என்றும் உன் நிழலாக 7 – 2

அவருள்ளத்தில்தான், மகன் நிதியை விரும்புகிறானோ என்ற எண்ணம் பேயாட்டம் போடுகின்றதே!

‘‘உங்கட தங்கச்சி மாதிரித் தான் நாளைக்கு இந்த நிதியும் இருப்பாள்; நன்றி கெட்டதுகள்; இதுகள் எல்லாம் உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யக் கூடியதுகள்.’’ வெறுப்பாகச் சொன்னவர், தன் மன ஆதங்கங்கள், ஐயம், ஆத்திரம், அனைத்தையும் தன் சகோதரி குடும்பத்தின் முன் கொட்டத் தொடங்கினார்.

‘‘சரி விடு புவனி. அவே அங்க சொல்லுறதுக்கு இந்தப் பிள்ளையைப் போட்டு நீ பேசுறது எனக்குக் கொஞ்சமும் சரியாப்படேல்ல. அதோட அங்க கதைச்ச கதை, இங்க வந்து சேரேக்க ஒன்று பத்தாகியிருக்கும். அதை நீ பெரிசா எடுத்துக் கதைக்கிறாயே!” இடையிட்டார் சுமி.

“அவள் பாவம் புவனி, நீ என்ன சொன்னாலும் தலையாட்டிக் கொண்டு போறாள் என்று நீ கூடக் கூடக் கதைக்கிறாய்…இதைக் குறைச்சிக் கொள், அதுதான் உனக்கு நல்லது.’’

தொடர்ந்து சிறு கண்டிப்புடன் சொன்னவர், புவனியின் கதைக்கு அப்பட்டமாக வெறுப்பைத் தெரிவிக்கும் வகையில், முறைத்துக்கொண்டிருந்த இந்திரனையும் ரஞ்சனையும் பார்த்து விட்டு, அந்த இடத்தில் நிலவும் கனமான நிலையை மாற்ற எண்ணி, வேறு கதைகளைக் கதைக்கத் தொடங்கினார்.

*****

அலுவலகத்தில் முடிக்க வேண்டியிருந்த கணக்கு வழக்குகளை எல்லாம் முடித்து வைத்த வசி, நேரத்துடனேயே வேலைகள் முடிந்து விட்ட போதும், நிதியை அழைக்க ஆறுமணி வரை காத்திருக்க வேண்டும் என்பதால் அதையும் இதையும் செய்து நேரத்தை ஓட்டியவன், ஆறுமணிக்குப் பத்து நிமிடங்கள் இருக்க அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு ‘மக்’கை நோக்கிக் கிளம்பினான்.

அங்கு சென்று அவளையும் அழைத்துக் கொண்டு, கிண்டலும் கேலியுமாக அவளை வம்பிழுத்துக்கொண்டே, டென்ஹெல்டர் நோக்கி காரைச் செலுத்தினான்.

மத்தியானத்துக்குப் பிறகு பனி கொட்டுதல் நின்றிருந்தாலும், குளிர் குறையாதிருந்தது.

இரவைக்கு வந்து கொட்டோ கொட்டென்று கொட்டுவேன் என்று கருமேக மூட்டம் அடம் பிடிக்க, மாலை ஆறு மணியிலும் நன்றாக இருள் கவிழ்ந்து காணப்பட்டது.

இங்கெல்லாம் குளிர் காலத்தில் மாலைநான்கு மணிக்கே இருள் கவியத் தொடங்கி, அடுத்தநாள் காலையில் ஒன்பது மணிக்கும் பிறகுதான் தான் நன்றாக வெளிச்சம் வரும்.

மாறாக, கோடையில், அதிகாலை நான்கு மணிக்கே நன்றாக விடிந்து விடும். இரவில் பத்துமணி தாண்டிய பின்னரே விருப்பமின்றியே இருள் பரவத் தொடங்கும்.

இத்தனை நாளும் தான் கதைக்கும் போதெல்லாம் தன்னைத் தவிர்த்ததற்குப் பழிவாங்கும் விதமாக, விடாமல் நிதியைச் சீண்டிக்கொண்டே வந்தான் வசி.

அவன் செய்கை, அவளை அவள் கூட்டிலிருந்து ஒரே நாளில் வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்ற வேகத்தில் இருந்தது!

