6
நிதியை மக்கில் விட்டுவிட்டுத் தன் அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வசியோ, தன்னைப் பற்றித் தானே வியந்து கொண்டான்.
இயல்பிலேயே கலகலப்பான சுபாவம் கொண்டவன் தான் இவன். அதேநேரம், வேண்டுமென்றே யாரையும் வம்பிக்கிழுத்து நக்கல் அடித்தென்றெல்லாம் பழகுவதில்லை. இந்த விசயத்தில் நிதி மட்டுமே விதிவிலக்கு.
நிதியைக் காணும் போதெல்லாம் ஆரம்பத்தில் இருந்தே கிண்டல் கேலியாகவே தான் கதைப்பான். ‘அது தான் ஏன்?’ என்று, அவனும் பல தடவைகள் யோசித்துப் பார்த்திருக்கிறான் தான்.
அதற்குக் கிடைத்த விடை, ‘நம்மட சொந்தக்காரப் பிள்ளை. குடும்பத்தைப் பிரிஞ்சு வந்திருந்து சித்தியிட்ட மாட்டி மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறாளே!’ என்ற உணர்வில், அவளைக் காணும் போது சிரிக்க வைக்க முயல்கிறான் என்பதே!
ஆனால், இவன் எவ்வளவு கதைத்தாலும் அவள் பக்கத்தில் எப்போதும் எவ்விதப் பிரதிபலிப்பும் இருப்பதில்லை. இவன் பெற்றவர்களே, ‘’நிதி மனம் விட்டு ஒருவரோடும் கதைக்கிறதில்ல; எது என்றாலும் தனக்குள்ள வச்சுக் கொள்ளுறாள்; இது எங்க கொண்டு போய் விடுமோ? அதுவும் இந்த நாட்டில.’’ என்று, அடிக்கடிக் கவலைப்படுவதுண்டு.
இன்னொருபுறம், சனாவைத் தவிர நெருங்கிய நட்பு என்றும் யாருமில்லை. அவள் யாரையுமே தன்னை நெருங்க விடுவதில்லை.
உறவுக்குள் ரஞ்சனுடன் இயல்பாய் இருப்பவளும், இப்போது அவனை ஒதுக்குவது வெளிப்படையாகத் தெரிவதால், கவலை கொண்ட வசி அவளுடன் மனம் விட்டுக் கதைக்கும் சந்தர்ப்பத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தான். அது இன்று கிட்டியதும் ஓரளவுக்கேனும் கதைத்து அவள் நட்புக்கரத்தைப் பற்றியும் விட்டான்.
அவளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே வந்தவனுள், அவளின் அழுகை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
அவன் மனமோ, அவள் மனதில் மறுகிக் கொண்டிருப்பதை உணர்ந்து அவள் கவலைகளைப் போக்கிட வேண்டுமென ஆவல் கொண்டது!
‘சின்னப்பிள்ளை, அவளிட வயசுக்காரர் எப்பிடி எல்லாம் சந்தோசமாப் பொழுதைக் கழிக்கீனம். இவளோ, வேலை, படிப்பு, உழைப்பு, தம்பி, தங்கச்சிகள் என்று திரியிறாள்.’ என்று நினைத்துக் கொண்டவன், ‘என்ன பாடுபட்டாவது இவளை இந்த டிரைவிங் கோச் வகுப்பில சேர்த்து விட வேணும். அப்பத்தான் அவளிட பணப்பிரச்சினைக்கு ஒரு முடிவு வரும். இப்பிடி, அங்கயும் இங்கயும் வேலைக்கு அலையவும் தேவையில்லை.’ என எண்ணிக்கொண்டே, தன் அலுவலகம் வந்திருக்க, காரை நிறுத்திவிட்டு அலுவலகம் நோக்கிச் சென்றான்.
வசி, அவன் தந்தை, இவர்களுடன் சேர்ந்து இன்னமும் மூன்று டச்சுக்காரர்களும் இவர்களிடம் ட்ரைவிங் கோச் ஆகப் பணிபுரிகின்றனர்.
