25
சென்னை சர்வதேச விமான நிலையம் !
நிதியும் மற்றவர்களும் தத்தம் மனங்களில் பல்வேறு உணர்வுகளுடன், அதுவே முகங்களிலும் பிரதிபலிக்க அங்கே கூடிக் காத்திருந்தனர்.
இலங்கையிலிருந்து வரும் விமானம் வந்து தரையிறங்க இன்னும் சில மணித்துளிகளேயிருந்தன!
அவ்விமானத்தில் வரும் நிதியின் பெற்றவர்களையும், சகோதரங்கள் மூவரையும் வரவேற்கவே, இவர்கள் இங்கு கூடியிருக்கின்றனர்.
தம் சொந்த மகனாக நினைத்ததால், அவன் வேறு வீட்டுப்பிள்ளை என்பதை அறவே மறந்திருந்த மனோகர் விமலா தம்பதியினர், இப்போது, இந்த இரண்டு கிழமைகளில் எவ்வளவோ தம் மனங்களைச் சமாதானம் செய்து நடப்பை ஏற்றுக் கொண்டிருந்தாலும், தம் செல்லக் கண்ணனின் தாய் தந்தை என்று வரவிருப்பவர்களை எதிர்கொள்வதில் கொஞ்சமே கொஞ்சமாய் மனத்தின் மூலையில் ஒருவலியுடன் தான் காத்து நின்றார்கள்.
கண்ணன் மேல் தாம் வைத்த பாசத்தால், அந்த வலியை மறைத்து, மறக்கவும் முயன்றார்கள்.
ஜனனியோ, தன் புகுந்த வீட்டு உறவுகளைத் தன் கணவன் போலவே ஒரு எதிர்பார்ப்புடன் எதிர்கொள்ளத் தயாராகக் காத்திருக்கிறாள். ஆமாம்! தன் மனையாளின் மனநிலையில் தான் தனாவும் இருக்கிறான்.
எவ்வளவோ முயன்று பார்த்தும், தான் இலங்கையில் கழித்த நாட்களின் நினைவுகளை மீட்கவே முடியவில்லை, அவனால் !
நிதியை பார்த்ததில் அவள் பாசத்தில் கட்டுண்டவன், அவள் சொன்ன, புகைப்படங்களில் காட்டிய தன் இரத்தபந்தங்களையும் பெற்றெடுத்தவர்களையும் பார்ப்பதில் மிகுந்த ஆவலுடன் துடிப்பாகக் காத்திருக்கிறான்.
இவ்வளவு நேரமாக எல்லோரோடும் ஒன்றாய் நின்று, அவர்கள் கதைகளுக்குச் செவி சாய்த்தும் அவர்களுடன் சேர்ந்து கதைத்துக் கொண்டும் இருந்த நிதி, விமானம் வந்திறங்கும் நேரம் நெருங்க நெருங்க மிகவும் படபடப்பாய் உணர்ந்தவள், மெல்ல எல்லோரையும் விட்டு விலகிச் சென்று தனியாய் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
அவளுக்குள் என்னென்னமோ செய்தது! இந்தியா வந்த இந்த மூன்று கிழமைகளில் நான்கு நாட்களின் பின்னரே தமையனைக் கண்டு கொண்டவள், அதன்பிறகு ஒருவாறு எல்லோரும் சமாதானம் ஆகியிருந்தார்கள்.
விமலா, தம்முடனே வந்து இவர்களையும் தங்கச் சொல்ல உறுதியாய் மறுத்த இந்திரன், தாங்கள் தங்கியிருந்த ரங்கன் வீட்டிலேயே தொடர்ந்து தங்குவதாகக் கூறி விட்டார்.
எவ்வளவோ கேட்டுப் பார்த்து முடியாமல் போகவே, “சரி உங்க விருப்பம்…ஆனா சாப்பிட இங்க வந்திருங்க.’’ என, மனோகர் விமலா அன்பாகச் சொல்ல அதை ஏற்றுக் கொண்டவர்கள், இந்த இரு கிழமைகளில் மிகவும் நெருக்கமாகி விட்டனர்.
