ஏதனின் இலஞ்சியவள் 19- 1

அந்த கார் பார்க்கிங்கில் சற்றே தள்ளி நின்றவர்களில் ஒரு யுவதிதான் முதலில் கண்டது. அவள் மட்டும் கூச்சலிடவில்லையோ பலமான காயங்களுக்கு உட்பட்டிருப்பார்கள். முதலில் சுதாரித்த வேர்த் மின்னலாய் மனைவியை இழுத்துவிட்டான்.

 “கெட் இன் த கார் ஒலிவியா” கத்திகொண்டே அந்த முகமூடியோடு சண்டையிடத் சென்றான், அவன். ஏதன் தமையனைக் கழுத்தை நெரித்துவிடும் ஆவேசம் அவனுள். அத்தனையையும் தன்னை நோக்கித் தாக்க வந்தவனில் காட்டினான்.

 “என் மனைவியில் கை வைக்க முதல் என்னை நீ கடந்து போகோணும்  *****” என்ற அவன் உறுமலில் ஒலிவியா தேகம் நடுங்கியது. சொன்னதுபோலவே செய்கிறார்களா? ஆரோன் பிள்ளைகள் அந்தளவுக்குக் கொடூரமானவர்களா? சரசரவென்று கண்ணீர் வழிய நடுங்கும் கரங்களால் பொலிஸ்  அவசர பிரிவுக்கு அழைத்தாள். 

மறுபுறம், துர்க்காவை ஓரிழுவையில் தனக்குள் கொண்டுவந்திருந்தான், ஏதன்.  அதேநொடி காருக்குள் தள்ளிவிட்டு, “ஒலிவியா கெட் இன்.”  கதவை அடித்துச் சாத்தியபடி கத்தினான். அவனை நோக்கிப் பாய்ந்தவனுக்கு ஒரு  எத்துவிட்டான். காராத்தேயில் கை தேர்ந்தவன் அவனிடமேவா? 

ஆனாலும் கத்தி வைத்திருந்தவர்களும் இலேசுப்பட்டவர்களாக இருக்கவில்லை. அருகில் அங்கிங்கு நின்ற துணிச்சலும் உரமும் மிக்க ஆண்களும் பெண்களுமே உதவிக்கு வந்துவிட்டார்கள். பிடிபட்டுவிடுவோம் என்று அபாயம் உணர்ந்த இரு முகமூடிகளும் தப்பி ஓடினார்கள். அவர்கள் ஓடுவதைப் பார்த்தபடி உள்ளே வந்து இவர்கள் அருகில் நின்றது பொலிஸ்.

“ஓ மை கோட்! ஆர்  யூ ஹெர்ட் மேன்?” என்று ஒரு பெண்மணியின் குரல் பதற்றத்ததோடு கூவியது. துர்க்காவும் ஒலிவியாவுமே இறங்கிவிட்டார்கள். துர்கா ஏதனைப் பிடித்து முன்னாலும் பின்னாலும் திருப்பி ஆராய்ந்தாள். கண்ணீரும் பதற்றமுமாக ஆராய்ந்தவளை ஒற்றைக் கையால் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டவன் , “இஞ்ச பார், எனக்கு ஒண்ணும் இல்ல. டோன்ட் பனிக்.” என்றவன், வெடவெடவென்று நடுங்கிக்கொண்டு நின்றவளை விலத்தாதே, “வேர்த் ஆர் யூ  ஹேர்ட்?” அவனை நோக்கி விரைந்தான்.

“நோ …ஐ  அம் ஓகே” என்றான் வேர்த்.

வேர்த், ஒலிவியா இலண்டன் வருவது முடிவானதும், தங்கும் இடம் தன் பொறுப்பு என்று பிடிவாதமாகச் சொல்லியிருந்தான், ஏதன். தாங்களே பார்த்துக்கொள்வதாகச் சொன்ன வேர்த், மறுத்துச் சொல்ல முடியாமல்தான் சம்மதித்திருந்தான். அதில் ஒலிவியாவுக்கு விருப்பம் இல்லையும் கூட. 

என்னதான் என்றாலும் செஃப் ஆரோன் டேலில் உள்ள மரியாதையும் மதிப்பும்  அவர் குடும்பத்திலும் அவனுக்கு உண்டு. அவர்களும் எப்பவும் அவனை அன்போடு வரவேற்பவர்கள். பல வருடங்களாக நல்ல பழக்கமும் உண்டு. அதுவே அவர்கள் கோபத்தில் கதைத்தவற்றைப் பெரிதாக எடுக்காது விடவும் வைத்திருந்தது. ஆனால் இப்போ நடந்தது என்ன? எப்படி அவர்களை வரவேற்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்? 

தாக்க வந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டிருந்தார்கள். காவல்துறை, விரைவில் தேடிப்பிடித்து விடுவோம் என்று உறுதியளித்தார்கள். என்ன   என்றாலும் நீங்களும் கவனமாக இருங்கள் என்றவர்கள், உங்களுக்கு யாரிலாவது சந்தேகம் உண்டா என்றும் கேட்டார்கள்.

 “சந்தேகமா?” என்ற முணுமுணுப்போடு வாய் திறக்க முயன்ற துர்காவின்  கரம் ஒலிவியாவின் இறுகிய பிடிக்குள் அகப்பட்டிருந்தது. அதை ஏதனும் அவதானித்தான். அவனால் எதுவுமே கதைக்க இயலவில்லை. முதல், தன் தமையன் இந்தளவுக்கு இறங்குவானா என்கிறதே அவனைப் போட்டு ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது.

