ஏதனின் இலஞ்சியவள் 17 – 2

அவன் முகம் பார்த்து, அந்த விழிகளின் கூர்மையை, அது உணர்த்தும்  நேசத்தை ஒன்றுமேயில்லை என்று கடந்தபடி, தான் நினைத்ததை அவனோடு கதைக்க இயலவில்லை.

பார்வை நேரே முன்னால் பாதையில் இருக்கவே தொடர்ந்ததாள்.

“உங்கட கலியாணம் பற்றி உங்களுக்குகெண்டு சொந்தமா  விருப்பம் இருக்கு எண்டீங்க, ஆரும்  முடிவு எடுக்கேலாது எண்டிங்க ரைட்.”

ஆமென்று தலையாட்டினான். நெற்றியும் சுருங்கியது 

“அதைப்போலத்தான் எனக்கும் ஏதன்…”  என்று அவள் ஆரம்பிக்கையில் அடுத்து என்ன வரப்போகுது என்று விளங்கிவிட்டது. அதுவே அவன் முகத்தை இறுக வைத்திருந்தது.

“நான் ஆரைக் காதலிக்கிறது, கலியாணம் செய்றது எண்டுறது என்ர சொந்த விருப்பம் ஏதன். அதில தலையிட என்ர அம்மா அப்பாக்கு மட்டும்தான் உரிமை இருக்கு. அதோட கலியாணம் செய்யிறது பற்றி எல்லாம் நான்  இன்னும் யோசிக்கேல்ல. அப்பிடியே யோசிச்சாலும் எனக்கு …” என்றவள், இப்போது அவனைப் பார்த்தாள். நினைத்தத்தைச் சொல்ல ஆரம்பிக்கவும் அவனை எதிர்கொள்ளலாம் என்றளவுக்குச் சுதாரித்துவிட்டாள்.

“நான் இப்பிடிச் சொல்லுறதுக்கு  ரியலி சொறி ஏதன். எனக்கு இனம் மாறி எல்லாம் கலியாணம் செய்யிறது விருப்பம் இல்ல. பிறகு, எனக்கு, நான் மட்டும் இல்ல, என்ர  குடும்பமும் அந்நியமாய் போயிரும் ஏதன். ப்ளீஸ், ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் .” என்றவள், “நான் இனி வேலைக்கு வர மாட்டன். நானும் நீங்களும் சந்திக்காம இருக்கிறதுதான் பெட்டர்.”  ஒரே மூச்சில் சொல்லி முடித்திருந்தாள்.

அவனோ, காரை வளைத்துப் பாதையோரமாக  நிறுத்திவிட்டிருந்தான்.

துர்கா கேள்வியாகப் பார்த்தாள். அவனும் அவளையேதான் பார்த்தான். கலங்கிக் கிடந்த விழிகள் அவன் பார்வையை அங்கிங்கு அசையவிடாது பிடித்து இழுத்தது என்றால், அவள் கலக்கம் அவன் மனத்தை ஆழமாகவே தைத்திட்டு. பதற்றத்தில் இருக்கிறாள் என்றது முத்து முத்து வியர்வையோடு இருந்த வதனம். அதிலும் பீறிடும் அழுகையை அடக்குகிறாள், அதற்காக பெரும் பிரயத்தனம் செய்கிறோம் என்றன, அவள் இதழ்கள்.

சிலநொடிகள் ஆழ்ந்து பார்த்திருந்தவன் அடுத்து நிகழ்ந்ததைத் திட்டமிடவில்லை. அது பாட்டில் நிகழ்ந்துவிட்டிருந்தது. 

அவன் என்ன செய்கிறான் என்று அவள் மூளை கிரகிக்க முன்னரே, அவள் அவனுக்குள் வந்திருந்தாள். ஏதனின் உதடுகள் அவளின் இதழ்களில் மட்டுமல்ல உள்ளத்திலும் கிடுகிடு நடுக்கத்தை ஏற்படுத்தும்  தலையாய கடமையில் ஈடுபட்டிருந்தன. 

துர்காவால்  நடப்பதை உண்மை என்று நம்ப இயலவில்லை. மூளை  மங்கிப்போனதாக உணர்ந்தாள். மயக்கம் வந்துவிடும் போலிருந்தது. உடல் அப்படியே தொய்ந்து சக்தி முழுதாக வடிவது போலுணர்ந்தாள். மூச்சுக் காற்றுக்கு ஏங்கிய நுரையீரல்கள் வேறு துடித்துத் தவித்துப் போயின. அவனுக்கும் அதே நுரையீரல்தானே. ஒரு கணம் விலகியவன் அவளைச் சுதாரிக்க  வைத்திருந்தான்.

அவளுள் பெரும் கோபம் பொங்கியது. “யூ பிளடி…” என்றவளால் அடுத்த வார்த்தையை உதிர்க்க இயலவில்லை. நிறுத்தியிருந்தான். 