அவளோ, அப்போதும் அளந்தே கதைத்துக்கொண்டு வந்தவள், தன் குடும்பமே இப்போது அவர்கள் வீட்டில் இருப்பார்கள் என்று அவன் சொல்ல, ‘‘சுமி மாமியைக் கண்டே ஒரு மாதத்துக்கு மேல இருக்கும்…’’ என்று சொன்னவளை நோக்கித் தன் விழிகளைத் திருப்பினான் வசி .

‘‘நிதி நிறைய நாட்களாக எனக்கொரு சந்தேகம்?’’ கேட்டவாறே மீண்டும் பாதையில் கவனம் செலுத்த, அவன் புறமாகத் திரும்பி, ‘‘சந்தேகமா!? என்ன? ’’ என்றவள், அவன் வாய்க்குள் சிரிப்பதைப் பார்த்து, ‘ஏதோ பகிடி பண்ணப் போறார்.’ என நினைத்துக்கொண்டே அவன் என்ன சொல்லப் போறான் என்று பார்த்திருந்தாள்.

அவனோ, ‘‘இல்ல…நானும் பார்த்துக்கொண்டு தான் வாறன், நீர் ஆரம்பத்திலிருந்து சுமி மாமி, மாமா என்றால் விசேசமாகப் பழகுவீர், கதைப்பீர்…அது ஏன் நிதி?! என்ர அம்மா அப்பா என்று தானே?”

சீண்டல் பார்வையுடன் சிரித்துக் கொண்டே வினவினான்.

கேட்டுக் கொண்டிருந்தவளோ பெரிதாகப் புன்னகையைத் தவழவிட்டுக் கொண்டாள்.

‘‘நினைப்பு நினைப்பு.. ம்ம்ம்…அப்பிடிப் பார்த்தால் எனக்கு இன்னும் கொஞ்சம் இல்லை நிறையவே அவையளோட பழக விருப்பம். ஆனாப் பாருங்க, அவே உங்கட அம்மா அப்பா என்றதால தான் யோசிச்சு ஒதுங்கியே இருக்கிறன்.’’ கேலியாகவே பதில் கொடுத்தாள்.

‘‘ஓ! அப்படியா சங்கதி? சரி, அப்போ இந்த நியாயத்தை இன்றைக்கு அம்மாட்டயே கேட்பமே.’’ என ஒருவர் மாறி ஒருவர் கதைத்த படியே வீட்டை வந்தடைந்து, காரை நிறுத்தி விட்டு கராஜ் கதவைத் திறந்து உள்ளே வந்து தங்கள் குளிர்க்கோட்டையும் சப்பாத்துகளையும் கழட்டி வைத்து விட்டு மேலே செல்ல படியேறத்தொடங்கும் போதே, நிதியின் அப்பா தொலைபேசியில் கதைத்ததைப் புவனி சொன்னதும், அதனைத் தொடந்த அவரது பேச்சுக்களும் அச்சுப் பிசகாமல் இவர்கள் காதுகளிலும் விழுந்தன.

புவனிக்கு இது மிகவும் பழக்கப்பட்ட செயல். எப்போதாவது யாராவது வந்து நிதி பற்றிச் சாதரணமாக கதைக்கத் தொடங்கினாலே, அவளது பெற்றவர்களை இழுத்து, ‘‘பொறுப்பில்லாத ஜன்மங்கள்.’’ என்று சொல்லி, அதைக் கேட்டுக்கொண்டு நிதி நின்றாள் கூட, அதைப் பற்றியோ அவள் வேதனையைப் பற்றியோ கொஞ்சமும் யோசிக்காமல் கதைத்துக்கொண்டே போவார்.

அதிலும் இந்திரனோ ரஞ்சனோ நிதிக்குச் சார்பாக ஏதாவது கதைத்தால் இன்னும் கூடுதலாகக் கதைப்பார்.

இன்றோ, கொஞ்சக் காலமாகவே ரஞ்சன் விசயத்தில் இருந்து வரும் பயம், சந்தேகம், மற்றும் எல்லோருமே நிதிக்குச் சார்பாக இருப்பது, போதாக்குறைக்கு இப்பொழுதெல்லாம் நிதியின் வீட்டினரும் அதுக்கு இதுக்கு என்று பணம் அனுப்பச் சொல்வது, இவை எல்லாம் சேர்ந்து அவரைச் சினம் கொள்ள வைத்தது விட்டது.

