என்றும் உன் நிழலாக 5 – 2

‘‘திரும்பவும் ஒன்றை நினைவுபடுத்துறன் நிதி; நான் ரஞ்சன் இல்லம்மா; அதை எப்பவும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் சரியா?’’ குரலில் தாராளமான கண்டிப்புடன் சொல்லவும் செய்தான்.

அவளோ, முறைத்துக் கொண்டே கதவைத் திறந்து இறங்க முயல, தன் வழமையான முறுவலோடு நோக்கியவன், ‘‘ஹா..ஹா..நிதி! அது சென்ட்ரல் லொக்காக்கும்! நீங்க நினைச்சால் திறபடாது. அது என்ர சொல் பேச்சைக் கேட்கிற செல்லப்பிள்ளை!’’ என்றதும், அவன் மேல் கொஞ்சம் குறைந்திருந்த கோபம் மீண்டும் தலைகேற முறைத்தாள் அவள்.

‘‘இங்க பாருங்க, நேற்று நீங்க தான் என்னை கொண்டு வந்து விட்டீங்க என்று உங்கட அம்மா தான் காலம மாமிட்டச் சொன்னவராம். அதுக்குத் தான் மாமி…நான் தன்ர ஆட்கள எல்லாம் வேலை வேண்டுறன் என்று பேசினவர்; போதுமா? இப்ப என்ன நடந்தது என்று தெரிஞ்சிட்டுதா? இனிச்சரி கொண்டு போய் விட முடியுமா? இல்லையோ கதவைத் திறந்து விட்டுட்டு நீங்க இங்கயிருந்து நித்திரை கொள்ளுங்க; எனக்கென்ன வந்தது?‘’

படபடவென்று பொரிந்து தள்ளியவள், எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் மீண்டும் விம்மியழுதாள்.

‘‘கடவுளே! இதுக்குப் போயா இப்படி அழுகிறீர்?’’ என்றவன், அழுது கொண்டிருந்தவளின் முகத்தைத் தன் பக்கமாய்த் திருப்பி அவளையே உற்றுப் பார்த்தான்.

அவளின் வதனம் பிரதிபலித்த கலக்கம் அவனைப் பெரிதும் பாதித்தது.

‘‘அதென்ன எப்பவும் சுமி மாமியாக இருந்தவர் இப்ப என்ர அம்மாவாகிவிட்டாவா? பொறும் பொறும் அம்மாட்ட வத்தி வைக்கிறன்.’’ என்று சொல்லி நிலைமையை இலகுவாக்க முயன்றான்.

அவளும் அவன் பேச்சில் கொஞ்சமாகத் தெளிந்தவள், அப்போது தான் அவன் கை தன் முகத்தைப் பற்றியிருப்பதை உணர்ந்து வேகமாய் தட்டி விட்டவள், முறைப்புடனே கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர, அவள் தன் கையைத் தட்டி விட்டதில் கணத்தில் மனம் சுருங்கினாலும், ‘இவள் இப்படிச் செய்யாமல் இருந்தால் தான் யோசிக்க வேணும்; சரியான கல்லுளிமங்கி.’ என எண்ணியவாறு, கனிவாக அவளை நோக்கினான்.

‘‘இங்க பாரும் நிதி, அம்மா நேற்றிரவு வீட்டுக்கு வந்ததும் ‘சாப்பிட்டாயா ராசா?’ என்று பாசமாகக் கேட்க, நானும் நீர் அன்பா பாசமா ருசிக்க ருசிக்க தோசை சுட்டுத் தந்ததைச் சொன்னன். அதைக் கேட்டு அம்மா திறந்த வாயை மூடவே இல்லை என்றால் பாருமன். அந்த ஆச்சரியத்தில சும்மா கதையோட கதையா சித்திட்டச் சொல்லியிருப்பார்; சித்தி இதுதான் சாக்கு என்று பிடிச்சிக் கதைச்சிருக்கிறார்.

