5
ஞாயிறுகளில் காலை பதினோரு மணிக்குப் பின்பே மக் வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும்.
சரியாகக் காலை பத்துமணிக்கு நிதியை அழைத்து வந்து மக்கின் முன்பாக இறக்கி விட்ட வசி, ‘‘தேங்க்ஸ்…போயிட்டு வாறன்.’’ என்று சொல்லி நகர்ந்தவளைப் பார்த்தவாறே சென்று, அருகில் இருந்த நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தினான்.
அடுத்த சில நொடிகளிலேயே, அவன் இறங்குவதைப் பார்த்துத் தயங்கி நின்றவளுடன் வந்து இணைந்து கொண்டவன், ‘‘என்ன நிதி…வீட்டுக்கு வந்து ஒரு வாய் காஃபி தாரும் என்றதற்குக் கத்திக் கூச்சல் போட்டு இங்க வந்தீர்…” ஆரம்பித்தவன் அவள் முகத்தைப் பார்த்துவிட்டு, “சரி…சரி, கடமை அந்தளவுக்கு இழுக்குது! சரி அதை விடும்; இப்பச் சரி உம்மட கையால ஒரு கப் காஃபி தர ஏலுமா? அதுவும் இப்ப நான் உம்மட ஃப்ரெண்ட் வேற…’’ கேலியாகவே கேட்டான்.
அவன் கேட்ட விதமே அவள் இதழில் மென்முறுவலைப் பூசிக் சென்றது.
‘‘தாராளமாக, ஆனால் காசு நீங்க குடுங்க!’’ கறாராகச் சொல்லியபடி சென்று காஃபியை எடுத்து வந்து கொடுத்துவிட்டுத் தயங்கி நின்று, ‘‘ஏதாவது சாப்பிடப் போறீங்களா?’’ என்றதற்கு, ‘‘வேணாம், காலமையே சாப்பிட்டுட்டன்.’’ என்றவன், ‘‘அப்படியே இதைக் கணக்கு வச்சுக்கொள்ளும், பிறகு ஒரேயடியாச் சேர்த்துத் தாறன்.’’ முறுவலோடு கூறிவிட்டு, ‘‘என்னோட இருந்து ஒரு கப் காஃபி குடிக்கலாமே…’’ எதிர்பார்ப்போடு கேட்டான்.
அவளோ, ‘‘இல்ல…நான்…எனக்கு அங்க கொஞ்சம் ஆயத்தம் செய்ய வேண்டி இருக்கு; போயிட்டு வாறன்.’’ என்றவள், திரும்பியும் பாராது உள்ளே சென்று மறைந்துவிட்டாள்.
அவள் போவதையே சிறு முறுவலுடன் பார்த்திருந்தவனும், ‘இவளக் கொஞ்சம் விட்டுத் தான் பிடிக்க வேணும்!’ எனத் தன்னுள் சொன்னபடி, கோப்பியைக் குடித்து விட்டு அலுவலகம் நோக்கிச் சென்றான் .
அன்றும் ‘டிரைவ்துரு’ இல் வேலையென்பதால் ஆயத்தமாகி அங்கு போய் நின்ற நிதி, அங்கிருந்த அலுமாரியில் வைத்திருந்த சிறுவர்களுக்கான ‘ஹப்பிமீல்’ டேக் அவே பெட்டியை அழகாகப் பொருத்தி மடித்து ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கத் தொடங்கினாள்.
பழக்க தோசத்தில் விரைவாக வேலையைச் செய்தாலும், மனமோ, சற்றுமுன் வீட்டிலிருந்து வம்படியாக இழுத்துக்கொண்டு கிளம்பிய வசியின் செயலையும், அதன்பின் நடந்ததையுமே நினைத்துக் கொண்டிருந்தது.
காரை ஓட்டத் தொடங்கியதிலிருந்து தன் பக்கமே திரும்பாது பக்கக் கண்ணாடியால் வெளியில் பார்வை பதித்திருந்தவளைச் சிறிது நேரம் எதுவுமே பேசாது கவனித்தவன், அவள் கையுயர்த்தித் தன் கண்களைத் துடைப்பதிலிருந்தே அழுகின்றாள் என்பதை உணர்ந்து கொண்டான்.
