என்றும் உன் நிழலாக 4 – 2

‘‘வளர்ந்த பிள்ளைகளுக்கு முன்னுக்கு வைத்து, அதுவும் இந்த ராணிக்கு முன்னுக்கு வைத்துத் திட்டினால், அவே என்னை மதிப்பீனமா?’’ தன்னருகில் இருந்த கணவனை முறைத்துக்கொண்டே சொன்ன புவனி, தன்னைத் தன் மகன்கள் இருவரும் பார்க்கும் பார்வையிலேயே அவர்கள் கருத்தும் தம் தந்தையை ஒத்திருப்பதை உணர்ந்து கொண்டவர், ‘என்ன மாயம் மந்திரமோ? எல்லாரும் இவளுக்கு வக்காலத்து!’ அதற்கும் மனதில் நிதியைத் திட்டிக்கொண்டே அமைதியானார்.

அனைவரும் சாப்பிட்டு முடிந்ததும், இதுவரை பொறுமை காத்ததே பெரியவிடயம் என்ற வகையில் ஆரம்பித்தார் புவனி.

‘‘இங்க பார் நிதி, இது உன்ர மாமா வீடு; உங்கட மாமா உன்ர பொறுப்பை ஏற்றுக் கொண்டதால அவர் உனக்கு எல்லாம் செய்ய வேணும்; அதை நான் இல்ல என்று சொல்லேல்ல; இப்பச் சொல்லியும் பிரயோசனம் ஒன்றுமில்லை; ஆனால், அதற்குக் கூட ஒரு எல்லை இருக்கு.’’

கண்டிக்கும் பார்வையை அவள் மீது செழுத்தியவாறே கூறினார்.

‘‘ஆனால் நீ…எங்க எல்லாரையும் கொண்டு வேல வாங்கப் பார்க்கிற…’’ தொடர, ‘‘மாமி நான்…நான்…அப்பிடி ஒருநாளும் நினைக்கக் கூட இல்லை.’’ தயங்கியவாறே இடையிட்டவளை நன்றாகவே முறைத்தார்.

‘‘என்ன இல்ல? வசி..என்ன உன்ர அப்பா அம்மா வச்ச வேலைக்காரனா? அப்பப்ப அவன உன்ர டிரைவர் ஆக்கிற. நானும் இதோட நிறையத் தடவைகள் பார்த்திட்டன். அவனே சாப்பிடத் தூங்க நேரம் கிடைக்காம அலையிறான். நீ அதுக்குள்ள அவனக்கொண்டு வேலை வேண்டுற.’’ என்று கத்தவும் தான் நிதிக்கும் ரஞ்சனுக்கும் என்ன விசயமென்றே விளங்கியது.

புவனி இப்படிச் சொன்னதும் தன் முன்னேயிருந்த ரஞ்சனை ஒருகணம் முறைத்து மீண்டன நிதியின் விழிகள்.

‘எல்லாம் உன்னால் தான்; நானா கேட்டன்?’ குற்றம் சாட்டிய அவள் பார்வையை உணர்ந்தவன் கணமும் தாமதிக்கவில்லை.

‘‘அம்மா…இப்ப உங்களுக்கு என்ன பிரச்சின? நான் தான் கூட்டிக் கொண்டு வந்து விடுங்க என்று அண்ணாட்டச் சொன்னன். ஏன்? அதுக்கு இப்ப என்ன? அண்ணா ஏதும் சொன்னவரா? அவருக்கு ஏலாது என்றா என்னட்டயே சொல்லலாமே! அதுக்குப் போய்…’’ என்று, ‘விடியக் காலையிலேயே தொடங்கிட்டாரே!’ என மனதில் தாயைத் திட்டியபடியே சொன்னான்.

‘‘வசி என்ன சொல்லுறது? நீ சொல்லித் தான் அவன் செய்யிறான் என்று எங்களுக்கு நல்லாவே விளங்கும் ரஞ்சன். அக்கா தான் காலம சொன்னா; இந்த மகாராணி அவனுக்குத் தோசை எல்லாம் சுட்டுக் குடுத்தாவாம்…’’ மகனை இடைமறித்துக் கூறிய புவனி, திரும்பவும் நிதியை முறைத்தார்.

‘‘மாமி…அவர் பசி சாப்பிட இல்லை என்றார், அதுதான்… பிறகும் வீட்டில போய்…அங்கயும் ஒருவரும் இல்ல…அதுதான்…’’ பயந்து கொண்டே மெல்லிய குரலில் தடுமாறினாள் நிதி.

‘‘இங்க பார் நிதி… சாப்பாடு குடுத்ததைக் குறை சொல்லேல்ல. நீ வளர்ந்திட்ட; உனக்கு உன்ர வேலைகளச் செய்யத் தெரிய வேணும்; என்ர பிள்ளைகளையோ என்ர வீட்டு ஆட்களையோ வேலை வாங்க நினைக்காத! அங்க உன்ர அப்பாவும் அம்மாவும் உன்ன எங்கட தலையில கட்டிட்டு நீ அனுப்பிற காசில சுகமா நிம்மதியா இருக்க, நாங்க இங்க உன்னோட இருந்து இழுபடுறம். எனக்கு இது கொஞ்சமும் பிடிக்கேல்ல, அவ்வளவும் தான்.’’ சிடுசிடுத்தவாறே அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார் புவனி.

