ஏதன் கார் வேகம் குறைந்தது. எமர்ஜன்சி சிக்னல் போட்டு அப்படியே பாதையோரமாக ஒதுக்கி நிறுத்திவிட்டு வேர்த்தைப் பார்த்தான். “ வேர்த், நான் உங்களக் கட்டாயப்படுத்தேல்ல, வேணும் எண்டா ஹோட்டல் பாருங்க, அங்கயே கொண்டு போய் விடுறன். ” என்றவன் குரல் கடினத்துடன் ஒலித்தது.
“இந்த ரோசத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. ஆனா அதான் சரி, ஹோட்டல் பாப்பம்.” என்றாள் துர்கா.
“துர்கா!” என்ற வேர்த் பார்வையும் சேர்ந்து கண்டித்தது. வாயைச் சுழித்துக்கொண்டு வெளிப்புறமாகப் பார்த்தாள் துர்க்கா.
ஒலிவியா விழிகளைத் திறக்கவே இல்லை. மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “போவம் ஏதன், அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல.” என்றான் வேர்த்.
கார் கிளம்பியது. ஆரோனின் அந்த பிளாட் வரும் வரை காரினுள் பலத்த அமைதி. காரை விட்டு இறங்கிய துர்காவுக்கு இந்த வீட்டில் தங்கிக்கொள்ளும் எண்ணம் இல்லை.
“ப்ச், ஏர்போட்டில இருந்தே வீட்டுக்குப் போயிருக்கோணும் நான்.” தனக்குள் முணுமுணுத்தவள், “ சரி ஒலிவியா, நான் போயிட்டு வாறன், பிறகு சந்திக்கலாம்.” என்றபடி நகர முயன்றாள்.
“நில்லு நில்லு, நாங்க இங்க நிக்கும் மட்டுக்கும் எங்களோட தங்கி நிப்பன் எண்டு சொன்னதை மறந்திட்டியா என்ன? துர்கா ப்ளீஸ் நில்லன்!” என்றாள் ஒலிவியா.
“அது நீங்க ஹோட்டலில் தங்குவீங்க எண்டு நினைச்சுச் சொன்னது. இப்ப இங்க …சரி வராது. ஒவ்வொருநாளும் வந்து சந்திக்கிறன்.” என்றுவிட்டு விசுக்கென்று நகர முயன்றவள் இடக்கரம் ஏதனின் வலக்கரத்தின் இறுகிய பற்றுதலுள் அடங்கி விட்டிருந்தது.
வேர்த், ஒலிவியா சன்னமாக அதிர்ந்தார்கள். ஏற்கனவே இவர்களுள் எந்தளவுக்குப் பழக்கம் என்ற சந்தேகம் ஒலிவியாவினுள் எழுந்ததுவே. “துர்கா, என்னட்ட எதையாவது மறைக்கிறியா?” என்றாள் வியப்போடு. அதேநேரம் ஏதனை ஒரு சாதியாகப் பார்த்தாள்.
“துர்கா என்ர நண்பிதான் ஏதன். ஆனாலும் என்ர சகோதரி போன்றவள். அவளோட உங்கட விளையாட்டுகளைக் காட்ட வேணாம் சரியா? நான் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டன்.” என்றாள் எச்சரிக்கையாக .
மெல்லச் சிரித்தான் அவன். துர்காவைப் பார்த்தான். அவளோ, விழிகள் கலங்க கையை முறுக்கி விடுவிக்க முனைந்துக்கொண்டிருந்தாள். வாய் மட்டும் வார்த்தைகளை உதிர்க்கும் திராணியின்றிக் கிடந்தது.
“உனக்கு இவள் நண்பியும் சகோதிரியும். ஆனால் எனக்கு என்ர மிச்ச வாழ்க்கையே இவள்தான் ஒலிவியா. அதைச் சொன்னால் இவள் இப்பிபடித்தான் முறுக்கிக்கொண்டு ஓடத் தயாராகிறாள். எனக்காக, உன்ர சொந்தச் சகோதரனுக்காக இவளோட கதைச்சுப்பாரன் ப்ளீஸ்!” என்றவன், துர்காவை இழுத்துக்கொண்டு, மறுகையில் ஒலிவியாவின் பயணப்பையையும் இழுத்துக்கொண்டு, “வாங்கோ, நாலாம் மாடி.” லிப்ட் நோக்கி நகர்ந்தான்.