‘இந்தச் சித்தியை எந்த வகையில சேர்க்கிறது? எல்லாரோடும் அன்பாகவும் ஆதரவாகவும் பழகிறவர் இவளப் போட்டுப் படுத்திற பாடு இருக்கே…கடவுளே! இதைவிட இவள் பேசாமல் இலங்கையில இருந்திருக்கலாம்.’ என, அவள் அப்பப்ப புவனியின் சொல்லம்புகளில் சிக்கி அனுபவிக்கும் வேதனையை அறிந்து கவலை கொண்டான்.
‘‘நிதி..நிதி இங்க பாருமன்.’’ மென்மையாக அழைத்தும் அவள் தன் பக்கம் திரும்பாததைப் பார்த்து, பாதையோரத்தில் அப்போது தான் யாரோ காரை எடுத்துச் சென்றிருக்க, அந்த இடம் அப்படியே பனியேதுமின்றிச் சுத்தமாக இருக்கவும் காரை அங்கே நிறுத்தினான்.
அதுவரை அவன் கூப்பிடக் கூப்பிடத் திரும்பிப் பாராது இருந்தவள், காரை நிறுத்தியதை உணர்ந்து கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்டு முறைப்பாகவே அவன் புறம் திரும்பினாள்.
‘‘இப்ப…இங்க ஏன் நிப்பாட்டுறீங்க?’’ சிறு தாமதமுமின்றி, உள்ளடங்கிய ஆத்திரத்துடன் கேட்டவளை மௌனமாகச் சில கணங்கள் பார்த்திருந்த வசி, ‘‘வீட்டில என்ன நடந்தது நிதி? சித்தி ஏதாவது சொன்னாரா? அவர் எப்பவும் அப்படிக் கதைக்கிறது தெரியும் தானே! இதையெல்லாம் பெரிசா எடுக்கிறதா சொல்லும் பார்ப்பம்…’’ என, சிறுபிள்ளைக்கு ஆறுதல் சொல்லும் பாவனையில் ஆரம்பித்தான்.
‘எந்நேரமும் ஏச்சும் பேச்சும் விழுந்து விழுந்து எனக்கு மரத்துப் போச்சு என்று தான் நினைச்சிருந்தன்; ஆனால், அப்படி இல்லை போல!’ மனதில் நினைத்துக் கொண்டவளோ, கோபமாய் அவனை நோக்கினாள்.
‘‘எது பெரிசில்ல? இல்ல கேட்கிறன்; நான் கேட்டா நீங்க எனக்கு உதவுறீங்க? உங்கள நேற்று நானா கூப்பிட்டன்? நீங்களா வந்தீங்க. சரி ரஞ்சன் கேட்டால், உங்களுக்கு நேரம் இல்லை என்றாலோ வேற வேலை இருக்கு என்றாலோ, அல்லது விருப்பமில்லை என்றாலோ ரஞ்சனிடமே முடியாது என்று சொல்ல வேண்டியது தானே…பிறகு…’’ கணம் நிதானித்தாள்.
‘‘உங்களாலும் ரஞ்சனாலும் தான் எனக்கு எப்பவும் பெரிய பிரச்சனை. எப்ப எனக்குச் சித்தி பேசினாலும் அதுக்குப் பின்னுக்கு நீங்க அல்லது ரஞ்சன் தான் இருப்பீங்க. அதனால தான், கை எடுத்துக் கும்பிட்டு கேட்கிறன்…எனக்கு உங்கட உதவி வேணவே வேணாம் …தயவு செய்து.’’ கோபத்தில் தொடங்கியவள் அழுகையில் முடித்து, கரங்களால் முகத்தை மூடிக்கொண்டு அப்படியே மடியில் குனிந்தவாறே அழத் தொடங்கிவிட்டாள்.
இதைப் பார்த்ததும் பதறிப்போனான் வசி.
‘‘நிதி! என்னம்மா நடந்தது? நான் இரவு கொண்டு வந்து விட்டதற்கு சித்தி ஏதாவது சொன்னவரா? என்ன என்றாலும் முதல் இப்படி அழுகிறதை நிப்பாட்டும்.’’ என்றவன், அவள் தலையை ஆதரவாய்த் தடவினான்.