தனக்கென்று சிலரைத் தெரிவு செய்து அவர்களுக்கு மட்டுமே வகுப்புக்களைக் கொடுப்பான் இவன். மீதி நேரங்களை மிகுதி அலுவலக நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளச் செலவிடுவான் .
நிதியை விட்டுவிட்டு வந்து சிறிது நேரத்தில் தனக்குரிய வகுப்பை எடுக்கச் சென்றவன், இரண்டு பேருக்கு பயிற்சி வகுப்பைக் கொடுத்து முடித்துவிட்டு நேரத்தைப் பார்க்க, அது மதியம் ஒருமணியைக் காட்டியது.
மதிய உணவை முடித்து விட்டு வருவோம் என்ற எண்ணத்தில் அப்படியே வீட்டுக்குக் காரை விட்டான்.
அவன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது, கைபேசிக்கு அழைத்தான் ரஞ்சன்.
‘‘சொல்லு ரஞ்சன், சாப்பிட்டாச்சா?’’
‘‘சாப்பிட்டாச்சண்ணா… நீங்க?’’
‘‘இந்தா வீட்டுக்குத்தான் போய்க்கொண்டு இருக்கிறன். இப்பத்தான் வகுப்பு முடிஞ்சிது.’’ என்றவன், ‘‘பிறகு…சொல்லடா?’’ என்றதற்கு அவனோ தயங்கியபடியே, காலையில் நிதி கலங்கிக்கொண்டே வேலைக்குச் சென்றிருந்ததால் வழியில் என்ன நடந்தது என விசாரித்தான்.
‘‘என்னத்தையடா சொல்லுறது? என்னதான் என்றாலும் சித்தி அவளைப் போட்டு இந்தப் பாடுபடுத்தக் கூடாது. பார், நமக்கும் விளங்கினாலும் சித்தியிட்ட நேரில கதைக்கிறதுக்கு மனம் இடம் கொடுக்கிறதில்ல. பாவம் அவள், சரியா வருத்தப்பட்டவள்; ஒரு மாதிரிச் சமாதானப்படுத்திக் கொண்டு போய் விட்டனான்.’’ என இயல்பாய்ச் சொன்னவன்,
‘‘பின்னேரம் வர ரெண்டு மணித்தியாலம் லேட் ஆகுமாம்டா. சனா பிந்தி வருவதால இவள் நின்று செய்திட்டு வருவாளாம். நானே போய்க் கூட்டிக்கொண்டு வந்து விடுறன்.’’ என்றதும்,
‘‘தேவையில்லை அண்ணா…நான் போய்க் கூட்டிக்கொண்டு வாறன்.’’ அவசரமாக இடைமறித்தான் ரஞ்சன்.
அவனை இடைமறித்த வசியோ, ‘‘இல்ல ரஞ்சன்…நீ ஏன் அங்கயிருந்து? நான் பின்னேரம் அந்த வழியாத்தானே வருவன், அப்ப கூட்டிக்கொண்டு வாறன். அப்பிடியே அங்க தான் இரவைக்குச் சாப்பிட வருவன் என்று சித்திட்டச் சொல்லி விடு!’’ என்றவன், ‘‘சரிடா, பின்னேரம் பார்ப்பம்.’’ என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
தானும் கைபேசியை வைத்த ரஞ்சனுக்கு மனம் மேலும் கனத்தது.
ஏதோ சொல்ல முடியாத, இன்னதென்று பிரித்துப் பார்க்க முடியாத குழப்பமான உணர்வுகள் அவனுள் எழுந்தன.
