என்றும் உன் நிழலாக 8 – 2

ஆனால், அதை நேரடியாக வசியிடம் காட்டும் துணிவு மட்டும் அவரிடம் சிறிதும் இல்லை. முகத்திற்கு நேராகவே கேள்வி கேட்கக் கூடியவன் அவன் என்று மிகவும் நன்றாகத் தெரிந்திருந்த படியால், புவனியும் சரி மற்றவர்களுமே அவனுடன் யோசித்துத் தான் பேசுவர்.

அதனால், அவனுடன் கதைக்க முயன்று தோற்ற ஆத்திரத்தை அப்படியே நிதி மீது காட்டினார்.

அப்போதும், தான் கதைத்ததை நிதி கேட்டுவிட்டாள் என்பது தெரிந்தும், அதற்கு அவர் எள்ளளவும் கவலைப்படவில்லை. ‘‘நான் என்ன இல்லாததையா இட்டுக்கட்டிச் சொன்னன். இல்லையே!’’ என, தன் செய்கையை நியாயப்படுத்திக் கொண்டார் அவர்.

 

‘‘நிதி…நிதி…என்ன தூக்கமா?’’ அருகிலிருந்த ரதீஷின் காட்டுக் கத்தலில் தன்னுணர்வு பெற்றவள், ஆலயத்துக்கருகில் கார் நிற்பதைப் பார்த்து, ‘‘வந்திட்டமா?’’ என்ற முணுமுணுப்புடன் அவசரம் அவசரமாக இறங்கினாள்.

‘‘காருக்குள்ள ஏறினால் தூங்கிறதுதானே இவளுக்கு வேலையே! இரவிரவா எனக்கு வேலை செய்து உழைச்சுக் கொட்டின களைப்பு.’’ நக்கலாகச் சொன்னவாறே இறங்கிய புவனி முன்னால் கணவனுடன் நடக்க,

தாயின் பேச்சிற்குப் பழிப்புக் காட்டிய ரதீஷ், முகம் வாடிய நிதியைப் பார்த்து, ‘‘அட விட்டுத் தள்ளும்…இதென்ன புதுசா?’’ என அவளுக்குக் கேட்கும் வண்ணம் சொல்லித் தோளைக் குலுக்கிவிட்டு, எதுவுமே பேசாமல் ஏதோ யோசனையில் வரும் ரஞ்சனுடன் இணைந்து மூவருமாக ஆலயத்தை நோக்கிச் சென்றனர் .

ஆலயத்தில் வழிபட்டு முடிய, ‘ஜூலியானா டொரொப்’ நோக்கிக் காரை செலுத்தினார் இந்திரன்.

வெளியே பார்வையிருக்க யோசனையுடன் அமர்ந்திருந்தான் ரஞ்சன்.

‘அண்ணா ஏதோ குழப்பத்தில் இருக்கிறார் போலிருக்கே! இந்த ஒரு கிழமையாகவே ஆள் கொஞ்சம் சரியில்லை. கதையும் குறைவு. எந்த நேரமும் டல்லாகவே இருக்கிறார்.’ என எண்ணிய ரதீஷ், ரஞ்சனின் தம்பிதான் என்றாலும், அவனுக்கு மிகநெருங்கிய தோழனும் கூட!

தமையன், தன்மனதில் நிதியை நினைத்திருப்பதை முதலில் அவன் வாயால் அறிந்து கொண்டவனும் இவனே!

தன் விருப்பை நிதியிடம் சொல்ல ரஞ்சன் தயங்குவதற்கான காரணத்தையும் இவன் நன்றாகவே அறிவான்.

வேறு என்ன? புவனிக்கு நிதியைப் பிடிக்காதே!