இத்தனை வருடம் இவ்வீட்டில் ஒருத்தியாய் இருப்பவளைப் பிரித்துக்கதைப்பது அடிகடி நடப்பதென்றாலும், ஒவ்வொரு முறையும் போல இப்போதும் ரதீஷும் ரஞ்சனும், ‘இந்த அம்மாவ மாற்றவே முடியாதா?’ என ஏங்கினர்.

தங்களுடன் ஒருத்தியாய் அணைந்து கொண்ட நிதியை ஆதரவாய்ப் பார்த்து, ‘விட்டுத்தள்ளு…அவவைப் பற்றித் தெரிஞ்சது தானே!’ பார்வையாலேயே அவளுக்கு ஆறுதல் சொல்லி, உனக்கு நாங்க இருக்கிறோம் என்றும் உணர்த்தினர் .

இப்படி அடிக்கடி நடப்பது நிதிக்கு எப்படிப் பழகியதொன்றோ, அது மாதிரியே பழகிய விடயமென்றாலும் மருமகளை நினைக்கக் கவலையாக இருந்தது இந்திரனுக்கு!

‘அவளை வீட்டை விட்டுக் கூட்டிக்கொண்டு வந்து இப்பிடி வேதனைப்படுத்திறனே!’ என நினைத்து வருந்தியவரால், மனைவியை மிகவும் கண்டித்து, இன்னமும் அவர் கோபத்தை அதிகரிக்கும் எண்ணமின்றி, பலவேளைகளில், வாய் மூடி அவ்விடம் விட்டகன்று விடுவது போல் இன்றும் எழுந்து சென்றுவிட்டார்.

தன் மாமி திட்டிச் சென்றதும் எதுவுமே சொல்லாது நேரத்தைப் பார்த்த நிதி, அதுவும் ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்கவே, இன்னும் சில நிமிடங்களில் அவள் செல்ல வேண்டிய பேரூந்து வருமென்பதால் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு, ‘‘நான் போய்ட்டு வாறன். சில நேரம் பின்னேரம் வர நேரம் ஆகும்; அப்படியென்றா கால் பண்ணிச் சொல்லுவன்.’’ என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டவள், ‘‘நிதி நில்லும்…நில்லும்; நான் கொண்டு போய் விடுறன் என்று சொன்னன் தானே?’’ என்றவாறே ரஞ்சன் பின்னால் வர, அவனை நன்றாகவே முறைத்தாள்.

‘‘ப்ளீஸ்…என்னைக் கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்க; கெஞ்சிக் கேட்கிறன்.’’ கண்கள் கலங்கச் சொல்லிக்கொண்டே வாயிலை அடைந்து காலணியைப் போட்டுக்கொண்டு கதவைத் திறக்கவும், அவர்கள் வீட்டின் முன்னே காரை நிறுத்தி விட்டு வாயிலை நோக்கி வசி வரவும் சரியாக இருந்தது.

வேதனையில் சுருங்கிய முகத்துடன் வாயிலைத் திறந்தவளையும், அவள் பின்னால் கெஞ்சிக்கொண்டு வந்த ரஞ்சனையும் பார்த்த கணத்திலேயே, அவர்கள் வீட்டில் தினம் தினம் நடப்பது இன்றும் நடந்துள்ளது என்று புரிந்து கொண்ட வசி, நிதியைக் கண்டதும் அழைக்காமலேயே ஓடி வரும் குறும்புடன் அவளை நோக்கினான்.

‘‘மோர்னிங் பெரிய மனிசி! என்ன வேலைக்கு வெளிக்கிட்டாச்சி போல! ம்ம்…நாங்க எல்லாம் யாரு? இல்ல இல்ல…நீங்க எல்லாம் யாரு?” நகைப்புடன் ஆரம்பித்தான்.

“பனியோ புயலோ… ஏன் சுனாமி வந்தாலும் கூட அசர மாட்டம். கடமை கடமை…உழைப்பு உழைப்பு…அதுமட்டும் தான். அப்படித் தானே நிதி?’’

வழமையான கிண்டல் குரலில் அவளை வம்புக்கிழுத்தான்.

ஏற்கனவே தன் மாமியின் பேச்சால் மனம் நொந்திருந்தவள், தன் தாயார் அவ்வளவு சொன்ன பிறகும் ரஞ்சன் தன் பின்னால் வேலைக்குக் கூட்டிப் போய் விடுவதாக வந்ததில் கோபம் கொண்டிருந்தவள், வசியின் கிண்டலைப் பார்த்து வெகுண்டு, ஒரு நாளும் இல்லாதவாறு அவனை உறுத்து விழித்தாள்.

