“ஏதன், நான் துர்கா” தயங்கியபடியேதான் அழைத்தாள், அவள்.
“சொல்லு துர்கா.” என்றான், அவன்.
“இல்ல, நான் இப்ப அங்க வரலாமா எண்டு கேக்க எடுத்தனான். செஃப் இப்ப எப்பிடி இருக்கிறார்? நான் வந்து பாக்கலாம்தானே?” தயக்கமாகவே தொடர்ந்தாள்.
“டாட் … இருக்கிறார் துர்கா. பைபாஸ் சேர்ஜரி செய்யோணும். சின்ன குழந்தை போலப் பிடிவாதம் பிடிக்கிறார்.” என்றவன், நெடிய பெருமூச்சோடு தொடர்ந்தான்.
“நீ இன்னும் ஒரு மணித்தியாலத்தில ரெடியா நில்லு, அங்க வருவன் என்னோட வரலாம்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.
“இல்ல ஏதன் நானே வாறன்.” என்று, இவள் சொன்னது அவனைச் சேரவில்லை.
ஆரோனுக்கு இப்படி என்று கேள்விப்பட்ட கணத்திலிருந்து துர்காவிற்கு மனமே சரியில்லை. அவர்தான் ஒலிவியாவின் தகப்பன் என்றதையே இன்னமும் முழுதாய்க் கிரகித்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குள், நிமிர்வும் மிடுக்குமாக, எந்நேரமும் சுசுறுசுறுப்பாக இயங்கும் மனிதனுக்கு ஹார்ட் அட்டாக் என்றால்?
ஒலிவியாவுக்கு அழைத்துச் சொன்னதும் இவள்தான். “ஆஆ ! என்ன சொல்லுற?” என்றவள் பக்கம் சில நிமிடங்கள் சத்தமே இல்லை.
‘அவர், நீ மிகவும் மதித்துப் பார்க்கும் உயரத்தில் இருக்கும் செஃப் மட்டுமே!’ என்றது ஒலிவியாவின் மனம். ‘ஆனாலும்…’ என்ற ஒற்றைச் சொல்லைக் கரடுமுரடாக உச்சரித்ததும் அதே மனம்தான். நெஞ்சுக்குள் பிசைந்தது. அடித்தொண்டையில் கட்டக்கசப்புணர்ந்தாள், ஒலிவியா.
“ஒலிவியா” மெல்ல அழைத்தாள், துர்கா.
“ம்ம்ம்…” என்றவள், “நீ ஒருக்காப் போய்ப் பாப்பியா துர்கா?” என்று கேட்டாள். அந்தக் கேள்விக்குப் பின்னால் பார்த்துவிட்டு வந்து எப்படி இருக்கிறார் என்று சொல்லேன் என்றது ஒளிந்து கிடப்பதாக உணர்ந்தாள், துர்கா.
அதையும் விட, இவளுக்கு ஒரு இக்கட்டு என்றதும் அவரும் அவர் மகனும் தம்மில் ஒருத்தியாக எண்ணி உதவியிருக்கிறார்கள். கேட்டதும் மறுவார்த்தை இல்லாது வேலை தந்தவர், ஆரோன். எப்போது எதிர்ப்பட்டாலுமே அன்போடு எல்லாம் விசாரித்துவிட்டுத்தான் நகர்வார். இவளுக்குமே அவரைச் சென்று பார்க்க வேண்டும்தான்.
அதையே ஒலிவியாவிடம் சொல்லி, பார்த்துவிட்டு வந்து உனக்கு அழைக்கிறேன் என்றிருந்தாள்.
ஆனால் ஏதனோடு செல்வது… மனம் அதை ஏற்கவில்லை. மிகுந்த அசௌகரியமாக அந்தரமாக இருந்தது.
அவளை அழைத்துப் போக என்றே வருகிறானோ என்ற எண்ணம் குறுக்கிட, ‘சே சே’ என்று அவசரமாக மறுத்தும் இருந்தாள்.
ஒரு மணித்தியாலத்தில் அவன் இங்கு வருவான் என்றால், ஒரு முக்கால் மணித்தியாலத்தில் அவளாக இங்கிருந்து வெளிக்கிட்டுவிட்டால் சரியே. போகும் வழியில் ட்ரெயினில் வருவதாகச் சொல்லிக்கொள்ளலாம் என்று எண்ணினாள்.
அப்படி எண்ணியதற்கு மாறாக, ‘ஏதன் நான் ட்ரெயின்ல வாறன்’ என்று அப்போதே மெசேஜ் அனுப்பினாள். தொடர்ந்து, “ **** இந்த கொஸ்பிட்டல் தானே?’ என்று கேட்டும் மெசேஜ் தட்டிவிட்டாள்.
