ஏதனின் இலஞ்சியவள் 18 – 2

நெருப்பென்றால் வாய் வெந்துவிடப்போவதில்லை.  சரி, பிடிக்கவில்லை என்றே வைப்போமே. இருந்தாலும் உன்னை நேசிக்கிறேன் என்று மனம் திறந்தவன் அவளுள் சிறிதேனும் பாதிப்பை ஏற்படுத்தவில்லையா? அவள் இதயம் தாளநயம் தப்பி அவன்பால் தடுக்கி விழவில்லையோ? இந்தப் புள்ளியில் அவன் சிந்தனை நின்று சுழன்றது. அந்தளவுக்கு, நீ நேசிப்பவளைக் கவர்ந்திழுக்கும் நேசிக்கத் தூண்டும் சக்தியற்றவனா நீ? அவனுக்கு அவனிலேயே எரிச்சல் உண்டானது. 

துர்காவோ,  ஏதனை மறந்து போனாள். வேர்த்தையும் நட்போடு அணைத்து வரவேற்றவள் இருவருக்குமாகப் பூங்கொத்தைப் பரிசளித்தாள்.

ஏதன் அவ்விடம் விட்டு அசையவில்லை, பார்த்துக்கொண்டு நின்றான். அவர்கள் மூவரையும் பார்க்கையில் பெரும் பொறாமையாக இருந்தது. துர்காவோடு எவ்விதமான தடையும் இன்றி இத்தனை நெருக்கமாக கதைக்கிறார்கள்,சிரிக்கிறார்கள்.

“ப்ச்” மனத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு, வந்த வேலையைப் பார் என்றது புத்திக்குப் புரிந்தாலும் மனம் அடம்பிடித்தபடி அதிலேயே நிற்க விளைகிறதே!

முதல் முதல் இப்படித் தவிப்பும் தத்தளிப்புமாக அவனை நிற்க வைத்துவிட்டாள் ஒருத்தி, அவன் துர்கா. அதேநேரம், மாறா நேசத்தையும் அறிமுகம் செய்தவள் அவள்தானே? இப்படி எண்ணியவனை அந்த நினைவே ஆரத்தழுவி ஆட்கொண்டிட்டு. அந்த ஒன்றுக்காக உன் தவிர்ப்பையும் எரிச்சலையும் கோபத்தையும் பொறுத்துக்கொள்ளலாம் பெண்ணே! 

முதல் நாள்  அவளோடு கழித்த அழகிய நிமிடங்கள் சில, அவள் கோபம் ஆத்திரம் என்று ,அவன் அந்த நினைவுகளோடு சுழன்றடிக்க,  பிடித்து இழுத்து நிறுத்தியது வேர்த் குரல்.

“ஹலோ ஏதன்!” கரம் நீட்டிக்கொண்டு வந்து நின்றான், வேர்த். பின்னால் வந்த ஒலிவியாவும் தன்னிரு கைகளாலும் அவன் வலக்கரத்தைப் பற்றி பொத்திப் பிடித்தபடி நலம் விசாரித்தாள்.

ஏதன்  என்று ஒருவன் அங்கு இல்லை  என்ற பாங்கில் அங்கிங்கு பார்த்தபடி நின்றாள், அவன் காதலி.

சுதாரித்துக்கொண்டவன் வேர்த்தை இறுக அணைத்து வரவேற்றான். “பயணம் எல்லாம் எப்பிடி?” என்றபடி ஒலிவியாவைப் பார்த்தான்.  

‘அழுதாளோ?’ மனம் முணுமுணுக்க, அன்போடு அவளையும் அணைத்து நலம் விசாரித்தான். 

“உன்ர நண்பி பயப்பிடுறது போல் இங்க உனக்கு எந்தவிதமான ஆபத்தும் இருக்காது, பயப்பிடாத சரியா? அப்பிடி எதுவும் நடக்க நான் …உன்ர சகோதரன் விட்டிரமாட்டன்.” மீண்டும் அணைத்துக்கொள்ள, ஒலிவியா தளர்ந்து போனாள். விழிகள் நிறைந்து வழிந்தன. 

அவளுக்கு, அன்பையும் அரவணைப்பையும் நிறைவாகப் பகிர்ந்துகொள்ள உடன்பிறப்புகள் இருவர் இருக்கிறார்கள். தாய், தந்தை, சகோதரன் மற்றும் சகோதரி, இப்போது காதல் கணவன்  என்று  நிறைவான வாழ்வு அவளது.  ஆனாலும் ‘நான் உன்ர சகோதரன் உனக்காக இருக்கிறன்’ என்று ஏதன் வாய் உதிர்த்த வார்த்தைகள் அவள் இதயத்தை இதமாகத் தட்டியது, தழுவிக்கொண்டது. என்னதான் அப்படி என்ன அவர்களால் செய்யவியலும் என்று நிமிர்வும் துணிவுமாக வந்திருந்தாலும் இப்போதுதான் முழு விடுதலை என்ற உணர்வும் எழுந்தது. 

