மறுநாள் மதியம் பல்கலைக்கழகத்தில் இருந்தாள், துர்கா. இன்னும் சில மணித்தியாலங்களில் தாம் லண்டன் புறப்படுவதாக குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள், ஒலிவியா. வாசித்தவள் நினைவில் ஏதனின் தமையன் ஐவன் ஆகோரசமாக உறுமியதுதான் வந்திட்டு.
சற்றுமே யோசிக்கவில்லை. ‘நோ ஒலிவியா, டோன்ட் கம் ஹியர்.’ பதில் அனுப்பி இருந்தாள். அதே வேகத்தில் வெளியே வந்து நண்பிக்கு அழைத்தாள்.
ஒலிவியாவிடமிருந்து ஏன் என்ற கேள்வி வந்தது. இங்கு வந்தால் உன் உயிருக்கு ஆபத்து என்பதை துர்கா மறைக்க நினைக்கவில்லை. அதைக் கேட்டுக்கொண்டிருந்த வேர்த் சத்தமாகச் சிரிப்பது துர்கா காதில் விழுந்தது.
“இட்ஸ் நொட் எ ஜோக் ஒலிவியா.” படபடத்தவள், முதல்நாள் வைத்தியசாலையில் நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொன்னாள்.
“உன்ர நண்பி எண்ட ஒண்டுக்காக என்னோட எப்பிடி நடந்துகொண்டவே தெரியுமா? சரி அதையெல்லாம் விடு, உன்ர பெயரை உச்சரிக்கேக்கையே ஏதன்ட தமையன் முகத்தப் பாக்க மாட்ட நீ. நீ செஃப்ட மகள் எண்டது ஒரு பக்கம், அவர் இப்ப போய் நிறைய சொத்துக்கள உன்ர பிள்ளைகளுக்கு எண்டு எழுதி வச்சிட்டாராம் எண்டத அவே ஒருத்தராலும் ஏற்றுக்கொள்ள ஏலாமல் இருக்கு. ஏதன் மட்டும் அது பற்றி ஒர்ரி பண்ணேல்ல. தகப்பன் உழைப்பு அவர் விருப்பம் எண்டு சொன்னவர்.” என்று அவள் சொன்னது ஒலிவியா, வேர்த்துக்குப் புதிய செய்தி.
ஒலிவியா இரும்பென இறுகிப் போனாள். எக்காலத்திலும் நீ என் தந்தையாக முடியாது என்று அத்தனை தெளிவாகச் சொல்லியிருக்கிறாள். அதுதான் அப்பட்டமான உண்மையும். அதன்படிதான் கடந்த கணம் வரை நடந்தும் வருகிறாள்.
அன்னை வயிற்றில் உருவாகக் காரணம் இவன் என்றோ, பத்து மாதங்கள் சுமந்து பெற்றாள் இவள் என்றோ ஒரு ஆணும் பெண்ணும் தாய், தகப்பன் ஆகிவிட இயலுமா என்ன? இந்த எண்ணம் வந்தால் அவளுக்கு எக்கச்சக்கமாகக் கோபம் வரும்.
பெற்ற குழந்தை தொடர்பான கடமைகளையும் பொறுப்புகளும் செவ்வனே நிறைவேற்றி, அக்குழந்தையை இந்தச் சமுதாயத்தில் நன்மனிதம் கொண்ட உயிராக உலவ விட்டுவிட்டெல்லா நான் அம்மா நான் அப்பா என்று மார் தட்ட வேண்டும்?
அப்படிப் பார்த்தால் அவளுக்குத் தந்தை டெனிஸ் மட்டுமே! ஒருக்காலும் அந்த இடத்தை ஆரோன் பெறப்போவதில்லை. இவர் சொத்து இங்கு யாருக்கு வேண்டுமாம்?
அவர் சுகயீனம் என்றதில் கலங்கிவிட்ட மனம் மீண்டும் கல்லாகிற்று. மனத்தில் பட்டதிற்கு வார்த்தை வடிவம் கொடுத்து எப்போதும் போல் வேர்த்திடம் கொட்டித் தீர்த்தாள், ஒலிவியா.
பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கும் மனிதன் அல்ல ஆரோன். உன் இருப்பை அவர் அறியாது போனது எல்லாமே விபத்து என்று சொல்லிக் களைத்த வேர்த், மனைவியைச் சாந்தப்படுத்த முனைந்தான்.
ஒலிவியாவை ஒரு தடவை பார்க்கவே வேண்டும் என்று உருக்கமாகக் கெஞ்சிய ஆரோன்தான் துர்கா நினைவில் வந்தார். மனம் ஒரு சாதியாகப் பிசைந்தது. “என்ன எண்டாலும் ஆர் கேட்டாலும் நீ இஞ்ச வராத!” என்றாள் மீண்டும் .
