பெரியவரின் முகச் சுளிப்பைப் பார்த்துக்கொண்டே அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டான், ஏதன்.
“ப்ளீஸ் விடு!” விலக முயன்றவளுக்கு இப்போது விழிகள் கலங்கிவிட்டிருந்தன. அவன் தோள் வரைதான் உயரம் இவள். அவன் முகம் பார்த்தாள். அவனும் பார்த்தான். அக்கணம் அவன் விழிகளுமே கலங்கிவிட்டிருந்தன. அவன் விரல்கள் அவள் தோளில் மெல்லிய வருடலைக் கொடுத்தன.
இந்தப் பெண்ணை இந்தளவுக்கு அவன் மனம் விரும்பும் என்று அவனே நினைக்கவில்லை. அவளை இப்படியே தன் கை அணைப்புக்குள் வைத்துக்கொண்டு காலத்தைக் கடந்துவிடும் ஆவல் அவனுள் எழுந்தது. அதையே, மகிழ்வாகவும் நிறைவாகவும் வாழ்ந்துகொண்டு முதுமையின் விளிம்பில் காதல் சொட்டும் மாறாது நிற்கும் இந்த முதிய தம்பதியிடம் சொல்லிவிடும் ஆவல் எழுந்தது.
“கிராண்ட்பா இவள் துர்கா!” என்று தன்மையாகச் சொன்னபடி அவரை நோக்கி அடியெடுத்து வைத்தவன், “இந்தப் பெண்ணை எனக்கு அறிமுகம் செய்வது பற்றி நான் இப்ப கதைக்கேல்ல ஏதன்.” என்ற அவரின் அதட்டலில் நின்றுவிட்டான். அவனை விட்டு விலகுவதே குறியாக நின்ற துர்கா கூட அந்த வயோதிபரைப் பார்த்தாள். மனிதன் நெருப்பாகச் சுட்டார். அதே சூட்டைப் பேரன் மீதும் செலுத்தினார்.
“உன்ர கிராணி சொன்னது எனக்கும் கேட்டிச்சு.விளங்கிக் கொள்ள முடியாதளவு முட்டாள் இல்ல நான். இதெல்லாம் என்ன வேலை?” கிட்டதட்ட உறுமினார் . தொடர்ந்து இருமினார்.
“ஓ டோனி ரிலாக்ஸ்.” நீர் நிறைந்த கிளாஸை மனைவி எடுத்துக்கொடுக்க, அவரை முறைத்தபடி கரத்தை விலக்கிவிட்டுத் துர்காவைப் பார்த்தார்.
அவர் வாய் திறக்க முதல், “ கிராண்ட்பா, ஒலிவியா வெளிக்கிட்டுட்டா. நாளைக்குக் காலம வந்திருவா. உடனே டாட் சேர்ஜரி செய்வார். நீங்க அதைப் பற்றிக் கவலைப்டாதீங்கோ!” என்று தன்மையாகச் சொன்னான், ஏதன்.
அவர் அதைக் காதில் வாங்கியது போலவே தெரியவில்லை. “நீ ஆசியாவா? எந்த நாடு, இந்தியாவா?” என்றவர் முகச் சுளிப்பு மனத்துள் உள்ள வெறுப்பைத் துல்லியமாகக் காட்டிட்டு.
“கிராண்ட்பா இட்ஸ் நொட் நைஸ், டோன்ட் டோக் லைக் திஸ் வித் ஹெர். ஷி ஐஸ் மை கேர்ள்.” என்ற ஏதன் கோபக்குரலும் “டோனி” என்ற ஈவ்லின் கண்டிப்புக் குரலும் தாமதியாது எழுந்ததிட்டு.
ஏதன் சற்றே கையைத் தளர்த்தியதில் பட்டென்று விலகி நின்றாள், துர்கா. முகத்தில் கோபச் சிவப்பு . அவளுக்கு அந்த முதியவர் நீ ஆசியாவா இந்தியாவா என்று கேட்டதை விடவும் ஏதன் இப்படி மீண்டும் மீண்டும் உளறுவதே கோபத்தையும் அதிர்வையும் கொடுத்தது.
“யூ ஆர் ரியலி மேட் பெர்சன் ஏதன். ஐம் நொட் யுவர் கேர்ள். இட் டூ நொட் நெவர் ஹப்பெண்ட். மைண்ட் இட்!” கோபத்தை உள்ளடக்கி நிதானமாக அவனைப் பார்த்தபடி சொன்னவள் மற்றைய இருவரையும் அதிர வைத்தாள்.
அவளைத் துச்சமாக எண்ணிய ஏதன் தாத்தா, தன் முன்னால் வைத்தே அவர் பேரனைத் துச்சமாகத் தூக்கி வீசியவளை, விசர் என்று சொன்னவளை என்ன செய்யலாம் என்று கொதித்துப் போனார்.
“ஹேய் யூ ப்ளடி…” என்று கொண்டு சக்கர நாற்காலியை அவளை நோக்கி வேகமாக உருட்டினார், மனிதர்.
துர்கா கதைத்த விதம் கணங்கள் சிலதுகள் ஏதன் முகத்தில் மாற்றம் உண்டு பண்ணியதுதான். முகத் தசைகள் இறுகி, விழிகள் சிவந்து, நெற்றி சுருங்கி அவளை உறுத்துப் பார்த்தவன் உதடுகளை இறுக மூடி, கைகள் இரண்டையும் இறுகப் பொத்தித் தன்னைக் கட்டுக்குள் கொண்டுவந்தான்.
