ஏதனின் இலஞ்சியவள் – 13 -2

“போ எண்டுறன்.” அவள் கரம்பற்றித்  திருப்பி விட்டவன், “ப்ளீஸ் துர்கா.” அவளுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் முணுமுணுத்தான். அதற்கு அவள் பார்த்த பார்வை இருக்கே, இவனை ஐயோ என்று தலையில் கைதான் வைக்கச் சொல்லிற்று. விறுவிறுவென்று நடந்தாள் துர்கா.

‘கார் பார்க்கிங்ல வெயிட் பண்ணு துர்கா,  ஐஞ்சே நிமிசம் வந்திருரன்.’ மெசேஜ் இட்டவன், ‘நில்லாமல் போனியோ வீட்டுக்குக்  கட்டாயம் வருவன்.’ சேர்த்துத் தட்டி அனுப்பினான்.

நீண்ட வராண்டாவில் நடந்து கொண்டிருந்தவள் திரும்பி முறைத்துவிட்டு நடந்தாள். 

“பாத்தியா உனக்கே இப்பிடிச் சொல்லுறாள். ஆளும் பார்வையும் கொஞ்சம் கூடச் சரியில்ல. ” உச்சபட்சமாக கோபமும் அதிருப்தியுமாகச் சொன்ன சோஃபியின் பார்வை மகன் பார்வையைத் துளைத்தது. ஏன் இந்தச் சிடுசிடுப்பும் கோபமும்?  

“இவளோட உனக்கு ஏற்கனவே அறிமுகம் இருக்கா ஏதன்?” ஊடுருவும் பார்வையோடு கேட்டார். 

“ப்ச் தெரியும்தான். எனக்கு மட்டுமா மோம்? ஒலிவியா கலியாணத்தில நீங்க காணேல்லையா? அது தவிர இப்பதான் வேலைக்கு வந்த இடத்தில கண்டு கதைச்சனான்.” என்றவன், அவர் நேரடிப் பார்வையைத் தவிர்த்தான். பயமெல்லாம் இல்லை. இப்போது இந்த இடத்தில் துர்கா, அவளுக்கும் தனக்குமான பழக்கம், உறவு என்று எண்ணியவனுக்கு, அந்த  ‘உறவு’ என்ற எண்ணமே அவன் உதடுகளை முறுவலைப் பூசிற்று. கோபக்கொழுந்தாக விசுக்விசுக்கென்று நடந்து போகிறவள் முதுகில் அவன் பார்வை உரிமையோடு படிந்தது. துர்கா சட்டென்று திரும்பியிருந்தாள். ஏதனின் ஆழ்ந்த பார்வை அவள் பார்வைக்குள் பிடிபட்டது. அது அவள் மனக்கொதிப்பைக் கூட்டியதை அறிவானா என்ன? 

அவன் கவலை அவனோடு. இவளை உறவாக்குவது இலகுவாக, அவன் குடும்பத்தின் ஒருமித்த சம்மதத்தோடு, நிறைந்த மகிழ்வோடு   நடக்குமா என்ற சந்தேகம் சிறு முளையாகத் தலைக்காட்டியது. இக்கணம் அதைப்பற்றியெல்லாம் ஏன் நினைப்பான்? புறந்தள்ளிவிட்டான். 

அடுத்தச் சில நிமிடங்கள் தாயையும் சகோதரங்களையும்   சமாதானம் செய்து தகப்பனிடம் அனுப்புவதில் கழிந்தது. கோபமும் புறுபுறுப்பும் இருந்தாலும் அவர்கள் தகப்பனைக் காண நுழைய, “இந்தா வந்திருரன்.” என்றவன், அவர்கள் வினையாற்ற முதலே விரைந்து வெளியேறிவிட்டான்.

அந்த விரைவு மெது ஓட்டமாக மாற,  கார் பார்க்கிங் நோக்கி இழுத்துச்சென்றது.