‘‘நிதி…ப்ளீஸ் அழாதேயும்; இங்க பாரும், இப்படி அழுகிறதென்றா, இப்பவே வீட்டுக்குப் போய் சித்தியிட்ட என்ன எண்டு கேட்கிறன்.’’
சொன்னதைச் செய்வேன் என்ற உறுதி அவன் குரலில் அப்பட்டமாக வெளிப்பட்டது.
அதைக் கேட்டதும் சடாரென்று தலையை நிமிர்த்தித் திகைப்புடன் அவனை நோக்கினாள் நிதி.
‘‘ஏன்? அதுக்கும் சேர்த்து இன்னும் கொஞ்சம் ஏச்சு வாங்கித்தரவா? அப்பிடி என்ன ஆசை உங்க ரெண்டு பேருக்கும்? பேச்சு விழும் என்று தெரிஞ்சே இப்பிடிச் செய்றீங்க? அதுதான் எனக்கு விளங்கேல்ல.’’ என்றாள், அழுகையோடு!
அவளையே சிறிது நேரம் அமைதியாகப் பார்த்திருந்தான் வசி.
‘‘ப்ளீஸ் நிதி, நீர் அழுது இதுவரைக்கும் காண இல்ல; அழாதேயும்! எப்பவுமே அழுகை எதுக்குமே தீர்வுமில்ல. என்ன பிரச்சினை, ஏதாவது உதவி தேவையா என்றெல்லாம் ஒரு நாளாவது யாருக்காவது வாய் விட்டுச் சொல்லி இருக்கிறீரா சொல்லும்! இப்பக் கூட எனக்கு ஒரு மண்ணும் விளங்கேல்ல. எதையும் எங்களிட்டச் சொல்லாததால தானே நாங்களாப் பார்த்துப் பார்த்து உமக்கு உதவி செய்யிறது.’’ என்றவன் குரலில் கரிசனையும் கடினமும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது.
‘‘முதல், இப்ப வீட்டில என்ன நடந்தது? அதைச் சொல்லும். அதை விட்டுட்டு என்னால உமக்குப் பிரச்சனை என்றால்? அதுக்கு என்ன அர்த்தம்?’’ இழுத்து வைத்த பொறுமையுடன் கேட்டான்.
தன் கண்களைத் துடைத்துக் கொண்டவளுக்கு இப்போது மிகவும் அவமானமாக இருந்தது.
‘இப்ப எதுக்கு இவருக்கு முன்னால இப்பிடி அழுதன்!? எனக்கு வர வர தொட்டதுக்கும் கண்ணீர் வருது. மாமி பேசுவது எல்லாம் புதுசா? இல்லையே! சும்மாவே இந்தாள் அதையும் இதையும் சொல்லிப் பகிடி பண்ணுவார்; அதுக்கு ஏற்ப அழுதும் காட்டிட்டன்!’ என நினைத்தவளுக்குத் திரும்பவும் தன் கட்டுப்பாட்டையும் மீறிக் கண்ணீர் வரப் பார்த்தது.
கண்களைச் சிமிட்டி கண்ணீரை அடக்கியவள் சங்கடத்தோடு அவனை நோக்கினாள்.
‘‘வேலைக்கு நேரம் போய்ட்டுது, கொண்டு போய் விடுறீங்களா?’’ என்று, எதுவுமே நடவாத பாவனையில் கேட்கவும் செய்தாள்.
‘‘என்ன!?’’ திடுக்கிட்டு வியப்பாகக் கேட்டவன், அடுத்த கணம், அவள் மேல் பதிந்த பார்வையை அகற்றாது வசதியாகச் சாய்ந்தமர்ந்து கொண்டான்.
‘‘இங்க பாருங்க பெரிய மனிசி! இப்ப என்ன நடந்தது? இதில நான் எங்க, எப்பிடி வந்தன் என்று எனக்குத் தெரிஞ்சால் தான் இன்றைக்கு உமக்கு வேலை. இல்லையோ இப்பிடியே இருக்க வேண்டியது தான்.’’ என்றவன், அவளது இந்த ஒட்டுதல் இல்லாத குணம் கணத்தில் தோற்றுவித்த கடுமையை வெகுவாக முயன்று குறைத்துக்கொண்டே கூர்மையாகப் பார்த்தான்.