அடுத்த நிமிடம் அழைத்துவிட்டான். அழைப்பான் என்று இவள் எதிர்ப்பார்க்கவில்லை. ஏற்காது இருப்பதா? எப்படி? தடுமாறிக்கொண்டேதான் அழைப்பை ஏற்றிருந்தாள்.
இவள் “ஹலோ” என்று முழுதாய்ச் சொல்லி முடிக்கவில்லை, “அங்கதான் நான் வாறன், திரும்பி வரேக்க என்னோட வரலாம் எண்டு சொல்லுறன், பிறகும் இப்பிடிச் சொன்னால் என்ன அர்த்தம் துர்கா?” சிடுசிடுப்போடு அதட்டினான், அவன்.
அந்த அதட்டல் இவளுள் உள்ள தடுமாற்றத்தை இன்னுமே அதிகரித்திட்டு. “இல்ல ஏதன், என்னால வரேலும் எண்டு இருக்கேக்க நீங்க அங்க இருந்து வந்து கூட்டிக்கொண்டு போகவா வேணும்? அதான்…” என்று அவள் முடிக்கவில்லை, குறுக்கிட்டு இருந்தான், அவன்.
“ஹலோ ஹலோ… உன்னக் கூட்டிக்கொண்டு வர எண்டு நான் அங்க வரேல்ல. எனக்கு அங்க முக்கியமான சில வேலைகள் இருக்கு. அதுகள முடிச்சிட்டு வரேக்க உனக்கும் வேலை முடிஞ்சிருக்கும் எல்லா? என்னோட வரலாம் எண்டுறன்.” என்றவன் குரலில் சிடுசிடுப்பு நன்றாகவே தெரிந்தது.
அதையுணர்ந்தவள் வார்த்தைகளைத் தேடி நின்றாள். அதற்குள், “இதுக்கும் மேல உன்ர விருப்பம் துர்கா.” இறுகிவிட்ட தொனியில் சொன்ன கையோடு அழைப்பைத் துண்டித்திருந்தான்.
கைப்பேசியையே பார்த்திருந்தாள், துர்கா. அவன் இறுக்கமான தொனியே காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. அதற்கு மேல் அவளால் அசையவும் முடியவில்லை. வேலையைத் தொடர்ந்தவள் மனத்தில் பெரும் அந்தரமாக இருந்தது. ஏதனை விட்டுத் தள்ளி நில் என்று, மீண்டும் மீண்டும் அவள் மனம் எச்சரிக்கிறதே!
அவளோடு கதைத்துவிட்டு எழுந்த ஏதன் செவிகளில்,
தகப்பன் இருந்த அறையின் கதவு ஒருக்களித்து இருக்க, உள்ளே தாய் அழுகையோடு கதைப்பதுவும், தகப்பன் தழுதழுத்த குரலில் சமாதானம் செய்வதும் மோதின. முதல் நாளிரவின் நினைவு இன்னும் இன்னும் அவனுள் அதிர்வை உண்டு பண்ணியது.
அவன் மட்டும் தகப்பனைத் தேடிச் செல்லாது, அவன் சகோதரன் சொன்னதுபோல், வரும் நேரம் வரட்டும் என்று, விட்டேற்றியாக இருந்திருந்தால் எதுவும் நடந்திருக்கலாம். அவர்களின் மொத்தத் துணிவு, உயிர்ப்பு எல்லாமே தந்தைதானே! இந்த உண்மை இதுவரையும் இல்லாத வகையில் தகப்பன் வைத்தியசாலையில் கண்மூடிக் கிடக்கையில் முகத்தில் அறைந்து வலி கொடுத்தது!
அள்ள அள்ளக் குறையாத சொத்துகளை, வசதி வாய்ப்புகளை, மதிப்பை, செல்வாக்கை அவன் தந்தை ஒற்றை மனிதனாக ஏற்படுத்தித் தந்திருக்கிறார். இருந்தாலும் அவர் இருப்பின் அவசியத்தையும் உணர்த்திவிட்டாரே!
முதல் நாள் தகப்பனைத் தேடிச் சென்றவன் அறையைத் திறக்கையில் தகப்பன் கிடந்த கோலம் அவனால் என்றுமே மறக்க முடியாதது. ஆறாகப் பெருகிய வியர்வையோடு வலியில் முனங்கியபடி நெஞ்சைத் தேய்த்துக்கொண்டு கட்டிலில் கிடந்த கோலம் சில நொடிகளுக்கு அவன் மொத்த இயக்கத்தையும் நிறுத்த வைத்திருந்தது.