வைத்தியசாலையை விட்டு வெளியில் வந்த துர்கா, சும்மா எல்லாம் இல்லை உச்சபட்சமான கொதி நிலையில் இருந்தாள். தான் சந்தித்தது ஆரோன், ஏதன் குடும்பமா என்றதை இன்னமும் நம்ப முடியவில்லை. அந்தளவுக்கு செடில் பிடித்த மனிதர்கள். தாம் என்ற அகங்காரமும் பணத்திமிரும். பணமும் திமிரும் கண்டறியாத மதிப்பு மரியாதையும் இல்லாமலா அவர்கள் வாழ்கிறார்கள்? அதுவெல்லாம் இந்தச் சனத்துக்கு  மட்டுமே  உரித்துப் போலல்லவா அந்த மனிசியின் ஒரு ஒரு நடவடிக்கையும் பார்வையும் சொல்லி நின்றது.

உள்ளம் கொதித்ததில் மூக்குக்குப் போட்டியாக முகமே சிவந்தது. அதுவும் அந்த ‘பிளடி இந்தியன்’ என்ற வார்த்தை, அவளையே சுற்றி  ரீங்காரம் இட்ட வண்ணம்  இருக்கிறதே! ஐலா, துர்க்காவை விடவும் சில வயதுகள் பெரியவளாக இருக்கலாம். அவளுள்  எப்படிப்பட்ட அழுக்கிருந்தால் அந்த ‘பிளடி இந்தியன்’ என்ற சொல் வழுக்கி விழுந்திருக்கும்? 

ஏதன் மட்டும் பிடிக்கவில்லையோ அந்தப் பெண்மணி சோஃபியா அவளை அறைந்திருப்பாவோ!

“என்ர கன்னத்தில அவவிட கை மட்டும் லேசாப் பட்டிருக்கோணும்.” முணுமுணுத்தவள் வலக்கையை இறுக்கமாகப்  பொத்திக்கொண்டாள். ஆட்காட்டி விரலுக்கும் நடு விரலுக்கும் இடையில் பெருவிரல் துருத்தி நின்றது. 

“அந்த லேடி முகத்தில ஒரே குத்து!” என்றுகொண்டு காற்றில் கையை வீசினாள். வேகமாக அவளை நோக்கி வந்த ஏதன், “ஹேய்  துர்கா!” என்றுகொண்டு சற்றே பின்னால் நகர்ந்தான்.

“என்னை அடிக்கப் பயிற்சி செய்யிறயா நீ?” சற்றுமுன் நடந்தவைகள் எதுவுமே இல்லை என்ற வகையில் விழிகளால் சிரித்தபடி சீண்டலாகக் கேட்டவனை என்ன செய்வது?

“உங்கள மட்டும் இல்ல, என்னை அடிக்க வந்த உங்கட மம்மியையும் .” அவள் கட்டுப்பாட்டையும் மீறி வேகமாகச் சொல்லிவிட்டாள். அவனோ கூர்மையாகப் பார்த்தான். இவளுள் சட்டென்று ஒரு சில்லிடல். நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

அவனிடம் பகுதி நேரமாக வேலை செய்பவள், அவன் அன்னையை அடிப்பேன் என்று அவனிடமே சொல்கிறாளே. அவன் கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டால்…மனம் பதைபதைத்தது .

 “என்னை …நான் இப்பிடிச் சொல்லுறன் எண்டா அதுக்குக்  காரணம் உங்கட வீட்டாக்கள்தான் ஏதன். அதென்ன பிளடி இந்தியன் எண்டுறது? முதல் நான் இந்தியாவே இல்லை, அவுஸ்திரேலியா. என்ற பூர்வீகம்  இலங்கை. சரியா? சரி அதையும் விடுங்க. நீங்க எல்லாரும் பச்சக் கள்ளர் படை. இதுக்க மற்றவேயப் பாத்து பிளடி எண்டுறது.” சீறியவளை கரம்பற்றி, அவள் சுதாரிக்க முன்னரே மறுபுறம் வேகமாக நடத்திவந்து காருக்குள் ஏற்றியிருந்தான். 

“ஏய் கையை விடுங்க!” என்று உதறிக்கொண்டு உள்ளே அமர்ந்தவள் முறைத்தாள்.

“இதுதான் லாஸ்ட் வோர்னிங் ஏதன், இப்பிடித் தேவையில்லாமல் அட்வான்டேஜ் எடுக்கிற வேல என்னட்ட வேணாம். இதுக்கு நான் ஆள் இல்ல சரியா?” இன்னும் என்ன சொல்லி இருப்பாளோ, வேகமாகச் சாரதியாசனத்தை நிறைத்தவன் கதவை அறைந்து சாத்தியதில் அவளுடலில் திடுக்கிடல் ஓடியது.  நாக்கு அசையாமல் போயிற்று.