தன் வீட்டினர் மட்டுமின்றி, தங்கை கணவரும் வந்திருக்கும் போது நிதியை பற்றி இவ்வாறு சித்தி கதைத்ததைக் கேட்டு மிகவும் சினம் கொண்டான் வசி.

‘‘இந்தச் சித்தி மனசில என்னதான் நினைச்சிட்டார் ? எல்லாரும் இவர் சொல்லுறதைக் கேட்டுக்கொண்டு இருப்பீனம் என்றா?’’ பற்களைக் கடித்துக்கொண்டு வெளிப்படையாகவே முணுமுணுத்தான்.

திரும்பிப் பார்த்தான். பின்னால் இரு படிகளின் கீழ் சலனமே இல்லாமல் மரம் போல நின்றிருந்தாள் நிதி. அவள் அப்படி நிற்பதைப் பார்க்கவும் கோபம் தான் வந்தது.

மறுநொடி, ‘அதை இவளிட்டக் காட்டி என்ன பயன்?’ முறைத்தபடி, விடு விடுவென்று படிகளில் ஏறத் தொடங்கினான்.

அவன் முகபாவனையிலேயே இப்போது எதற்கு இத்தனை வேகமாகப் போகிறான் என்றுணர்ந்து கொண்டாள் நிதி.

‘அய்யோ! மாமி ஏற்கனவே நல்ல கோபத்தில இருக்கிறார். போதாததுக்கு இவரும் போய் ஏதும் கதைச்சா, வீண் பிரச்சனை…அதுவும் என்னால.’ சடுதியில் எண்ணி, வேகமாக எட்டு வைத்து வசியின் டி-சேர்ட்டை பிடித்து இழுக்க, சட்டென்று திரும்பினான்.

அவள் விழிகளோ ‘வேணாம்…’ எனக் கெஞ்ச, அதையே தலையாட்டல் மூலமும் உணர்த்தினாள்.

அந்தளவுக்குத் துக்கத்தை விழுங்கிக்கொண்டு சாதாரணமாக இருக்க முயல்வதை உணர்ந்து கொண்ட வசியின் சினம் இன்னும் இன்னும் அதிகமாகவே செய்தது.

‘‘ஏன் பயமா? இப்பிடி இருக்க இருக்க உம்மை எல்லாரும் பைத்தியம் என்று தான் கடைசியில சொல்லுவீனம்.’’ சீறினான்.

தாயின் பேச்சை கேட்டுக்கொண்டு செவிடு போல அமர்ந்திருந்த ரஞ்சன், படிகளில் யாரோ வரும் அரவம் கேட்டு எழுந்து வெளியில் வந்தான்.

அங்கே, கோபத்துடன் நின்ற தமையனையும், அவன் டி-சேர்ட்டைப் பிடித்துக்கொண்டு கெஞ்சல் பார்வையுடன் நின்ற நிதியையும் பார்த்தவன், தன்னுள் எழுந்த திகைப்பு மாறாமலேயே, ‘‘அண்ணா! வாங்க, இப்பவா வாறீங்க?’’ சத்தமாகக் கேட்டதும் தான் புவனியின் பேச்சு ஒரு முடிவுக்கு வந்தது.

தன்னைப் பார்த்து சங்கடத்துடனும், அதேநேரம் தன்னையும் நிதியையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டும் ரஞ்சன் கேட்டதற்கு எதுவுமே சொல்லாமல் திரும்பிய வசி, நிதியின் கையைப் பிடித்து உதறி விட்டான்.

மறுநொடி, ‘‘நான் வீட்டுக்குப் போறன்.’’ உறுமிக்கொண்டே கீழே இறங்கத் தொடங்க, அவனது குணம் தெரிந்த ரஞ்சன், ‘‘அண்ணா…ப்ளீஸ் போகாதீங்க!’’ தானும் அவன் பின்னால் செல்ல, எதுவுமே சொல்லத் தோன்றாமல் ஒரு கணம் தயங்கி நின்ற நிதி, மறுநொடி தன் அறையை நோக்கி விரைந்து படியேறினாள்.

 

error: Alert: Content selection is disabled!!