ஏன், சித்தி இதற்கு முதல் உம்மப் பேசினதே(திட்டியதே) இல்லையா? இதற்குப் போய்… பச்! ரஞ்சன் என்னடா என்றால் குற்றம் செய்த சின்னப்பிள்ளை போல கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறான். என்றாலும் உமக்கும் சரியான பிடிவாதம்…’’ என்றவன், அவள் ஏதோ சொல்லத் தொடங்க இடம்கொடாது தொடர்ந்தான்.

‘‘முதல் நான் சொல்ல வாறதைக் கேளும் நிதி. சித்தி அப்பிடிச் சொல்லேக்க நீர் ஏன் வாயை மூடிக்கொண்டு இருக்கிறனீர். பட்டென்று, ‘அவையல் என்ர ஆசை மச்சான்கள், நான் வேலை வாங்காமல் வேற யார் வாங்கிறது?’ என்று திருப்பிக் கேட்கத் தெரியாதா?

இப்படி மட்டும் ஒருக்காச் சொல்லிப் பாருமன்…அதற்குப் பிறகு சித்தி கப்சிப் ஆகீருவார். இவ்வளவு பெரியாளாக வந்திட்டீர் இன்னும் சித்தியைக் கண்டால் நடுங்கிறீர்.’’ சிரிப்புடன் ஆனால் தீவிரமாகச் சொன்னவன், தொடர்ந்து ஒரு பெருமூச்சை வெளியேற்றியபடியே,

‘‘அதெப்படி நீர் கேட்பீர்? அதற்கு முதல் அந்த நினைப்பு…அதுதான் நாங்க உம்மட ஆசை மச்சான்கள் என்ற நினைப்பு உமக்கு இருந்தாத்தானே? ஆனால், நாங்க அந்த நினைப்பை மறக்கிறதே இல்லை. அதுதான் எல்லாத்துக்கும் காரணம்.’’ படு சோகமாய்ச் சொன்னவன், தன்னையே அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருப்பவளைப் பார்த்து,

‘‘சித்தியைத் தவிர வேற யாராவது உம்மப் பிழையாக ஒரு பார்வை பார்கிறவையா சொல்லும். ஏன் சித்திட்ட கூடக் கதைக்கமாட்டீனம். அவர் ஏதோ உம்மைப் புரிஞ்சு கொண்டது அவ்வளவும் தான் என்று பேசாமல் இப்பிடியே தட்டி விட்டுட்டுப் போய்க் கொண்டிருக்க வேணும் . அதை விட்டுட்டு, அந்தக் கோபத்தை உம்மோட ஆசையாகப் பழக நினைக்கிற என்னைப் போல் இருக்கிற சின்னப்பெடியளிட்ட காட்டினால்…நான் என்ன செய்யிறது?’’

அவளையே பார்த்தபடி வழமையான கிண்டல் கேலியுடன் சொல்லி முடித்தவன், குறும்பு தவழும் விழிகளால் கண்ணடித்தான்.

அவன் சொன்ன விதமும் அவன் கண்சிமிட்டலும் சேர்ந்து அவளில் மெல்லிய புன்னகையைத் தோற்றுவிக்க, அதனைப் பார்த்த வசி, அவள் முன்பு தன் கையை நீட்டினான்.

அவளோ, கேள்வியாகப் பார்த்தாள்.

‘‘இங்க பாரும்…நான் உமக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டா இருக்கத்தான் நினைக்கிறன். உமக்கும் தான் அந்த சனா பேபியைத் தவிர வேற ஃப்ரெண்ட் இல்லைத் தானே? அதனால என்னை உம்மட ஃப்ரெண்டா ஏற்றுக் கொள்ளுமன்; ப்ளீஸ்! ப்ளீஸ்!’’ கெஞ்சினான்.

‘‘இப்பவெல்லாம் அந்தச் சனா பேபியைக் கண்டாலே எனக்கு பத்திக் கொண்டு வருது நிதி ; எல்லாம் உம்மால தான்.’’ பகிடி பண்ணினான்.

