தனக்காகக் கோபப்பட்டு, அதிர்ந்து கதைத்தே கண்டிராதவன் கையோங்கும் அளவுக்குத் தன் கட்டுப்பாட்டை இழந்து, கடைசியில், தன்னை ஆதரவாக அணைத்துக் கொண்டதும் இவ்வுலகையே வென்று விட்ட உணர்வில் மிதந்தாள் ஜனனி!

எல்லாச் சௌகரியங்களும் கேளாமலேயே கிடைத்து, தன் கைக்கு எட்ட முடியாதென்று எதுவுமில்லை என இதுவரை வாழ்ந்து வந்தவள், முதன் முதலாக “எனக்கே எனக்காகக் கிடைக்குமா? என் ஆசை நிறைவேறுமா? என, ஏங்கித் தவித்தது கண்ணனின் அன்பிற்காகத் தான்!

இனி, தனக்கு நிச்சயம் அது கிடைக்கும் என்பதை அவன் அணைப்பே உணர்த்த, தானிருக்கும் இடம் மறந்து அவனில் ஒன்றிக்கொண்டாள் அச்சென்னைப் பைங்கிளி!

அப்படியே, சிறிதுநேரம் தம்மை மறந்து இருந்தவர்களை விமலாவின் தொலைபேசி அழைப்பே இவ்வுலகிற்கு அழைத்து வந்தது. அப்போதும் அவளை முழுதாக விலக்காது, கனிவான பார்வையால் வருடியவாறே கைபேசியை எடுத்தவன்,

“அம்மா…ஜனனி இங்க பீச்சில இருக்கிறா…இதோ நாங்க வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறோம்.’’ என்றவன், தாயின் கேள்விகளுக்கு இடம் கொடாது கைபேசியை அணைத்தபடி,

“சரி வாங்க..முதல் வீட்ட போவோம்; எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.’’ என்றவாறே ஏழ, தானும் எழுந்து அவனோடு இணைந்து நடந்தவளோ,’இனி உன்னை அங்க இங்க தப்பிக்க விடுவேனா பார்!’ என்ற பாவனையில் அவன் கையை இறுக்கிப் பிடித்திருந்தாள்.

“ஸ்கூட்டி இங்கயே நிற்கட்டும் ஜனனி. டிரைவரை அனுப்பி எடுக்கலாம். நாம காரில போவோம்.’’ என்றவன், அவள் தன்னருகில் ஏறி அமர்ந்ததும் காரைக் கிளப்பி வீட்டை வந்தடைந்தவன், வாயிலில் பதற்றமாகக் காத்திருந்த அன்னையிடம்,

“அம்மா, ஜனனி வீட்டில் முழுச்சம்மதம் என்றால், உங்களுக்கும் அப்பாவுக்கும் விருப்பம் என்றால், எனக்கும் ஆட்சேபனை எதுவும் இல்லை.’’ என்றவன், தான் சொன்னதும் தாயின் முகம் மலர்ந்ததிலிருந்தே தன் வார்த்தை அவரை எந்தளவிற்கு மகிழ வைத்துள்ளது என்பதை விளங்கிக் கொண்டான்.

“எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கும்மா, நான் போயிட்டு வருகிறேன்.’’ தாயிடம் விடை பெற்றவன், தான் சொன்ன செய்தியால் ஏற்பட்ட மகிழ்வை அப்படியே முகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டு நிற்பவளிடமும் விடைபெற்று, “தம்பி இவ்வளவு நேரமாச்சு…சாப்பிடலை…வந்து சாப்பிட்டுட்டுப் போ ராஜா..’’ என்ற தாயிடம், “இல்லம்மா…நேரம் இல்லை…நான் பார்த்துக் கொள்கிறேன்.’’ என்றவாறே காரைக் கிளப்பிச் சென்றான்.

அதன்பின், மகனின் சம்மதம் முழுமனதோடு வந்தததா என்பதை ஐயமற அறிந்து கொண்ட விமலா, தமையனிடமும் கதைத்து, முரண்டு பிடித்த ஜனனியின் தாயுடனும், “இதெல்லாம் சரி வருமா? கொஞ்சம் யோசியுங்க? அவசரப்படாதீங்க… எங்களுக்கு எங்க பேத்தி வாழ்வு, அவள் ஆசை முக்கியம் தான்…அதற்காகக் கண்ணை மூடிக்கொண்டு காரியங்களைச் செய்யலாமா?’’ என எதிர்ப்புத் தெரிவித்த தன் தாய் தந்தையோடும் கதைத்து, மிகவும் கஷ்டப்பட்டு எல்லோரது சம்மதத்தையும் வாங்கிய பின்னர், கண்ணன் ஜனனி திருமணம் சுபமாய் வெகு அழகாய் நடந்தேறியது.