ஜனனியின் பெற்றவர்கள், தாத்தா, பாட்டி என்று எல்லோர் மனதிலும், தன் வசீகரக் குணத்தால் நிரந்தரமாக இடம் பிடித்துக் கொண்டாள் நிதி.
அதன்பின், இலங்கையில் இருக்கும் தங்கைக்கு விசயத்தைச் சொல்லுவோம் என்ற இந்திரன், அவர்களை இங்கு அழைக்கும் முயற்சியில் இறங்க, குறுக்கிட்ட வசி, தானே எல்லா ஏற்பாடுகளும் செய்தவன், இதோ அவர்களை இங்கு வரவழைத்துள்ளான்.
நிதியின் பெற்றவர்களுக்கோ இன்னமும் இதுதான் விடயம் என்று தெரியாததால், நிதியும் மற்றவர்களும் இந்தியா வந்து நிற்பதில் இவர்களைப் பார்ப்பதற்காக அழைப்பதாகவே நினைத்து, “ஏன் வீண் செலவு?’’ என்று மறுத்தவர்கள், இவர்களின் வற்புறுத்தலில் கிளம்பி வருகிறார்கள்.
நிதி, இந்த இடைப்பட்ட காலத்தில் திரும்பவும் இலங்கை செல்லவில்லை. இப்போது அண்மைக் காலமாக, ஸ்கைப் மூலம் தன் வீட்டவர்களுடன், பெரும்பாலும் சகோதரங்களுடன் சில நிமிடங்கள் உரையாடுவாள்.
அப்போதெல்லாம் அவளால் ஒழுங்காகக் கதைக்கக் கூட முடிவதில்லை. அவர்கள் அங்கிருந்து கதைப்பதையே ஆவலாக, ஏக்கமாக கேட்டிருப்பதே அவள் வழக்கமாக இருக்கும். ஆதலால், இன்று தன் அண்ணா உயிருடன் இருக்கிறான் என்பதோடு சேர்த்து, இத்தனை வருடங்களுக்குப் பின்னராகப் பெற்றவர்களையும் சகோதரங்களையும் காணப்போகின்றோம் என்பதில் அவள் மனம் நிறைந்திருந்தது.
இலங்கையில் இருந்து நெதர்லாந்து வந்ததில் இருந்து, எத்தனையோ தரம் தனக்குத் தானே கேள்வி கேட்டிருப்பாள், “அம்மா அப்பாவால் எப்பிடி என்னைப் பிரிய முடிஞ்சிது?’’ என்று! அந்த விடை காணப்படாத கேள்வி ஓர் பெரிய குறையாக அவள் மனதில் வடுவாய் அப்படியே இருந்து வந்தது.
இந்த நிமிடம் அது கூட மறைந்து விட்டது. அப்படி அவள் வெளிநாட்டில் இருந்ததால் தான், தன் அண்ணாவை ஆயிரம் இலட்சம் கோடிகளில் ஒன்றாக இனம் காண முடிந்தது என்று நினைத்து அக்குறையையும் அழித்து விட்டாள் அவள்.
அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, தங்கைகள் என்று ஒரு பாசவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவள், அதிலிருந்து கட்டாயமாகப் பிரிக்கப்பட்டாள். இன்று, இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவர்களை மீண்டும் காணப்போவதை நினைத்து கண்ணீர் வழிய அமர்ந்திருக்கையில் அவளருகில் வந்தமர்ந்தான் வசி.
“நிதி, இது என்ன…அழுகிறீரா? கடவுளே இன்னுமா உமக்குக் கண்ணில தண்ணி இருக்கு?!’’ கேலியாகக் கேட்டாலும், அவள் மனநிலையறிந்து மெல்ல அவள் கரங்களைப் பற்றித் தன் கரங்களுள் மென்மையாக அடக்கிக் கொண்டான்.
“இங்க பாரும் நிதி…இது அழுகிற நேரமில்ல. முதல் கண்ணைத் துடையும். அங்கபாரும், நான் ஏதோ உம்மைக் கிள்ளி அழவைக்கிறன் என்ற கணக்கில உம்மட அண்ணா என்னைப் பார்த்து முறைக்கிறார்!’’ என்றான் மீண்டும் கேலியாக!