அவள் விழிகளால் வழிந்த விழிநீரை துடைத்துவிட்டு அவள் முதுகில் தட்டி என்று தேறுதலாகக் கதைத்தபடி கார் பார்க்கிங் நோக்கி நடந்தார்கள்.

பின்னால் தள்ளி நடந்து வந்து கொண்டிருந்தாள், துர்கா. ‘அநியாயத்துக்கு நடிக்கிறான் கள்ளன். எருமையன் ’ என்று, மனத்துள் அவனைக் கடித்துத் துப்பினாலும் அவன் தன் நண்பியை வரவேற்ற விதத்தை உண்மையில் இவள் எதிர்பார்க்கவில்லை. வாய் தன்பாட்டில் சுழித்துக்கொண்டது. என்னதான் மறக்க நினைத்தாலும் முதல் நாள் அவன் நடந்துகொண்ட விதம் நினைவில் வந்து தொலைத்தது . சட்டென்று தன்னால் தன் வாயைப் பொத்திக்கொண்டாள். மனத்துள் இன்னதென்றில்லாத உணர்வுக்குவியல். அதில் மேலோங்கி நின்றதென்னவோ குபுகுபுவென்று குமிழியிட்டு வெடித்துச் சிதறிய கோபம்தான்.

அந்நேரம் தான் அவனும் திரும்பிப் பார்க்க வேண்டுமா? அதுவும் மின்னலாகக்  கண்ணடித்துவிட்டுத் திரும்பிவிட்டிருந்தான்.

 கொதிநிலையில் உச்சத்திற்குச் சென்றவளுக்கு விறுவிறுவென்று சென்று அவன் பிடரியைப் பிடித்துச் சுவரில் இடித்துவிடும் அளவுக்குக் கோபம் . நடை வேறு நின்றுவிட்டிருந்தது.  

“துர்கா என்ன பின்னுக்கு நிற்கிறாய்?” நின்று அவள் கரம் பற்றியபடி நடந்தாள், ஒலிவியா.  அவள் நண்பியை வடிவாகப் பார்க்கவில்லை என்றதே  துர்காவிற்கு வாசியாகப்போயிற்று. 

“ ஊத்த நாய்” எட்டிப் பார்த்த ஏதனுக்குத் தமிழில் ஏசிவிட்டு நடந்தாள். 

ஒலிவியாவோ, தன் கலக்கத்தைக் காட்டவே கூடாதென்று நினைத்தாலும் முடியாது விழிகள் கசிய, “செஃப் இப்ப எப்பிடி இருக்கிறார்?” என்று விசாரித்தாள். 

அந்த ‘செஃப்’ என்ற விளிப்பே ஆரோன் மட்டில் அவள் நிலைப்பாட்டில் இன்னமும் மாற்றம் இல்லை என்பதாகப்பட்டது ஏதனுக்கு.

அவள்  வரப்போகிறாள் என்றதும் ஒளிர்ந்த முகமும் மகிழ்வான வார்த்தையாடலுமாக இருந்த தந்தை நினைவில் வர, “உனக்காகக்  காத்துகொண்டு இருக்கிறார்.” தொண்டை கரகரக்கச் சொன்னவன், “அவருக்கு எல்லாம் சுகம் வந்திரும் . நம்புவோம்.” என்றான் தனக்கும் சேர்த்து. 

“ஆனா ஒலிவியா, டாட்டுக்கு முன்னால வச்சு இப்பிடி செஃப் எண்டு மட்டும் சொல்லிராத ப்ளீஸ் ! நீ அவரை டாட் எண்டு  சொல்லுறாய் சொல்லவில்லை அது உன்ர விருப்பம்.” என்ற வேகத்தில், வேர்த்தோடு சேர்ந்து நடந்தான், அவன். 

பதில் பேசாது நகராது  நின்றாள் ஒலிவியா. இப்போது சிரிப்பு வேறு வந்தது. ஏதன் குரலில் ஒளிந்து கிடந்த குற்றச்சாட்டை அவள் இனம் கண்டு கொள்ளவில்லையா என்ன? அவளை எப்படி இவர்கள் குற்றம் சுமத்தலாம்? மகள் என்ற அக்கறை திடுமென்று அவருக்கு முளைத்தது போல் பாசம் பொங்கி வழிவதாக இவளால் நடிக்க இயலாது.