திருமணத்தின் முன் ஒரு கணம் கூட அவளால் சலனப்படாதவன், அவள் அடாவடிச் செய்கைளால் எழுந்த சினத்தைக் கூட வெளியில் காட்ட முடியாமல் தன் அன்னைக்காக பொறுத்துக் கொண்டவன், பின்னர், அன்று அவளின் தன் மீதான அன்பை உணர்ந்து, அவள் வேதனையைப் போக்கும் விதமாய் திருமணத்துக்குச் சம்மதம் கூறியவன், இன்றோ, அவள் தான் உயிர் மூச்சு என்ற அளவிற்கு அவளைக் காதலிக்கத் தொடங்கி விட்டான்!

“காதல்’’ என்ற ஒன்றைப் பற்றிச் சிந்திக்கும் எண்ணம் சிறிதும் இல்லாது, தன் வேதனைகளில் சுழன்று இயந்திரமாச் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு, இன்று உலகையே காதலுடன் இரசித்துப் பார்க்கக் கற்றுக்கொடுத்தாள் அந்த அதிரடி மங்கை!

அவளைத் திருமணம் செய்தால் “சந்நியாசம் தான்‘’ என்றவன், இப்போதோ, அவளை அவளாக ஏற்று இரசித்து மகிழத் தொடங்கியிருந்தான்.

முகமும் அகமும் நிறைந்த மகிழ்வுடன் மகன் மருமகள் பற்றி நினைத்துக் கொண்ட விமலா, ஜனனி வந்த பின் வீட்டிலும் சரி மகன் முகத்திலும் தனிக்களையே வந்திருப்பதை நினைத்துக் கொண்டவர், ஜாகிங் போனவர்களும் வரும் நேரமென்பதால் காலைச் சமையல் முடிந்து விட்டதா என்று பார்ப்பதற்காகச் சமையலறை நோக்கிச் சென்றார்.

தாமும் ஜாகிங்கை முடித்துக் கொண்டவர்கள், வீட்டுக்குச் செல்லத் திரும்பி வந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த நண்பருடன் கதைப்பதற்காக மனோகர் பின் தங்க, அங்கு அறிமுகமாகியிருந்த தோழி ஒருத்தியுடன் ஜனனி கதைத்துக்கொண்டு நிற்க, கொஞ்சம் தள்ளி வந்து அவர்களுக்காக காத்திருந்த கண்ணனின் விழிகள், தூரத்தில் தெரிந்த வேளாங்கண்ணி மாதா கோவிலிலேயே நீண்ட நேரமாகப் படிந்திருந்தது.

அவன் மனமோ, ‘மாதாவே என்னை எனக்கு எப்போதாவது உணர்த்துவாயா?’ என்ற இறைஞ்சலை அத்தாயின் பாதங்களில் வேண்டுதலாக மானசீகமாய் வைத்துக் கொண்டிருந்தது.

ஏனோ இன்று அவன் மனம் என்றுமில்லாதவாறு ஏதோ ஒருவிதத்தில் தவிப்பாக உணர்ந்தது! தத்தளித்தது! சொல்ல முடியாத வகையில் பிசைந்தது!

மாதா கோவில் இருந்த திசையில் கண் மூடி, முகம் இறுகி நின்றிருந்த கணவனின் தோளில் மெதுவாகக் கரம் பதித்த ஜனனி, தன்புறம் திரும்பியவனின் கலங்கிச் சிவப்பேறியிருந்த விழிகளை ஒரு கணம் உற்றுப் பார்த்தவள், அவன் கரத்தை ஆறுதலாக இறுகப் பற்றிக்கொண்டாள்.

மனைவியின் மனத்தைப் படித்தவனுக்கு அவள் அருகாமை தன் மனக்கவலைகளை விரட்டுவதை உணர முடிந்தது.

பார்வை கனியத் தன் கைபிடியையும் இறுக்கிக் கொண்டவனோ, இப்போது விழிகளால் இரசனையாக அவளை வருடினான்.

சற்று முன் கலங்கி நின்றவனின் கனிந்த முக மாற்றத்தை கண்ட ஜனனி, தன் அன்புக் கணவனின் பார்வையில் இதத்தையும் பெருமிதத்தையும் உணர்ந்து கொண்டவள்,

‘இவர் வாழ்வில் இனி ஒரு கணமும் வேதனையின் நிழல் படவோ, தேவையில்லாத நினைவுகள் வலம் வரவோ விடமாட்டேன்.’ என உறுதியாய் நினைத்துக் கொண்டவள், மாமனாரும் வரவே வீடு நோக்கி நடக்கத்தொடங்கினார்கள்.

error: Alert: Content selection is disabled!!