ரெசிபி புத்தகம் கொடுத்ததையே ஏற்க முடியாதவன் ஏதனின் தமையன் என்றும் அதைத் திரும்பப் பெறப் பட்ட பாடும் அறிந்த வேர்த்திற்குமே லண்டன் பயணத்தைத் தவிர்ப்பது இப்போதைக்கு நல்லது என்றே தோன்றியது.
“நான் செஃப்போட கதைக்கிறன்.” என்ற வேர்த் கதைத்தான்தான். அவர் எங்கே காது கொடுத்துக் கேட்டார் .
“தயவு செய்து என்ர மகளக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டுப் போ வேர்த்.” என்றதையே திரும்ப திரும்பச் சொன்னார். அதுவும் மொத்தக் குடும்பமும் சூழ்ந்து நிற்கையில்.
சோஃபியாவுக்கோ, கணவரின் பிடிவாதம் ஆத்திரத்தையும் எரிச்சலையும் உச்சமாக்கியது. ஏதன் மற்றும் இளைய மகள் ஏவா தவிர்த்து மூத்த மகன், மகள் கூட கொதிநிலையில்தான் நின்றார்கள்.
சோஃபியாவுக்கு இந்தக் கோபம் எரிச்சல் கடந்து, சேர்ஜரிக்கு ஒத்துழைக்கேன் என்ற ஆரோனின் பிடிவாதம் பெரும் பயத்தைக் கொடுத்தது. ஆரோனுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால்? அப்பெண்ணால் யோசிக்கவே இயலவில்லை.
“இது எல்லாத்தையும் பிறகு பார்க்கலாம். எங்கள மீறி அப்பிடி என்ன நடக்குது எண்டு நானும் பாக்கிறன். இப்ப முதல் வேலை உங்கட டாட் சேர்ஜரி செய்யிறதுதான்.” என்று கத்திவிட்டார். அப்போதே, ஆரோன் மற்றும் பிள்ளைகளுக்கு முன்னால் வைத்தே ஒலிவியாவிற்கு அழைத்தார்.
“தயவு செய்து வந்திட்டுப் போ, உனக்கு அவர் ஆரோவாக இருக்கலாம். ஆனா எங்கட உயிர் மூச்சு இந்த மனிசன்தான்.” என்றவர் பார்வை ஆரோனைச் சுட்டுப் பொசுக்கிற்று.
“எனக்கும் நீங்கள்தான் உயிர் மூச்சு சோஃபி . அதில் என்ர மகள் ஒலிவியாவும் அடக்கம்.” என்றார் ஆரோன் கண்ணீரோடு. ஆக்ரோசமிகுதியில் காற்றில் குத்திவிட்டு விசுக்கென்று வெளியேறினான், மூத்த மகன் ஐவன். கண்ணீரோடு பின்தொடர்ந்தாள் மூத்த மகள் ஐலா. தகப்பன் கரம் பற்றி ஆதரவோடு முதுகைத் தடவிக்கொடுத்தான், ஏதன். கண்ணீரோடு தாயின் தோளோடு அணைந்தாள், ஏவா.
“உன்னால இவர இழந்திட்டம் எண்ட அழியாத பழிக்கு ஆளாகிராத ஒலிவியா.” கணவர் ஏற்படுத்திய அத்தனை கோபத்தையும் கைப்பேசி வழியாகக் கொட்டிவிட்டு வைத்தார் சோஃபியா .
கேட்டிருந்த ஒலிவியா இரும்பென அமர்ந்திருந்தாள். அதற்குப் பிறகும் வேர்த் தாமதிக்கவில்லை. சில மணித்தியாலங்களில் ஒலிவியாவின் தாய் லிசியும் தகப்பன் டெனிஸும் வந்து சேர்ந்தார்கள். அதட்டி உருட்டி ஒலிவியாவைக் கிளப்பியும் இருந்தார்கள். விமான நிலையம் வந்த பிறகே துர்காவிற்கு அழைத்தாள், ஒலிவியா.
“ஒலிவியா தனியாக வரேல்லையே, நானும்தான் வாறன். நீ பயப்படாமல் அமைதியாக இரு துர்கா, நான் பாத்துக்கொள்ளுறன் .” என்று துர்காவைச் சமாதானம் செய்வித்தான் வேர்த். அதன் பிறகும் இவள் என்ன சொல்வது?
தாமதியாது ஏதனுக்கு அழைத்துவிட்டான், வேர்த். அவன் சொல்ல சொல்ல, கேட்டிருந்த ஏதன் வாய்க்குள், “துர்கா.” என்று அவள் பெயர் அரைபட்டிட்டு.
“என்ன நீங்க என்ர அண்ணாட தொழிலே கொலை செய்யிறதுதான் எண்டபோல கதைக்கிறீங்க?” என்றவன், “உண்மையா அது அண்டைக்குக் கோவத்தில சொன்னது வேர்த் . நீங்க வாங்கோ, ஏர் போட்டில சந்திப்பம்.” என்ற கையோடு துர்காவிற்கு அழைத்தான்.