 

 எங்களுக்கு ஏதாவது தெரிந்தால் உடனடியாக அறியத் தருகிறோம்  என்றான், வேர்த். துர்காவைத்தான் சமாதானம் செய்ய இயலவில்லை. 

“அதுசரி, கழுத்தில கத்தியைச் சொருகி  மேல போனபிறகு என்னெண்டு அறியத் தருவீங்க? என்னையும் சேர்த்துக் கொலை செய்யப் பாக்கினம். நான் இந்தக் குடும்பத்திலதான் சந்தேகம் …சந்தேகமும் இல்ல இவேதான் கொலை செய்ய ஆள் அனுப்பினது  எண்டு சொல்லப்போறன்.” கோபத்தில் சீறியவளை காருக்குள் திணித்துத்தான் ஏற்றியிருந்தாள், ஒலிவியா. 

சாரதியாசனத்தில் ஏறியமர்ந்த ஏதன் பின்னால் திரும்பினான். பார்வை ஆழ்ந்து துர்காவில் படிந்தது.

அது அவள் கோபத்தை அதிகரிக்கச் செய்தது. “வாட்? இப்ப நான் என்ன பொய்யா சொல்லுறன்? ஐ ஆம்  டாம் ஸுர், அந்த ரெண்டு கொலைகாரன்களும் உங்கட அண்ணா அனுப்பின ஆட்கள்தான்.” முகத்துக்கு நேரே சீறினாள்.

“அது உங்களுக்கும் நல்லாவே தெரியும். நாங்க குத்துப்பட்டுச் செத்திருந்தாலும் தொல்லைகள் துலைஞ்சிது எண்டு மனசுக்க நினைச்சுக்கொண்டு இப்பிடித்தான் உம்மெண்டு நிண்டுபோட்டுப்  போவீங்க.” குற்றம் சாட்டியவளுக்குக் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. நான் இல்லையா? நான் பார்த்துக்கொள்வேன் என்றவன்தானே? எப்படிப் பார்த்துக்கொண்டான்?

ஏதன் பார்வையை நீர்த்திரை மறைத்தது. தன்னையே குற்றவாளிக்கியவள் மீது கோபம் எல்லாம் வரவில்லை. அவள் தன்னை நம்பவில்லை என்றது மனத்தைச் சுருக்கென்று குத்திக் கிழித்தாலும் அவள் சுகமாக இருக்கிறாள் என்றதே அவனுக்குப் போதுமாக இருந்தது. அந்த முகமூடி மனிதன் கூரான கத்தியோடு பாய்ந்த கணம்  அவன் அதிர்ந்து ஒரு கணமேனும் அசையாது நின்றிருந்தால் என்னவாகி இருக்கும்?  நினைக்கவே முடியவில்லை. இதோ துர்கா இப்போது குமுறுவது போல் அவளுக்கு ஏதாவது ஆகியும் இருக்கலாம் என்றது அவன் மனம். 

அவளைத் தன்னுள் இழுத்து ஆறுதல் செய்விக்க மனம் துடித்தது. அது ஒன்றுதான் அவனையும் ஆறுதல் படுத்தும் ஒரே வழி.   

ஏதன் விழிகளின் கலக்கத்தைப் பார்த்த வேர்த், மனைவியிடம் கண் காட்டினான். துர்கா வாயை அடைக்க ஒலிவியாவால் மட்டுமே முடியும் .

பட்டென்று நண்பியின் காலில் சுளீரென்று ஒரு அடிப்போட்டாள் ஒலிவியா. “வாய மூடு ப்ளீஸ்!” என்றவள், “ஏதன், அவள் பயந்திட்டாள். அதில….சொறி குறையா நினைக்க வேணாம். உண்மையா இப்ப நினைச்சாலும் நடுங்குது ஏதன், இதுக்கு முதல் இப்பிடி ஒரு சூழ்நிலைய நாங்க சந்திக்கவும் இல்லையா, அதான்.”  அவசரமாகச் சொன்னாள்.

அவன் காரைக் கிளப்பினான். “ வராத எண்டால் கேட்டியா நீ ? இப்ப பார்.” துர்கா சொன்னது அவன் மனத்தை வெகுவாகவே தாக்கியது. வினையாற்றவில்லை. தன் தமையனா இப்படி என்று அவனே நினைக்கையில் என்ன கதைப்பது.  

“துர்கா ப்ளீஸ் இதுக்கு மேல ஒண்டும் கதைக்காத ப்ளீஸ்!” அவள் கரத்தைப் பற்றி அழுத்தியபடி கண்களை மூடிக்கொண்டு பின்னால் தலை சாய்த்தாள், ஒலிவியா. அவளுக்கு ஏதனை வருத்தப் பிடிக்கவில்லை. அவன் துடிப்பில் நடிப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

“அதான், சரியாத் தெரியாமல் கதைக்க வேணாமே துர்கா.” கண்டிப்போடு சொன்னான் வேர்த்.

“சரியாத் தெரிய வரேக்க சில மனுசர் முகத்தை எங்க கொண்டு போய் வைக்கப்போகினம் எண்டு நானும் பாக்கிறன்.” என்றவள், “இவ்வளவுக்கும் பிறகு இவரை நம்பி இவரோட போறீங்களே. இவர் காட்டுற இடத்தில தங்கவும் போறீங்க. எனக்கு ஒண்ணுமே சரியாப்படேல்ல.” என்று விட்டுத்தான் வாயை மூடினாள்.

error: Alert: Content selection is disabled!!