வயதுக்கு மீறிய பொறுப்புடனும் முதிர்ச்சியுடனும் எல்லோருடனும் நடந்து கொள்வான் வசி. அவனைக் கேட்டே இங்கிருக்கும் அவர்கள் உறவுவட்டத்தில் எந்த முயற்சியும் செய்வர். அப்படிப்பட்டவன், சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் இவளுடன் சிறுபையன் போன்றே மல்லுக்கு நிற்பான். அவளோ, அப்படியான சந்தர்ப்பங்களில் பெரிதாகக் கதைக்காமல் சிறு முறுவலுடன் அந்த இடத்தை விட்டே நகர்ந்திடுவாள்.

இன்று, குறும்பும் கேலியும் குரலில் தெறிக்க, கனிவாக அவளைப் பார்த்தவாறே பொறுமையாகவும், ஆறுதலாகவும் கதைத்துக் கொண்டிருந்தான்.

இதுவரைக்கும் யாருமே இப்படி இவளுக்கு ஆறுதல் சொன்னதில்லை; அப்படிச் சொல்ல அவள் இடம் கொடுத்ததுமில்லை. தன்னை அடக்க முடியாது வெடித்தவளிடம் அன்பாக ஆதரவாகக் கதைத்தவாறே அவன் நட்புக் கரம் நீட்ட, அவளையும் அறியாமல் அவள் கை நீண்டு அவன் கைமேல் போய் அமர்ந்து கொண்டது.

உடனே தன் வலுவான கரங்களால் அவளின் மென்கரத்தைப் பற்றிக் கொண்டவன், ‘‘ப்பா! தேங்க்ஸ் தேங்க்ஸ்! வாழ்க்கையில ஒரே ஒரு ஃப்ரெண்டை, இல்லை இல்லை…கேர்ள் ஃப்ரெண்டைப் பிடிக்க, அதுவும் உங்களைப் போல பெரிய ஆளை…ம்ம்…இவ்வளவு பாடுபட வேண்டுமென்று நான் நினைக்கவே இல்லை! இது என்ர பலநாள் கனவு வேற!’’ என்றவன், இலேசான வெட்கத்தில் முகம் குனிந்தவளைக் கனிவாய்ப் பார்த்தான்.

‘‘இங்க பாரும் நிதி, உமக்கு என்ன பிரச்சனை என்றாலும், ஏன் கோபப்பட …கடிச்சுக் குதற…அடிக்க…எல்லாத்துக்குமே என்னட்ட நீர் வரலாம். ஒ.கேயா? உமக்கு எப்பவும் நான் இருக்கிறன்; அதை மறக்காமல் இருந்தாச் சரி. என்ன சொல்லுறீர்?’’ என்று விடாது கேட்டு, புன்முறுவலுடன் அவள் தலையாட்டலைச் சம்மதமாகப் பெற்ற பின்னரே ‘மக்’கில் கொண்டு வந்து விட்டான், அந்த பிடிவாதக்காரன்!

இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தவள், ஆரம்பத்தில் அவன் நடவடிக்கைகளால் பலநேரங்கள் மனம் சுணங்கியிருந்தாலும், இக்கணம், ஒருவித இதம் ஏற்படுவதையே உணர்ந்தாள்.

தன் கவலையை அவன் பகிர்ந்து கொள்ள நினைத்ததை நினைத்து, இதுவரை தனிமையில் தவித்த அச்சிறு உள்ளம் இலேசாய் உவகை கொண்டது என்றே சொல்ல வேண்டும்!

அவளுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்யும் ரஞ்சன் முன்னால் கூட ஒரு போதும் வெளிப்படையாக கலங்கியிராதவள் இன்று வசியின் முன்னால் கலங்கியதை வியப்போடு உணர்ந்தவள், புதிய நட்பினால் கிடைத்த சிறு நிம்மதி மனதில் இதம் பரப்ப, தனது அன்றைய வேலைகளில் ஈடுபட்டாள்.

 

error: Alert: Content selection is disabled!!