இன்னும் ஒன்றே ஒன்று என்று அவர் கேட்கவும் அம்மம்மாவைக் கையில் பிடிக்க இயலவில்லை. ஐந்து நிமிடம் என்றுவிட்டு விரைந்தவர், திரும்பி வரும் போது சுட சுட இருந்த அப்பதோடு அரைக்கப்பில் நல்ல சாயம் போட்டு நுரை ததும்ப இழுத்து ஆற்றிய ஏலக்காய்த் தேநீரும் சேர்ந்து வந்திருந்தது.
மறுக்காது உண்டுவிட்டு ருசித்துத் தேநீரைப் பருகினார், ஆரோன். பசிய ஏலக்காய் ருசியும் வாசமும் தந்த புத்துணர்வை அனுபவித்துப் பாராட்டினார்.
இன்னொரு நாளைக்கு மதிய உணவுண்ண வருகிறேன் என்று அவர் சொல்ல, “புரியாணி… மட்டன் புரியாணி சாப்பிடப்போறிங்களா? பேக் பண்ணித் தரவா?” என்று நின்ற அம்மம்மாவைச் சமாளித்து அவரை வெளியில் அழைத்து வந்தாள், துர்கா.
விடைபெற்று காரை நோக்கி நடந்த ஆரோனுக்கு அழைப்பொன்று வந்தது. எடுத்துக் கதைத்தவர் பார்வை துர்காவிடம் திரும்பியது.
“என்ன செஃப்?” மெல்ல வாயசைத்தவளை, தலையசைவால் அழைத்தவர், அருகில் சென்றவளிடம், “ஏதன்.” என்றபடி கைப்பேசியைக் கொடுத்தார்.
சட்டென்று வாங்கிவிட்டாள். ஆனால், என்ன கதைப்பது என்றதோடு பெரும் பதற்றமாக இருந்தது. கண்கள் வேறு கலங்கிக்கொண்டு வர, செவிகளில் மோதிய கணீரென்ற ஹாய் துர்க்காவிற்குப் பதில் சொல்ல இயலவில்லை.
ஆரோன் வேறு அவளையே பார்த்து நின்றாரா, சுதாரித்தேயாக வேண்டும். வாசலில் நின்று அம்மம்மாவும் தாத்தாவும் பார்த்துக்கொண்டு நிற்கிறார்களே!
“ஹா…ய், இப்ப உங்களுக்கு எப்பிடி இருக்கு? சொறி… என்னாலதான் உங்களுக்கு இப்பிடியானது… சொறி!” என்றாள், கடகடவென்று.
அவனோ, “எனக்கு ஒண்ணும் இல்ல துர்க்கா. இனிக் கவனமாக இரு!” என்றவன், “டாட் ஃபோன் தந்தவரா? என்று கேட்டான்.
“ஓம் ஓம் மிக்க நன்றி!” என்றவளுக்கு வேறு என்ன கதைப்பது என்று தெரியவில்லை. “டேக் கேர். செஃப்ட்ட போன் குடுக்கிறன்.” என்றவள், அவன் பதிலுக்குக் காத்திராது கொடுத்துவிட்டாள்.
“ஏதன் நல்லா இருக்கிறான். அநேகம் நாளைக்கு வீட்ட வந்திருவான். யோசியாத என்ன.” அவள் தவிப்புணர்ந்து ஆறுதலாகச் சொன்னார், ஆரோன். தொடர்ந்து அவர், “பின்னேரம் வேலைக்குப் போவியா, இல்லை இண்டு நிண்டிட்டு…” என்று கேட்டு முடிக்கவில்லை, “நான் இண்டைக்கே போறன் செஃப்.” என்றிருந்தாள், துர்கா.
“தட்ஸ் குட். நடந்ததுகள நினைச்சுக்கொண்டு இருக்கிறேல்ல. நான் இந்த வீட்டு விலாசம் ஒலிவியாட்டத்தான் கேட்டு வாங்கினனான். என்ன ஏதெண்டு கேட்டவள். சொன்னனான். உன்ர வீட்டுக்குச் சொல்ல வேணாம் எண்டனான். ஒலிவியாவோட கதை.” என்றுவிட்டு அவர் விடைபெறவும் ஒலிவியா அழைக்கவும் சரியாக இருந்தது.