நெரிந்து  கிடந்த கைகளால் கிடைத்த இடத்தில் நுள்ளி அடித்து விலக முயன்றாள். அசைய முடியவில்லை. விசமப் பார்வையோடு முகமெங்கும் நிதானமாக முத்தமிட்டான். இடையிடை “ஐ லவ் யூ துர்கா!” வேறு. “இந்த நிமிடம் இப்பிடியே உறைஞ்சு போயிரக்கூடாதா எண்டு இருக்கு  துர்கா!” என்றவன் குரலில் நேசம் கொட்டிக் கிடந்தது. பிரவாகமாக அவளுள் நுழைந்து அவளைப் புரட்டிப் போட்டது.  விழிகளால் கண்ணீர் வழிய அவன் நெஞ்சிலேயே  தொய்ந்து சரிந்தாள்.

“ஐ நோ, நீயும் என்னை விரும்புறாய் துர்கா.” காதுகளில் இரகசியம் பேசியவன் குரலில் இப்போது நகைப்புத் துள்ளித் திரிந்திட்டு. அதோடு, அவளை வளைந்திருந்த கரங்கள் கூட இறுக்கத்தைக் கைவிட்டிருந்தன. அவ்வளவுக்கு நம்பிக்கை. 

அவன் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் செவிகளில் எதிரொலித்தன.  மீண்டும் அவள் சார்பில் அவனாக ஒரு முடிவெடுத்துவிட்டான். அவளுள் பெரும் கோபம்  திரண்டது. அவனை உதறி விலக்கியவள் அதே கையோடு அவன் வயிற்றில் படபடவென்று குத்து விட்டாள். 

அவன் நேசத்துக்கு எதிரொலி கிடைத்துவிட்ட மகிழ்வில் மூழ்கிக்கிடந்த ஏதன், அவளது விலகலை, இந்தத் தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்வின் பிடியில் அகப்பட்டுக்கொண்டான்.

“உனக்கு என்ன துணிவு இருந்தா என்னோட இப்பிடி நடந்து கொள்ளுவ? என்ர அனுமதி இல்லாமல் என்னைத் தொட நீ ஆர் எண்டுறன்?” சினத்தோடு கேட்டவள், அவன் உச்சந் தலையில் நங்கென்று ஒன்று போட்டாள். அதே நொடி துர்கா வெளியில் இறங்கியிருந்தாள்.

அவனில் உள்ள கோபத்தைவிட பல மடங்கு அவளுக்கு அவளில்தான் ஆத்திரம். அவள் தலை தானாக அவன் நெஞ்சில் சாய்ந்த கணம் பசுமையாகத் தன்னைக் காட்டி நிற்கிறதே! கேவலை  அடக்கிக்கொண்டு, “ஹேய் இட்ஸ் ரிய்லி பெயினிங்.” என்றபடி விழிகளால் சிரித்தவனை நெருப்பாகச் சுட்டாள், அவள்.

“இதோட விட்டிட்டன் எண்டு நினை. இன்னொரு தரம்…” என்றவளைத் தொடரவிடாது இடையிட்டவன், “கெட்இன் துர்கா.” என்றபடி இறங்க எத்தனித்தான். 

“இறங்கி இஞ்ச வந்தியோ, பிறகு நடக்கிறதுக்கு நான் பொறுப்பில்ல.  யூ இடியட் என்ன துணிவு இருந்தால் என்னில  கை வைப்ப?” கத்திவிட்டாள். 

 பாவிப்பதில்லை என்றாலும் கெட்ட வார்த்தைகளா தெரியாது? அவன் புறமாக வந்து யன்னலில் இடித்துச் சரமாரியாகக் கெட்ட வார்த்தைகளை உதிர்த்தாள்.

“இனி எனக்கு முன்னால வந்தியோ ஹரஸ்மென்ட் கேசில உள்ள அனுப்புற வேல பாக்க வேண்டி வந்திரும். ராஸ்கல்!” என்றவள், ‘இதுதான் உன்ர இனத்திட புத்தி’  என்று வாயில் வர, அதே வேகத்தில்  விழுங்கிவிட்டாள். மீண்டும் காலால் காரில் ஒரு உதை விட்டவள்,  அவன் கதவைத் திறந்து இறங்கவும் வேகமாக ஓடத் தொடங்கிவிட்டாள். 

“துர்கா வெய்ட்… ப்ளீஸ்! ஐ ஸ்வியர், ஐ  வோன்ட் லெட் திஸ் ஹப்பன் எவர் எகைன்!”  என்ற அவன் குரல் தவிப்போடு பின்னால் கலைத்து வந்தது. அவள் மனம்  புறக்கணித்திட்டு.

 

error: Alert: Content selection is disabled!!