தனக்கு இயலாத போதெல்லாம் நிதிக்காக அவன் தன் தமையன் உதவியை நாடுவான் தான். ஆனாலும், இன்று காலையில், வசி அவ்வளவு உரிமையாய் அவள் கைபிடித்து அழைத்துச் சென்றது, அதுவும் தான் அருகில் நிற்கும் போதே, வசியின் அந்த உரிமைச் செயல் இவனுள் கொஞ்சமே கொஞ்சமாக ஒருவிதமான கலக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. அதை எவ்வளவோ முயன்றும் விலக்கவோ, தவிர்க்கவோ முடியாமல் திண்டாடிப்போனான் ரஞ்சன்.
தனக்குப் போலவே அவனுக்கும் அவள் மீது அக்கறை உண்டு என்பதையும், தான் அவளை விரும்புவதும் தமையனுக்குத் தெரியும் என்பதையும் நினைத்துப் பார்த்த பின்னும் அவன் மனம் கலக்கத்தை உதற நினைக்கவில்லை.
அதற்கு முக்கிய காரணம் நிதியே! அவள் ரஞ்சன் மீது மிகவும் உரிமையாய் பாசமாய் இருந்தாலும், அது அவன் மீதான பிரத்தியேகமான நேசம் என்று அவனால் வரையறை செய்ய முடியவில்லை.
இப்படி, நிச்சயமற்ற தன்மையில் நின்று உழல்பவனால் கலக்கம் துறப்பது எப்படி?
‘சரி, பின்னேரம் கூட்டிக்கொண்டு வரேக்கச் சமாதானப்படுத்தி, அவள் என்னை விட்டு விலகிறதை நான் உணர்வதால், அவளோட கொஞ்ச நேரத்தைச் செலவழித்து மனம் விட்டுக் கதைக்க முயலுவம், இப்பிடியே என்ர விருப்பத்தை மனதுக்குள் வச்சிருந்தால் சரி வராது.’ கடைசியில் இப்படி முடிவெடுத்தே, காலையில் அவளைக் கொண்டு போய் விடும் போது என்ன நடந்தது என்று வினவ வசிக்கு அழைத்தான்.
இப்போதோ, ‘அண்ணாவுக்கு எடுக்காமலேயே இருந்திருக்கலாம்.’ என எண்ணியவாறே, தன்னறையில் இருந்து கீழே இறங்கிச் சென்றவன், வீடியோவில் படம் பார்த்துக்கொண்டிருந்த தன் பெற்றவர்களின் அருகில் சென்றமர்ந்தான்.
சோர்ந்த முகத்துடன் வந்தமர்ந்தவனைப் பார்த்த புவனிக்கு, ‘காலம அந்த மகாராணியைப் பேசினதில இருந்து இவன் இப்பிடித்தான் முகத்தைத் தூக்கி வச்சிருக்கிறான்.’ என நினைத்தவுடன், எப்போதும் போல அடிவயிறு பயத்தால் கலங்கியது.
என்னதான் ஒரே வீட்டில் வளர்ந்தாலும், நிதி ரஞ்சனுக்கு மச்சாள் தானே? அதை நினைக்கும் போதெல்லாம் புவனிக்குக் கோபம் தலைக்கேறும்.
வர வர அவரது இந்தப் பயமே, அடிக்கடி நிதியைக் காணும் போதெல்லாம் அவள் மீது எரிந்து விழுவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது .
‘ஒன்று கிடக்க ஒன்றாய் நிதியைத் தன் மகனுக்குத் திருமணம் செய்யும் நிலை வந்தால்?’
இந்த ரீதியில் இதற்கு மேல் அவரால் கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லை.
நிதியும் அவர் வளர்த்த பிள்ளை தான். அவளின் குணத்திலோ பழக்க வழக்கத்திலோ ஏன் அழகிலோ எள்ளளவும் குறைகாண முடியாது.
‘ஆனால், அவளைக் கட்டினால், பிறகு கட்டுகிறவன் அவளோடு சேர்த்து அவள் குடும்பத்தையும் அல்லவா சுமக்க வேணும்? அப்பிடியே என்ர பிள்ளையை உறிஞ்சி எடுத்திட்டுத்தான் அதுகள் விடுங்கள்.’’ இவ்வாறு நினைத்தவருக்கு அந்நினைப்பே மூச்சு முட்டியது.