ஒரு கை இருக்கைப் பட்டியை விசுக்கென்று இழுத்து மாட்ட மறு கை காரை கிளப்பி ஒட்டியது.

பாதையில் இறங்கும் வரை துர்காவின் முறைத்த பார்வை அவனில்தான். அவன் பார்க்கவில்லை. ஆனாலும் அவன் முகமும் இறுக்கிக்கிடந்தது. 

“எனக்கு இந்த இடத்தில இருந்து வீட்டுக்குப் போக வழி நல்லாவே தெரியும். பார்க்கிங்ல நில்லு, இல்லையோ வீட்டுக்கு வருவன் எண்டு சீப்பா பிளெக் மெயில் பண்ணுற வேலையும் இதான் கடைசியா இருக்கோணும். உங்கட ரெஸ்டோரண்ட்டுக்கு வேலைக்கு வாறதும் வராமல் நிக்கிறதும் கூட என்ர  சொந்த விருப்பம் சரியோ. உங்கட லிமிட்ல நீங்க நில்லுங்க, என்ர லிமிட் எனக்கு எப்பவுமே மறக்கிறது இல்ல.” படபடவென்று பொரிந்தவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவள், “ஏன் கள்ளர் படை எண்டனீ?” என்றிருந்தான்.

“இதுக்கு நானா பதில் சொல்லோணும்?” ஒரு சாதியாகக் கேட்டாள். நெற்றி சுருக்கி யோசித்தவன், “அப்பிடி என்னத்த உன்னட்ட இருந்து எடுத்தனான்?” விழிகள் சுருக்கிச்  சீண்டினான்.

முறைத்தவள், “ என்னட்ட இருந்து எடுத்தீங்க எண்டு சொன்னனானா?  கொலனியா வச்சிருக்கிறன் எண்டு ஏசியா பக்கம் வந்து களவெடுத்த பரம்பரைதானே நீங்க? பிறகு என்ன பிளடி இந்தியன் எண்டு சொல்லுறது? நான் அதைச் சொல்லோணும்.” என்றவள் உதட்டுக்குள் “பிளடி” என்று உச்சரிக்கவே  அவள் கரத்தைப் பற்றித் தன் கரத்தினுள் அடக்கிக்கொண்டான், ஏதன்.

 அதுவரை அவனோடு மல்லுக்கு நிற்கும் மனநிலையில் இருந்தவள் அப்படியே உறைந்து போனாள். சில வினாடிகள்தான் கரத்தை விடுவிக்க முயன்றாள் . “ப்ளீஸ்!” விழிகள் சுருக்கிக் கேட்டு அவள் இதயத்துடிப்பைக்  கூட்டினான்.

“வேலைக்கு வரோணும் நீ . இல்லையோ டாட் வந்து பார்த்திட்டுச்  சரியா மனம் நொந்து போவார். மோம், வீட்டில எல்லாரும்  இண்டைக்கு என்ன மனநிலையில இருக்கினம் எண்டு உனக்கு விளங்கி இருக்கும் துர்க்கா. ஒலிவியா விசயம் நேற்று வருது. டாட் கையோட உயில் எழுதுறார்.  நெஞ்சசைப் பிடிச்சுக்கொண்டு விழுந்திட்டார். நீ வேற ஒலிவியாவோட நண்பி.  எல்லாம் சேர்ந்து கோவத்தில  அவர் கதைச்சதப்  பெரிசா எடுக்காதே ப்ளீஸ்!” பாதையிலிருந்து அவள் முகத்துக்கு வந்த பார்வையையும் அவன் குரலும் அவள் புலன்களை வேலை நிறுத்தம் செய்வித்தன.

“ப்ளீஸ் கையை விடுங்க ஏதன்.” என்றவள், அவன் பிடி இளகவும்  கரத்தை இழுத்துக்கொண்டாள். ஏனோ அவன் முகம் பார்க்க இயலவில்லை. பார்வையை வெளிப்புறமாக மேயவிட்டவள் மனமோ என்ன என்னவோ எல்லாம் கிசுகிசுத்தது.

 

error: Alert: Content selection is disabled!!