“கிராண்ட்பா இட்ஸ் இனஃப்!” குரல் உயர்த்தியிருந்தவன் துர்கா பக்கத்தில் சென்று நின்றுகொண்டான். கிராணி வேகமாக நகர்ந்து கணவரின் சக்கர நாற்காலிப் பிடியைப் பற்றி நிறுத்தியிருந்தார்.
“அதேதான் ஏதன், இட்ஸ் இனஃப், இது ஒண்டும் டிராமா இல்ல. ஐம் நொட் யுவர் டொய். ” துர்கா அடிக்குரலில் சொன்னாலும் பெரியவர்களுக்கும் அது கேட்டது.
பெரியவர் சிரித்தார். “ நல்லதாய் போச்சு. இப்பிடியே வந்தது போலவே திரும்பிப் போயிரு! என்ர வீட்டுக்குள்ள கால் வைக்கவே ஒரு தகுதி வேணும். அப்பிடியிருக்க, என்ர பேரனைக் கலியாணம் செய்றது… நோ வே. கெட் லொஸ்ட்!” வாயில் நோக்கிக் கரம் நீட்டியபடி கத்தியேவிட்டிருந்தார்.
கோபமாக வாய் திறக்க முயன்றான் ஏதன். “உன்ர தகப்பன் அண்டைக்கு நான் சொன்னதக் கேளாமல் எல்லாத்தையும் உதறிட்டு அவுஸ்திரலியாக்குப் போனான். அப்ப இழுத்து வச்சது இப்ப பத்தி எரியுது. பரம்பரை பரம்பரையா டேல் குடும்பம் எண்டு இருந்த மரியாதை, மானம் எல்லாம் இப்ப பேசுபொருளாகி இருக்கு. இப்ப நீயும் தரம், தகுதி தெரியாமல் இப்பிடி ஒரு வேலை செய்ய நினையாத! நான் ஒருக்காலும் இதுக்கு அனுமதிக்க மாட்டன்.” ஓங்கி ஒலித்த முதியவர் குரல் நடுங்கியது. இத்தனைக்கும் பிறகு விருட்டென்று திரும்பிய துர்கா கரத்தை எட்டிப் பிடித்திருந்தான், ஏதன்.
கிராணி வேறு, கணவரைச் சமாதானம் செய்விக்க முயன்றார்.
“நீ தயவு செய்து கதைக்காதே ஈவ்லின். நீ குடுக்கிற செல்லம்தான் இந்தளவுக்கு இவனைக் கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கு. கோல் போடு சோஃபியாவிற்கு.” பற்களைக் கடித்தார். கட்டுப் பல்லு கழன்று கொட்டும் போலாகிற்று.
“மோம் டாட்டுக்கு நானே சொல்லுவன் கிராண்ட்பா. கிராணி நாங்க போயிட்டு வாறம்.” என்று, கையை விடுவிக்க முயன்று கொண்டிருந்தவளோடு மல்லுக்கட்டியபடியே வாயில் நோக்கி நடந்தவன், “கிராண்ட்பா, நான் ஆரைக் கலியாணம் செய்றது எண்டுறது என்ர சொந்த விருப்பம். அதில தலையிட என்ர டாட் மோம்க்கே நான் இடம் குடுக்கப்போறதில்ல.” நெஞ்சை நிமிர்த்திச் சொன்னவன், மீண்டும் மீண்டும் அவன் இப்படி அழுத்திச் சொல்வது இதயத்தைத் தாக்க அதிர்ந்து தொய்ந்து நின்றவளைக் கூட்டிக்கொண்டு வெளியேறினான்.
“ரியலி… அப்பிடி நீ செய்தா உன்ர தகப்பன் திரும்பி வரச் சேர்த்தது போல நடவாது எண்டுறத நினைவில வச்சிரு. ஒரு பெனி இஞ்ச இருந்து கிடைகாது.” என்று கலைத்து வந்த கோபக் குரலுக்கு, வாய்விட்டுச் சிரித்தபடி பெரியவரை ஒரு பார்வை பார்த்தான். திரும்பி அருகண்மையில் நிற்பவளையும் பார்த்தான்.
“அந்தப் பணத்தை நீங்களே வச்சிருங்க கிராண்ட்பா. எனக்குப் பிடிச்ச வாழ்க்கை போதும். அது உங்கட சொத்துப் போலப் பல மடங்கை உழைக்கிற வலுவ எனக்குத் தரும்.” துர்கா பார்வையை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே சொன்னவன் கண்கள் நிறைந்து போயின.
அவளால்தான் எப்படி உணர்கிறாள் என்பதையே பிரித்தறிய இயலவில்லை. தன் விருப்பின்மையைச் சொன்ன பின்னரும் அவன் விருப்பத்தை அழுத்தி அழுத்திச் சொல்கிறானே. என் மனத்திற்கு நீ தரும் மரியாதை இதுவா என்று கோபிப்பதா?
தன் விருப்பின்மையை எதிர்கொண்டுகொண்டே தன்னை விரும்புகிறானே, இதைவிடவும் அவளுக்கு என்னதான் வேண்டும் என்று தன்னைத்தானே கடிந்து கொள்வதா?
அவளுள் பெரும் மனக்குழப்பம். கோபம் காட்டக் கூட முடியாது அவன் திறந்த முன் கதவைப் பற்றிக்கொண்டு உள்ளே ஏறியமர்ந்தாள் துர்கா.