‘அம்மா ஒருக்காலும் இதற்குச் சந்தோசாமாகச் சம்மதிக்கமாட்டார். அது தெரிஞ்சிருந்தும் அண்ணா நிதியை விரும்புறார். ஆனால் நிதி? என்னோட பழகிறது போலத்தான் அவரோடும் பழகுகிறாள்! என்ன, இன்னும் கொஞ்சம் கூடுதலாக நாலு வார்த்தைகள் கதைப்பாள், அவ்வளவும் தான். ஆனால், இவர் தான் அவளுக்கு முன்னும் பின்னும் திரியிறார்.’ என நினைத்துக் கொண்டவன்,

‘பேசாமல் அண்ணா உன்னை விரும்புறார் என்று நானே சொன்னால் என்ன?’ என்று யோசித்து, ‘அது நல்லா இருக்காது. அண்ணாவே சொல்லட்டும். என்றாலும், இதுவரைக்கும் அவளுக்கு அவர் செய்கைகளை வைத்துக் கொஞ்சம் கூடவா விளங்கியிராது?’ என அவர்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு வந்தவன், தன் இருபக்கங்களிலும் அமர்ந்திருக்கும் நிதியும் ரஞ்சனும், வெளியில் பார்வையைப் பதித்து, ஏதோ, இன்று தான் இப்பகுதிக்கு முதல் முதலாக வந்திருப்பது போலவும், இனி, வரும் சந்தர்ப்பம் கிட்டவே கிட்டாது போலவும் பார்த்துக்கொண்டு வர, முன்புறம் தாயும் தந்தையும் தம்முள் கதைத்துக்கொண்டு வரவும், செய்வதறியாமல், மீண்டும் கைபேசியில் கேம் விளையாடத் தொடங்கினான் .

மாலை நான்குமணி போலத் தங்கள் வீட்டுக்கு வந்த தங்கை குடும்பத்தையும் நிதியையும் இன்முகத்துடன் வரவேற்றார் சுமி.

இப்படிச் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் யாராவது ஒருவரது வீட்டில் கூடுவது இவர்கள் வழக்கம்.

‘‘என்னக்கா…நிர்மலாவும் வருவாளா?’’

சமையலறையில் இருந்த சுமியிடம் வினவியபடி அங்கே வந்த புவனி, மலர்ந்த முகத்துடன் சுமியோடு அளவளாவிக்கொண்டே மும்மரமாகத் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த நிதியைக் கண்டுவிட்டு மனம் சுணங்கினார்.

‘இவளுக்கு இங்க வந்தால் முகத்தில பல்ப் தன்னால எரியும். வீட்டில ஏதோ நாங்க சிறை வச்சிருக்கிற மாதிரி முகத்தை நீட்டிக்கொண்டு ஊமக்கொட்டான் போல இருப்பாள். இங்க பார்…வாயை’

எப்போதுமே நிதியின் செய்கைகளில் பிழை கண்டுபிடிக்க விரும்பும் அவர் மனம் இதிலும் பிழை கண்டு பிடிப்பதில் விருப்புடன் முனைந்தது.

‘‘இல்ல புவனி…முதல் வாறதாத்தான் இருந்தாள். பிறகு அவள்ட வீட்டுக்கு யாரோ விருந்தாளிகள் வருகீனமாம், அதனால வரேல்லையாம்.’’ சின்னமகள் பற்றிக் கூறினார் சுமி.

‘‘இவரும் வசியும் ஒரு ஆறு ஆறரை போல வருவீனம்.’’ தொடர்ந்து சொன்னவர், நிதி தயாரித்திருந்த தேநீரில் ஒன்றைத் தங்கைக்குத் கொடுத்து விட்டு, ‘‘இந்த ட்ரேயில வச்சு ஹாலுக்கு கொண்டுவாம்மா; அங்கயிருந்து எல்லாரும் ஒன்றாகவே குடிக்கலாம்.’’ சொன்னவாறே, தான் செய்து வைத்திருந்த கடலை வடைகளைத் தட்டில் எடுத்துக்கொண்டு புவனியுடன் கூடத்தை நோக்கிச் செல்ல, தேநீரை எடுத்துக்கொண்டு பின் தொடர்ந்தாள் நிதி.

எல்லோரும் அமர்ந்து அளவளாவியபடியே தேநீர் அருந்தி வடையையும் சுவைத்துக் கொண்டிருக்க, வழமைக்கு மாறான அமைதியோடு தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த ரஞ்சனை யோசனையாகப் பார்த்தார் சுமி.

‘‘தம்பி ரஞ்சன்…என்னய்யா ஒரேயடியாக அமைதியா இருக்கிறீங்க?’’ அவனையும் தம் பேச்சினுள் இழுக்க முனைந்தார்.