‘அப்பிடியொரு நிலை ஒருக்காலும் என்ர பிள்ளைக்கு வர விட மாட்டன்.’ உறுதியாய் நினைத்துக் கொண்டார்.
‘ஆனாலும் இவன் போக்குக் கொஞ்சம் சரி இல்லை தானோ? எப்பவுமே அவளில பாசமாகத் தான் இருக்கிறவன். ரதீஷ், வசி எல்லாரும் அப்பிடித் தானே? இருந்தாலும் இப்ப இப்பவெல்லாம் இவனில கொஞ்சம் ஏதோ வித்தியாசமா இருக்கு. எப்படி என்றாலும் நிதி எனக்கு எதிரா ஒரு புல்லைக் கூட கிள்ளிப் போடமாட்டாள்.’ என்று, தன் மருமகள் பற்றி மிக்க நம்பிக்கையுடன் நல்லதாக எண்ணியது அவள் அருமை மாமியின் உள்ளம்.
அந்த வகையில், நிதியை மிகத் துல்லியமாகப் புரிந்து வைத்திருக்கிறார் புவனி.
‘‘என்ன ரஞ்சன் யோசனை? படம் பரவாயில்லாமல் இருக்கு, பார்க்கப்போறீங்களா?’’ கேட்ட தாயைப் பார்த்தவன், ‘‘ம்ம்…கொஞ்ச நேரம் பார்ப்போம்மா.’’ என்றவன் தொடந்து, ‘‘நிதி ஆறு மணிக்குத் தான் வருவாளாம்; அண்ணா கூட்டிக்கொண்டு வாறாராம்; இங்க தான் இரவைக்குச் சாப்பிடுவாராம்.’’ என்றதும், அவனுடன் கதைத்துக்கொண்டே தொலைக்காட்சியில் பதித்திருந்த தன் பார்வையை, மகன் மேல் திருப்பினார் புவனி.
‘‘அட…அப்ப வசி நிரந்தரமாக ட்ரைவர் ஆகிட்டானா? என்றாலும் இந்த நிதிக்கு உள்ள கெட்டித்தனம் யாருக்கும் வராது.’’ உள்ளுக்குள் எழுந்த எரிச்சலை மறைக்க முடியாத குரலில் அங்கலாய்பாகச் சொன்னார்.
‘‘இது என்ன கதை புவனி? இப்ப கூட்டிக்கொண்டு வந்தால் தான் என்ன? திரும்பவும் இந்தச் சின்ன விசயத்தைப் பெருசுபடுத்தி அவளைப் போட்டுப் பேசாதீங்க.(திட்டாதீங்க). நமக்கு ஒருமகள் இருந்தா நீங்க இப்பிடியெல்லாம் கதைப்பீங்களா? அல்லது யாரும் கதைச்சால் தான் சும்மா விடுவீங்களா?’’ சிறு கண்டிப்புடன் கேட்டார் இந்திரன் .
கணவரை முறைத்தார் புவனி.
‘‘நீங்க ஏன் சொல்லமாட்டீங்க? அவள் உங்கட தங்கச்சி மகள் தானே? அவையள் பெற்று என்ர தலையில கட்டிட்டு…அங்க திமிர்க் கதை கதைச்சுக் கொண்டு திரிய, இங்க நான் அவளத் தலையில வச்சுக் கொண்டாட வேணுமா? அந்த மனிசரின்ட நிலையில நான் இருந்திருந்தாலுமே கஞ்சியோ கூழோ குடிச்சுக் கொண்டு நாலு வீட்டில இயத்துக் கழுவிச் (பாத்திரம் கழுவி) சரி என்ர பிள்ளையை நான் தான் வளர்த்திருப்பன். உங்கட தங்கச்சி மாதிரி பெத்திட்டு சுகமாக மற்றவேட தலையில கட்டியிருக்கமாட்டன்.’’ சீறினார்.