வேர்த், ஒலிவியா ஒருவர் ஒருவரைப் பார்த்தபடி அசையாது நின்றார்கள்.
“எத்தினை தடவை சொன்னாலும் உங்களுக்கு விளங்காதா? நான் என்ர வாழ்க்கையா உங்களைப் பாக்கேல்லை, இனியும் அது நடக்காது ஏதன் . கைய விடுங்க!” என்று துர்கா சீற, “நீங்க வரேல்லையா?” மின்தூக்கிக்குள் உள்ளிட்டவன் வெளியில் நின்றவர்களை அழைத்தான். அவன் உதடுகளில் விசமம் தலைகாட்டியிருந்தது.
வேர்த், ஒலிவியா ஓடி வந்து நுழைந்துக்கொண்டார்கள். “நானும் நீயும் காதலிக்கும் போது ஏன் இப்பிடிச் சண்டை போட்டுக்கொள்ளேல்ல ஹனி ?” மனைவி காதில் கிசுகிசுத்தான் வேர்த். அந்தளவுக்கு துர்கா, ஏதன் இழுபறி அவனுக்குக் கவிதையாகத் தெரிந்து தொலைத்தது.
ஒலிவியாவோ, சிடுசிடுப்போடு முழங்கையால் கணவன் விலாவில் இடித்தாள். ஏதனைக் கோபமாகப் பார்த்தாள். துர்கா அடுத்துச் சொன்னவை அவள் கோபத்தை அதிகரித்திட்டு.
“இவருக்கு உண்மையில விசர் பிடிச்சிட்டு. எனக்குப் பிடிக்கேல்ல, அப்பிடி ஒரு எண்ணம் எதிர்காலத்திலும் வராது எண்டு எத்தின தடவை சொல்லிட்டன் தெரியுமா? திருப்ப திரும்ப வந்து நிண்டு வழிஞ்சுகொண்டு.” என்றவள், “என்னைப் பற்றி என்ன நினைச்சு வச்சிருக்கிறீங்க?” அவள் வார்த்தைகளுக்குப் போட்டியாக களத்தில் இறங்கிய முழங்கை வேறு அவன் விலாவைப் பதம் பார்த்தது, நன்றாக வலிக்கவே.
அவன் அந்த வலியைப் பொருட்படுத்தாது நிலத்தில் விழுந்த மீனாகத் துடிப்பவளை இடையோடு வளைத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துப் பிடித்துக்கொண்டான்.
இப்போது கோபம்கொண்டது ஒலிவியா. “ஏதன்,நீ என்ன செய்ய நினைக்கிற? எங்களுக்கு முன்னால வச்சே இப்பிடி எண்டால்…” சீறினாள்.
“மரியாதையா அவள விடு! விருப்பம் இல்ல எண்டு சொல்லுறாள் எல்லா, இனிமேல் இப்பிடி அவளோட நடக்க நினைக்காதே!” தோழியைப் பிடித்து வைத்திருந்த அவன் கையைப் பிரித்து விலக்கிவிட, விசுக்கென்று வந்து வேர்த்தை இடித்து விலக்கிவிட்டு ஒலிவியாவோடு ஒன்றி நின்றாள் துர்கா.
அவள் கண்கள் சரசரவென்று உடைப்பெடுக்கவும் தொடங்கி இருக்க, “இனி இவளைத் தொந்தரவு செய்யாதே!” ஒலிவியா கோபமாகக் கண்டிக்க, என்ன சொல்வதென்று தெரியாது நின்ற வேர்த், ஏதன் விழிகளில் துர்கா மீதான நேசத்தை உணர்ந்துகொண்டான்.
“சொறி இனி இப்பிடி…” அவன் ஆரம்பிக்க, “உங்களுக்கு வெக்கமா இல்லையா? இதையே எத்தினை தடவைகள் சொல்வீங்க?” சீறினாள் துர்கா . அக்கணம் பெரும் அவமானமாக உணர்ந்தான், ஏதன். அவன் மீதே கோபம்கொண்டான். அதுவே அமைதியைப் பிடித்து வைக்கவும் உதவியது.
விழிகளை முடித்த திறந்தவன், “உண்மையாவே இனி உன் நண்பியோடு கதை பேச்சு வச்சுக்கொள்ளமாட்டன் ஒலிவியா. அகைன் சொறி!” வாய் திறந்த மின்தூக்கியால் முதல் ஆளாக வெளியேறினான்.