அவனோ மெல்லிய முறுவலுடன் பார்த்தான்.

‘‘அப்படியெல்லாம் இல்ல பெரியம்மா. வடை அவ்வளவு ருசி…அது தான் ரசித்துச் சாப்பிடுறன்.’’ சமாளிப்பாகச் சொல்லிவிட்டு மீண்டும் தொலைக்காட்சியில் பார்வையைப் பதித்தான்.

‘‘அவன், போன கிழமை நிதியைப் பேசினதில(திட்டியதில்) இருந்து இப்படித் தான் முகத்தை எட்டு ஊருக்கு நீட்டி வச்சுக்கொண்டு திரியிறான். ஏன், வசி கூட என்னோட அன்றைக்கு இப்படித்தான் இருந்தான் அக்கா.’’ அடிக்குரலில் தமக்கையிடம் குசுகுசுத்த புவனி, ‘‘விடுங்கக்கா, சின்னப் பெடியள்…இவங்கட முகம் நீட்டல் நம்மை என்ன செய்யும்!’’ என்றபடி, வேறு கதைகளைக் கதைக்கத் தொடங்கினார்.

தேநீரை அருந்தி முடித்த நிதி, ‘‘சுமி மாமி…இரவுச்சாப்பாடு என்ன செய்யப் போறீங்க?’’ கேட்டுக்கொண்டே எழுந்தவள், ‘‘இன்றைக்கு நீங்க ஒன்றும் செய்ய வேணாம். என்ன செய்யிறது என்று மட்டும் சொல்லுங்க, நான் சமைக்கிறன்.’’ குடித்து முடித்த தேநீர்க் கோப்பைகளையும் எடுத்துக் கொண்டே சொன்னாள்.

அவள் இங்கு வரும் சந்தர்ப்பங்களிலெல்லாம் முடிந்த அளவுக்கு வேலைகளைக் கொடுப்பதைத் தவிர்க்கும் சுமி, இன்றும் அப்படியே, ‘‘இதெல்லாம் பெரிய சமையலா ராசாத்தி? நீங்க பேசாமல் இருங்க, நான் கொஞ்ச நேரத்தில செய்திருவன் மா. எப்பிடியும் ஏழரை போலத் தானே சாப்பிடுவம். அதுதான் கொஞ்ச லேட்டாகச் செய்யலாம் என்று எல்லாம் ஆயத்தப்படுத்தி வச்சிருக்கிறன்.’’ என்றதும், ‘‘என்ன சாப்பாடு பெரியம்மா?’’ ஆவலோடு இடையிட்டான் ரதீஷ்.

‘‘குஸ்குஸ் செய்வம் என்று பார்த்தன் ராசா!’’ என்ற சுமி, சமையலறை நோக்கி நகர்ந்த நிதியிடம்,

‘‘நிதி …நீர் அங்க சிங்கில கப்புக்களை வச்சிட்டு வாரும்.’’ என்றார்.

அவளோ, அங்கிருந்தே அவரைப் பார்த்து மறுப்பாகத் தலையாட்டினாள்.

‘‘இன்றைக்கு நான் தான் குஸ்குஸ் செய்யப் போறன் சுமி மாமி; உங்களளவுக்கு இல்லாட்டாலும் நானும் நல்லாவே செய்வன்.’’ என்றபடி, அவர் பதிலுக்குக் காத்திராமல் சமையலறைக்குள் சென்று மறைந்தாள்.

பார்வை தொலைகாட்சியில் இருந்தாலும் இவர்கள் கதைப்பதையே கவனித்துக் கொண்டிருந்த ரஞ்சன், எப்போதும் போல நிதிக்கு உதவும் எண்ணத்தில் இருக்கையை விட்டெழ எத்தனிக்க, உடனே அவனைத் தடுத்தான் ரதீஷ்.

‘‘அண்ணா, நீங்க தானே எப்பவும் உதவுவீங்க; இன்றைக்கு நான் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கிறன்; நீங்க இருங்கோ!’’ என்றவன், தாயின் தேவையில்லாத திட்டில் இருந்து நிதியைக் காத்த பெருமையைத் தனதாக்கியவாறே சமையலறையை நோக்கிச் சென்றான்.

 

 

error: Alert: Content selection is disabled!!