ஏற்கனவே மனக்குழப்பத்தில் இருந்த ரஞ்சன், ‘‘அய்யோம்மா! எப்பவும் அவள் யாரிட்டயும் எந்த உதவியும் கேட்கிறதில்ல. அண்ணா இந்தப் பக்கம் வர இருக்கிறதால, தானே கூட்டிக்கொண்டு வாறன் என்று சொன்னார். அவ்வளவும் தான். இப்பக் கொஞ்சம் ஸ்னோ குறைஞ்சிருக்கு. தேவையென்றால் அவள் சைக்கிளிலயே வருவாள்.’’ அடக்கப்பட்ட கோபத்துடன் கூறினான்.
கோபப்படும் மகனை முறைத்தபடி என்னவோ சொல்ல முயன்றார் புவனி . அதற்கிடையில், ‘‘ஏன்மா…எனக்கு ஒரு சந்தேகம்!” விழிகள் இடுங்கத் தாயைப் பார்த்தபடி ஆரம்பித்தான் ரஞ்சன்.
“நீங்க அடிக்கடி உங்கட தலையில அவளைக் கட்டினதாகச் சொல்லுறீங்களே, நீங்களாக் கேட்கப் போய்த் தானே அவள் இங்க வர வேண்டி வந்தது.” என்று அவன் கேட்டதும் முகம் கன்றிவிட்டது புவனிக்கு.
என்ன பதில் சொல்வது? அருகிலிருந்த கணவனை எரித்துவிடும் பார்வை பார்த்தார்.
ரஞ்சனோ, பதிலை எதிர்பார்க்கவில்லை என்ற கணக்கில் எழுந்தவன், “என்றாலும் என்ர அம்மா இப்படிக் கதைக்கிறது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கேல்ல.’’ வருத்தம் தோய்ந்த குரலில் அழுத்திச் சொன்னவன், அடுத்தகணம் அவ்விடம் விட்டகன்றான்.
அவனுக்கும், ‘‘இப்பிடி எல்லாம் நிதியைத் திட்டுறதை நிறுத்துங்க; அது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கேல்ல.’’ என்று நேரடியாகச் சொல்ல ஆசை தான். இருந்தாலும், தாயைப் பார்த்து அப்படிச் சொல்ல அவனால் முடியவில்லை.
என்னதான் என்றாலும், எதிர்த்துக் கதைத்துத் தாயின் மனத்தைப் புண்படுத்தவோ, நிதி மீதான அவர் கோபத்தை அதிகரிக்கவோ அவன் விரும்பாததால், மௌனம் காப்பதைத் தவிர வேறு எதுவும் அவன் செய்ய முனைவதில்லை.
ஓரிரு சமயங்களில் இன்று போலத் தன்னை மீறி ஏதாவது சொல்லிவிடுபவன், பிறகு அதற்கும் சேர்த்து வேதனைப்படுவான், தன் தாயை உயிராய் நினைப்பவன்!
வசி மாலை இங்கே வருவதாச் சொன்னதும் தொலைபேசியை எடுத்த புவனி தன் தமக்கை சுமிக்கு அழைத்து, இரவு உணவுக்குத் தங்கள் வீட்டுக்கு வரும்படி அழைக்க, அவரும் சந்தோசமாக ஒப்புக் கொண்டார்.
உடனே, எல்லோருக்கும் போதுமான அளவில் இரவுணவாக பிட்ஸா செய்வதற்கு மாவைப் பதமாகக் குழைத்து வைத்தவர், ‘நிதி ஆறுமணி போல வருவாள் தானே, அதுவும் காரில சொகுசா வருவாள்; வந்து பிட்சாவைச் செய்யட்டும். என்னதான் என்றாலும் அவள் செய்யிறதைப் போலக் கடையில் கூட வாங்க முடியாது.’ எனறு நினைத்துக் கொண்டவர், மீண்டும் வந்தமர்ந்து திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கினார்.