‘வந்திட்டார் பெரிய இவர் போல. பாரேன் இளிப்பையும் கதையையும். தான் என்னவோ பெரிய கொம்பன் என்ற நினைப்பு. எல்லாத்திலும் கொண்டு வந்து மூக்கை நுழைக்கிறது தான் வேலையே!’ தயங்காமல் மனத்தில் திட்டுக்களால் அபிசேகம் செய்தவள், தன் முன்னே வழியை மறித்து நிற்பவனை அதே கோபப் பார்வையுடன் பார்த்து, ‘‘கொஞ்சம் தள்ள முடியுமா? எனக்கு நேரம் போயிட்டு.’’ சினத்தை அடக்கிய குரலில் சொன்னாள்.

அவள் ஒரு போதும் இப்படித் தன்னிடம் கதைக்காததால், ஆச்சரியமாக அவளைப் பார்த்துத் தன் வியப்பை வெளிப்படையாகவே காட்டினான் வசி.

‘‘நிதி! அது தான் இந்த ஸ்னோ இப்படித் தொடர்ந்து கொட்டுதோ! இவ்வளவு நாளும் இந்தப்பிள்ளை இந்த உலகத்தை எப்பிடிச் சமாளிக்கப் போகுது என்று நினைச்சுக் கவலைப்பட்டன். அப்பாடா! இப்ப அந்தக் கவலை கொஞ்சம் குறைஞ்சிருக்கு. நீர் ஒரு மாதிரி சமாளிச்சிருவீர் என்ற நம்பிக்கை வந்திருக்கு. தொடர்ந்து இந்தக் கோபத்தை எல்லாரிட்டையும் … குறிப்பாச் சித்தியிட்டக் காட்டும் சரியா?’’

அவளது கோபத்தை உணர்ந்தாலும் நகைப்புடன் கேலியாகவே சொன்னவன், பதிலேதும் சொல்லாது முறைத்துக்கொண்டே, தன்னை விலக்கிச் செல்லப் பார்த்தவளை விடாமல் அங்கும் இங்குமாக மறித்தான்.

‘‘நிதி…உம்மைக் கூட்டிக்கொண்டு போகத்தான் இப்ப வந்தனான். இன்னும் அரை மணித்தியாலத்தில போகலாம், ஓடிப் போய் குளிருக்கு இதமா…உம்மட கையால ஒரு காஃபி போடும் பார்ப்பம்.’’ இலகுவாகவே சொல்லவும் செய்தான்.

அவளோ, எப்போதும் கடைப்பிடிக்கும் பொறுமை பறந்து போக, ‘திருப்பிக் கதைக்கக் கூடாது…இயன்ற மட்டும் சமாளிச்சு வாழ வேணும்.’ என்று இதுவரையிலும் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவள் அதையெல்லாம் கைவிட்டுவிட்டு, ஒரு போதும் இல்லாதவாறு வசியின் சீண்டல் பேச்சைக் கோபத்துடன் எதிர்கொண்டு, அனல் பறக்கும் விழிகளை அவன் மீது திருப்பினாள்.

‘‘நீங்க, உங்கட மனசில என்ன நினைச்சிருக்கிறீங்க? நான் கேட்டனா? நேற்று என்னைக் கூட்டிக்கொண்டு வந்து விடச் சொல்லி நான் கேட்டனா? அல்லது இப்ப வரச் சொல்லிச் சொன்னனா? நீங்க எல்லாரும் சேர்ந்து எனக்கு உதவுறன் என்று என்னை அப்பிடியே பைத்தியம் பிடிச்சி அலைய வைக்கப்போறீங்க; அவ்வளவும் தான் சொல்லுவன்.’’ சீறினாள்.

அதேவேகத்தில், ஒருபோதுமில்லாத அவள் சீறலில் திகைத்து நின்றவனை விலத்திக் கொண்டு அப்பால் செல்ல முனைந்தவள், கீழே, கண்ணாடியாய்ப் படிந்திருந்த பனிப்படிவில் அவசரமாகக் காலை வைத்ததில் சர்ரென்று வழுக்கினாள்.

சட்டென்று அவளை எட்டித் தாங்கிப் பிடித்த வசி, தன் பிடியைத் தளர்த்தாமலேயே கேள்வியாய் ரஞ்சனை ஒருகணம் பார்த்தவன், ‘‘சரி வாரும்… இப்பவே கூட்டிக்கொண்டு போய் விடுறன்.’’ அவள் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் காரைத் திறந்து, “ம்ம்…ஏறும்!” கிட்டத்தட்ட உறுமினான்.

அப்போதும் முறைத்துக் கொண்டு சிறுபிள்ளை போல் கலங்கும் கண்களுடன் காரினுள் ஏறாமல் நின்றாள் அவள்.

அவனோ கணம் கூடத் தாமதியாமல், ‘‘ம்ம்…கெதியா ஏறும்!’’ என்று, அவள் தோள் பற்றி உள்ளுக்குள் இலேசாகத் தள்ளிய வேகத்தில் கதவை ஓங்கிச் சாத்திவிட்டுத் தானும் வந்து ஏறி, காரை ஓட்டத் தொடங்கினான்.

error: Alert: Content selection is disabled!!