அவன் சொன்ன பாவனையில் எழுந்த மெலிதான முறுவலுடன் அவன் தோளில் சாய்ந்து கொண்டவள், “போங்க வசி.. உங்களுக்கு…’’ என்று சொல்லி அவன் முதுகில் ஒன்று போட,
“நானும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறன். நீர் இந்தியா வந்ததில இருந்து அதுவும் உம்மட அண்ணியோட எப்பக் கூட்டுச் சேர்ந்தீரோ அன்றிலிருந்து…நீரும் ரவுடியாகிப் போனீர்! சும்மா சும்மா கை நீளுது. உம்மைக் கெதியா நெதர்லாந்துக்குக் கடத்த வேணும். இல்லையென்றால்…’’ என்று சொல்லிக்கொண்டு வந்தவன் அவளையே பார்த்துக் கொண்டு,
“நீ யார் என்று கேட்டாலும் கேட்பீர்!’’ என்றவன் குரலில், கேலியுடன் சேர்த்து இலேசாக, “நீ இப்பவெல்லாம் என்னைக் கண்டு கொள்வதேயில்லை!’’ என்ற குற்றச் சாட்டும் ஒளிந்திருந்ததை உணர்ந்து கொண்டாள் நிதி.
“கோபமா வசி?’’ என்று அன்பாகக் கேட்டவள், “நான் இங்க நிற்கும் மட்டும் தானே வசி இவையளோட இருக்கலாம். பிறகு எப்பவும் உங்களோட தானே?’’ என்று தன்னிலை விளக்கமாகச் சொல்லத் தொடங்கவும், மென்மையாச் சிரித்துக்கொண்டே, “விடும் நிதி…எனக்கு விளங்குது. கோபமெல்லாம் இல்ல,நீர் சந்தோசமாக இருந்தால் எனக்கும் சந்தோசம் தான்.’’ என்றவனிடம்,
“நான் என்றாலும் அப்பப்ப உங்களோட ரெண்டு ஒரு வார்த்தை கதைக்கிறன். ஆனாப் பாருங்க…அங்க இஞ்சி தின்ற குரங்கு போல முகத்தை நீட்டி வச்சுக் கொண்டு,எப்பப் பார்த்தாலும் கதைக்கப் போனால் எள்ளும் கொள்ளும் வெடிக்க… இந்த ரஞ்சன் செய்யிறது சரியா சொல்லுங்க?
பாவம் காயா! அன்றைக்கு நான் விசயத்தைச் சொன்னதில இருந்து ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டதையே நான் காணேல்ல. அதற்குள்ள உங்ளுக்கு உங்கட பிரச்ச்னை பெரிசா?’’ என்றவள்,
“சரியான சுயநலம்’’ விழிகள் நகைப்பில் சுருங்கச் சொன்னபடி, சட்டென்று எழுந்து தன் தமையன் அருகில் சென்று நின்று கொண்டவள், வசியின் முறைப்பைச் சிறிதும் பொருட்படுத்தாது, அவனுக்குப் பழிப்புக் காட்டியபடி தன் அருகில் நிற்கும் காயாவுடன் கதைக்கத் தொடங்கினாள்.
அவள் ஒதுங்கிச் சென்றமர்ந்து கண்கலங்கியதைப் பார்த்ததும் அவள் அருகில் வந்தமர்ந்தவனோ, அவள் செய்கையைப் பார்த்துத் தன்னுள் எழுந்த நகைப்பை அடக்க முடியாமல் விரிந்த புன்னகையை முகத்தில் தவழ விட்டவன், மனதில் மிகவும் ஆறுதலாய் உணர்ந்தான்.
நிதியை இப்படிக் குறும்பும் புன்னகையுமாகப் பார்க்க வேண்டும் என்று அவன் பல வருடங்களாக ஆசை கொண்டிருந்தான். அந்த எண்ணத்தினால் தான் அவளைக் காணும் போதெல்லாம் வம்பிழுத்துக் கொண்டிருப்பான். அது எதனாலும் அவளை, அவள் தனக்குத் தானே அமைத்து முடங்கிக் கிடந்த கூட்டை விட்டு வெளியில் வரவைக்க முடியாதிருந்தது.