“ஏய் என்ன நீ? அது ஒரு முழுசாக் கழண்ட விசர்! அலட்டுறான், நீ அதுகள எல்லாம் காதில வாங்காத.” நண்பியின் கையைப் பற்றியபடி நடந்தாள், துர்கா. 

நெற்றி சுருங்க நண்பியைப் பார்த்தாள் ஒலிவியா. “நீ அங்கதானே வேலை செய்யிற? அப்பிடியிருக்க என்ன நீ இப்பிடியெல்லாம் கதைக்கிற? ஏதன் ஜெனுவின் பெர்சன். செஃப் போல, இல்லை எண்டுறியோ?” யோசனையோடு  விசாரித்தவளிடம் இப்பொழுது என்ன சொல்வது? துர்கா தடுமாறினாள்.

 ஒலிவியாவிற்கு இப்போது உள்ள பிரச்சினைகள் போதாதா? இதில் தானும் ஏதன் பற்றிச் சொல்லவா வேண்டும் என்று எண்ணியவள், “அங்க வேலை செய்தனான் ஒலிவியா. நேற்றோட விட்டுட்டன். படிப்போட வேலைக்கும் போக கொஞ்சம் சிரமமா இருக்கு. அதும் அங்க எல்லாமே ப்ரொபெசனல் எல்லா? உண்மையாவே சிரமமா இருக்கு.  இந்த ஏதன் சரியான ஹெட் வெயிட் பிடிச்சவர், அதான் அப்பிடிச் சொன்னனான். அதைவிடு, கெதியாப் போய்  பிரெஷப் செய்திட்டு, ஃசெப்ட்ட போவம். பிறகு இதுகளப்  பற்றிக் கதைப்பம்.” என்றவளுக்கு நன்றாகவே தெரியும்,  தாம் கதைப்பதை ஏதன் கேட்கிறான் என்று. அதை உறுதிப்படுத்தும் வகையில் திரும்பிப்பார்த்தான் அவன். “ மெல்லக்கதை” அதட்டினாள்  ஒலிவியா.

“நான் இஞ்ச ஆருக்கும் பயமில்ல.” வாயைச் சுழித்தாலும் கதையை மாற்றினாள்.   

“நான் புக் செய்யிறன் எண்டு சொல்ல வேணாம் எண்டனி, எங்க ஹோட்டல் புக் பண்ணி இருக்கிற? தூரமா?” என்றவளிடம், “அது ஏதன்தான் பாத்துகொள்ளுறன் எண்டு வேர்த்ட்ட  சொன்னவர் போல!” என்றாள் ஒலிவியா.

“ஓ! பெரிய அக்கறைதான் போ!” மீண்டும் அவள் உதடுகள் கோணின. சட்டென்று திரும்பிய ஏதன்  பார்வை அவள் இதழ்களில் நிதானமாகப் பதிந்து, ஒலிவியாவை விழிக்க வைத்த அதேவேளை, துர்காவை வியர்க்க வைத்தது. அதன் பின் துர்காவால் இயல்பாகக்  கதை வளர்க்க முடியவில்லை. 

“இஞ்ச ஏதாவது சுவாரசியமான விசயங்கள் நடந்திருக்கோ துர்கா?” அதுவரை இருந்த கவலை சற்றேனும் விலக, கண்சிமிட்டியபடி கிசுகிசுத்தாள், ஒலிவியா.

“உன்ர  விருப்பத்திற்குக் கற்பனைய வளக்காத!” அதட்டலாகச் சொன்னாள்,துர்க்கா. மிகவும் கவனமாக தோழியின் பார்வையைத் தவிர்த்தாள். 

அப்படியே பார்க்கிங் வந்தார்கள்.

பெட்டிகளை பின்னால் வைத்துவிட்டு  ஏதன் சாரதியாசனம் நோக்கிச் செல்ல, அதில் நின்ற துர்கா விலத்தி அவனுக்கு  வழிவிட்டுவிட்டு இந்தப் புறமாக வந்து ஏற முனைந்தாள். மறுபுற பின் கதவைத் திறந்தாள், ஒலிவியா. அந்நேரம்தான் அது நடந்தது. 

எங்கிருந்து அந்த இருவரும் வந்தார்கள் என்று தெரியவில்லை. தமக்கு வந்த ஆபத்தை உணர்ந்து சுதாரிக்கவும் முடியவில்லை. ஒருவர் இல்லை இருவர், கண்ணிமைப்பொழுதில் மினுங்கும் கூரான கத்தியோடு இவர்களை நோக்கி பாய்ந்தார்கள்.

 

error: Alert: Content selection is disabled!!